என் மலர்
தேர்தல் செய்திகள்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இதையடுத்து அமைச்சர் வேலுமணி மீது ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டியதாகவும், அவதூறாக பேசியதாகவும் தொண்டாமுத்தூர் போலீசார், திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #MKStalin #DMK #CaseFiled

ராமநாதபுரம்:
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் இ.யூ.முஸ்லிம்லீக் வேட்பாளர் கே.நவாஸ்கனி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ச.சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இன்று காலை முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதி சிக்கலில் தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து திருவாடானை சட்டமன்ற தொகுதியில் பனைக்குளம், ராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதியில் அரண்மனை வாசல் அருகே, பரமக்குடி சட்ட மன்ற தொகுதியில் சத்திரக்குடி, பரமக்குடியில் காந்திசிலை, எமனேஸ்வரம், பார்த்திபனூர் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். செல்லும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று உரையினை கேட்டு தங்கள் வாக்கு ஏணி சின்னத்திற்கும், உதயசூரியனுக்கும் என பலத்த குரலில் கோஷமிட்டனர்.
உதயநிதி ஸ்டாலினுடன் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.நவாஸ்கனி, பரமக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சம்பத்குமார், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், பாராளுமன்ற இ.யூ. முஸ்லிம் லீக் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஷாஜஹான், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர். #udhayanidhistalin
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் பல்வேறு கட்டங்களாக அறிவித்து வருகிறது. அவ்வகையில் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 12 மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதில் முதல்வர் கமல் நாத்தின் மகன் நகுல் நாத், சிந்த்வாரா மக்களவை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கந்த்வா தொகுதியில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் அருண் யாதவ், ஜபல்பூரில் விவேக் தங்கா போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கமல் நாத், கடந்த டிசம்பர் மாதம் 17-ம் தேதி மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் அவர் சட்டசபை உறுப்பினராகவோ, மேல்-சபை உறுப்பினராகவோ இல்லாததால், 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு சபையில் உறுப்பினர் ஆகவேண்டும். அவர், சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீபக் சக்சேனா ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #KamalNath #Chhindwara
நாகர்கோவில்:
கன்னியாகுமரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று மாலை நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொன்.ராதாகிருஷ்ணன் குமரிக்கு செய்த நல்ல திட்டங்களை பட்டியலிட்டு கூறலாம். குமரியில் 50 வருட கால வரலாற்றில் பலர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் தாண்டி தனது அமைச்சரவையிலே பல திட்டங்களை போராடி கொண்டு வந்தவர் என்பதை மறுத்து விட முடியாது.
காங்கிரஸ் வேட்பாளராக எச்.வசந்தகுமார் போட்டியிடுகிறார். அவர் சென்னையில் இருக்கும் குமரி மண்ணின் மைந்தர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் பொன்.ராதாகிருஷ்ணன் தான் உண்மையான மண்ணின் மைந்தர் என்பது மறுக்க முடியாது. காங்கிரஸ் கட்சி எப்போதும் பா.ஜனதாவை மதவாத கட்சி என குறைகூறி வருகிறது. அது முற்றிலும் பொய்யான கருத்து. மேலும் 9 நாடாளுமன்ற தொகுதிகளை தி.மு.க.விடம் பெற்று கொண்ட காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லீமையோ அல்லது கிறிஸ்தவரையோ நிறுத்தவில்லை.
சிறுபான்மையின மக்களை ஏமாற்றும் கட்சியாக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் போட்டியிடுவதற்கு, முதல் எதிர்ப்பு குரல் எழுப்பியது கம்யூனிஸ்டு கட்சிதான். மக்களை குழப்பும் கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.
குமரியை முதன்மை மாவட்டமாக மாற்றும் சக்தி பொன்.ராதாகிருஷ்ணனிடம் மட்டும் தான் இருக்கிறது. எனவே அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஜி.கே.வாசன், கருங்கல் பஸ் நிலையம் பகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்துக்கு ஏதோ ஒரு மந்திரி மட்டும் தான் கிடைத்திருக்கிறார். இவரால் என்ன முடியும், தனிமரம் தோப்பாகாது என்று நினைத்தவர்கள் பலர். ஆனால், இன்று அப்படி நினைத்தவர்கள் எல்லாம், ஏமாளியாக, கோமாளியாக மாறிவிட்டார்கள் என்பது தான் உண்மை நிலை. அந்த மந்திரியான பொன்.ராதாகிருஷ்ணன் கொஞ்சம் கூட மனம் தளராமல் ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சிக்காக தன்னுடைய பணியை செய்தவர்.
