என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    வாக்குப் பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை பற்றி தவறான தகவல் பரப்புவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #LoksabhaElections2019

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் பதட்டமான வாக்குச் சாவடிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

    திருவள்ளூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் உள்ள பதட்டமான 2 வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.

    பின்னர் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மகேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    அப்போது கலெக்டர் மமேஸ்வரி கூறியதாவது:-  மாவட்டத்தில் மொத்தம் 3603 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை. இதில் 9 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை. இந்த பதட்டமான வாக்குச் சாவடிகளில் ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படை வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த உள்ளோம்.

    இந்த வீரர்கள் இம்மாதம் 13-ந் தேதியில் இருந்து வாக்கு பதிவு நாளான 18-ந் தேதி வரை பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். பதட்டமான ஒரு வாக்குச் சாவடிக்கு 4 பேர் வீதம் துணை ராணுவப் படை வீரர்களை பாதுகாப்பில் பணி அமர்த்த உள்ளோம்.

     


    வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரத்தை மாவட்டத்தில் இது வரை 3 லட்சம் பேர் சோதனை அடிப்படையில் பரிசோதித்துள்ளனர். வாக்குப் பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை பற்றி தவறான தகவல் பரப்புவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி கூறினார்.

    அப்போது தாசில்தார் வில்சன், தேர்தல் துணை வட்டாட்சியர் தாமேதரன், துணை தாசில்தார் சரவண குமாரி, பேரூராட்சி செயல் அலுவலர் மாலா, வருவாய் அலுவலர் யுகந்தர், கிராம நிர்வாக அலுவலர் ஹேமகுமார் உடன் இருந்தனர்.

    திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கத்தில் உள்ள வாக்கு மையத்தில் கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

    அப்போது, மாற்றுத் திறனாளிகள் வந்து செல்லும் வகையில், சாய்தளப் பாதை அமைக்கப்பட்டுள்ளனவா? அங்கு வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து கேட்டு அறிந்தார்.

    இதை தொடர்ந்து புல்லரம் பாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் 100 சதவீத வாக்குகளைப் பதிவு செய்ய வலியுறுத்தும் வகையில், வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் விநியோகம் செய்து, விழிப்புணர்வுப் பேரணியை கொடிஅசைத்து தொடங்கி வைத்தனர். #LoksabhaElections2019

    ராகுல் காந்தியைப் போல் கேரளா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிட பிரதமர் மோடிக்கு துணிச்சல் உண்டா? என மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். #Moditofight #LSpolls #ShashiTharoor
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலம், அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூடுதலாக கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

    வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுவார் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். இரு வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து, தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது.

    இதற்கிடையில், பெரும்பான்மை இனத்தவர்கள் அதிகம் வாழும் பகுதியில் போட்டியிட பயந்து ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு ஓட்டம் பிடித்ததாக பாஜகவினர் கூறி வருகின்றனர். இதே கருத்தை பிரதமர் மோடியும் ஒரு பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்தது ஏன்? என்பது தொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர், பிரதமர் மோடிக்கும் துணிச்சல் இருந்தால் ராகுல் காந்தியைப்போல் கேரளாவில் அல்லது தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும். இதற்கான துணிச்சல் அவருக்கு உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டன. அதனால், நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் பாலமாக விளங்க வேண்டும் என்பதற்காகவே வயநாடு பாராளுமன்ற தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்துள்ளார்.


    இந்தியாவின் பிரதமர் என்ற பதவி, இந்திய மக்கள் அனைவருக்குமே பொதுவான பதவி என்பதை மறந்துவிட்ட மோடி, பாஜகவின் கொள்கைகளை மட்டுமே உயர்த்திப் பிடிப்பதில் அக்கறை காட்டி வந்துள்ளார்.

