என் மலர்
தேர்தல் செய்திகள்
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்றிரவு விசாகப்பட்டினத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-
மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார். அவரது தூண்டுதலின் பேரில்தான் ஆந்திராவில் தெலுங்கு தேசம் தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பிரதமர் மோடி ஜனநாயகத்தை அவமதித்து கொண்டிருக்கிறார். மோடியின் பேச்சை கேட்டுக்கொண்டு, இப்போது ஆந்திர மாநில தலைமை செயலாளரையே தேர்தல் ஆணையம் வெளியேற்றிவிட்டது.
தேர்தல் ஆணையம் முதலில் கலெக்டர்களை மாற்றியது. பிறகு போலீஸ் அதிகாரிகளை மாற்றியது. இப்போது தலைமை செயலாளரையே மாற்றி விட்டார்கள். இதனால் தேர்தல் ஆணையம் நடுநிலை தவறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அடுத்து என்னை குறி வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் என்னை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். என்னை ஜெயிலில் அடைக்க முடிவு செய்துள்ளனர். என்னை சிறையில் தள்ளினாலும் நான் பணிந்து விட மாட்டேன்.
கடந்த 40 ஆண்டுகளில் நான் பல தேர்தல்களை பார்த்து விட்டேன். இந்த தடவை நிறைய முறைகேடு நடக்கிறது. மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்துள்ளனர்.
7 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார். #Loksabhaelection2019 #ChandrababuNaidu #PMModi
பா.ஜனதா சார்பில் மதுரா தொகுதியில் பிரபல இந்தி நடிகையும் தற்போதைய எம்.பி.யுமான ஹேமமாலினி போட்டியிடுகிறார். தீவிர பிரசாரத்தில் குதித்துள்ள ஹேமமாலினி மிகவும் பந்தாவாக அந்த தொகுதியை வலம் வந்துகொண்டிருக்கிறார்.
சுமார் 75 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் காரை தான் பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்.

இதற்கிடையே கோவர்தன் என்ற இடத்தில் விவசாயிகளிடையே டிராக்டரில் சென்று பிரசாரம் செய்வதுபோல போஸ் கொடுத்த ஹேமமாலினியை கிண்டல் செய்து காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் உமர் அப்துல்லா தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனால் ஹேமமாலினியின் பிரசார முறை மேலும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக மாறியுள்ளது. 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஹேமமாலினி ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி வேட்பாளர் ஜெயந்தி சவுத்ரியை வீழ்த்தி வெற்றி பெற்றார். #LokSabhaElections2019 #HemaMalini
ஒவ்வொரு அரசியல் கட்சியும், தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.
அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் நடிகர் விவேக் ஓபராய், நடிகைகள் ஹேமமாலினி, ஸ்மிருதி இரானி ஆகியோரது பெயர் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அவர்கள் எந்தெந்த மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வார்கள் என்ற தகவல்களும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

அது போல நடிகர் விவேக் ஓபராய் குஜராத் மாநிலத்தில் பிரசாரம் செய்வார் என்று தேர்தல் ஆணையத்திடம் கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் 25 பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானை நடத்திர பேச்சாளராக பா.ஜ.க. மேலிடம் அறிவித்துள்ளது. #LokSabhaElections2019 #BJP #VivekOberoi
சிதம்பரம்:
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
பரங்கிப்பேட்டை அருகே உள்ள ஆயிபுரம் கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். சிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க சதி திட்டம் தீட்டுகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் யாரும் பாராளு மன்றத்துக்குள் நுழையக் கூடாது என்று பா.ஜனதா வினர் நினைக்கின்றனர். இதனால் என்னை தோற்கடிக்க அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் சிதம்பரம் தொகுதியில் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.
அதற்கு காரணம் நான் பா.ஜனதா, அ.தி.மு.க. மதவாதம் ஆகியவற்றை எதிர்த்து பேசுவதுதான். ஏழை மக்களுக்காக, விவசாயிகளுக்காக பேசுவதாலும் எதையும் கண்டித்து பேசுவதாலும் ஆத்திரத்தில் என்னை தோற்கடிக்க பணத்தை இறக்கி உள்ளனர்.
