என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பி.எம்.நரேந்திர மோடி படத்தைப்போல் தன்னைப் பற்றி வாழ்க்கை வரலாறு படம் தயாரானால் அதில் கதாநாயகியாக யார் நடிப்பார்கள்? என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். #RahulGandhi #changemakersinPune #RahulGandhiStudentsInteraction
    புனே:

    மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் கல்லூரி மாணவ-மாணவியரிடையே 'மாற்றத்தை உருவாக்குபவர்கள்’ (changemakers) என்ற தலைப்பில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

    அப்போது சில கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல் காந்தி, இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரமும் 27 ஆயிரம் வேலைவாய்ப்புகள் பறிபோவதாக குறிப்பிட்டார்.

    நாங்கள் அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்திய பின்னரே தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றத்தக்க வாக்குறுதிகளை அளித்திருக்கிறோம். ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் செலுத்துவதாக நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளதால் அதை ஈடுகட்ட வருமான வரி உள்ளிட்ட எவ்வித வரிகளையும் உயர்த்த மாட்டோம். இந்த திட்டத்தால் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

    ராகுல் காந்தியை அவரது சகோதரி பிரியங்கா காந்தி அவ்வப்போது மிகவும் தைரியமானவர் என்று குறிப்பிடுவது பற்றி ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘எனது அனுபவத்தின் மூலமாகவே இந்த தைரியம் உண்டானது. நான் பலவீனமான மக்களுக்கு பக்கத்துணையாக நிற்கிறேன்’ என்றார்.

    பாகிஸ்தானுக்குள் புகுந்து பாலகோட் பகுதியில்  நாம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய விமானப்படை மட்டுமே உரிமை கொண்டாட வேண்டும். மத்தியில் எங்கள் ஆட்சி அமைந்தால் பாராளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு நிச்சயமாக 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதியளித்தார்.



    நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறை குறிப்பிடும்படியாக எடுக்கப்பட்டுள்ள ‘பி.எம்.நரேந்திர மோடி’ திரைப்படத்தைப்போல் உங்களைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டால் அதில் கதாநாயகி யார்? என்ற கேள்வியை திருமணம் ஆகாத ராகுல் காந்தி வெகு சாதுர்யமாக சமாளித்து பதிலளித்தார்.



    நான் உழைப்பை திருமணம் செய்து கொண்டுள்ளேன். வேலைதான் எனக்கு கதாநாயகி என்ற அவரது பதிலை கேட்டு அரங்கத்தில் இருந்த மாணவ-மாணவியர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

    மேலும், எனக்கு பிரதமர் மோடி மீது அன்பு உண்டு. தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு வெறுப்புணர்ச்சியோ, கோபமோ ஏற்பட்டதில்லை என்றும் இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி தெரிவித்தார். #RahulGandhi #changemakersinPune  #RahulGandhiStudentsInteraction
    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்காவின் சூறாவளி சுற்றுப்பயணத் திட்டத்தில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 2 அல்லது 3 ஊர்களில் அவர் பிரசாரம் செய்வார் என தெரிய வந்துள்ளது. #LokSabhaElections2019 #PriyankaGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவின் வருகை தொண்டர்கள் மத்தியில் புதிய எழுச்சியை உருவாக்கி வருகிறது. பிரியங்கா “இன்னொரு இந்திராகாந்தி” என்ற எதிர்பார்ப்புடன் காங்கிரஸ் கட்சியினர் கருதுவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மோடி அலை காரணமாக சோனியா, ராகுல் இருவரது பிரசாரமும் எடுபடாமல் போனது. அந்த சமயத்திலேயே பிரியங்கா வந்தால்தான் இனி காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க முடியும் என்று பரவலாகப் பேசப்பட்டது.

    கடந்த 5 ஆண்டுகளில் ராகுலின் பேச்சு மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அனைவரது எதிர்பார்ப்பும் பிரியங்கா மீதே இருந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த ஜனவரி மாதம் பிரியங்கா தீவிர அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். எடுத்த உடனேயே அவர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டார்.

    உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் உள்ள 42 பாராளுமன்றத் தொகுதிகளின் பொறுப்பு பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த 42 தொகுதிகளிலும் பிரியங்கா தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். கடந்த மாதம் அவர் இந்த தொகுதிகளில் கங்கை ஆற்றில் படகு பயணம் நடத்தி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    பிரியங்காவின் படகு பயணம் காரணமாக உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் கடும் உற்சாகம் பிறந்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்ற முன்வந்துள்ள தொண்டர்கள், நிர்வாகிகளின் எண்ணிக்கையும் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் பிரியங்காவின் வருகை காங்கிரஸ் வெற்றிக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கை அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அமைந்துள்ளது.

    இதையடுத்து பிரியங்காவை தங்கள் மாநிலத்துக்கும் வந்து பிரசாரம் செய்யும்படி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போட்டி போட்டு அழைத்து வருகிறார்கள். முதலில் பிரியங்கா அதை ஏற்கவில்லை. உத்தரபிரதேசத்தில் காங்கிரசை வலுப்படுத்துவதே தனது முதல் இலக்கு என்று தெரிவித்தார்.



    என்றாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்களது முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து தினமும் பிரியங்காவை அழைத்தபடி இருந்தனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பிரசாரம் செய்ய பிரியங்கா தற்போது ஒத்துக் கொண்டுள்ளார்.

    காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதில் 40 காங்கிரஸ் மூத்த தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியலில் பிரியங்காவின் பெயர் முதன்மை இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் நாடு முழுவதும் பிரியங்கா பிரசாரம் செய்வது உறுதியாகி விட்டது. முதல் கட்டமாக அவர் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், ஒடிசா, காஷ்மீர், மேற்குவங்காளம் உள்பட 16 மாநிலங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவரது நாடு தழுவிய சூறாவளி சுற்றுப்பயணம் விவரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    விரைவில் அவர் எந்தெந்த மாநிலங்களுக்கு எந்தெந்த தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்பது தெரிய வரும்.

    பிரியங்காவின் சூறாவளி சுற்றுப்பயணத் திட்டத்தில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 2 அல்லது 3 ஊர்களில் பிரியங்காவின் பிரசாரம் நடைபெறும் என்று தெரிகிறது. பிரியங்காவை தங்கள் தொகுதிக்கு அழைக்க தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

    பிரதமர் மோடி பிரசாரம் செய்துள்ள நகரங்களில் பதிலடி கொடுக்கும் வகையில் பிரியங்கா பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.  #LokSabhaElections2019 #PriyankaGandhi
    தென்காசி மக்களவை தொகுதியில் ஒரே பெயரில் 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் 4 பேருமே ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள். #LokSabhaElections2019 #TenkasiConstituency
    தென்காசி:

    தென்காசி மக்களவை தொகுதியில் 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் அ.ம.மு.க. வேட்பாளராக சு.பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். பொன்னுத்தாய் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே பெயரில் உள்ள மேலும் சிலர் தென்காசி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், அ.ம.மு.க. வேட்பாளர் சு.பொன்னுத்தாய் மட்டுமின்றி, கோ.பொன்னுத்தாய், ம.பொன்னுத்தாய், மா.பொன்னுத்தாய் என ஒரே பெயரில் 4 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்கள் 4 பேருமே ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.



    தனது பெயரிலேயே 3 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவது குறித்து அ.ம.மு.க. வேட்பாளர் சு.பொன்னுத்தாய் கூறும்போது, “தென்காசி தொகுதியில் அ.ம.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையேதான் போட்டி உள்ளது. இந்த போட்டியில் நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன். தி.மு.க.வினர்தான் பொன்னுத்தாய் என்ற பெயரில் உள்ளவர்களை தேடிப்பிடித்து மனுதாக்கல் செய்ய வைத்துள்ளனர்.

    என் பெயரில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. அ.ம.மு.க.வின் பரிசுப் பெட்டி சின்னம் ஒரே நாளில் மக்களைச் சென்றடைந்துவிட்டது. அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, எங்கள் வெற்றியை தடுக்க முடியாது” என்றார்.  #LokSabhaElections2019 #TenkasiConstituency



    தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 533 பேர் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க ரூ.414 கோடி செலவு செய்யப்பட உள்ளது. #LokSabhaElections2019 #TN
    சென்னை:

    தமிழ்நாட்டில் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ளவர்களின் எண்ணிக்கை 6 கோடியை நெருங்கி உள்ளது.

    தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 5 கோடியே 99 லட்சத்து 35 ஆயிரத்து 870 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 2 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 923. பெண் வாக்காளர்கள் 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 45 பேர்.

    ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் சுமார் 5 லட்சம் பேர் அதிகமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் ஓட்டு போட தகுதி பெற்ற திருநங்கைகள் 5 ஆயிரத்து 790 பேர் உள்ளனர்.

    தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 779 பேர் ஆண்கள், 65 பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை.

    பொதுமக்கள் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களில் 3 லட்சத்து 94 ஆயிரத்து 534 பேர் மாற்றுத் திறனாளிகள் என்பதால் அவர்களுக்கு ஏற்ப வாக்குச்சாவடிகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



    தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 533 பேர் ஈடுபட உள்ளனர். பாதுகாப்புக்காக துணை நிலை ராணுவம் உள்பட போலீசாரின் சிறப்பு படை போன்றவை 200 கம்பெனி அளவுக்கு பணிகளில் ஈடுபடும்.

    ஓட்டுச்சாவடிகளில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 932 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். எந்திர கோளாறு ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்காக 4,950 மின்னணு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க ரூ.414 கோடி செலவு செய்யப்பட உள்ளது. இந்த தடவை கோடீசுவர வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    எனவே தொகுதிகளில் வேட்பாளர்களின் செலவு அதிகரித்துள்ளது. குறைந்தபட்சம் வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரம் கோடி பணத்தை செலவு செய்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #TN

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதால், கேரளாவில் மீண்டும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். #PMMod #Parliamentelection #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    இம்முறை கேரளாவில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா தீவிரமாக களம் இறங்கி உள்ளது.

    இதற்காக நடிகர் சுரேஷ்கோபி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், மத்திய மந்திரியுமான அல்போன்ஸ் கன்னம்தானம், பி.ஜே.டி.எஸ். கட்சி தலைவர் துஷார் வெள்ளாப்பள்ளி ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது.

    காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வெற்றி பெற பாரதிய ஜனதா வியூகம் வகுத்து பிரசாரத்தில் ஈடுபட்டது. இதற்காக சபரிமலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தலைவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது.

    இந்த நிலையில் கேரள தேர்தல் களத்தில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியானதும், காங்கிரசை எதிர்க்கும், கம்யூனிஸ்டு மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன.

    வயநாடு தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பி.ஜே.டி.எஸ். கட்சி தலைவர் துஷார் வெள்ளாப்பள்ளி பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    நேற்று ராகுல் காந்தி வயநாட்டிற்கு மனுத்தாக்கல் செய்ய வந்தார். அவருடன் சகோதரி பிரியங்கா காந்தியும் வந்தார்.



    ராகுல்காந்தி மனுத்தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் லட்சக் கணக்கான தொண்டர்கள் திரண்டனர். கல்பேட்டாவில் காங்கிரஸ் நடத்திய ரோடு ஷோ கேரள அரசியல் கட்சிகளை வியப்பில் ஆழ்த்தியது.

    காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கவும், ராகுல் வருகையால் திசை மாறும் ஓட்டுக்களை தங்கள் பக்கம் திருப்பவும் பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்டு கட்சி, அவர்களின் தேசிய தலைவர்களை வயநாட்டிற்கு அழைத்துவந்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சி, பிரதமர் மோடியை மீண்டும் கேரளாவில் பிரசாரத்திற்கு அழைத்து உள்ளது. அவருடன் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து வந்து பேரணி, பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ நடத்த முடிவு செய்துள்ளது.

    திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக கும்மனம் ராஜ சேகர் போட்டியிடுகிறார். இவர், மிசோரம் கவர்னராக இருந்தவர். தேர்தலுக்காக பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதியில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி கிடைக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    இதற்காக பிரதமர் மோடியை மீண்டும் கேரளாவில் பிரசாரத்திற்கு அழைத்து வர பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

    கேரளாவில் ராகுல் போட்டியிடுவதால் ஏற்பட்ட நெருக்கடியை பிரதமர் மோடியின் பிரசாரத்தால் மட்டுமே சரிக்கட்ட முடியும் என்றும் பாரதிய ஜனதா கட்சியினர் நம்புகிறார்கள்.

    கேரள பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளின் கோரிக்கையை கட்சி மேலிடம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே பிரதமர் மோடி கேரளாவில் மீண்டும் பிரசாரம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பார் என தெரிகிறது.

