என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    தக்கலை அருகே பிரசாரத்தின் போது ஹாரன் ஒலித்து இடையூறு செய்ததால் பிரேமலதா ஆவேசமாக ‘பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’ என்று கூறினார். #premalatha #dmdk

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நேற்று பிரேமலதா பிரசாரம் செய்தார்.

    அவர் தக்கலை அருகே வேர்கிளம்பி சந்திப்பில் திறந்த வேனில் நின்றபடி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டு சேகரித்தார். பிரேமலதா தேர்தல் பிரசாரம் செய்த இடம் 4 சாலைகள் சந்திக்கும் பகுதி என்பதால் அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

    நேரம் செல்லச் செல்ல அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்தது. இதனால் 4 சக்கர, இரு சக்கர வாகனங்களில் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர். ஒரு மணிநேரத்திற்கு மேல் காத்துக்கிடந்ததால் பொறுமை இழந்த சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் ஹாரனை ஒலிக்கச் செய்தனர்.

    அவர்கள் தொடர்ந்து ஹாரனை ஒலித்தபடி இருந்த தால் பிரேதமலதா பேசுவதற்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் அவர் ஆவேசம் அடைந்தார்.

    அதை தனது பேச்சின் மூலம் அவர் வெளிப்படுத்தினார். பிரேமலதா பேசும்போது கூறியதாவது:-

    நான் தேர்தல் பிரசாரம் செய்வதை பார்த்து பயப்படுபவர்கள் இதுபோல ஹாரன் ஒலித்து இடையூறு செய்கிறார்கள். இது எல்லாம் என்ன சவுண்டு? இது கேவலமான செயல். நாங்கள் தேர்தல் பிரசாரம் செய்ய முறைப்படி அனுமதி வாங்கி உள்ளோம். அதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

    நாங்கள் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம். இதை வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள். எங்களிடம் இது எல்லாம் நடக்காது.

    போர் களம் என்றால் நேருக்கு நேர் மோதுபவர்கள் தான் வீரர்கள். போருக்கு பயந்து பின்னால் நின்று கொண்டு ஹாரன் ஒலிப்பவர்கள் கோழைகள். நான் இங்கு 2 மணிநேரம் கூட பேசுவேன். எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன்.

    எதிர்ப்புகளை சந்தித்தே வளர்ந்த கட்சிதான் தே.மு.தி.க. நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம். இந்த ஹாரன் ஒலி எங்களை ஒன்றும் செய்துவிடாது. இங்கு நடப்பதை பார்க்கும்போதே எதிர் அணியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது தெரிகிறது. பொன்.ராதா கிருஷ்ணன் வெற்றியும் உறுதியாகி விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரேமலதா தேர்தல் பிரசாரத்தின் போது அவரை பேசவிடாமல் ஹாரன் ஒலித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பிரசாரத்தை முடித்து சென்றபிறகு அந்த வழியாக போக்குவரத்து வழக்கம் போல நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து பிரேமலதா அஞ்சுகிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த தே.மு.தி.க. தொண்டர்கள், ‘கேப்டன் எப்படி இருக்கிறார்?‘ என்று கேட்டனர். அதற்கு பிரேமலதா விஜயகாந்த், ‘கேப்டன் சூப்பராக உள்ளார். அவர் வெகு விரைவில் உங்கள் முன் வருவார். 5 நிமிடம் முன் கூட அவருடன் செல்போனில் பேசினேன். அப்போது அடுத்து எங்கு செல்கிறாய் என்று கேட்டார். நான் அஞ்சுகிராமம் என்றதும், அனைவரையும் கேட்டதாக கூறும்படி சொன்னார்’ என்று பதில் அளித்தார். உடனே அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

    மீண்டும் ஒருமுறை மோடி அரசு (ஃபிர் ஏக் பார் மோடி சர்க்கார்) என்னும் பாஜகவின் தேர்தல் பிரசார முழக்கம் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. #BJPtagline #PhirEkBaar #ModiSarkar #LSpolls
    புதுடெல்லி:

    ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் அளிக்கும் ‘நியாய்’ திட்டத்தை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சியின் ‘இனி நியாயம் கிடைக்கும்’ என்ற இந்தி தேர்தல் பிரசாரப் பாடல் இன்று வெளியானது. 

