என் மலர்
தேர்தல் செய்திகள்
சென்னை:
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 11-ந்தேதி முதல் மே மாதம் 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலை நியாயமாகவும் அமைதியாகவும் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
குறிப்பாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பே நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் சுமார் 140 தொகுதிகளில் பணப்பட்டு வாடா அதிக அளவில் நடக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையம் உளவுத்துறை மூலம் தகவல்களை சேகரித்து இருந்தது.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பணப்பட்டு வாடா நடக்கும் என்று தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்க ஏராளமான பறக்கும் படைகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
மத்திய அரசின் உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், துணைநிலை ராணுவ வீரர்கள், உள்ளூர் போலீசார் ஆகியோரை ஒருங்கிணைத்து இந்த பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் அந்த பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை எடுத்துச் செல்பவர்கள் அதற்குரிய ஆவணத்தை வைத்திருக்காவிட்டால், அந்த பணத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி தங்கம், வெள்ளி நகைகள், பொருட்களும் உரிய ஆவணம் இல்லாவிட்டால் கைப்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி நாடு முழுவதும் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் நகைகள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பறக்கும் படையினரின் சோதனை மிக அதிக அளவில் நடந்து வருகிறது.

நேற்று மாலை வரை நடந்த பறக்கும் படை சோதனையில் நாடு முழுவதும் ரூ.1845 கோடி மதிப்புள்ள நகை, பணம், மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் அதிக பட்சமாக ரூ.513 கோடிக்கு நகை, பணம், மதுபானம், போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளது.
தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை ரூ.480 கோடி அளவுக்கு நகை, பணம் சிக்கியுள்ளது. ஆந்திராவில் ரூ.175 கோடி, பஞ்சாபில் ரூ.161 கோடி, உத்தரபிரதேசத்தில் ரூ.148 கோடிக்கு நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட் கள் வழங்கும் விஷயத்தில் குஜராத், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, நாகலாந்து, அருணாசலபிரதேசம் ஆகிய 6 மாநிலங்கள்தான் முன்னணியில் உள்ளன. இதைத் தொடர்ந்து இந்த 6 மாநிலங்களிலும் முன்னாள் வருவாய் அதிகாரிகளை தேர்தல் செலவின பார்வையாளர்களாக தலைமை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.
மத்திய, மாநில உளவுத்துறை மூலம் வரும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் அவர்கள் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக கருப்பு பணத்தை அவர்கள் வேட்டையாடி வருகிறார்கள்.
குஜராத் மாநிலத்தில் அதிக பட்சமாக ரூ.500 கோடி அளவுக்கு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ரூ.160 கோடி ரொக்கப் பணம் சிக்கி உள்ளது.
அதுபோல தமிழ்நாட்டில் ரூ.220 கோடி அளவுக்கு தங்க நகைகள் பிடிபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கூடுதல் அதிகாரிகளை அனுப்ப தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
பணப்பட்டுவாடா விவகாரத்தில் டெல்லி, சிக்கிம், காஷ்மீர் ஆகிய 3 மாநிலங்களில் மிக, மிக குறைவான பணப்பட்டு வாடா நடப்பது தெரிய வந்துள்ளது. டெல்லியில் ரூ.3 கோடி, சிக்கிமில் ரூ.36 லட்சம் பிடிபட்டுள்ளது. காஷ்மீரில் ரூ.16 லட்சம் மட்டுமே சிக்கியுள்ளது.
நாடு முழுவதும் பறக்கும் படையிடம் ரூ.175 கோடி மதிப்புள்ள மது வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019

இதேபோல் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளை குறிவைத்து வருமான வரி சோதனை நடப்பதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் மத்திய நிதி மந்திரி தனது டுவிட்டர் பதிவில், தனது வீட்டில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை நடக்கலாம் என பதிவிட்டுள்ளார்.
