என் மலர்
தேர்தல் செய்திகள்
கோவை கொடிசியாவில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-
நாடு இப்போது முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. ஜனநாயகமா? பாசிச வெறியாட்டமா? என்ற கேள்விக்கு விடை காணும் தேர்தல் இது. ஆபத்தான துருப்பு சீட்டை பிரதமர் மோடி வீசுகின்றார். இந்துத்துவா கூட்டம் எந்த வன்முறையும் செய்ததில்லை என்று கூறுகிறார். இந்தியாவில் நடந்த வன்முறை செய்திகள் எதுவும் உங்கள் காதுகளை எட்டவில்லையா?.
கோவையில் ஜி.எஸ்.டி வரியால் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்திய அரசின் அச்சகம் மூடப்பட்டது. கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தையும் மூட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மோடி அரசு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது.
நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரின் பெயரை சொன்னாலே நடுங்குகின்ற எடப்பாடி அரசு இவர்களை எதிர்க்க முடியுமா?. இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கமிஷன் கேட்பதால் தொழிற்சாலைகள் வேறு மாநிலத்துக்கு சென்று விட்டன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை போலவே இருக்கின்றது. மக்கள் இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்டி, 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
இந்த கூட்டணியை பார்த்து மோடி நடுங்கிக் கொண்டிருக்கிறார். வெற்றிக்கு தடை விதிக்க முடியாது என்று எண்ணி தி.மு.க. தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையை கொண்டு சோதனை நடத்துகின்றனர்.
மே 31-ம் தேதிக்கு பிறகு இதே சோதனை உங்கள் வீட்டிலும் நடைபெறும். இந்தியாவில் மோடி அலை வீசவில்லை. மோடிக்கு எதிரான அலை வீசிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது, கோவை மாநகரம் தொழிலாளர்களும், தொழிலும் மிகுந்த நகரம். ஆனால் தொழில்கள் நசிந்துவிட்டன. ஆகவே தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டும், தொழிலாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். #LokSabhaElections2019 #Vaiko
பழனி:
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு பா.ம.க வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆப்பிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.
மாம்பழத்திற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் வேட்பாளர் உள்பட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பழனியில் நடிகர் கஞ்சா கருப்பு பா.ம.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் நரேந்திரமோடியை பிரதமராக்குவோம் என்பதற்கு பதிலாக மோடியை முதல்வராக்குவோம் என கூறியதால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் பிரசித்தி பெற்றது. வேட்பாளரை வெற்றி பெற வைத்தால் லட்டு தருகிறேன் என கூறினார். பஞ்சாமிர்தத்துக்கு பதிலாக லட்டு தருகிறேன் என்று கூறியதும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் தற்போது பொங்கலுக்கு அ.தி.மு.க அரசு வழங்கிய ரூ.1000 திட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறித்தான் நடந்தது என்றார். மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செய்ததாக கூறியதால் பா.ஜ.கவினர் அதிருப்தி அடைந்தனர். நட்சத்திர பேச்சாளராக களம் இறங்கிய கஞ்சாகருப்பின் பேச்சு பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்லில் புகழ் பெற்றது பூட்டு, ஆனால் தற்போது அரசியல் தலைவர்கள் தொடர்ந்து உளறி வருவதால் திண்டுக்கல் என்றாலே உளறல் பேச்சு என்று உருவாகி விட்டது. #actorganjakaruppu #pmmodi #admk
கரூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகை பபிதா பிரசாரம் செய்தார். வாங்கல் பகுதியில் அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா தந்த திட்டங்களை நிப்பாட்டிடு வாங்க. அவங்களுக்கு (குடும்பத்துக்கு) பயன்படும் திட்டங்களா கொண்டு வருவாங்க. தி.மு.க. இத்தனை முறை ஆட்சியில் இருந்தும் ஏதாவது திட்டத்தை முறையாக செயல்படுத்தினார்களா?
ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சத்துணவு திட்டம், வீடு இல்லாதவர்களுக்கு பசுமை வீடுகள், முதியோர் உதவித் தொகை, அம்மா உணவகம், மருந்தகம், 20 கிலோ ரேசன் அரிசி போன்ற பல்வேறு திட்டங்கள் முறையாக இன்றைக்கும் செயல்படுத்தப்படுகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அவர்களின் குடும்பம் முன்னேறும். அ.தி.மு.க. ஆட்சி நீடித்தால் ஏழை, எளிய மக்களின் வாழ்வு வளம்பெறும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தவரை அவர்களை கருணாநிதியால் எதிர்கொள்ள இயலவில்லை என்றார்.
பின்னர் அவர் பேசும்போது, எனது தந்தை பல படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளார். என்னை ஞாபகம் இருக்கிறதா? என்று மக்களிடம் கேட்ட அவர், பாக்கியராஜ் படத்தில் அவருக்கு சின்ன வீடாக வருவேன் என்றார்.
தொடர்ந்து, அங்கு நின்ற முதியவரை பார்த்து, சின்ன வீடு என்றதும் பெரியவர் எப்படி சிரிக்கிறார் பாருங்கள். சின்ன வீடாக நடித்துள்ளேன். மற்றபடி நிஜ சின்ன வீடு கிடையாது என தொண்டர்களை பார்த்து கலாய்த்தார். #LokSabhaElections2019
வயநாட்டில் மனு தாக்கல் செய்ய ராகுல்காந்தி நேற்று இரவே கேரளா வந்தார். கோழிக்கோட்டில் தங்கிய அவர் இன்று பகல் 11.30 மணிக்கு மனு தாக்கல் செய்ய வயநாடு கலெக்டர் அலுவலகம் சென்றார்.

கேரளா மட்டுமின்றி வயநாடு தொகுதியையொட்டியுள்ள தமிழகத்தின் நீலகிரி, கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர் தொகுதிகளில் இருந்து காங்கிரசார் வயநாட்டில் குவிந்தனர். இதுபோல கேரளாவின் அண்டை மாவட்டங்களில் இருந்தும் அணி அணியாய் காங்கிரசார் வயநாட்டில் திரண்டனர். பகல் 11 மணிக்கு வயநாட்டின் அனைத்து சாலைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் காங்கிரஸ் கொடிகளும், அவற்றை ஏந்திச்சென்ற தொண்டர்களும் பேரணியாக சென்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் அலை மோதிய கூட்டத்தில், தடுப்பு ஒன்று திடீரென விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ராகுல் காந்தியின் வருகையை பதிவு செய்ய வந்திருந்த 3 செய்தியாளர்கள் படுகாயமுற்றனர். அவர்களை ராகுல் காந்தி, ஆம்புலன்ஸில் ஏற்றினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #LokSabhaElections2019 #Congress #RahulGandhi
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்தார்.
அ.தி.மு.க. கூட்டணியை வெற்றிபெற செய்ய மக்கள் முடிவு செய்து விட்டார்கள். எதிரணி வேட்பாளர் ஜெகத்ரட்சகனை பற்றி உங்களுக்கு தெரியும். இந்த தொகுதியில் 10 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் தொகுதிக்கு அவர் எதுவும் செய்யவில்லை. இந்த பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, பாலாறு பிரச்சினைகளை தீர்க்க எங்களிடம் மெகா திட்டம் உள்ளது. அதனை நிறைவேற்றினால் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டம் இவற்றை நிறைவேற்றினால் ஆண்டு முழுவதும் பாலாற்றில் தண்ணீர் ஓடும். அதன்மூலம் குடிநீர் பிரச்சினை தீரும். விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இதனை எதிரணி வேட்பாளரால் செய்ய முடியாது. ஏனென்றால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தான் இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும். பெட்டி, பெட்டியாக பணம் துரைமுருகனிடம் உள்ளது. அதனால் அவர் தி.மு.க. பொருளாளராக உள்ளார். தி.மு.க. பக்கம் பணம் கொடுக்கும் திட்டம் தான் உள்ளது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டம் அவர்களிடம் இல்லை.