    இப்போது, ராகுல் காந்தியின் வருகையால் நமது நாட்டின் பிரதமர் தென்னிந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்படவுள்ளார் என்ற ஆர்வம் இங்குள்ள வாக்காளர்கள் மத்தியிலும் அண்டை மாநில மக்களிடையிலும் அதிகரித்துள்ளது எனவும் சசி தரூர் தெரிவித்தார். #Moditofight #LSpolls #ShashiTharoor
    தமிழக மக்களுக்கும் எங்கள் தொண்டர்களுக்கும் மட்டும் தான் நாங்கள் தலை வணங்குவோமே தவிர மோடி அல்ல அவரது டாடி வந்தாலும் எங்களுக்கு பயமில்லை என்று தினகரன் ஆவேசமாக பேசியுள்ளார். #dinakaran #pmmodi

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் புவனேஸ்வரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கோவில்பட்டி , நாலாட்டின்புதூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    தமிழர்களை வஞ்சிக்கும் மத்தியில் உள்ள மோடி ஆட்சி மற்றும் தமிழகத்தில் உள்ள பழனிச்சாமி அண்ட் கம்பெனி ஆட்சி முடிவுக்கு கொண்டுவர, மற்றொரு கூட்டணியாக காங்கிரஸ், தி.மு.க.,கம்யூனிஸ்டு இருக்கின்ற சந்தர்ப்பவாத கூட்டணியை முறியடிக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆதரிக்க வேண்டும். இன்றைக்கு தேசிய கட்சிகள் தமிழகத்தை புறக்கணிக்கின்றனர். காரணம் இவர்களுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை.

    கேரளா, ஆந்திரா, கர்நாடகா வில் தான் இவர்களுக்கு செல்வாக்கு இருப்பதால், அந்த மக்களுக்காக மட்டும் குரல் கொடுக்கின்றனர். தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணிக்கின்றனர். 2016-ல் மோடி சொன்ன வாக்குறுதியை மற்ற மாநிலங்கள் நம்பி ஏமாந்து போனார்கள். ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என கூறியதை நம்பினார்கள். இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை அதிகரித்துள்ளது.

    காரணம் மோடியின் சர்வாதிகாரி தன்மை, பண மதிப்பிழப்பு அறிவித்த போது ஏழை மக்கள்தான் சாலையில் நின்றனர், பணக்காரர்கள் யாரும் சாலையில் நிற்கவில்லை. பொய்யான வாக்குறுதி நம்பி பல மாநில மக்கள் ஏமாந்த போதும் தமிழக மக்கள் நீங்கள் மோடியிடம் ஏமாறவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நமக்காக போராடினார், நமது துர்பாக்கியம் ஜெயலலிதா நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.

    இன்றைக்கு இந்த அடிமைகளிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டோம். மோடியிடம் மண்டியிட்டு வணங்குகிறார்கள், காரணம் மடியில் கனம். ஆனால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. நாங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் உண்மையான பிள்ளைகள், தமிழக மக்களுக்கும் எங்கள் தொண்டர்களுக்கும் மட்டும் தான் நாங்கள் தலை வணங்குவோம். தவிர மோடி அல்ல அவரது டாடி வந்தாலும் எங்களுக்கு பயமில்லை. ஆட்சி அதிகாரத்தை கண்டு அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள்.

    தேர்தல் சின்னம் கொடுக்க மறுத்த போதும் நாங்கள் தயங்கியது கிடையாது, தமிழக மக்கள் தான் பிரதமரை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். மற்றவர்களுக்கு வாக்களித்தால் அவர்கள் பதவி சுகத்திற்காக டெல்லிக்குப் போய் அமர்ந்து விடுவார்கள். எம்.பி.யாக இருக்கும்போது 2ஜி, 3ஜி, 4ஜி இவற்றில் எல்லாம் மாட்டி வந்தவர்கள், அமைச்சர் ஆனால் நிலைமை என்னாகும் என்று பாருங்கள்.

