என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    எந்த சவாலையும் சந்திக்கும் சக்தி எங்கள் கூட்டணிக்கு உள்ளது என்று பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து பிரேமலதா பேசினார். #Premalatha #hraja #dmdk






    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரியில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா, தே.மு.தி.க. கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டார். அப்போது அவர் பெரியகடை வீதியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவிற்கு ஆதரவு கேட்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:– 

    எங்கு பக்தி இருக்கிறதோ, அங்கே பண்பும் இருக்கும், பணிவும் இருக்கும். அதுபோல் பதவி வரும் போது, பணிவும் வேண்டும், துணிவும் வேண்டும். எச்.ராஜா, கேப்டன் விஜயகாந்தை போல் தைரியமானவர். அவர் மனதில் பட்டதை தைரியமாக கூறுபவர். தைரியமாக பேசுபவர்களிடம் உண்மை இருக்கும்.

    இந்தக் கூட்டணியில் எந்த குறையும் இல்லை. எந்த சவாலையும் சந்திக்கும் சக்தி எங்கள் கூட்டணிக்கு உள்ளது, மேலும் சவாலை எதிர்க்கக் கூடிய வல்லமையும் இந்த கூட்டணிக்கு உள்ளது. பதவியோடும், பணிவோடும், தொகுதியையும், அதன் மக்களையும் காப்பாற்ற கூடிய நல்ல வல்லமையானவருக்கு நீங்கள் வாய்ப்பு தர வேண்டும். இந்த தொகுதியில் எச்.ராஜாவை சரித்திர வெற்றியாளராக ஆக்க வேண்டும்.

    உழைக்க தயாராக உள்ள வேட்பாளருக்கு உங்கள் வாக்கை அளிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    இந்த முறை பிரேமலதா கூட்டத்தினரை பார்த்து, எங்கள் கூட்டணி வேட்பாளர் எச்.ராஜாவுக்கு நீங்கள் தாமரை சின்னத்தில் ஓட்டளிப்பீர்களா, அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்வீர்களா, சிவகங்கை தொகுதியில் தாமரை வென்றது என்ற சரித்திரத்தை படைப்பீர்களா என்று கேள்வி கேட்டார். அதற்கு கூட்டத்தினர் ஆதரவாக பதில் கூறினர். கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன். ஒன்றிய செயலாளர் வாசு, பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், தே.மு.தி.க. தனசேகரன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #Premalatha #hraja #dmdk
    ராகுல் காந்தி அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 உதவி திட்டத்திற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது என மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார். #mkstalin #congress #parliamentelection
    ஆரணி:

    ஆரணியில் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் தபால் வாக்குகளை திமுக கூட்டணிக்கு அளிக்க வேண்டும். ராகுல்காந்தி அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 உதவித்திட்டத்திற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென்று நாட்டு பாதுகாப்பு மீது அக்கறை வந்துள்ளது. தேர்தலுக்கு முன் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு இருந்தவர்கள் தற்போது தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்து உள்ளனர்.

    தேர்தல் வந்தால் மட்டுமே தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. தேர்தல் முடிந்தால் இந்தியாவில் இருக்க மாட்டார். 


    வாக்குறுதி அளித்த படி ஒவ்வொருவர் வங்கிக்கணிக்கிலும் மோடி ரூ.15 லட்சம் செலுத்தி உள்ளாரா என கேள்வி எழுப்பினார். பொய் வாக்குறுதிகளை அளிப்பதையே வாடிக்கையாக கொண்டவர் பிரதமர் மோடி.

    ராகுல்காந்தி வெளியிட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் நரேந்திர மோடி அதிர்ச்சியில் உள்ளார். தமிழகத்திற்கு மீண்டும் பல நலத்திட்டங்கள் கிடைத்திட மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும்.

    காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது திமுக ஆட்சியின் சாதனை என மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    தமிழக மக்கள் தங்கள் கோபத்தை காட்ட வேண்டிய நாள் தான் ஏப்.18-ம் தேதி. மக்கள் உணர்வுகளை பார்க்கும் போது 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆரணி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். #mkstalin #congress #parliamentelection
    தேர்தல் மற்றும் முந்தைய நாளில் முன் அனுமதியின்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. #ec #parliamentelection
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பொது கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. முதல் கட்ட தேர்தல் வருகிற ஏப்ரல் 11ந்தேதி தொடங்குகிறது. பின் தொடர்ந்து தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23ந்தேதி நடைபெறும்.

    தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் வந்துள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் தேர்தல் பறக்கும் படையால் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், தேர்தல் நாளிலும், தேர்தலுக்கு முந்தைய நாளிலும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் முன் அனுமதியின்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. #ec #parliamentelection
    தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆதரவு அலை வீசுகிறது. இதனால் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். #udhayanidhi #mkstalin #congress

    புளியங்குடி:

    புளியங்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். டி.என். புதுக்குடி காமராஜர் சிலை அருகே பேசியதாவது:-

    மத்திய-மாநில அரசுகள் தமிழகத்திற்கு செய்த துரோகம் எண்ணிலடங்காதவை. குறிப்பாக நீட் தேர்வை அமல்படுத்தியது, டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு, கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காதது என பல்வேறு துரோகங்களை தமிழக மக்களுக்கு மத்திய-மாநில அரசுகள் செய்துள்ளது.

    இதன் எதிரொலியாக தற்போது இந்தியா முழுவதும் மோடியின் எதிர்ப்பலையும், தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆதரவு அலையும் வீசுகிறது. இதனால் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். அதே நேரத்தில் தேர்தல் அறிக்கையின்படி வெற்றி பெற்ற பின் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

    விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற காத்திருக்கும் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ், அதற்கு உறுதுணையாக உள்ள தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்காளப் பெருமக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே உங்களுக்கு சேவை செய்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #udhayanidhi #mkstalin #congress

    பாராளுமன்ற தேர்தலில் ரங்கசாமி பண அரசியல் செய்கிறார் என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து கதிர்காமம் தொகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    மத்தியில் ஆளும் நரேந்திர மோடி ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. அவர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. வேலை வாய்ப்புகள் இல்லை. விலைவாசி குறைக்கவில்லை. தொழிற்சாலைகள் கொண்டு வருவேன், விவசாயத்தை மேம்படுத்துவேன், அரசு ஊழியர் சம்பளம் உயர்த்துவேன் என மோடி கூறினார். இதில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை.

    பா.ஜனதாவின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது.

    காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பொது, அரசியல் வாழ்க்கையில் அனுபவம் பெற்றவர். எதிர்கட்சி வேட்பாளருக்கு என்ன அனுபவம் உள்ளது? பணம் இருப்பது மட்டும்தான் அனுபவம். பணம் இருந்தால் என்.ஆர்.காங்கிரசில் சீட் கிடைக்கும். பணம் இல்லாவிட்டால் உழைப்பவர்களுக்கும் சீட் கிடைக்காது. பணம் மட்டும்தான் அவரிடம் உள்ளது. ரங்கசாமி பண அரசியல் செய்கிறார்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியில் பணிபுரிந்து மக்களுக்கு சேவை செய்த வைத்திலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவர் வெற்றி பெற்றால் மத்திய அரசிடம் கேட்டு புதுவைக்கு பல புதிய திட்டங்களை கொண்டு வருவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரச்சாரத்தின்போது துணைத்தலைவர் பெத்த பெருமாள், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் கே.எஸ்.பி. ரமேஷ், தி.மு.க. தங்கவேலு, இந்தியகம்யூனிஸ்டு நாரா.கலைநாதன், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், மதி.மு.க. கபிரியேல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சஞ்சீவி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.

    அ.தி.மு.க.விடம் பாட்டாளி மக்கள் கட்சியை டாக்டர் ராமதாஸ் அடகு வைத்துவிட்டார் என்று திண்டுக்கல் லியோனி பேசியுள்ளார். #dindigulleoni #ramadoss #modi

    தர்மபுரி:

    பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி தர்மபுரி மாவட்டம் கடத்தூர், பொம்மிடி, அரூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து வேனில் சென்று பிரசாரம் செய்தார்.

    அ.தி.மு.க.விடம் பாட்டாளி மக்கள் கட்சியை டாக்டர் ராமதாஸ் அடகு வைத்துவிட்டார். பா.ம.க.வை நம்பி இருக்கும் மக்களுக்கு அவர் துரோகம் செய்துவிட்டார். 8 வழிச்சாலை, நீட் தேர்வு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் அன்புமணி அ.தி.மு.க.விடம் கூட்டணி வைத்து உள்ளார். 200 மாணவர்களின் கேள்விக்கு விடை கொடுத்த டாக்டர் அன்புமணியால் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை.

    தமிழின போராளியாக போராடிய ராமதாஸ் இன்றைக்கு மோடியோடு கூட்டணி வைத்து ‘பாரத் மாதாஹி ஜே’ என்று கோ‌ஷம் போடுகிறார்.

    தமிழகத்தில் முனியாண்டி விலாஸ் கிளை இருக்கும் அளவிற்கு கூட பா.ஜனதாவின் கிளைகள் கிடையாது. நாட்டின் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று தெரிவித்த மோடி ஒருவருக்கும் கூட அதை போடவில்லை. ஏமாற்றி விட்டார்.