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய்தான் கூறுகிறார். தோற்கப்போகிறோம் என தெரிந்து விட்டதால் அவர் விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார். அவர் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ் மற்றும் என்னையும் கொச்சையாகவும், அவதூறாகவும் பேசி உள்ளார். நாங்கள் வன்னியர் சொத்துகளை அபகரித்து விட்டோம் என்று கூறி உள்ளார்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. உள்பட எந்த விசாரணைக்கும் நானும், எங்கள் குடும்பத்தாரும் தயார். ஒரு சதுரஅடி இடத்தை கூட நாங்கள் அபகரித்து விட்டோம் என்று ஸ்டாலினால் நிரூபிக்க முடியுமா? அவ்வாறு நிரூபிக்க முடியாவிட்டால் நீங்கள் உங்கள் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா?. அதனை உங்கள் கட்சியினரே விரும்புகிறார்கள். ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். ‘நீட்’ தேர்வை கொண்டு வந்ததே காங்கிரசும், தி.மு.க.வும் தான். ராகுல்காந்தி ‘நீட்’ தேர்வு நடைமுறையில் இருக்கும். அதனை எதிர்க்கும் மாநிலங்களில் மட்டும் ரத்து செய்யப்படும் என்று கூறுகிறார். அவர்கள் கூட்டணியிலேயே முரண்பாடு. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தது தி.மு.க.தான். காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தி.மு.க. மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. அரசு ஊழியர்கள் பிரச்சினைக்கு காரணமே தி.மு.க.தான்.
உதயநிதி ஸ்டாலின் தருமபுரியில் பேசும்போது அன்புமணி தவிர வேறு வேட்பாளர்கள் இல்லையா? என்று கேட்டுள்ளார். தி.மு.க.வில் உங்கள் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் இல்லையா?, வேறு யாருக்கும் பொறுப்பு கொடுக்க மாட்டீர்களா?. அப்படி பார்த்தால் துரைமுருகன் தான் சீனியர். அவருக்கு தான் தி.மு.க. தலைவர் பதவி கொடுத்திருக்க வேண்டும். இவ்வளவு காலம் கழித்து இப்போது தான் அவருக்கு பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கே எதிரணியில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன், ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் டி.ஆர்.பாலு ஆகிய 2 பேரும் சாராய முதலாளிகள். பா.ம.க.வில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவசாயிகளின் பிள்ளைகள். இது விவசாயிகளுக்கும், முதலாளிகளுக்கும் நடக்கும் போர். பணத்தை அள்ளி வீசுவார்கள் ஏமாந்து விடாதீர்கள். இலங்கையில் ரூ.26 ஆயிரம் கோடியை ஜெகத்ரட்சகன் முதலீடு செய்துள்ளார். ரஜினிகாந்த் இலங்கை சென்றபோது அவருக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது இலங்கையில் ஜெகத்ரட்சகன் முதலீடு செய்ததற்கு ஸ்டாலினின் பதில் என்ன?. ஜெகத்ரட்சகன் அரக்கோணம் தொகுதியில் ரூ.1,000 கோடி முதலீடு செய்திருந்தாலே ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் புரட்சித் தலைவி அம்மா ஏழை-எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். இன்று அந்த வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது.
மக்களுக்காக பாடுபடும் அ.தி.மு.க. அரசை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. தி.மு.க. ஆட்சியில் மின்தடை ஏற்பட்டு மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள். இன்றும் அதை மக்கள் மறக்க மாட்டார்கள்.
ஆனால் இன்று எங்கும் மின்தடையே கிடையாது. மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகம் மீது தமிழக மக்கள் மீதும் அக்கறை இல்லாத மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று துடிக்கிறார். கனவு காண்கிறார். அவரது முதல்வர் கனவு பலிக்க போவது கிடையாது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #OPanneerselvam #MKStalin
பாலிவுட் நடிகை ஹேமமாலினி உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
2014 தேர்தலில் அவர் 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ராஷ்டீரிய லோக் தளம் கட்சி வேட்பாளர் ஜெய்ந்த்சவுத்ரியை தோற்கடித்தார்.