    காரணம் 96 இருந்து 2014 வரை மத்தியில் ஏதாவது ஒரு கட்சியுடன் ஆட்சியில் இருந்தது திமுக. ஆனால் தமிழகத்திற்கு எதுவும் செய்யாத காரணத்தினால் தான் 2011-ல் ஆட்சி அதிகாரத்தை மக்கள் கொடுக்கவில்லை. 2014-ல் எம்.பிக்களை கொடுக்கவில்லை, 2016-லும் வாய்ப்பு கொடுக்கவில்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு ஆர்.கே. நகரில் டெபாசிட்டை காலி செய்தோம்.

    திருவாரூரில் தேர்தலில் போட்டியிட பயந்து தி.மு.க. நீதிமன்ற வாசலில் நின்றது, இன்று கூட்டணிகளை காண்பித்து, சில தொலைக் காட்சிகளை கையில் வைத்துக் கொண்டு ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. துரோக கூட்டணி. தமிழ் நாட்டின் நலனுக்காக உழைக்கக்கூடியவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எங்களை கவனித்துக் கொண்டிருந்தார்கள், எங்களுக்கு சின்னம் எப்படி கிடைக்கும் என்று உலகம் முழுவதும் எதிர்பார்த்திருந்தனர், ஜெயலலிதாவின் ஆசியோடு கிடைக்கப்பட்ட சின்னம் தான் பரிசுப்பெட்டகம். போராடி பெற்றுள்ளோம், மக்களுக்காக போராடுவோம், தமிழகத்தின் நலனை மீட்டெடுப்போம், தமிழர் வாழ்வு மலர நாங்கள் உழைத்திடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து கழுகுமலையிலும் டி.டி.வி.தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். #dinakaran #pmmodi 

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி 10-ந்தேதி சென்னையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பேசுகிறார். #Mayawati

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி வருகிற 10-ந்தேதி சென்னை வருகிறார்.

    அவர், தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். இதற்கான பொதுக்கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 10-ந்தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்தில் மாயாவதி கலந்து கொண்டு தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் 40 பேரையும் அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.

    கூட்டத்தில் கட்சியின் தேசிய நிர்வாகிகள், எம்.பி.க் கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதனை தொடர்ந்து மாயாவதி பகுஜன் சமாஜ் வேட்பாளர்களுக்கு யானை சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

    சென்னை வரும் மாயாவதியை வரவேற்க தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். #Mayawati

    ஜிஎஸ்டி வரி - பண மதிப்பிழப்பால் கோடிக்கணக்கான வியாபாரிகள், வர்த்தகர்கள் வாழ்விழந்து போனார்கள் என்று சீமான் பேசியுள்ளார். #seeman #pmmodi #gst

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். இந்த தேர்தலை நாம் எப்படி எதிர்கொள்கிறோம். ஒருபக்கம் பா.ஜனதா- அ.தி.மு.க. ஆகியவற்றின் பின்னால் ஒரு அணி. மற்றொரு பக்கம் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளின் பின்னால் ஒரு அணி.

    தமிழ்நாட்டில் ஒரே ஒரு கட்சி பெரிய கட்சி உண்டென்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். தனித்து நிற்கிறது. துணிந்து நிற்கிறது. உண்மையும் நேர்மையும் ஆக மக்களை அணுகுகிறது. மது, பணம், உணவு கொடுக்காமல் தன்னெழுச்சியாக மக்கள் தானாக திரண்டு கூடுகிறார்கள் என்றால் தமிழர் நாட்டிலேயே மிகப்பெரிய கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சிதான். இது உண்மையிலேயே மாற்றத்துக்கான எளிய மக்களின் புரட்சி.