    கேரளாவிற்கு பிரதமர் மோடி வருகிற 12-ந்தேதி வரலாம் என்று தெரிகிறது. அன்று திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவார் என தெரிகிறது.

    கேரளாவில் 21-ந்தேதி வரை பிரசாரம் செய்யலாம் என்பதால் அதற்குள் மேலும் ஒருமுறை பிரதமர் மோடி கேரளாவில் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. #PMMod #Parliamentelection #RahulGandhi
    தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. #LokSabhaElections #OpinionPoll #DMK
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களின் மனநிலையை அறியும் பொருட்டு பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளிடத் தொடங்கி உள்ளன.

    அவ்வகையில் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    அதிமுக கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளிலும், அமமுக 1 முதல் 2 தொகுதிகள் வரை பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

    இதேபோல் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில், திமுகவுக்கு 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.

    தமிழகம் மற்றும் புதுவையில் 21 ஆயிரத்து 464 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக பண்பாட்டு மக்கள் தொடர்பகம் கூறியுள்ளது. #LokSabhaElections #OpinionPoll #DMK

    ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ.1 லட்சம் கடன் உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam

    திண்டுக்கல்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல்லில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று பேசியதாவது:-

    தமிழக அரசியல் சூழலில் நானும் மக்களும் தாமாக விழித்து கொண்டுள்ளோம். ஆனாலும் தகுந்த நேரத்தில் விழித்துள்ளோம். மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கி நாடு முழுவதும் ஏற்பட வேண்டும். பணத்துக்காக ஓட்டு போடாதீர்கள். ஒவ்வொரு தமிழன் தலை மீதும் ரூ.1 லட்சம் கடன் உள்ளது. இதை புரியாமல் ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வாங்கி ஏமாந்து விடாதீர்கள்.

    ஆட்சிப் பொறுப்பிலிருந்த கட்சிகள் திருடிய பணத்தில் இரண்டு தமிழகத்துக்கான வளர்ச்சி திட்டங்களை செய்திருக்க முடியும். நாட்டில் ஊழல் என்ற நோய் ஏற்கெனவே வந்து விட்டதால் அதனை முழுமையாக அகற்றியாக வேண்டும்.


    பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் என தமிழகத்திலுள்ள 57 தெகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும். ஆனால் ராகுல்காந்தி போன்று 2 தொகுதிகளில் போட்டியிட்டு மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. அதிகாரமில்லாத வகையில் லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றியுள்ளனர். அதனை வலிமையான அதிகார மையமாக உருவாக்க வேண்டும்.

    அனைத்து இளைஞர்களும் பயன்பெறும் வகையில் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் வழங்க 500 பயிற்சி மையங்களை தொடங்குவோம்.

    அரசியல் வைத்தியம் பார்ப்பதற்கு அதற்கான மருத்துவர்களால் மட்டுமே முடியும். அந்த தகுதியின் அடிப்படையிலேயே எங்களது கட்சியினருக்கு வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் நற்பணி மன்றத்தினர் யாரும் வருத்தப்படாமல் மகிழ்ச்சியோடு தேர்தல் பணியாற்ற வேண்டும். மாற்றம் வேண்டும், மனிதம் வேண்டுமென நினைப்பவர்கள், இந்த தேர்தலில் மின்கல விளக்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam

    மதக்கலவரத்தை தூண்டும் கூட்டணியாக அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி உள்ளது என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். #BJP #Kanimozhi #ADMK

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. சாத்தான்குளம் பகுதியில் மணிநகர், சொக்கன்குடியிருப்பு, கொம்மடிக்கோட்டை, தட்டார் மடம், பொத்தகலான்விளை, முதலூர், விஜயராமபுரம், சாத்தான்குளம், பண்டாரபுரம், கலுங்குவிளை உள்ளிட்ட 27 கிராமங்களில் திறந்தவேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    நம் எல்லோருக்கும் நாடு சொந்தமானதாகும். நாம் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். ஆனால் மக்களிடம் பா.ஜ.க. வி‌ஷத்தை கக்கி வருகிறது. சாதி, மதப்பிரச்சனைகளை உண்டாக்கி வருகின்றனர். மக்களுக்காக பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகள் பாடு படவில்லை. மதக்கலவரத்தை தூண்டும் கூட்டணியாக அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி உள்ளது.