    இவ்வாறு அவர் பேசினார். #dindigulleoni #ramadoss #modi

    இந்த தேர்தலோடு தி.மு.க. காணாமல் போய் விடும் என்று பென்னாகரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார். #ramadoss #pmk #mkstalin #parliamentelection

    தருமபுரி:

    தர்மபுரி எம்.பி. தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர். அன்புமணி ராமதாசை ஆதரித்து பென்னாகரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    300 இடங்களில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க. என்ற கட்சியை பெண்கள் இல்லாமல் ஆக்க வேண்டும்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை பற்றி அவதூறாக பேசி வருகிறார். நான் வன்னியர்களுக்கு எதும் செய்யவில்லை என்று கூறி வருகிறார். ஒவ்வொரு கிராமத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஏழை மாணவர்கள் டாக்டர்களாக உருவாகி வருகிறார்கள். அதற்கு நான் தான் காரணம். இட ஓதுக்கீடு பெற்று தந்ததால் தான் ஏழை மாணவர்களும் இன்று டாக்டருக்கு படிக்கிறார்கள். என்னை போய் எதும் செய்யவில்லை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி சேருவோம் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் கூட்டணி சேராததால் மு.க.ஸ்டாலின் கோபத்தில் ஏதோ, ஏதோ பேசி வருகிறார். என்னை அவதூறாக பேசி வரும் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தலில் தோல்வி பயம் வந்து வந்துவிட்டது. அதனால் தான் அவர் அப்படி பேசி வருகிறார்.

    தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை, காவிரி உபரிநீர் தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு நிச்சயம் கொண்டு வரும்.

    தமிழக அரசு மீது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கொஞ்சம் கோபத்தில் உள்ளனர். அவர்களின் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்ற நான் உறுதி கூறுகிறேன். எனவே அனைவரும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் அன்புமணி ராமதாசை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் இன்று தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு உகாதி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    மத்தியில் பா.ஜனதா கூட்டணி அதிக இடங்கள் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி வெற்றி கூட்டணி ஆகும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வரம்பு மீறி பேசி வருகிறார். இந்த தேர்தலோடு தி.மு.க. காணாமல் போய் விடும்.

    இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார். #ramadoss #pmk #mkstalin #parliamentelection

    குமரி மாவட்டம் முழுவதும் பாரதீய ஜனதாவிற்கு வெற்றி அலை வீசுகிறது என்று பொன். ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். #ponradhakrishnan #bjp #parliamentelection

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவில் நகரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

    நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். நெசவாளர் காலனி, ஆசாரிப்பள்ளம், மேலராமன் புதூர், சைமன்நகர், மூவேந் தர்நகர், பொன்னப்ப நாடார் காலனி, டி.வி.டி. காலனி, பார்வதிபுரம், கட்டையன் விளை, காமராஜர்புரம் பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டினார். சென்ற இடங்களில் எல்லாம் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் நான் கடந்த முறை 7 நாட்கள் மட்டுமே பாராளுமன்றத்திற்கு சென்றதாக கூறி உள்ளார். பாராளு மன்றத்தின் ஆவணங்களை பார்த்துவிட்டு அவர் பேச வேண்டும்.


    துறைமுகம் கொண்டுவர அனுமதிக்கமாட்டேன் என்றார். இப்போது துறை முகத்திற்கு எதிரானவன் அல்ல என்று பிரசாரம் செய்து வருகிறார். யாரை ஏமாற்ற நினைக்கிறார் அவர். மீனவர் சமுதாய மக்களை மட்டும்மல்லாமல் 20 லட்சம் மக்களையும் ஏமாற்றுகிறார்.

    மூடிக்கிடக்கும் ரப்பர் தொழிற்சாலை திறக்கப்படும் என்கிறார். இ.எஸ்.ஐ. மருத்துவ மனையை தூத்துக்குடிக்கு கொண்டு சென்றுவிட்டதாக பேசுகிறார். இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கான விளக்கம் அவருக்கு தெரியுமா? தூத்துக்குடியில் அமையும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வேறு, நமது மாவட்டத்தில் அமையும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வேறு. திட்டங்களை பற்றி தெரியாமல் காங்கிரஸ் வேட்பாளர் பேசி வருகிறார். குமரி மாவட்டம் முழுவதும் பாரதீய ஜனதாவிற்கு வெற்றி அலை வீசி வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி பயத்தில் பேசி வருகிறார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 ஆயிரம் கோடியில் திட்டங்களை கொண்டுவந்து உள்ளோம். நாகர்கோவில் நகரில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. நாங்கள் நிறைவேற்றி உள்ள வளர்ச்சித்திட்டங்கள் மக்களுக்கு தெரியும். நான் செயல்படுத்தி உள்ள வளர்ச்சித்திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின் போது அ.தி. மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், த.மா.கா. மாவட்ட தலைவர் டி.ஆர். செல்வம், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கால்டுவின் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர். #ponradhakrishnan #bjp #parliamentelection