    பா.ஜனதா அது ஒரு மதவாத கட்சி என்று மதவாதத்துக்கு எதிரான கூட்டணியான தி.மு.க. கூறுகிறது. இதே தி.மு.க. பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து பதவி அனுபவித்து இருக்கிறது. அப்போது அது மதவாதம் அல்ல மிதவாதம். 5 ஆண்டு காலத்தில் செய்யாததை இந்த பா.ஜனதா அடுத்த ஆட்சி காலத்தில் செய்யப்போகிறதா? பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரியால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த வரியால் பல கோடிக்கணக்கான வியாபாரிகள், வர்த்தகர்கள் வாழ்விழந்து போனார்கள். இனிப்பு வார்த்தைகளை கூறி ஏமாற்றுகிறார்கள்.

    நாங்கள் ஓட்டுக்காக பேசவில்லை. உங்கள் உரிமைக்காக பேசுகிறோம். இந்த தேர்தலை ஒரு தேர்தலாக பார்க்காமல் ஒரு மாறுதலாக பார்த்து, இந்த தேர்தலில் ஒரு மாற்றத்தை தாருங்கள். உழவை மீட்போம், உலகைக் காப்போம் என்ற முழக்கத்தோடு நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். எனவே நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு சீமான் பேசினார். #seeman #pmmodi #gst

    தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் பேசியுள்ளார். #premalatha #admk #parliamentelection

    களக்காடு:

    நெல்லை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று இரவு களக்காடு, பாளை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். களக்காட்டில் திரண்டு நின்ற மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    ‘எங்கள் கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல. மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி. இளைஞர்கள் கூட்டணி, தொழிலாளர்கள் கூட்டணி, நான் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து விட்டு தற்போது களக்காடு வந்துள்ளேன். செல்லும் இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பு உள்ளது. இந்த தேர்தலில் நல்ல தீர்ப்பு தாருங்கள்.

    இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வகையில் அமோக வெற்றியை தர வேண்டும். நெல்லையில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் நச்சு நீர் கலக்கிறது. நாங்கள் வெற்றி பெற்றால் தாமிரபரணியை மீட்டெடுப்போம். களக்காட்டில் மூடப்பட்டுள்ள பொது மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்துவோம். பூவும், இலையும், பழமும் சேர்ந்து வெற்றி முரசு கொட்டுவது உறுதி.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று உலக நாடுகளுக்கே சவால் விடும் வகையில் வலிமையுடன் திகழ்கிறார். அவர் மீண்டும் பிரதமராக வேண்டும். நாங்கள் வெற்றி பெற்றால் ஜி.எஸ்.டி வரியை பொதுமக்கள் பாதிக்காத வகையில் மறுபரிசீலனை செய்ய பிரதமரிடம் வலியுறுத்துவோம். 100 நாள் வேலை திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்

    பிரேமலதா பேசும்போது, கூட்டத்தில் இருந்த ஒரு தொண்டர் விஜயகாந்த் எப்படி உள்ளார்? என்று நலம் விசாரித்தார். அதற்கு பிரேமலதா கேப்டன் நலமுடன் உள்ளார். சூப்பராக உள்ளார். உங்களை எல்லாம் கேட்டதாக சொல்ல சொன்னார் என்று மைக்கிலேயே பதில் அளித்தார்.

    பிரேமலதா வருகையை முன்னிட்டு மாலை 6.30 மணி முதலே பொதுமக்கள் களக்காடு அண்ணாசாலையில் குவிய தொடங்கியதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து களக்காடு புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அண்ணா சிலை பழைய பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் திரும்பி சென்றன. இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.

    இதன்பிறகு நெல்லை வந்த பிரேமலதா பாளையங்கோட்டை மார்க்கெட் திடல் ஆகிய பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களின் ஆதரவு பெற்ற கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி. இந்த கூட்டணியை அமைக்க விடாமல் தி.மு.க. எவ்வளவோ சூழ்ச்சி செய்து பார்த்தது. ஆனால் முடியவில்லை. அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. நமது கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வருவார். நலத் திட்ட பணிகள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #premalatha #admk #parliamentelection 

    வேலூர் தொகுதியுடன் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலையும் நிறுத்த சதி செய்கின்றனர் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #kbalakrishna

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மத சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் பிரசாரம் செய்யும் இடங்களில் மக்கள் எழுச்சியை காண முடிந்தது. தெருமுனை கூட்டம் போட்டால் கூட 2 ஆயிரம் பேர் கூடுகின்றனர்.