    இதேபோல், மீண்டும் ஒருமுறை மோடி அரசு (ஃபிர் ஏக் பார் மோடி சர்க்கார்) என்னும் பாஜகவின் தேர்தல் பிரசார முழக்கம்  டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று வெளியிடப்பட்டது.

    இதை வெளியிட்டு பேசிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, கடந்த 5 ஆண்டுகால பாஜக அரசு செய்து முடித்த பணிகளை முன்வைத்தும், மோடி தலைமையிலான ஆட்சி எடுத்த மிகப்பெரிய நடவடிக்கைகளை மையப்படுத்தி ‘செயல்திறன் மிக்க ஆட்சி’, ‘நேர்மையான ஆட்சி’ ‘மிகப்பெரிய திடமான நடவடிக்கைகளை எடுத்த ஆட்சி’ என மூன்று வகைகளில் மீண்டும் ஒருமுறை மோடி அரசு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த பிரசார முழக்கம் வடிவமைக்கப்பட்டதாக குறிப்பிட்டார். #BJPtagline #PhirEkBaar #ModiSarkar #LSpolls
    உண்மையிடம் பிடிபடாமல் பிரதமர் நரேந்திர மோடி ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். #Modicanthide #Rahul #Rafalescam
    புதுடெல்லி:

    பிரபல இந்தி செய்தி நிறுவனம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் பேட்டியை நேற்றிரவு ஒளிபரப்பியது. இந்த பேட்டியின்போது ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு நீங்கள் உதவி செய்ததாக வரும் தகவல்கள் தொடர்பாக... என்று நேர்காணல் செய்த பெண்மணி கேள்வி எழுப்பினார்.

    அதற்குள் இடைமறித்த பிரதமர் மோடி, நீங்கள் சுப்ரீம் கோர்ட் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா, இல்லையா? என்று மறுகேள்வி கேட்டார். 

    ரபேல் விவகாரத்தில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்று கொண்டது. ஆனால், ரபேல் விவகாரம் தொடர்பாக சிலர் தொடர்ந்து கூறிவரும் பொய்களை ஊடகங்கள் செய்திகளாக வெளியிடுகின்றன.

    சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் சில தவறான தகவல்களையும் உங்கள் நிறுவனம் தலைப்பு செய்தியாக்கி விடுகிறது. ஆனால், வெளிச்சத்துகு வர வேண்டிய உண்மைகளை நீங்கள் இருட்டடிப்பு செய்து விடுகிறீர்கள் எனவும் மோடி வேதனையுடன் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், இந்த பேட்டியின் ஒரு பகுதியை தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோ பதிவின் அடிக்குறிப்பாக, ‘திரு.மோடி அவர்களே நீங்கள் ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது.  உங்களது ‘கர்மா’ (முன்வினைகள்) உங்களை காட்டிக்கொடுத்து விடும். அதை இந்த பேட்டியின்போது உங்களின் குரல் மூலம் இந்த நாட்டால் கேட்க முடிகிறது. 

    உண்மை என்பது மிகவும் வல்லமையான ஆயுதம். இந்த ஊழல் தொடர்பாக என்னுடன் விவாதம் செய்ய தயாரா? என சவால் விடுகிறேன்’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  #Modicanthide #Rahul #Rafalescam
    ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று வடசேரியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். #admk #opanneerselvam #mkstalin

    நாகர்கோவில்:

    துணை முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கன்னியாகுமரி தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார்.