    நமது நாடு பாதுகாக்கப் பட பா.ஜ.க.வை நாட்டை விட்டே துரத்திட வேண்டும். தமிழக மக்களுக்கு நல்ல சந்தர்ப்பம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் மக்கள் விரோத ஆட்சிகளை அகற்றிட வேண்டும். 5 வருட காலத்தில் இவர்களின் ஆட்சியில் யாருக்கும் வேலைவாய்ப்பு இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சியில் 150 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களை மிரட்டுகின்றனர்.

    தமிழகத்தில் பெண்களை பாதுகாக்கும் அரசு இல்லை. பெண்கள், ஏழை, எளிய மக்களுக்கு நியாயம் கிடைக்க நன்மை ஏற்பட பா.ஜ.க., அ.தி.மு.க. ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்புங்கள். இந்த இரண்டு ஆட்சியும், நீடித்தால் நாடும், தமிழரும் இல்லாமல் போய்விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்ததுபோல் விவசாய கடன், மாணவர்களுக்கான கல்விக்கடன் போன்றவைகள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க பாடுபடுவோம்.

    நீண்ட நாள் தி.மு.க.வின் கோரிக்கையான நீட்தேர்வு ரத்து செய்யபடும் என்று ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனவே மத்தியிலும், மாநிலத்திலும் மக்களுக்கு உதவிடும் நல்லாட்சி அமைந்திட தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தரவேண்டும்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார். #BJP #Kanimozhi #ADMK

    கரூரில் உள்ள திருமாநிலையூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ஆட்சியின் சாதனைகளை கூறமுடியாத பாஜக-அதிமுக கூட்டணி என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    கரூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கரூரில் உள்ள திருமாநிலையூரில் நடைபெற்ற பிரசாரப்பொது கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தலின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து  பேசியதாவது:

    இந்த கரூர் தொகுதியிலே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணியை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்  தம்பிதுரை போட்டியிடுகிறார். இதே தம்பிதுரை, பாஜகவுக்கும், மோடிக்கும் எதிராக எப்படியெல்லாம் குற்றம் சாட்டி பேசினார் என நன்றாகவே தெரியும். இந்த அதிமுக அரசு, ஜிஎஸ்டி வரியில் பங்கு கேட்பதில் மாநில அரசுகள் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளது.

    கரூர் மக்கள் தம்பிதுரைக்கு தகுந்த பாடம் கற்றுத்தர வேண்டும். வாக்காளர்களை மதிக்காமல் செயல்படுபவர் அதிமுக வேட்பாளர் தம்பி துரை. இது 2 தினங்களுக்கு முன், வாக்காளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அலட்சியமாக பதிலளிக்கும் போதே உறுதியானது.  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் சேர்த்து 8 வருடங்கள் அதிமுக ஆட்சியில் இருக்கிறது.



    ஆட்சியிலே செய்த சாதனைகளை கூறாமல் தொடர்ந்து எங்களையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  ஏதேனும் நல்லது செய்திருந்தால் தானே சொல்லமுடியும்? எனவே நாட்டில் நல்ல ஆட்சி மலர மக்கள் துணை நிற்க வேண்டும். மோடி தலைமையிலான பாசிச ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். காங்கிரஸ்  தான் நீட் கொண்டு வந்தது என எதிர்கட்சிகள்  கூறுகிறார்கள்.  ஆனால் திமுக அதனை தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை.

    ஆட்சியின் சாதனைகளை சொல்ல முடியாதவர்கள் தான் இந்த பாஜக- அதிமுக கூட்டணி. அடுத்த ஆண்டுக்கான  நீட் தேர்வுக்கு வேலை நடைபெறுகிறது. ஆனால் நீட்டிற்கு விதிவிலக்கு என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். இது எப்படி சாத்தியமாகும்?

    பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி யை எளிமையாக்கவும், பெட்ரோல், டீசல் விலை கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படும் எனவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உறுதி செய்துள்ளது. மேலும் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும்  ராகுல் காந்தி சொல்லியுள்ளார்.  

    இவ்வாறு அவர் பேசினார்.  #MKStalin #DMK #LoksabhaElections2019
    பாராளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வரும் 7-ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. #LokSabhaElections2019 #BJPManifesto
    புதுடெல்லி:

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான களப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலம், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பிரசாரம் மேற்கொண்டுள்ளன.