    இதற்கு மத்திய-மாநில அரசு மீதான வெறுப்பு தான் முக்கிய காரணமாகும்.

    பிரதமர் மோடி தமிழகத்துக்காக எந்தவித நன்மையும் செய்யவில்லை. ஒக்கி புயல், கஜா புயல், வர்தா புயல் எதற்கும் போதிய நிவாரண நிதியை ஒதுக்கவில்லை. புயல் சேதத்தையும் வந்து பார்வையிட வில்லை. விலைவாசி உயர்வால் பெண்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


     


    மத்திய அரசை தட்டிக் கேட்கும் நிலையில் மாநில அரசு இல்லை. பிரதமர் மோடி சொல்வதை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்படியே கேட்கிறார்.

    இதனால் தான் தமிழக மக்களுக்கு மோடி மீது வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. தேர்தலுக்காக அவர் பிரசாரத்துக்கு வந்தாலும் மோடிக்கு ஆதரவான எண்ணம் வரவில்லை. அவர் அடிக்கடி பிரசாரத்துக்கு வருவது எங்களுக்கு நல்லது தான்.

    வேலூர் தொகுதியில் பணம் பிடிபட்டது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வருகிறது. எங்களுக்கு வரும் செய்தி என்னவென்றால், வேலூர் தொகுதியுடன் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலையும் நிறுத்த சதி நடப்பதாக அறிகிறோம். எங்களது வேண்டுகோள் தேர்தலை நிறுத்தக்கூடாது என்பது தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #kbalakrishna

    ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் அளிக்கும் ‘நியாய்’ திட்டத்தை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சியின் ’இனி நியாயம் கிடைக்கும்’ என்ற இந்தி தேர்தல் பிரசாரப் பாடல் வெளியானது. #AbHogaNyay #Congresslaunches #campaignslogan #Nyay #LSpolls
    புதுடெல்லி:

    ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழுகட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. 

    பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மாநில முதல் மந்திரிகள் மற்றும் மாநில கட்சி தலைவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பாஜக.வின் தேர்தல் அறிக்கை நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் அளிக்கும் ‘நியாய்’ திட்டத்தை மையப்படுத்தி  ’இனி நியாயம் கிடைக்கும்’ என்ற இந்தி தேர்தல் பிரசாரப் பாடலை காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை இன்று வெளியிட்டுள்ளது.



    பிரபல இந்தி திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவெத் அக்தர் இயற்றியுள்ள இந்தப் பாடலுக்கு நிக்கில் அத்வானி இசையமைத்துள்ளார். இந்தப் பாடலின் சில வரிகளில் தற்போது மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக சமூக ஒற்றுமையை சீர்குலைத்து, மதரீதியிலான வெறுப்புணர்வை தூண்டி விடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதை சுட்டிக்காட்டி தேர்தல் கமிஷனில் பாஜக ஆட்சேபம் தெரிவித்திருந்தது. பின்னர், தேர்தல் கமிஷனின் தலையீட்டின்படி ஆட்சேபத்துக்குரிய அந்த வரிகள் நீக்கப்பட்டு, இந்த பிரசாரப் பாடலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    மிகப்பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்ட வாகனங்கள் மூலம் இந்த பிரசாரப் பாடலை நாடு முழுவதும் பிரபலப்படுத்த காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. #AbHogaNyay #Congresslaunches #campaignslogan #Nyay #LSpolls
    மேற்கு வங்காளத்தின் கூச் பெகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்கள் கொல்கத்தா மக்களை சென்றடைய மம்தா பானர்ஜி தடையாக உள்ளார் என குற்றம்சாட்டினார். #LokSabhaElection2019 #PMModi #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 11, 18, 23,29 மற்றும் மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, முதல் மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். 

