என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி அரசு மக்களுக்கு எதிரானது - வைகோ ஆவேசம்
    X

    மோடி அரசு மக்களுக்கு எதிரானது - வைகோ ஆவேசம்

    மோடி அரசு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். #LokSabhaElections2019 #Vaiko
    கோவை:

    கோவை கொடிசியாவில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

    நாடு இப்போது முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. ஜனநாயகமா? பாசிச வெறியாட்டமா? என்ற கேள்விக்கு விடை காணும் தேர்தல் இது. ஆபத்தான துருப்பு சீட்டை பிரதமர் மோடி வீசுகின்றார். இந்துத்துவா கூட்டம் எந்த வன்முறையும் செய்ததில்லை என்று கூறுகிறார். இந்தியாவில் நடந்த வன்முறை செய்திகள் எதுவும் உங்கள் காதுகளை எட்டவில்லையா?.

    கோவையில் ஜி.எஸ்.டி வரியால் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்திய அரசின் அச்சகம் மூடப்பட்டது. கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தையும் மூட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மோடி அரசு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது.

    நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரின் பெயரை சொன்னாலே நடுங்குகின்ற எடப்பாடி அரசு இவர்களை எதிர்க்க முடியுமா?. இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கமி‌ஷன் கேட்பதால் தொழிற்சாலைகள் வேறு மாநிலத்துக்கு சென்று விட்டன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை போலவே இருக்கின்றது. மக்கள் இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்டி, 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு வைகோ கூறினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    இந்த கூட்டணியை பார்த்து மோடி நடுங்கிக் கொண்டிருக்கிறார். வெற்றிக்கு தடை விதிக்க முடியாது என்று எண்ணி தி.மு.க. தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையை கொண்டு சோதனை நடத்துகின்றனர்.

    மே 31-ம் தேதிக்கு பிறகு இதே சோதனை உங்கள் வீட்டிலும் நடைபெறும். இந்தியாவில் மோடி அலை வீசவில்லை. மோடிக்கு எதிரான அலை வீசிக்கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது, கோவை மாநகரம் தொழிலாளர்களும், தொழிலும் மிகுந்த நகரம். ஆனால் தொழில்கள் நசிந்துவிட்டன. ஆகவே தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டும், தொழிலாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். #LokSabhaElections2019 #Vaiko

    Next Story
    ×