தேசத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் நீங்கள் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு இங்கு வாக்களிக்க வேண்டும். நாடு அமைதியுடன் சாதி, மத, இனமோதல்கள் இல்லாமல் இருப்பதற்கு காரணம் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், அதனை சார்ந்து இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியும் காரணம் ஆகும். இதே நிலை தொடர வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை காலம் போன ஒன்று. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம். எனவே, அதை நம்ப தமிழக மக்களும், இந்திய மக்களும் தயாராக இல்லை. செல்லா நோட்டாக நினைக்கிறார்கள் என்றார். #gkvasan #congress #dmk
பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தங்கை பிரியங்காவுடன் நேற்றே கோழிக்கோடு வந்து சேர்ந்தார்.

இதையடுத்து ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில் பேசியதாவது:-
தென்னிந்தியாவின் முக்கியத்துவத்தினை உணர்த்தவும், ஒற்றுமை குறித்த செய்தி அனுப்பிடவுமே நான் இங்கு வந்துள்ளேன். சிபிஐ(எம்) எங்களை தாக்கி பேசுவார்கள் என்பது நன்றாக தெரிந்தது தான். இதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், எனது தேர்தல் பிரசாரத்தில் அவர்களை தாக்கி ஒருமுறை கூட பேச மாட்டேன்.
நாட்டின் இரு பெரும் பிரச்சனைகள் விவசாயமும், வேலையின்மையும் தான். விவசாயமக்கள் தங்கள் எதிர்கால நிலை என்னவாகும் என்பதை நினைத்து மிகவும் வருந்துகின்றனர். வேலையின்மையினால் இளைஞர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேலைக்காக இடம் பெயர்ந்து வருகின்றனர். விவசாயிகளும், இளைஞர்களும் மோடியினால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் ரபேல் ஊழல் குறித்து பதிலளிக்க பாஜக தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்தியாவின் அனைத்து பகுதிகளும் ஒன்றே என்பதை வலியுறுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். இந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவதன் மூலம் வடக்கில் இருந்தும், தெற்கில் இருந்தும் மக்களுக்காக போராடுவேன். இதுவே என் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் பேசினார். #Congress #RahulGandhi #Pressmeet
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் ராகுல் காந்தி டெல்லியில் வெளியிட்டார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் பணம், நீட் தேர்வு ரத்து, மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஆகிய வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குறுதிகள் தமிழக மக்களிடம் வரவேற்பு பெறும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
எனவே இதை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்ல கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக காங்கிரஸ் வாக்குறுதிகள் தமிழில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதை சென்னை சத்திய மூர்த்தி பவனில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகள் சுஷ்மிதா முகர்ஜி வெளியிடுகிறார்.
தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளிலும் இந்த அறிக்கையை விநியோகம் செய்யவும் கிராமம் கிராமமாக மக்களிடம் விளக்கி பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். #LoksabhaElections2019 #Congress
நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா பாராளுமன்றத் தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.
இந்த தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் வேட்பாளராக நிற்கிறார். இவருக்கு ஆதரவாக குமாரசாமி, தேவகவுடா ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே சுமலதா அம்பரீஷை ஆதரித்து கன்னட நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோர் அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர்.
யஷ் கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். சமீபத்தில் வெளியான ‘கே.ஜி.எப்’ படம் மூலம் இவருக்கு கர்நாடகாவில் அதிகமான ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
இவர்களது பிரசாரத்தில் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று பிரசாரத்தில் பேசிய யஷ் ‘அம்பரீஷ் உயிருடன் இருந்தபோதில் இருந்தே நாங்கள் அவர் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்துவருகிறோம். எங்களுக்கு சில கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. ஆனால் அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்’ என்று பேசினார். #LoksabhaElections2019 #Yash #Sumalatha
பெரம்பூர் சட்டசபை இடைத்தேர்தலில் ஜெபமணி ஜனதா கட்சி சார்பில் மயிலாப்பூரை சேர்ந்த மோகன்ராஜ் போட்டியிடுகிறார்.
இவர் சுதந்திர போராட்ட தியாகியும், ஜனதா கட்சியின் முக்கிய தலைவருமாக இருந்தவருமான நெல்லை ஜெபமணியின் மகன் ஆவார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு தற்போது 67 வயதாகிறது. தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி இவர் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.
ஏற்கனவே இவர் விருதுநகரில் வைகோவை எதிர்த்தும், சிவகங்கையில் ப.சிதம்பரத்தை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியிலும் மற்றும் மயிலாப்பூர் தொகுதியிலும் போட்டியிட்டார். இப்போது பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தனது சொத்து கணக்கை காட்ட வேண்டும் என்று விதிகள் உள்ளன. அதன்படி தனது சொத்து மதிப்பை மோகன் ராஜ் குறிப்பிட்டு உள்ளார். அந்த சொத்து கணக்கை பார்த்து தேர்தல் அதிகாரிகளே ஒருகனம் அதிர்ச்சியாகி விட்டனர்.