    இந்நிலையில், கூச் பெகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய மம்தா பானர்ஜி தடையாக உள்ளார் என குற்றம்சாட்டினார்.

    இதுதொடர்பாக அவர் பேசுகையில், பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். ஆனால் மம்தா ராணுவ நடவடிக்கைக்கு எதிராக இருக்கிறார். நமது தாயகத்தை மம்தா மதிக்க தவறிவிட்டார். எல்லையில் ஊடுருவல்காரர்களுக்கு மம்தா துணைபோகிறார். இந்தியாவை துண்டாடும் முயற்சிக்கு மம்தா துணைபோகிறார்.

    மத்திய அரசின் திட்டங்கள் கொல்கத்தா மக்களை சென்றடைய மம்தா பானர்ஜி தடையாக உள்ளார். தற்போது பா.ஜ.,வுக்கு ஆதரவான அலையால் மம்தாவின் தூக்கம் பறிபோய் விட்டது. சாரதா சிட்பண்ட் ஊழல் நடந்துள்ளது. இதற்கு மம்தா துணைபோகிறார். இந்த மாநிலத்தில் ஏற்பட்ட ஊழல்கள் குறித்து இம்மக்கள் அறிவர். இந்த மாநிலத்தை காவலாளியான நான் காப்பேன் என தெரிவித்தார். #LokSabhaElection2019 #PMModi #MamataBanerjee
    திரிணாமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என்று சீன மற்றும் தெலுங்கு மொழிகளில் சுவர் விளம்பரம் மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன. #MamataBanerjee #LoksabhaElections2019

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் போட்டி போட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டுள்ளது.

    முந்தைய தேர்தல்களில் பெங்காலி, ஆங்கிலம், உருது மற்றும் இந்தி மொழிகளில் சுவர் பிரசார விளம்பரங்கள் இருந்து வந்தன. தற்போது தெலுங்கு, சந்தாலி (அல்சிசி) மற்றும் சீன மொழிகளில் சுவர் விளம்பரம் மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன.

    தங்காரா, ஜார்கிராம் மற்றும் கராக்பூர் தொகுதிகளில் இத்தகைய பிரசாரம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. தங்காராவில் சீனா டவுன் என்றழைக்கப்படும் ஹூயு கிங் தைம் பகுதியில் 2300-க்கும் மேற்பட்ட சீனர்களின் ஓட்டு உள்ளது.

     


    தங்காராவில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளராக மலாராய் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக இங்கு சீன மொழியில் பிரசாரம் செய்யப்படுகிறது.

    அதே போன்று பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் மேற்கு மிட்னாபூர் தொகுதியில் துரு, ஹேம் பிரம், ஹன்ஸ்டா, மண்டி, குஸ்கு, சோரன், முர்மு, பாஸ்கே பகுதிகளில் 52 சதவீதம் சந்தாலி மொழி பேசும் அல்சிசி இனத்த வர் உள்ளனர். இங்கு பிர்கா சோரனுக்கு வாக்களிக்கும்படி சந்தாலி மொழியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    கராக்பூர் தொகுதியில் தெலுங்கு மொழி பேசும் வாக்காளர்கள் 50 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களை கவரும் விதத்தில் அங்குள்ள ரெயில்வே டவுன்ஷிப் பகுதிகளில் தெலுங்கு மொழியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.  #MamataBanerjee #LoksabhaElections2019

    எப்போதும் ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சியாக திமுக உள்ளது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். #LoksabhaElections2019 #EdappadiPalaniswami

    திண்டுக்கல்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பி துரையை ஆதரித்து வேடசந்தூரில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பதவியில் இருக்கும் போது விவசாயிகளைப் பற்றி நினைத்தது கிடையாது. காவிரி நதி நீர் பங்கீட்டிலும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் உச்சநீதிமன்றத்துக்கு சென்று தமிழக உரிமையை நிலை நாட்டினார்.