    அவ்வகையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கையில், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, விவசாய கடன்கள் தள்ளுபடி, ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

    2014ம் ஆண்டு பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டபோது எடுத்த படம்

    இந்நிலையில், ஆளுங்கட்சியான பாஜக, வரும் 7-ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போதும் (2014), இதே நாளில்தான் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. எனவே, அந்த தேதியை இந்த முறையும் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மிஞ்சும் அளவிற்கு, புதிய திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #LokSabhaElections2019 #BJPManifesto
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி என்றும், சொந்தமாக கார் இல்லை என்றும் அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. #LokSabhaElections2019 #RahulGandhi
    வயநாடு:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து விவரங்கள் மற்றும் அவருக்கு எதிரான வழக்குகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று இருந்தன. அதன் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.



    அதன்படி ராகுல் காந்தியின் அசையும் சொத்து மதிப்பு ரூ.5.80 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.10.08 கோடி என மொத்தம் ரூ.15.88 கோடி சொத்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இதில் 333.3 கிராம் தங்கமும் அடங்கும்.

    எம்.பி. பதவி மூலம் கிடைக்கும் ஊதியம், ராயல்டி, வாடகை, பத்திரங்கள் மூலமான வட்டி உள்ளிட்டவற்றை வருமானமாக காட்டப்பட்டு உள்ளது. ராகுல் காந்தியின் 2017-18-ம் ஆண்டு வருமானம் ரூ.1.12 கோடி ஆகும்.

    மேலும், ராகுல் காந்தியிடம் ரொக்கமாக ரூ.40 ஆயிரமும், பல்வேறு வங்கிகளில் ரூ.17.93 லட்சம் டெபாசிட்டும் செய்யப்பட்டு இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைப்போல பத்திரங்கள், பங்குகள் என ரூ.5.19 கோடி முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.72 லட்சம் கடன் இருப்பதாகவும், தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார். அத்துடன் டெல்லி சுல்தான்பூரில் உள்ள பரம்பரை சொத்தான பண்ணை நிலத்தில் பங்கும், குருகிராமில் 2 அலுவலகங்களும் சொந்தமாக உள்ளன.

    கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டப்படிப்பு முடித்து இருப்பதாக கூறியுள்ள ராகுல் காந்தி, தனக்கு எதிராக 5 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதில் மகாராஷ்டிரத்தில் 2 வழக்குகளும், ஜார்கண்ட், அசாம் மற்றும் டெல்லியில் தலா ஒரு வழக்கும் அடங்கும் என அவரது வேட்புமனுவில் கூறப்பட்டு இருந்தது. #LokSabhaElections2019 #RahulGandhi

    தெலுங்கானா மாநிலத்தில் ஜன சேனா கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களை ஆதரித்து மாயாவதி பிரசாரம் செய்தபோது, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடினார். #LokSabhaElections2019 #Mayawati
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பிரசாரம் மேற்கொண்டார். ஜன சேனா கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களை ஆதரித்து மாயாவதி பேசியதாவது:-

    கடந்த பொதுத்தேர்தலின்போது பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இப்போது புதிய வாக்குறுதிகளுடன் மீண்டும் போட்டியிடுகிறது. பாஜக ஆட்சியில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியை இழந்துவிட்டனர்.



    இதேபோல் காங்கிரஸ் கட்சியும், தனது ஆட்சிக்காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட கவர்ச்சியான வாக்குறுதிகளை வழங்கி உள்ளது.

    நியாய் திட்டத்தின்மூலம் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக காங்கிரஸ் கூறுகிறது. முதலில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தி ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கவேண்டும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாதபோது, நாடு முழுவதும் எப்படி அவர்களால் செயல்படுத்த முடியும்? பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் நீங்கள் (மக்கள்) தவறாக வழிநடத்தப்பட்டுவிடக் கூடாது. அவர்களின் வலையில் வீழ்ந்துவிடக் கூடாது.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களில் மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே, எங்கள் வேட்பாளர்களுக்கு மக்கள் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின்போது தெலுங்கானா பிராந்தியம் புறக்கணிக்கப்பட்டதால்தான், தனி மாநில கோரிக்கை தீவிரமடைந்தது. இப்போது தெலுங்கானா தனி மாநிலமாக மாறிவிட்டது. இருப்பினும் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. மக்கள் இன்னும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #LokSabhaElections2019 #Mayawati
    ×