மதுரா தொகுதியில் மற்ற கட்சிகள் சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஹேமமாலினி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் சவுமுகன் பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் பொதுக் கூட்டத்தில் பேசினார். அரசு பள்ளியில் பொதுக் கூட்டம் நடத்துவது தேர்தல் விதிமுறை மீறலாகும். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அரசு பள்ளியில் பொதுக்கூட்டம் நடத்தியது தொடர்பாக பா.ஜனதா வேட்பாளர் ஹேமமாலினிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மதுரா மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
விளக்கம் அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி ராம்மிஸ்ரா தெரிவித்துள்ளார். #HemaMalini #EC
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நாகர்கோவிலில் பிரசாரம் செய்தார்.
இரவு கன்னியாகுமரி சிங்கார் இண்டர்நேஷனல் ஓட்டலில் எடப்பாடி பழனிசாமி தங்கினார். இன்று காலை அங்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனும் பங்கேற்றார்.
ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் அதிக எழுச்சி ஏற்பட்டுள்ளது. இது அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கான வெற்றி அறிகுறியாகும். புரட்சித்தலைவி ஜெயலலிதா இல்லாமல் நாம் இந்த தேர்தலை சந்திக்கிறோம். எனவே தேர்தல் வெற்றிக்காக இரவு, பகல் பாராமல் நாம் உழைக்க வேண்டும்.
நான் இல்லாவிட்டாலும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி நிலைக்கும் என்று ஜெயலலிதா கூறி இருந்தார். அதன்படி, 100 ஆண்டுகள் அ.தி.மு.க. அரசு நிலைக்கும். ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற நாம் பாடுபட வேண்டும்.
குமரி மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றுபட்டு வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிக்கு பாடுபட வேண்டும். அதன் மூலம் குமரி மாவட்டம் அ.தி.மு.க. கோட்டை என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்.
மத்தியில் நிலையான ஆட்சியை மோடி தலைமையிலான பா.ஜனதாவால் தான் தர முடியும். எனவே மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இடையே நல்லுறவு அமைய மத்தியில் பா.ஜனா ஆட்சி அமைய வேண்டும். தமிழகத்திற்கு பல திட்டங்கள் வரவேண்டும் என்றால் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும்.
மீனவர் சமுதாயத்திற்கு இந்த அரசு பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. மீனவ மக்கள் நமது வெற்றிக்கு ஒத்துழைக்க வேண்டும். ஜாதி, மத, மொழி, இன பாகுபாடு இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நமக்கு மக்கள் என்ற ஒரே ஜாதிதான் உண்டு.
அனைத்து மக்களுக்கும் எல்லாம் கிடைக்க, மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி அமைய வேண்டும். அதற்கு தேனீ போல சுறுசுறுப்பாக செயல்பட்டு பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதி பூங்காவாக உள்ளது. மக்கள் நலன் காக்கும் ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:-
கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் போட்டியிடும் நான் குமரி மாவட்ட மக்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம். மீனவ சமுதாய மக்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். அனைவரும் இணைந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #PMModi #EdappadiPalaniswami
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை ஒரங்கட்டி விட்டு அவர் அந்த தொகுதியில் களம் இறங்குகிறார்.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் போட்டியிடும் மேலும் 4 வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. காந்திநகர் தொகுதியில் சி.ஜே. சாவ்தா எம்.எல்.ஏ. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.
சாவ்தா காந்தி நகர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அமித்ஷாவுக்கு தான் கடும் போட்டியாக விளங்குவேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
அகமதாபாத் கிழக்கு தொகுதியில் இட ஒதுக்கீடு போராட்ட குழு தலைவரான ஹர்த்திக் படேலுக்கு நெருக்கமானவரான கீதா படேல் நிற்கிறார்.