    நாகர்கோவில் வடசேரியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

    கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் யாரும் இதுவரை செய்யாத பல வளர்ச்சித்திட்டங்களை இங்கு நிறைவேற்றியுள்ளார். இந்த தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள் நீதிபதிகளாக இருந்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மத்தியில் இருந்தபோது எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வரவில்லை. தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினையான காவிரி நதி நீரின் உரிமையை விட்டுக் கொடுத்தவர்கள் தி.மு.க.வினர். பின்னர் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியபோதும், அதனை அரசிதழில் வெளியிட மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க. எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனை அரசிதழில் வெளியிட வைத்தவர் ஜெயலலிதா.

    இதேபோல் அவரது ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு, பெண்களுக்கு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்மை தரக்கூடிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அவரது வழியில் தமிழக அரசு செயல்படுகிறது.

    இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தேவையை அறிந்து சாலை, பாலம் உள்ளிட்ட அடிப்படை திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் நிறைவாக பொன்.ராதாகிருஷ்ணன் செய்துள்ளார். அவரை நீங்கள் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் மேலும் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவார்.

    பொதுவாழ்வில் இருப்பவர்கள் தரமாக பேச வேண்டும். ஆனால் மு.க.ஸ்டாலின் தரமில்லாமல் பேசி வருகிறார். அ.தி.மு.க. தேர்தலுக்கு பின்னர் காணாமல் போகும் என்று கூறுகிறார். யார் காணாமல் போவார்கள் என்பதை பார்க்கலாம்.

    அ.தி.மு.க. ஒன்றரை கோடிக்கும் அதிகமான தொண்டர்களை கொண்ட மிகப்பெரிய ஆலமரம். இது தமிழ்நாடு முழுவதும் கிளை பரப்பியுள்ளது. இந்த ஆலமரத்தை சுனாமியோ, புயலோ, பூகம்பமோ அழிக்க முடியாது. உங்கள் தந்தையாலே (கருணாநிதி) அழிக்க முடியவில்லை. நீங்களா அ.தி.மு.க.வை அழிக்கப் போகிறீர்கள்? ஒரு போதும் முடியாது.

    அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது வரை மின்வெட்டு இல்லை. மாறாக மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு உங்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் மத்திய மந்திரியாகி மேலும் பல நல்லதிட்டங்களை செயல்படுத்த உங்கள் வாக்குகளை தாமரை சின்னத்துக்கு அளியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி மேலிட பிரதிநிதி தளவாய்சுந்தரம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அசோகன், ஜான்தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். #admk #opanneerselvam #mkstalin

    வடசென்னை தொகுதி அமமுக வேட்பாளர் பி.சந்தானகிருஷ்ணன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். #LoksabhaElections2019 #AMMK

    சென்னை:

    வடசென்னை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி. சந்தானகிருஷ்ணன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். திரு.வி.க.நகர் தொகுதி 72 தெற்கு, வடக்கு மற்றும் 73 கிழக்கு வட்ட பகுதிகளுக்கு உள்பட கன்னிகாபுரம், நரசிம்மன்நகர், புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    பிரசாரத்தின்போது, வட சென்னை தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அல்லும் பகலும் பணிபுரிவேன். மத்திய அரசின் திட்டங்களை தொகுதி மக்களுக்கு பெற்றுத்தர எனக்கு பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார். அவருடன் திரு. வி.க.நகர் பகுதி செயலாளர் வி.சுகுமார், மாவட்ட அவைத் தலைவர் பி.சுகுமார், மாவட்ட துணை செயலாளர் டி.வி.நாசர், மகளிர் அணி மாவட்ட செயலாளர் அன்னக்கிளி, வட்ட செயலாளர்கள் டி.கே.குமார், ஏ.என்.கொண்டல்ராவ், சாம்ராஜ், ஜி.ஆர். சதீஷ் குமார், கே.ஏ.பாலகணேசன், ஜி.ஆர்.வினோத்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் சென்று வாக்கு சேகரித்தனர். #LoksabhaElections2019 #AMMK

    ராகுலை எதிர்த்து போட்டியிட நினைத்த சரிதாநாயரின் வேட்புமனுக்கள் எதற்காக தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். #rahulgandhi #sarithanair #parliamentelection

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்த போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க தேவையான சோலார் பேனல் கருவிகளை பொருத்தி தருவதாக கேரளாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் பலரிடமும் பணம் வசூல் செய்தார்.