    தமிழகத்தைச் சேர்ந்த நிதி அமைச்சர் சிதம்பரம் பதவியில் இருந்தபோது நமது மாநிலத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. நீர் மேலாண்மை திட்டமும் செயல்படுத்தவில்லை. தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்தே வந்தார்.

    தேர்தல் சமயங்களில் மட்டும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஓட்டு கேட்க வருகிறார்கள். மேலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் நின்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் ஒவ்வொரு தேர்தலுக்கும் வேறு வேறு தொகுதியில் நிற்கின்றனர்.


     

    பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு தி.மு.க.வினருக்கு அருகதை கிடையாது. இவர்களாலேயே பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அழகுநிலையத்தில் புகுந்து பெண்ணை தாக்குகின்றனர். ரெயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் பிரியாணி உள்பட அனைத்து கடைகளுக்குள்ளும் சென்று சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால் உரிமையாளர்களை தாக்குகின்றனர்.

    மறுநாள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்ய செல்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த அரசு நீர் மேலாண்மை திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் குரலாக கோதாவரி, காவிரி நதி நீர் இணைப்பு திட்டம் நிறைவேற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். அதன் பின்னர் வறட்சி மாவட்டங்கள், ஏரி-குளங்கள் நிரப்பப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் கட்சி பாகுபாடின்றி ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2000 வழங்க அரசு ஏற்பாடு செய்தது. ஆனால் தி.மு.க. இந்த ரூபாயை கொடுப்பதற்கு தடை செய்ய கோரி கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. எப்போதும் ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சியாக தி.மு.க. உள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கை பொய்யானது. விவசாயிகளுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோதும் தமிழகத்துக்கான நலத்திட்டங்களை கேட்டுப் பெறவில்லை.

    ஆனால் தம்பிதுரை அனுபவம் வாய்ந்தவர். மீண்டும் உங்களிடம் குறைகளை கேட்க வந்துள்ளார். குஜிலியம்பாறை தனி தாலுகாவாக மாற்றப்பட்டது. அங்கு தீயணைப்பு நிலையம் செயல்பட உள்ளது. வேடசந்தூர், வடமதுரையில் புதிய பஸ்நிலையம் திறக்கப்படும். எனவே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #LoksabhaElections2019 #edappadipalanisamy

    கஜா புயலில் பாதித்த மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூட கூறவில்லை என்று வைகோ தேர்தல் பிரசாரம் பேசியுள்ளார். #vaiko #gajacyclone

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பஸ் நிலையத்தில் தஞ்சை பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை ஆதரித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார்.

    கல்லணை கால்வாய் சீரமைப்பு திட்டத்தை இப்பகுதிக்கு சுமார் ரூ.450 கோடி செலவில் பழனிமாணிக்கம் நிறைவேற்றியுள்ளார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டத்தை மோடி பார்வையிடவில்லை. ஆறுதல் கூட தெரிவிக்க வில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய எந்த நிவாரண உதவியும் முறையாக வழங்கப்படவில்லை.

    தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்க எடப்பாடி அரசு லஞ்சம் கேட்டதால் வேறு மாநிலங்களுக்கு அவை சென்றுவிட்டன. பல பணக்காரர்கள் வங்கிகளில் பணத்தை கொள்ளையடித்து மோசடி செய்துவிட்டு பிரதமர் மோடியின் தயவால் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர்.

    எனவே மக்களுக்கு விரோதமான மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆட்சியை அகற்ற நமது தஞ்சை பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளர் துரை.சந்திர சேகரன், திருவோணம் ஒன்றிய செயலாளர் மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் காந்தி, செல்வராஜ், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். #vaiko #pmmodi  

    ×