அவர் தனக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி பணம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளன. அந்த வகையில் பார்த்தால் மோகன்ராஜ்தான் இந்தியாவின் 2-வது பணக்காரர் ஆவார்.

இப்படி அவர் வேட்பு மனுவில் குறிப்பிட்டு இருக்கும் ஒவ்வொரு விஷயங்களும் வேடிக்கையாகவும், வினோதமாகவும் இருக்கிறது.
அவர் இப்போது மட்டும் அல்ல, இதற்கு முந்தைய தேர்தல்களிலும் இப்படித்தான் ஏறுக்குமாறாக சொத்துக்கணக்கை கூறி இருந்தார்.
ஏன் இப்படி சொத்துக் கணக்கை கூறி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவில் உண்மையான தகவலை மட்டும்தான் குறிப்பிட வேண்டும் என்பது தேர்தல் கமிஷன் விதி. அதில் தவறான கணக்கை கூறிஇருந்தால் அந்த வேட்பு மனுவை தள்ளுபடி செய்யலாம்.
ஆனால் வேட்பு மனுவில் எத்தனை தவறான தகவல்களை கூறி இருந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் தேர்தல் அதிகாரிகள் அந்த மனுவை ஏற்றுக்கொள்கிறார்கள். தேர்தல் பணியின் லட்சணம் இப்படித்தான் இருக்கிறது என்பதை மக்களுக்கு காட்டுவதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் சொத்து மதிப்பை இப்படி எக்குதப்பாக குறிப்பிட்டேன்.
எனது வேட்பு மனுவை பார்த்த தேர்தல் அதிகாரி என்னை மேலும், கீழும் பார்த்தார். ஏன் இப்படி குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார். எனது தகவலில் தவறுஇருந்தால் மனுவை தள்ளுபடி செய்யுங்கள் என்று கூறினேன். ஆனால் இது தவறான தகவல் என தெரிந்தும் தேர்தல் அதிகாரி எனது மனுவை தள்ளுபடி செய்யவில்லை.
இந்த காரணத்திற்காக எனது மனுவை தள்ளுபடி செய்தால் இந்தியாவில் அனைத்து வேட்பாளர்கள் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பிரதமர் மோடி மற்றும் சோனியா மனுவை கூட ஏற்க முடியாது.
அவர்கள் எல்லாம் எத்தனையோ கார்களை வைத்து இருக்கிறார்கள். ஆனால் கார் இல்லை என்று பொய் சொல்கிறார்கள். பல வேட்பாளர்களின் வேலைக்காரர் கூட கார் வைத்துள்ளார். ஆனால் வேட்பாளர் தனக்கு கார் இல்லை என்கிறார். இப்படி வேட்பு மனுவில் எல்லாமே பொய் தகவல்கள் இருந்தும் தேர்தல் கமிஷன் அதை தள்ளுபடி செய்வது இல்லை.
நான் முன்பு இன்ஸ்பெக்டராக பணியாற்றினேன். நேர்மையாக பணி செய்த ஒரே காரணத்துக்காக என்னை பல ஊர்களுக்கும் மாற்றி பழி வாங்கினார்கள். அடுத்து டி.எஸ்.பியாக பதவி உயர்வு கிடைக்க இருந்தது. பழி வாங்கல் காரணமாக 13 ஆண்டு மேலும் சர்வீஸ் இருந்த நிலையில் 45 வயதிலேயே இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். 1998-ம் ஆண்டில் இருந்தே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன்.
இவ்வாறு மோகன்ராஜ் கூறினார். #TNByPoll #LoksabhaElections2019
பொள்ளாச்சி திருவள்ளூவர் திடலில் அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது-
கடந்த 5 ஆண்டுகால மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தி.மு.க. மத்திய அரசில் பங்கு வகித்த காலத்தில் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தவேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை.
பொள்ளாச்சி விவகாரத்தில் அரசின் நடவடிக்கை உலக மெங்கும் உள்ள தமிழர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பொள்ளாச்சி வழக்கில் ஆளுங்கட்சியினர் மீது சந்தேகம் எழுகிறது.
ஜெயலலிதா கடந்த பாராளுமன்ற தேர்தலை சந்தித்தபோது பா.ஜ.க.விற்கு எதிராக பிரசாரம் செய்தார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கின்றனர். இது எந்த பயனையும் தரப்போவதில்லை. மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை. எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது.
உச்சநீதிமன்றத்தில் போராடி பரிசு பெட்டி சின்னத்தை பெற்று தேர்தலில் போட்டியிடுகிறோம்.
கோடம்பாக்கத்திற்கு அடுத்த படியாக பொள்ளாச்சியில் படப்பிடிப்புகள் அதிகம் நடைபெறுவதால் பொள்ளாச்சி பகுதியில் படப்பிடிப்பு நகரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #bjp