    ஆனால் அவர் கோடிக் கணக்கில் பணம் வசூல் செய்துவிட்டு மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. சோலார் பேனல் அமைக்கும் திட்டத்திற்கு தனக்கு அனுமதி பெற்று தருவதாக கூறி கேரளாவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சரிதா நாயரும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    இதற்கிடையில் சரிதா நாயர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்து உள்ளார்.

    இந்த நிலையில் சரிதா நாயரால் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஹைபிஈடன் என்பவர் காங்கிரஸ் வேட் பாளராக எர்ணாகுளம் தொகுதியில் நிறுத்தப்பட்டார். இதற்கு சரிதா நாயர் கண்டனம் தெரிவித்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஆனாலும் அவரது கோரிக்கையை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சரிதா நாயர் எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.


    மேலும் எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்றக் கோரி அவர் ராகுல்காந்திக்கு ஈ-மெயில் மூலம் புகார் அனுப்பினார். அதற்கும் எந்த பலனும் இல்லாததால் ராகுல்காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியிலும் சரிதா நாயர் வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அப்போது எர்ணா குளம் தொகுதியிலும், வயநாடு தொகுதியிலும் சரிதா நாயரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. சோலார் பேனல் வழக்கில் சரிதா நாயருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. தேர்தல் கமி‌ஷன் விதிமுறைப்படி 2 ஆண்டோ அல்லது அதற்கு மேலோ ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டால் அவர்கள் தண்டனைக்காலம் முடியும் வரையும் அதன்பிறகு 6 ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் சரிதா நாயரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். #rahulgandhi #sarithanair #parliamentelection

    முதல் மந்திரிகளின் வீடுகளில் ரெய்டுகளை ஏவிவிட்டும் அரசு அதிகாரிகளை மாற்றியும் தேர்தல் நேரத்தில் அரசு இயந்திரங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மோடி மிரட்டுவதாக மம்தா குற்றம்சாட்டியுள்ளார். #MamataBanerjee #LoksabhaElections2019
     கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம், ஜல்பைகுரி மற்றும் பலகட்டா பகுதிகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் அம்மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி இன்று உரையாற்றினார்.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள கூச் பேஹார் பகுதியில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் தன்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கிப் பேசிய பிரதமர் மோடிக்கு இந்த கூட்டங்களில் பதிலளித்த மம்தா பானர்ஜி, ’முன்னர் கம்யூனிஸ்டுகள் ஆட்சி காலத்தில் நடைபெற்ற காட்டு தர்பார் அரசில் ஆண்டுதோறும் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர்.

    எங்கள் ஆட்சியில் இந்த மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. குறைந்த விலையில் உணவு தாணியம், தரமான மருத்துவம் என மத்திய அரசு செய்ய தவறிய பல நல்ல திட்டங்களை இந்த மாநில மக்களுக்கு நாங்கள் நிறைவேற்றி தந்திருக்கிறோம்’ என்றார்.

    ’மோடியை பார்த்து நான் பயப்படுவதாக அவர் கூறியுள்ளார். நான் யாரை கண்டும் பயப்பட மாட்டேன். மோடிதான் என்னை கண்டு அஞ்சுகிறார்.

    எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் நேரத்தில் ஆந்திர முதல் மந்திர, மத்தியப்பிரதேசம் மற்றும் கர்நாடக முதல் மந்திரி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை ஏவி விடப்பட்டுள்ளது.