திருச்சியில் எங்கள் கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் காரை சோதனையிட்டு அவர் தொழிலுக்காக வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து அந்த சம்பவத்தை தேர்தலோடும் என்னோடும் முடிச்சு போட்டு வேண்டு மென்றே என் மீது களங்கத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சியினர் முயற்சி செய்கின்றனர்.
அவர் அந்த பணத்தை தொழிலுக்காக எடுத்துச் செல்கிறேன் என கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தை கட்சியிலே தொழில் அதிபர்கள் இருக்கக் கூடாதா? ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் எவரிடமாவது இது வரை சோதனை நடந்துள்ளதா? அவர்கள் தேர்தல் விதி முறைகளுக்கு உட்பட்டுதான் செலவு செய்கிறார்களா?
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சியினர் தேர்தல் செலவுகளுக்கு உட்பட்டுதான் செலவு செய்கின்றனர் என வருவாய்துறை அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்களா? எத்தனை களங்கத்தை சுமத்த நினைத்தாலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார். #thirumavalavan #bjp #admk
ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முறை ஒடிசாவில் தாமரை மலர்ந்தே தீரும். வெற்றியை பாஜக அள்ளிப்பருகும். ஒடிசா மாநிலத்தில் இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை மலரும் என்று நான் பெருமையுடம் சொல்லுவேன். அதேப்போல் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. பாஜக நாட்டின் வலிமையான மற்றும் தீர்க்கமான கட்சியாகும். நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாஜக செயல்படுகிறது. எனவே நேர்மையான ஆட்சி தேவையா? அல்லது ஊழல் ஆட்சி தேவையா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அதிமுக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது போன்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வாகுச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அன்புமணி ராமதாஸ் இந்த கருத்தை தெரிவித்ததாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரூர் தேர்தல் அதிகாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 11-ந்தேதி முதல் மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே 23-ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது.
மத்தியில் ஆட்சியைப் பிடிக்கப் போவது பாரதிய ஜனதாவா? அல்லது காங்கிரசா? என்ற எதிர் பார்ப்பு நாடு முழுவதும் நிலவுகிறது. இதுவரை வெளியான 2 முக்கிய கருத்து கணிப்புகள் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் 2-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை சுமார் 20 நாட்களுக்கு நாடு முழுவதும் மிக பிரமாண்டமான கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. நேஷனல் டிரஸ்ட் நடத்திய அந்த கருத்துக் கணிப்பில் சுமார் 31 ஆயிரம் பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். அந்த சர்வே முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
அந்த கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் செல்வாக்கு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. ராகுலுடன் ஒப்பிடுகையில் மோடியே வலுவான, சிறந்த தலைவர் என்று பெரும்பாலான வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
யார் பிரதமராக வர வேண்டும் என்ற கேள்விக்கு சுமார் 63 சதவீதம் பேர் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று கூறியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் நேஷனல் டிரஸ்ட் நடத்திய கருத்துக் கணிப்பில் மோடி பிரதமராக 52.8 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராக மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. 26.9 சதவீதம் பேர் தான் ராகுல் பிரதமர் ஆக தகுதி உடையவர் என்று கூறியுள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் தொடர்ந்து மாநில கட்சிகளுக்குத்தான் அதிக வரவேற்பு உள்ளது. இந்த மாநிலங்களில் ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநிலங்களிலும் மோடிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. #Loksabhaelections2019 #PMModi #RahulGandhi
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 18-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
அதே தினத்தன்று தமிழகம், புதுச்சேரியில் காலியாக உள்ள 19 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடந்தது. மார்ச் 29-ந்தேதி வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழக தேர்தல் களத்தில் மொத்தம் 845 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 65 பேர் பெண்கள் ஆவார்கள்.
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி. தினகரன் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் இடையே 5 முனைப்போட்டி நடைபெறுகிறது.
தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. எனவே அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந் தேதி முதல் மாவட்டம் தோறும் பிரசாரம் நடத்தி வருகிறார்.
இதே போல் கூட்டணி கட்சி தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான தலைவர்கள் தங்களது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்து விட்டனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, ராகுல் 2-ம் கட்ட பிரசாரத்துக்காக தமிழகத்துக்கு வர உள்ளனர். தற்போதைய தகவல்படி மோடி 2 தடவையும், ராகுல் ஒரு தடவையும் தமிழ்நாட்டுக்கு வர உள்ளனர்.