    மக்களுக்கு உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன். அதனால் என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார். #tamilisai #bjp #kanimozhi

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டி பகுதியில் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அரசு மற்றும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெறுகிறவர்களுக்குத்தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மாறாக கடைக்காரர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காததால், பொருளாதாரத்தில் நலிவடைந்து முதுமையில் வாடினர். இவர்களின் துயரங்களை அறிந்த பிரதமர் நரேந்திரமோடி, 60 வயதான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார்.

    தமிழகத்திலும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வறுமைக் கோட்டுக்குகீழ் வாழும் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கினார். ஏழை-எளிய மக்களின் நலனில் அக்கறை கொள்கிற மத்திய-மாநில அரசுகள் தொடர தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    பெரும்பாலானவர்கள் அரசியலில் இருந்து கொண்டு படிக்காமலே பல டாக்டர் பட்டங்களை பெறுவார்கள். ஒருவேளை டாக்டராக சரியாக படிக்காததால் தமிழிசை அரசியலுக்கு சென்று விட்டாரோ? என்று சிலர் கருதலாம். ஆனால் நான் அவ்வாறு இல்லை. மகப்பேறு மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளை கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் சென்று படித்தேன். எனது மருத்துவமனையில் இரவு 2 மணி வரையிலும் கண்விழித்து பெண்களுக்கு மருத்துவம் பார்த்தேன்.

    கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடுகள் இருந்தால், அதனை கருவிலே சரி செய்யக்கூடிய படிப்பு படித்து உள்ளேன். என்னிடம் சிகிச்சைக்காக வருகிறவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து காத்திருந்து சிகிச்சை பெற்றனர். நான் மருத்துவ கல்லூரியில் துணை பேராசிரியராக பணி புரிந்தேன். நான் நினைத்து இருந்தால் சுயநலமாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் நான் எனது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன்.

    கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் கடும் மின்வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி, தமிழகத்தை மிகைமின் மாநிலமாக மாற்றியது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது, பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுவது உறுதி. நாடு முழுவதும் தொழில்வளம் பெருக தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இங்கு எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் முறைகேட்டால் திகார் ஜெயிலில் இருந்தவர். ஆனால் நான் என்றும் மக்களுக்கு சேவையாற்றுவதையே கடமையாக கொண்டுள்ளேன். நான் என்றும் இந்த மண்ணின் சொந்தக்காரிதான். என்றும் உங்களின் சகோதரிதான். எனவே தாமரை சின்னத்தில் வாக்களித்து, என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilisai #bjp #kanimozhi

    பிரதமர் மோடியை நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை என்று தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பேசியுள்ளார். #kanimozhi #pmmodi

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று மாலையில் ஆழ்வார்திருநகரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலானது மதவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய தேர்தல், பிரதமர் நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்புகிற தேர்தல். சரக்கு, சேவை வரி விதித்ததாலும், உயர் பணமதிப்பு இழப்பு செய்ததாலும், சிறு குறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறிய பா.ஜனதா அரசு, ஏற்கனவே வேலை செய்தவர்களின் வேலையையும் பறிக்கின்ற நிலையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் 5 லட்சம் பேர் வேலை இழந்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலையே பா.ஜனதா சார்பில் ஒரு வேட்பாளரை களத்தில் நிறுத்தி உள்ளது. அந்த ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக போராடியபோது, அவர்களிடம் முதல்-அமைச்சரோ, அமைச்சரோ, அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ சென்று பேசவில்லை. 100-வது நாளில் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டு கொன்றனர்.

    1,000 பேரை காப்பாற்றுவதற்கு 13 பேரை கொல்வதில் தவறில்லை என்ற பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்தான் தற்போது இங்கு பா.ஜனதா வேட்பாளராக உள்ளார். மண்ணையும், மக்களையும் நேசித்தவர்களை சுட்டு கொல்வதில் தவறில்லையாம். பா.ஜனதா வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்வதுதான், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு நாம் செலுத்துகிற அஞ்சலியாக அமையும். வட மாநிலங்களில் மத கலவரங்களை ஏற்படுத்தி, மக்களை பிரித்தாளக்கூடிய தந்திரங்களை பா.ஜனதா அரசு செய்து வருகிறது. தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகத்தையே பா.ஜனதா அரசு செய்து வந்துள்ளது. தமிழகத்தில் புயல், வெள்ளம் வந்தபோதும் வராத பிரதமர் நரேந்திர மோடி, தற்போது தேர்தலுக்கு முன்னதாக 3 முறை வந்து விட்டார். இன்னும் எத்தனை முறை வந்தாலும் தமிழக மக்கள் அவரை நம்ப தயாராக இல்லை.

