என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியில் நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
    X

    மத்தியில் நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

    மத்தியில் நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவிலில் பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #PMModi #EdappadiPalaniswami
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நாகர்கோவிலில் பிரசாரம் செய்தார்.

    இரவு கன்னியாகுமரி சிங்கார் இண்டர்நே‌ஷனல் ஓட்டலில் எடப்பாடி பழனிசாமி தங்கினார். இன்று காலை அங்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனும் பங்கேற்றார்.

    ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் அதிக எழுச்சி ஏற்பட்டுள்ளது. இது அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கான வெற்றி அறிகுறியாகும். புரட்சித்தலைவி ஜெயலலிதா இல்லாமல் நாம் இந்த தேர்தலை சந்திக்கிறோம். எனவே தேர்தல் வெற்றிக்காக இரவு, பகல் பாராமல் நாம் உழைக்க வேண்டும்.

    நான் இல்லாவிட்டாலும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி நிலைக்கும் என்று ஜெயலலிதா கூறி இருந்தார். அதன்படி, 100 ஆண்டுகள் அ.தி.மு.க. அரசு நிலைக்கும். ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற நாம் பாடுபட வேண்டும்.

    குமரி மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றுபட்டு வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிக்கு பாடுபட வேண்டும். அதன் மூலம் குமரி மாவட்டம் அ.தி.மு.க. கோட்டை என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்.

    மத்தியில் நிலையான ஆட்சியை மோடி தலைமையிலான பா.ஜனதாவால் தான் தர முடியும். எனவே மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இடையே நல்லுறவு அமைய மத்தியில் பா.ஜனா ஆட்சி அமைய வேண்டும். தமிழகத்திற்கு பல திட்டங்கள் வரவேண்டும் என்றால் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும்.

    மீனவர் சமுதாயத்திற்கு இந்த அரசு பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. மீனவ மக்கள் நமது வெற்றிக்கு ஒத்துழைக்க வேண்டும். ஜாதி, மத, மொழி, இன பாகுபாடு இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நமக்கு மக்கள் என்ற ஒரே ஜாதிதான் உண்டு.

    அனைத்து மக்களுக்கும் எல்லாம் கிடைக்க, மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி அமைய வேண்டும். அதற்கு தேனீ போல சுறுசுறுப்பாக செயல்பட்டு பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதி பூங்காவாக உள்ளது. மக்கள் நலன் காக்கும் ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:-

    கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் போட்டியிடும் நான் குமரி மாவட்ட மக்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம். மீனவ சமுதாய மக்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். அனைவரும் இணைந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #PMModi #EdappadiPalaniswami

    Next Story
    ×