ஹர்த்திக் படேல் போட்டியிடலாம் என்று எதிர் பார்க்கப்பட்ட ஜாம்நகர் தொகுதியில் முருபாய் கண்டேரியா போட்டியிடுகிறார். ஹர்த்திக் படேல் மீது வழக்கு இருப்பதால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ளன. இதில் 18 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. மீதமுள்ள தொகுதிகளுக்கு காங்கிரஸ் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் ஏப்ரல் 23-ந்தேதி தேர்தல் நடக்கிறது. #LoksabhaElections2019 #CJChavda
இந்தியாவின் 543 பாராளுமன்ற தொகுதிகளில் ஒன்றாக இருந்த கேரளாவின் வயநாடு தொகுதி இன்று சர்வதேச ஊடகங்களும் உற்றுப்பார்க்கும் தொகுதியாக மாறிப்போனது.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார் என்ற அறிவிப்புக்கு பின் அந்த தொகுதி எங்கிருக்கிறது?, வாக்காளர்கள் விபரம் உள்ளிட்ட தகவல்களை இணையதளங்களில் தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களும் முகாமிடும் தொகுதியாக வயநாடு மாறிப்போனது. ஒரு வாரத்திற்குள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக மாறிய வயநாட்டில் இன்று ராகுல்காந்தி மனு தாக்கல் செய்தார்.
வயநாட்டில் மனு தாக்கல் செய்ய ராகுல்காந்தி நேற்று இரவே கேரளா வந்தார். கோழிக்கோட்டில் தங்கிய அவர் இன்று பகல் 11.30 மணிக்கு மனு தாக்கல் செய்ய வயநாடு கலெக்டர் அலுவலகம் சென்றார்.
வயநாடு வந்த ராகுல்காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வந்தார். இவர்கள் இருவரையும் காண இன்று காலை முதலே வயநாட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கட்சி பாகுபாடின்றி ஏராளமான மக்கள், பெண்கள், குழந்தைகள் திரண்டனர்.

லட்சக்கணக்கில் குவிந்த மக்களால் வயநாடு குலுங்கியது. இதனால் நகரின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ராகுல்காந்தியை காண காத்திருந்த மக்களும், தொண்டர்களும் கூறும்போது, இந்தியாவில் எந்த தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய இந்த அளவுக்கு மக்கள் கூட்டம் கூடியதாக வரலாறு இல்லை.
வயநாட்டில் இன்று கூடிய கூட்டம் இந்த சரித்திர சாதனையை படைத்துள்ளது. இதைப்பார்க்கும் போது ராகுல் காந்தி இந்த தொகுதியில் 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போவது உறுதி என்றனர். #LokSabhaElections2019 #Congress #RahulGandhi #Wayanad
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்ட மன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல், பிரசாரம், செய்தியாளர்கள் சந்திப்பு என தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகின்றன. இதேப்போல் தேர்தல் ஆணையமும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை தேர்தல் ஆணையர் அசோக் லவாசா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:-

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பொதுமக்களை இடையூறு செய்ய கூடாது எனவும் வலியுறுத்தின. தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. காவல், துணை ராணுவம் ஆகியன பாதுகாப்புக்கு தயார் நிலையில் உள்ளன. வெளியில் வர முடியாத அளவுக்கு கைது நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பூத் சிலிப் மூலம் வாக்களிக்க முடியாது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை 2 நாளில் வழங்கப்படும். பெண்கள் மட்டும் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் மக்களவை தொகுதிக்கு தலா ஒன்று அமைக்கப்படும். விடுபட்ட 4 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான முடிவு விரைவில் அறிவிக்கப்படும். மேலும் நமோ டிவி விவகாரம் குறித்து நாளை விசாரணை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #ElectionCommissioner
தேனி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையிலும், பண பட்டுவாடா குறித்த சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கம்பம்-குமுளி சாலையில் அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள தனியார் ஆம்னி பஸ் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்பம் தொகுதி பறக்கும்படை தேர்தல் அலுவலர் சீமான், சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்திரன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.
சோதனையில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட சுமார் ஆயிரம் பச்சை நிற சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவை எங்கிருந்து வந்தது என ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
திருப்பூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைலில் இருந்து 11 பண்டல்களில் ஆயிரம்சேலைகள் கம்பத்தில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுனத்துக்கு வந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும் அதற்கான ஆவணங்களையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த சேலைகளை உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சேலைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். #LokSabhaElections2019