    எவ்வித காரணமும் இல்லாமல் ஆந்திர மாநில அரசின் தலைமை செயலாளர் நீக்கப்பட்டு வேறொருவர் அந்த பதவியில் அமர்த்தப்படுகிறார். மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் கமிஷன் இந்த திடீர் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு எப்படி தலையிடலாம்?’ என்று கேள்வி எழுப்பிய மம்தா பானர்ஜி, தேர்தல் நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை என்று இதற்கு விளக்கம் கூறுபவர்கள் பிரதமரின் செயலாளரையும் மாற்றி இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். #MamataBanerjee #LoksabhaElections2019
    திரிபுரா மாநிலத்தில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, என்னை ஒழிப்பதற்காக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சியினர் எது வேண்டுமானாலும் செய்வார்கள் என குறிப்பிட்டார். #Congresswillstoop #Leftwillstoop #oustModi
    உதய்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் திரிபுரா மாநிலத்தில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய இடதுசாரி கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்றியதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இம்மாநில மக்கள் முன்னுதாரணமாக இருந்ததாக மோடி தெரிவித்தார்.

    திரிபுராவுக்குள் கால்பதிக்க முயற்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முயற்சியை முறியடித்ததற்காக இங்குள்ள மக்களை பாராட்டுகிறேன். பாஜக மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    என்னை ஒழிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் மிகவும் கீழ்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனது தலைமையிலான அரசு அண்டை நாட்டில் உள்ள பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்போது இங்கிருக்கும் இவர்கள் பாகிஸ்தானுக்கு துதிபாடுகிறார்கள்.

    காலகாலமாக நடுத்தர மக்களை வஞ்சித்து வந்துள்ள காங்கிரஸ் கட்சி, இந்த முறை வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும் நடுத்தர மக்களுக்கு சாதகமான எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை எனவும் மோடி கூறினார். #Congresswillstoop #Leftwillstoop #oustModi
    கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். #LoksabhaElections2019

    சென்னை:

    கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன்,வீதி வீதியாக வாக்கு சேகரித்தார் அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

    அவர் பொதுமக்களிடம், “அரசின் சாதனைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். மேலும் அ.தி. மு.க. அரசு கொடுத்துள்ள அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

    பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து உள்ள நமது வேட்பாளர் மீண்டும் வெற்றி பெற்றவுடன் பல புதிய திட்டங்களை தொகுதியின் வளர்ச்சிக்காக செயல்படுத்துவார் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் முன்மாதிரி தொகுதியாக தென் சென்னையை உருவாக்கவும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டார்.

    அவருடன் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதிச் செயலாளர் கே.பி.கந்தன், அம்மா பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜசேகர், ஒன்றிய செயலாளர் என்.சி. கிருஷ்ணன், கோவிலம்பாக்கம் ஊராட்சிக் கழகச் செயலாளர் கோவிலம் பாக்கம் சி.மணிமாறன் மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர். #LoksabhaElections2019

    ராகுல்காந்திக்கு தோல்வி பயம் வந்து விட்டதால் 100 தொகுதிகளில் கூட காங்கிரஸ் வெற்றி பெற முடியாது என்று டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார். #ramadoss #rahulgandhi #mkstalin

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், பிரசார கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் பங்கேற்று பேசினார்.

    மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 325 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவும். உத்தரபிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளம், பீகார், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, அரியானா ஆகிய 10 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணி படுதோல்வி அடையும்.

    இந்த 10 மாநிலங்களில் உள்ள 350 தொகுதிகளில், 25 இடங்களில் கூட காங்கிரஸ் கூட்டணியால் வெற்றி பெற முடியாது. நாட்டில் 100 இடங்களில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது.

    ராகுல் காந்திக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் அமேதி தொகுதியில் போட்டியிடுவதுடன், கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அவரை பிரதமர் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

    ராகுலை பிரதமராக யாரும் ஏற்கவில்லை. மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரபாபு நாயுடு என்று பலருக்கு பிரதமர் பதவியின் மீது ஆசை உள்ளது.


    தற்போது மு.க.ஸ்டாலின் கோபத்தில் என்னையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கண்டபடி திட்டுகிறார். அவர் இன்னும் நன்றாக எங்களை திட்டட்டும், அப்படி திட்டினால் ஓட்டுகள் எங்களுக்கு அதிகமாகும். அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.க. கலைஞருடன் முடிந்து போய் விட்டது. மு.க.ஸ்டாலின் அரசியல் நாகரீகம் தெரியாமல் மேடைக்கு மேடை உளறுகிறார்.

    வறுமையை ஒழிப்போம் என ராகுல் காந்தி கூறுகிறார். உங்களின் கொள்ளு தாத்தா நேருவும் அதை தான் சொன்னார். உங்களின் பாட்டி இந்திராகாந்தியும் அதை தான் சொன்னார். உங்கள் அப்பா ராஜீவ்காந்தி, அம்மா சோனியா காந்தி, உங்களின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் எல்லோரும் அதை தான் சொன்னார்கள்.

    இப்போது நீங்களும் அதை தான் சொல்கிறீர்கள். உங்களால் வறுமையை ஒழிக்க முடியாது. அதே நேரத்தில் அ.தி.மு.க.- பா.ம.க. தேர்தல் அறிக்கையில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் நலன் காக்கும் திட்டங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளன. அரசு ஊழியர்களுக்கு சில கோரிக்கைகள் உள்ளன. அதை நிச்சயமாக அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதும் நிறைவேற்றி தருவோம்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். #ramadoss #rahulgandhi #mkstalin

    பூந்தமல்லி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் காரில் ரூ.6½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LoksabhaElections2019

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம்-பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் ரூ.6.5 லட்சம் ரொக்கம் இருந்தது. விசாரணையில் இந்த பணம் டாஸ்மாக் கடையில் வசூலானது என்பது தெரிந்தது.

    இதற்கான ஆவணம் காரில் இருந்தவர்களிடம் இல்லை. பணத்தை பறிமுதல் செய்து காரில் இருந்த இந்திரஜித், கார்த்தி ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். #LoksabhaElections2019

    பொள்ளாச்சி சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று கனிமொழி எம்பி பிரசாரத்தில் பேசியுள்ளார். #Kanimozhi #pollachiissue #dmk

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜனதா ஆட்சியில் மக்கள் பட்ட கஷ்டம் அனைவருக்கும் தெரியும். ஸ்டெர்லைட் பிரச்சினையில் பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் மிக மோசமாக மக்களை நடத்தினர். ஆலைக்கு எதிராக போராடிய 13 பேர் கொல்லப்பட்டனர்.

    தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அ.தி.மு.க. அரசு தவறு செய்தவர்களை காப்பாற்ற முயற்சிக்கிறார்களே தவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நினைக்க வில்லை.

    மத்தியில் இருக்கும் பா.ஜனதா ஆட்சி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வை கொண்டு வந்து நமது பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நிலைக்கு உருவாக்கி உள்ளது. நாம் அந்த பா.ஜனதா ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவர்களோடு சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் இது. இதனை புரிந்து கொண்டு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்.

    தி.மு.க. வாக்குறுதி கொடுத்தால் அதனை நிறைவேற்றி தரக்கூடிய இயக்கம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாய கடன்களை ரத்து செய்து தருவதாக அறிவித்து உள்ளார். நிச்சயம் ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். 100 நாள் வேலை என்பது 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.

    1 கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர் வேலை வழங்கப்படும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பை மக்கள் எங்களுக்கு தர வேண்டும். பா.ஜனதா அரசின் ஜி.எஸ்.டி. வரியால் கடலைமிட்டாய், தீப்பெட்டி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Kanimozhi #pollachiissue #dmk

    ×