மோடி 9 மற்றும் 13-ந் தேதிகளிலும், ராகுல் 12-ந்தேதியும் தமிழகம் வருகிறார்கள். அவர்கள் இருவரும் தேனி தொகுதியை குறிவைத்து பிரசாரம் செய்ய இருப்பதால் தமிழக தேர்தல் களத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அ.ம.மு.க. சார்பில் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வனும் போட்டியிடுகிறார்கள்.
இதனால் தேனி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. அதோடு அங்கு தேர்தல் களமும் சூடு பிடித்துள்ளது. வெற்றியை தட்டிப் பறிக்க 3 வேட்பாளர்களிடமும் கடும் சவால் ஏற்பட்டுள்ளது.
தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேனியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந்தேதி பிரசாரம் செய்ய உள்ளார்.
இதற்காக தேனி நகர் பைபாஸ் ரோடு புது பஸ்நிலையம் செல்லும் சாலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ராகுல்காந்தி பேசுகிறார். காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வேட்பாளர் இளங்கோவன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடத்தை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ராகுல் பிரசாரம் செய்துவிட்டு செல்லும் அடுத்த நாளே அதாவது 13-ந் தேதி பிரதமர் மோடி ஆண்டிப்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அப்போது தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற அ.தி.முக. வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் அ.தி.மு.க. வேட்பாளர் மயில்வேல், ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.
இதற்காக ஆண்டிப்பட்டி அருகே எஸ்.ரெங்கநாதபுரம் பிரிவில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் போட்டி பிரசாரம் செய்ய உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தலைவர்கள் வருகையையொட்டி தேனி மாவட்டத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதி தவிர கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
இது பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமேதி தொகுதியில் தோல்வி ஏற்படும் என்ற பயம் காரணமாக ராகுல் வயநாடுக்கு ஓடி இருப்பதாக கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். பிரதமர் மோடியும் இது தொடர்பாக வார்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “வயநாடு தொகுதியில் சிறுபான்மை இன மக்கள் மிக, மிக அதிகமாக உள்ளனர். அவர்களை நம்பித்தான், அவர்களது ஓட்டுக்களை நம்பித்தான் ராகுல் வயநாடு தொகுதிக்கு சென்றுள்ளார்” என்றார்.
பிரதமர் மோடி கடந்த 1-ந்தேதி இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பேச்சு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் புகார் அளித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வியும் உறுதிப்படுத்தினார்.
பிரதமர் மோடி 1-ந்தேதி வார்தா பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “இந்துக்களை காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது. இந்து பயங்கரவாதம் என்று சொல்லப்படுவதை ஏற்க இயலாது” என்றும் பேசி இருந்தார்.
மோடியின் இந்த பேச்சையும் குறிப்பிட்டு காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரசாரத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடிக்கும், மராட்டிய மாநில தேர்தல் அதிகாரிக்கும் இது தொடர்பாக நோட்டீசு அனுப்பப்படும் என்று தெரிகிறது. #LokSabhaElections2019 #PMModi #EC #RahulGandhi #Congress
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பேசியதாவது:

எடப்பாடியின் உதவாக்கரை ஆட்சியையும், மோடியின் சர்வாதிகார ஆட்சியையும் நீங்கள் கவிழ்க்க தயாராகி விட்டீர்கள். வரும் 18ம் தேதி முக்கிய பங்கு ஆற்றவிருக்கும் நீங்கள், மறக்காமல் செய்து விடுங்கள். இந்த விழுப்புரத்திலே தான் முதன்முறையாக கழகத்தின் சார்பாக பொன்முடி நடத்திய மண்டல மாநாட்டினை தலைமையேற்று நடத்தினேன்.
அன்றைக்கு கழக தொண்டர்கள் கணித்தது போல் இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகியுள்ளேன். இந்த தொகுதியில் நிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், நல்ல எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் சிறந்த வழக்கறிஞர் ஆவார். சட்டமன்றத்திலே ஏற்கனவே என்னுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறார். இவரது உரையை கலைஞர் அவர்களே பாராட்டி பேசியுள்ளார்.
இந்த தொகுதிக்கும், திமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. விழுப்புரத்தில் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவை கழக ஆட்சியில் தான் திறக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து, சிந்தித்து வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று மாலை ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.