“எனக்குக் கிடைத்த தகவல்: என்னுடைய சென்னை மற்றும் மானகிரி வீடுகளில் வருமான வரி இலாகாவின் சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம். வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம். எங்கள் தேர்தல் பணிகளை முடக்கவே இந்த நடவடிக்கை என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இந்த அரசின் அத்து மீறல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள்” என டுவிட் செய்துள்ளார் ப.சிதம்பரம். #PChidambaram #ITRaids
விசாகப்பட்டினம்:
ஆந்திராவில் 175 சட்ட சபை தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 11-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இங்கு தெலுங்கு தேசம்- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தனித் தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனை கட்சி, கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
நடிகர் பவன்கல்யாண் காஜீவாக்கா, பீமாவரம் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் பவன் கல்யாண் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகளும், இலவச திட்டங்களும் இடம் பெற்றுள்ளன.
அதன்படி பெண்களுக்கு சகோதரர்களின் சீதனம் போல் ஆண்டுக்கு 2 சேலைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8000 நிதி உதவி வழங்கப்படும்.
58 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ5000 சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும்.
முதுநிலை படிப்புவரை மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், ரெயில் பாஸ் வழங்கப்படும். இளநிலை கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முதல் ஆண்டுக்கான தேர்வு கட்ட ணத்தை அரசே வழங்கும்.
மேற்கண்ட வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. #PawanKalyan #LokSabhaElections2019
மதுரை:
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தமிழகத்தின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி, எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் உதவியோடு தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
ஆனால் நாங்கள் மத்திய அரசுக்கு அடிமைகளாக இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். நாங்கள் மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து மாநிலத்துக்கு தேவையான திட்டங்களை பெற்று தருகிறோம்.
ஆனால் மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைந்தபோது தி.மு.க. காங்கிரசுக்கு அடிமையாக இருந்து தமிழர்களின் உரிமைகளை காவு கொடுத்துவிட்டது. இதனை மக்கள் மறக்க மாட்டார்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி வருகிறார். கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் 5 பவுன் நகை வரை அடகு வைத்து விவசாய கடன் பெற்றவர்களின் கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும் என கூறுகிறார்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி வரை நகைக்கடன் உள்ளது. தனியார் வங்கிகளையும் சேர்த்தால் ரூ.1 லட்சம் கோடி வரை இருக்கும். இதை எப்படி தள்ளுபடி செய்ய முடியும்.
தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை நல்லமுறையில் திருப்பி செலுத்தி வருகிறார்கள். எனவே எப்படியாவது மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிடலாம் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். தி.மு.க. இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது.
மத்திய மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது தமிழ்நாட்டிற்கும், அவரை தேர்ந்தெடுத்த சிவகங்கை தொகுதிக்கும் எந்த நன்மையும் செய்ததில்லை. தற்போது போலி தேர்தல் அறிக்கை தயாரித்து அதனை வைத்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.
தற்போது நடிகர்-நடிகைகளின் பிரசாரத்திற்கு கூட்டம் கூடுகிறது. அதே போல்தான் குஷ்புக்கும் கூட்டம் கூடுகிறது. குஷ்புவுக்கு ஒரு காலத்தில் கோவில் கட்டினார்கள். தற்போது அவருக்கு வயதாகி விட்டது. நடிகர்-நடிகைகளை பார்க்க கூடும் கூட்டம் எல்லாம் வாக்காக மாறிவிடாது.
தெர்மாகோல் விஷயத்தில் என்ஜினீயர்கள் செய்த தவறால் தெர்மாகோல் ராஜூ என தற்போது ஊடகங்களில் என்னை குறிப்பிடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #SellurRaju #LokSabhaElections2019

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது ஐயப்ப சாமியின் பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக வரும் 11-ந் தேதி வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா- கோண்டியா, கட்சிரோலி-சிமூர், , யவத்மால்-வாசிம் ஆகிய 7 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் 116 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான கடந்த 28-ந் தேதிக்கு பிறகு, பிரசாரம் சூடுபிடித்தது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் மட்டுமல்லாமல், மாநில அரசியல் கட்சி தலைவர்கள், தேசிய கட்சி தலைவர்களும் வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அதன்பிறகு, தேர்தல் தொடர்பான பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம், பேரணி நடத்த அனுமதி கிடையாது.
மேலும், செல்போன் எஸ்.எம்.எஸ்., பேஸ்புக், டுவிட்டர், டி.வி., ரேடியோ, எப்.எம். போன்ற எலக்ட்ரானிக் பிரசாரங்களுக்கும் நாளை மாலை 6 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதையும் மீறி யாராவது தேர்தல் பிரசாரம் மேற்கொண்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 35 ஆயிரத்து 181 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 66 லட்சத்து 71 ஆயிரம் பேர் ஆண்களும், 63 லட்சத்து 64 ஆயிரம் பேர் பெண்களும் அடங்குவர், 181 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.
இதற்காக 14 ஆயிரத்து 919 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
மேலும் தேர்தலுக்கு கிட்டத்தட்ட 44 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் 73 ஆயிரத்து 837 ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
அதுமட்டுமின்றி ஓட்டுப்போட வரும் வாக்காளர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்துதர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. கொளுத்தும் வெயிலை மனதில் கொண்டு வாக்காளர்களுக்கு குடிக்க தண்ணீரும், நிழலுக்காக பந்தலும் அமைக்கப்படுகிறது.
தேர்தலுக்கு தேவையான பொருட்கள் உடனுக்குடன் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வழங்கப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 11-ந் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் ஓட்டுப்போடலாம். மாலை 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
கடைசி நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் மாலை 6 மணிக்கு முன்னதாக வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அனைவரும் வாக்களித்த பிறகே அந்த பூத்தில் வாக்குப்பதிவு முடிக்கப்படும்.
மேலும் நக்சல் ஆதிக்கம் நிறைந்த கட்சிரோலி- சிமூர் பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிவரை தேர்தல் நடைபெறுகிறது. #Maharashtra #ParliamentElection
முதல்-மந்திரி குமாரசாமி மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மண்டியா தொகுதியில் சில காங்கிரஸ் தலைவர்கள் எனது மகனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்கள். சிலர் வேலை செய்யவில்லை. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. மண்டியாவில் எனது மகனை தோற்கடித்து, அரசியல் ரீதியாக என்னை ஒழித்துக்கட்ட சிலர் முயற்சி செய்கிறார்கள்.
ஆனால் மண்டியா மக்கள் அத்தகையவர்களை ஆதரிக்க மாட்டார்கள். மண்டியாவில் 8 தொகுதிகளிலும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர். அது தவிர எம்.பி,. 3 எம்.எல்.சி.க்களும் இருக்கிறார்கள்.
எங்கள் கட்சியின் வெற்றிக்கு அவர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவார்கள். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. துமகூரு, ஹாசனில் கூட்டணி கட்சியில் இன்னும் சிலர் அதிருப்தியில் உள்ளனர்.
எங்கள் கூட்டணி வேட்பாளர்களை நாங்கள் கைவிட மாட்டோம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார். #Kumaraswamy #ParliamentElection
முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் துமகூரு தொகுதியில் போட்டியிடுகிறார். 86 வயதிலும் கொளுத்தும் வெயிலில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் யாரை பற்றியும் தரக்குறைவாக பேச மாட்டேன். அவ்வாறு பேசும் பழக்கம் எனக்கு இல்லை. மத்திய செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஊடகங்களுக்கு ரூ.500 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதனால் பா.ஜனதாவின் சாதனைகள், தனிப்பட்ட பிரசாரத்தை ஒளிபரப்புவது போன்ற விஷயங்களை ஊடகங்கள் செய்கிறார்கள்.
பிரதமர் மோடி கர்நாடகத்தில் 6 இடங்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். பா.ஜனதா வேட்பாளர்கள், தங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்பதற்கு பதிலாக மோடிக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறார்கள். ஊடகங்களும் மோடிக்கு ஆதரவாக பேசுகின்றன.

இன்று ஆந்திராவுக்கு செல்கிறேன். சந்திரபாபு நாயுடு கட்சியின் பிரசாரத்தில் கலந்து கொள்கிறேன். 9-ந் தேதி (நாளை) முதல் நானும், சித்தராமையாவும் ஒன்றாக இணைந்து கூட்டு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். நாங்கள் வருகிற 13-ந் தேதி வரை ஆதரவு திரட்ட உள்ளோம்.
நாங்கள் என்ன செய்துள்ளோம், அவர்கள் என்ன செய்துள்ளனர் என்று கூறி நாங்கள் ஓட்டு கேட்கிறோம். இறுதியில் கர்நாடக மக்கள் என்ன முடிவு செய்கிறார்களோ செய்யட்டும்.
மண்டியா, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. எல்லாம் எங்களுக்கு தெரியும். ஒடிசா, மேற்கு வங்காளத்திலும் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. தேவேகவுடா குடும்பத்தை இலக்காக வைத்துக்கொண்டு சோதனை நடத்துகிறார்கள்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார். #DeveGowda #Siddaramaiah
திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்தநிலையில், துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோரின் வீடுகளில் கடந்த மாதம் (மார்ச்) 30-ந் தேதி வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.
மேலும், திமுக பிரமுகரான சீனிவாசன் வீடு உள்பட 6 இடங்களில் நடைபெற்ற சோதனையில், சிமெண்ட் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கப் பணம் மூட்டை மூட்டையாக சிக்கியது.
இதனால், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அ.திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அ.திமுக சார்பில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. அந்தப் புகார் மனுவில், வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இதனால், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். எதிரும் புதிருமாக நிற்பவர்கள் கருத்துபோர் புரிவதும் உண்டு. அது தான் அரசியல். எதிர்த்து நிற்பவரை தனிப்பட்ட முறையில் பழிவாங்க நினைப்பதும், வீண்பழி சுமத்தி அவமானத்துக்கு உள்ளாக்க முயற்சிப்பதும் இன்றைய அரசியலில் ஆளுங்கட்சி தரப்பில் மேலோங்கி நிற்பது.
இதற்கோர் எடுத்துக்காட்டு தான் வேட்பாளர் கதிர் ஆனந்தின் வீடு - கல்லூரியை வருமான வரித்துறையின் சோதனை நடத்திய செயல். இத்தோடு நிற்கவில்லை மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகள். எங்களைச் சுற்றி ஒரு கண்காணிப்பு வளையத்தையே உருவாக்கி எங்களை கண்காணித்து வருகிறார்கள்.
இதுவும் போதாது என்று மேலும் சில செயல்களில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபடப்போவதாக எங்களுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. எங்கள் வீடு - கல்லூரி சோதனைகளில் சட்டத்துக்கு புறம்பான பொருள்கள் எதுவும் கைப்பற்ற முடியவில்லை என்பதால், எங்களை எப்படியும் பழிவாங்கி தீர்வதே என்ற முடிவோடு தேர்தல் நெருக்கத்தில் எங்களுக்கு சொந்தமான இடங்களில், அவர்களாகவே ஏதாவது பொருட்களை வைத்துவிட்டு, இவர்கள் புதியதாக கண்டுபிடித்து விட்டதாக, அவைகளைக் காட்டி, எங்கள் மீது வீண்பழி சுமத்த ஒரு முயற்சி நடப்பதாக அறிகிறோம்.
இதன் மூலம் கதிர் ஆனந்தின் வெற்றியை சீர்குலைத்து விடலாம் என்று இந்த அரசுகள் பெருமுயற்சி எடுப்பதாக தகவல். இத்தகைய போக்கு ஜனநாயகத்துக்கு புறம்பானது மட்டுமல்ல, கடைந்து எடுத்த பாசிச முறையாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Duraimurugan #DMK #ITRaid
பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடைசி கட்டமாக மே 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் அந்த தொகுதியில் 26-ந் தேதி பிரதமர் மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர் 25-ந் தேதி வாரணாசி செல்கிறார். அன்று சாலை வழியாக சென்று மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். 26-ந் தேதி காலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு அதன் பிறகு வேட்பு மனுவை தாக்கல் செய்ய செல்கிறார்.
நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கலின் போது பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி மற்றும் மாநில மந்திரிகள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் செல்கின்றனர். வாரணாசிக்கு வருவதற்கு முன்பு பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தில் மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். #LokSabhaElection #PMModi #Varanasi






