search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people crowded"

    பொங்கல் பரிசு பொருட்களுடன் ரொக்கம் ரூ.1000 இன்று முதல் வழங்கப்படுவதால் காலையிலேயே மக்களின் கூட்டம் ரே‌ஷன் கடைகளில் அதிகமாக காணப்பட்டது. #Pongalgift #Rationshops
    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 வழங்குவது இதுவே முதல் முறையாகும்.

    ரே‌ஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை பெறக் கூடியவர்கள் மட்டுமின்றி ‘என்’ கார்டு என்று சொல்லக்கூடிய எந்த பொருளும் வாங்காதவர்களுக்கும் பொங்கல் பரிசுடன் பணம் வழங்கப்படுகிறது.

    ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத் துண்டு ஆகியவை இன்று முதல் அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் வினியோகிக்கும் பணி தொடங்கியது.

    ரொக்கமாக ரூ.1000 கொடுப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

    இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 12-ந்தேதி வரை 6 நாட்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் தினமும் 200 முதல் 300 ரே‌ஷன் கார்டுகளுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    எந்தெந்த கார்டுகளுக்கு எந்த நாளில் வழங்கப்படும் என்ற விவரம் ரே‌ஷன் கடைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. கார்டுகள் அல்லது தெருக்கள் வாரியாகவும் நெரிசல் இல்லாமல் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் 6 உதவி ஆணையர் அலுவலகம் வழியாக இந்த பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

    ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்களுடன் ரொக்கம் ரூ.1000 இன்று முதல் வழங்கப்படுவதால் காலையிலேயே கூட்டம் குவிந்தது. சென்னையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரே‌ஷன் கடைகள் உள்ளன. காலை 8.30 மணி முதல் ரே‌ஷன் கடைகள் வழக்கமாக செயல்பட தொடங்கும். ரே‌ஷன் கடைகள் திறப்பதற்கு முன்னதாக 6 மணிக்கெல்லாம் மக்கள் கூட தொடங்கி விட்டனர்.

    ரே‌ஷன் கடைகளுக்கு பொங்கல் பொருட்கள் நேற்று மாலையே வந்து சேர்ந்து விட்டன. கரும்புகளும் 2 அடி துண்டாக நறுக்கப்பட்டு அனைத்து கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ரொக்க பணம் மட்டும் இன்று காலையில்தான் கடைகளுக்கு வழங்கப்பட்டது.

    அதனால் பரிசு பொருட்கள் வழங்குவது தாமதமானது. ஒரு சில இடங்களில் வங்கியில் இருந்து பணம் காலையில் எடுத்து வந்த பிறகுதான் கொடுக்கப்பட்டது.

    பொங்கல் பரிசு பொருட்களை குடும்ப தலைவர் அல்லது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் தான் பெற முடியும். வீட்டில் வேலை செய்பவர்களோ, உறவினரோ, நண்பர்களோ பெற்று செல்ல முடியாது.

    பரிசு பொருட்களை ஒவ்வொருவரும் 2 கையெழுத்திட்டு பெற வேண்டும். பொங்கல் பொருட்களை பெற்று கொண்டதாக ஒரு கையெழுத்தும் ரொக்கம் ரூ.1000 பெற்று கொண்டதாக மற்றொரு கையெழுத்தும் பெறப்பட்டன.

    பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் வினியோகம் செய்யப்படுவதில் எவ்வித முறைகேடுக்கும் இடமளிக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பொதுமக்களுக்கு ரொக்கம் வெளிப்படையாக கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதால் இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் வினியோகிக்கப்பட்டன.



    முதல் நாள் என்பதால் சில மணி நேரம் காத்திருந்து பொருட்களை பெற்று செல்லும் நிலை ஏற்பட்டது. நாளை முதல் காலை 8.30 மணிக்கே வினியோகம் தொடங்கி பகல் 12.30 மணிவரையிலும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பெற்றுக்கொள்ள வசதியாக கடைகள் திறந்து இருக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Pongalgift #Rationshops

    ×