காமராஜர், எம்ஜிஆர் போன்ற பெரிய தலைவர்கள் பெரிதாக படித்தவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் மக்களை படித்தவர்கள், அவர்களை பார்த்து, படித்து நான் இங்கு வந்திருக்கிறேன். இந்த தேர்தல் பிரதமர் யார் என்று முடிவு செய்வதற்கான தேர்தல் அல்ல.
நம்முடைய எதிர்காலம் என்ன என்று நாம் முடிவு செய்யும் தேர்தல். நாட்டுக்கு நல்லது எது என முடிவு செய்யும் தேர்தல். யார் பிரதமர் என்பதை தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் சேர்ந்து தான் முடிவு செய்ய வேண்டும். இப்போதே முடிவு செய்து சொல்வது என்பது அரசியல் மாண்பு இல்லை.
ஓட்டுப்போடுவதை அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என இளைஞர்கள் விட்டுவிடக்கூடாது. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என 30 ஆண்டுகளை கடந்து விட்டீர்கள். நல்ல தலைமையை தேர்ந்தெடுப்பது உங்கள் பொறுப்பு.
தமிழகம் புரட்சியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. அதற்கு வலுசேர்க்க மக்கள் நீதி மய்யத்தில் சேர திமுக, அதிமுகவில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வருவார்கள். எங்களை நோக்கி இளைஞர்கள் வரக்காரணம், நாங்கள் நேர்மையானவர்கள் என்பது தான்.
பண மூட்டை பதுக்கிக் கொண்டிருக்கும் திருடர்கள் எப்படி பேச முடியும். இப்போது திருடர்களுக்கு தேள் வேறு கொட்டி விட்டது, இனி பேசவே மாட்டார்கள். ஈரோட்டில் இருந்த பெரியவர் கொடுத்த தைரியத்தில் தான் நான் இவ்வளவு தைரியமாக பேசுகிறேன். யாரையும், எந்த தலைவரையும் அவமதிப்பது என்னுடைய நோக்கமல்ல. ஆனால் திருடனை, திருடன் என்று சொல்லும் தைரியம் எனக்கு உள்ளது. இந்த தைரியம் தமிழ் மக்களுக்கு வந்தே ஆக வேண்டும்.
ஊழல் செய்பவர்கள் எல்லோருமே திருடர்கள் தான். அவர்களை நீங்கள் வணங்கக் கூடாது. அவர்கள் உங்களை வணங்க வைக்க வேண்டும். நம்முடைய குடியரசுக்கு வணங்கியாக வேண்டும். மாண்புள்ள தலைவர்கள் பலர் இருந்த தமிழ்நாடு, திருடர்கள் நாடாக மாறிவிடக் கூடாது. இது திரு நாடு, திருடர்கள் நாடு அல்ல.
ஆட்சியாளர்கள் திருடுவதை நிறுத்தினாலே, 2 தமிழ்நாடு நடத்த முடியும். இதை நீக்கியே ஆக வேண்டும். இவர்கள் இத்தனை நாள் மாண்புடன் வணங்கிக் கொண்டிருந்த 2 கழகங்கள் அன்றைய தமிழகத்தின் தேவையாக இருந்தது. அதனால் அப்போது அவர்கள் வந்தார்கள்.
இன்றைய தேவை அவர்கள் அகற்றப்பட வேண்டும். காலம் உங்களுக்கு காட்டும் செய்தியாக மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். நாம் நல்ல ஒரு காலத்தை நோக்கி தமிழகத்தை நடத்துவதற்கு மக்கள் இந்த தேர்தலில் யோசித்து செயல்பட வேண்டும்.
இளைஞர்கள் நோட்டாவுக்கு ஓட்டுப் போடாதீர்கள். நாடு நன்றாக இருக்க, உங்கள் மனசாட்சி சொல்லும் நல்லவருக்கு ஓட்டுப் போடுங்கள். அந்த நல்லவர் கண்டிப்பாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக இருப்பார். ஓட்டு போடப் போகும் போது உங்கள் மனதை மாற்ற பல வேலைகள் நடக்கும்.
ஆனால் எதிர் காலத்தை மனதில் வைத்து கொண்டு ஓட்டுப் போடுங்கள். உங்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் நீதி மய்ய பிரதிநிதி தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் அவரது ராஜினாமா கடிதம் உங்களுக்கு வந்து சேரும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan






