search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
    X

    அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

    ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று வடசேரியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். #admk #opanneerselvam #mkstalin

    நாகர்கோவில்:

    துணை முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கன்னியாகுமரி தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார்.

    நாகர்கோவில் வடசேரியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

    கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் யாரும் இதுவரை செய்யாத பல வளர்ச்சித்திட்டங்களை இங்கு நிறைவேற்றியுள்ளார். இந்த தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள் நீதிபதிகளாக இருந்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மத்தியில் இருந்தபோது எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வரவில்லை. தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினையான காவிரி நதி நீரின் உரிமையை விட்டுக் கொடுத்தவர்கள் தி.மு.க.வினர். பின்னர் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியபோதும், அதனை அரசிதழில் வெளியிட மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க. எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனை அரசிதழில் வெளியிட வைத்தவர் ஜெயலலிதா.

    இதேபோல் அவரது ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு, பெண்களுக்கு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்மை தரக்கூடிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அவரது வழியில் தமிழக அரசு செயல்படுகிறது.

    இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தேவையை அறிந்து சாலை, பாலம் உள்ளிட்ட அடிப்படை திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் நிறைவாக பொன்.ராதாகிருஷ்ணன் செய்துள்ளார். அவரை நீங்கள் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் மேலும் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவார்.

    பொதுவாழ்வில் இருப்பவர்கள் தரமாக பேச வேண்டும். ஆனால் மு.க.ஸ்டாலின் தரமில்லாமல் பேசி வருகிறார். அ.தி.மு.க. தேர்தலுக்கு பின்னர் காணாமல் போகும் என்று கூறுகிறார். யார் காணாமல் போவார்கள் என்பதை பார்க்கலாம்.

    அ.தி.மு.க. ஒன்றரை கோடிக்கும் அதிகமான தொண்டர்களை கொண்ட மிகப்பெரிய ஆலமரம். இது தமிழ்நாடு முழுவதும் கிளை பரப்பியுள்ளது. இந்த ஆலமரத்தை சுனாமியோ, புயலோ, பூகம்பமோ அழிக்க முடியாது. உங்கள் தந்தையாலே (கருணாநிதி) அழிக்க முடியவில்லை. நீங்களா அ.தி.மு.க.வை அழிக்கப் போகிறீர்கள்? ஒரு போதும் முடியாது.

    அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது வரை மின்வெட்டு இல்லை. மாறாக மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு உங்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் மத்திய மந்திரியாகி மேலும் பல நல்லதிட்டங்களை செயல்படுத்த உங்கள் வாக்குகளை தாமரை சின்னத்துக்கு அளியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி மேலிட பிரதிநிதி தளவாய்சுந்தரம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அசோகன், ஜான்தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். #admk #opanneerselvam #mkstalin

    Next Story
    ×