    அதேபோன்று பா.ஜனதா அரசின் எடுபிடியாக கைப்பாவையாக செயல்படும் அ.தி.மு.க. அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட பிரதமராக ராகுல்காந்தி விரைவில் வர உள்ளார். அதே நேரத்தில் தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையும். அப்போது தமிழகத்தின் அனைத்து உரிமைகளும், நலன்களும் பாதுகாக்கப்படும்.

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும். நான் என்றும் உங்களுடனே வாழ்ந்து உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன் என்று உறுதி கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #kanimozhi #pmmodi

    பிரதமர் மோடி உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப் பயணம் செய்து வருவதால் ஏழைகளை சந்திக்க நேரமில்லை என்று தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா பேசினார். #LoksabhaElections2019 #PriyankaGandhi #PMModi
    காஜியாபாத்:

    உத்தரபிரதேசத்தில் உள்ள காஜியாபாத் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக டோலிசர்மா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரியங்கா பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். ஜப்பானுக்கு சென்று அங்குள்ளவர்களை சந்தித்து பேசுகிறார்.

    பாகிஸ்தானுக்கு போய் உணவருந்தி வருகிறார். சீனாவுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்திக்கிறார். ஆனால் அவருடைய சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள ஏழை மக்களை அவர் சந்தித்து பேசுவதை நாம் பார்த்து இருக்கிறோமா?

    அவருடைய தொகுதியில் உள்ள ஏழைகளை சந்திக்க அவருக்கு நேரம் இல்லை. அனைத்து பிரச்சனைகளிலும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவையே பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு மக்களுக்காக என்ன செய்து இருக்கிறது? எதுவும் செய்யவில்லை.

    இவ்வாறு பிரியங்கா பேசினார். #LoksabhaElections2019 #PriyankaGandhi #PMModi
    காட்பாடியில் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்று தி.மு.க.வினருக்கு தெரியும் என்று வேலூரில் நடந்த பிரசாரத்தில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியுள்ளார். #vijayaprabhakaran #duraimurugan

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரித்தார்.

    வேலூர் எங்க அம்மாவோட சொந்த மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் ஒரே மருமகன் விஜயகாந்த் தான். தற்போது ‘டாக் ஆப் தி டவுன்’ என வேலூரை தான் அழைக்கிறார்கள். வேலூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக மாறிவிட்டது. ஏனென்றால் ஆட்சியிலே இல்லாவிட்டாலும் பணம் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டுள்ளது. அது யாருடையது என்று உங்களுக்கே தெரியும்.

    விஜயகாந்தை தொட்டால் பிரச்சினை என்றேன். தேவையில்லாமல் துரைமுருகன் சீண்டி பார்த்து விட்டார். அதன் விளைவை தெரிந்து கொண்டிருப்பார். ஸ்டாலின் சொல்கிறார் எங்களுக்கு மடியில் கனம் இல்லை அதனால் வழியில் பயம் இல்லை என்று. இதை விஜயகாந்த் சொன்னால் பொருந்தும். உங்கள் உடல் முழுவதும் கனம் இருக்கிறது. அதனால் தான் மாட்டிக் கொண்டீர்கள். ஏ.சி.சண்முகம் பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளார். அதை அவர் நிறைவேற்றுவார்.

    ஸ்டாலின் எதை எடுத்தாலும் எதிர்க்கிறார். என்னிடம் கூட சிலர் ஸ்டாலினை பற்றி கேட்டார்கள். நான் அவர் ஒரு உளறும் புகார் பெட்டி என்று கூறினேன். எதை எடுத்தாலும் அதை எதிர்த்தால் அவர்கள் முட்டாள் என்று அர்த்தம். எதை எதிர்க்கனுமோ அதை தான் எதிர்க்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நாடு வளரும். மத்தியிலும், மாநிலத்திலும் நம் ஆட்சி இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கூட்டணி வைத்தால் தான் நமக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று விஜயகாந்த் கூறினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், தே.மு.தி.க. மத்திய மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். #vijayaprabhakaran #duraimurugan

    ×