search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flying Force squad"

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் நாடு முழுவதும் ரூ. 1800 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 11-ந்தேதி முதல் மே மாதம் 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலை நியாயமாகவும் அமைதியாகவும் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    குறிப்பாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பே நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் சுமார் 140 தொகுதிகளில் பணப்பட்டு வாடா அதிக அளவில் நடக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையம் உளவுத்துறை மூலம் தகவல்களை சேகரித்து இருந்தது.

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பணப்பட்டு வாடா நடக்கும் என்று தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்க ஏராளமான பறக்கும் படைகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

    மத்திய அரசின் உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், துணைநிலை ராணுவ வீரர்கள், உள்ளூர் போலீசார் ஆகியோரை ஒருங்கிணைத்து இந்த பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் அந்த பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை எடுத்துச் செல்பவர்கள் அதற்குரிய ஆவணத்தை வைத்திருக்காவிட்டால், அந்த பணத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி தங்கம், வெள்ளி நகைகள், பொருட்களும் உரிய ஆவணம் இல்லாவிட்டால் கைப்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி நாடு முழுவதும் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் நகைகள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பறக்கும் படையினரின் சோதனை மிக அதிக அளவில் நடந்து வருகிறது.


    நேற்று மாலை வரை நடந்த பறக்கும் படை சோதனையில் நாடு முழுவதும் ரூ.1845 கோடி மதிப்புள்ள நகை, பணம், மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் அதிக பட்சமாக ரூ.513 கோடிக்கு நகை, பணம், மதுபானம், போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளது.

    தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை ரூ.480 கோடி அளவுக்கு நகை, பணம் சிக்கியுள்ளது. ஆந்திராவில் ரூ.175 கோடி, பஞ்சாபில் ரூ.161 கோடி, உத்தரபிரதேசத்தில் ரூ.148 கோடிக்கு நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட் கள் வழங்கும் வி‌ஷயத்தில் குஜராத், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, நாகலாந்து, அருணாசலபிரதேசம் ஆகிய 6 மாநிலங்கள்தான் முன்னணியில் உள்ளன. இதைத் தொடர்ந்து இந்த 6 மாநிலங்களிலும் முன்னாள் வருவாய் அதிகாரிகளை தேர்தல் செலவின பார்வையாளர்களாக தலைமை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.

    மத்திய, மாநில உளவுத்துறை மூலம் வரும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் அவர்கள் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக கருப்பு பணத்தை அவர்கள் வேட்டையாடி வருகிறார்கள்.

    குஜராத் மாநிலத்தில் அதிக பட்சமாக ரூ.500 கோடி அளவுக்கு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ரூ.160 கோடி ரொக்கப் பணம் சிக்கி உள்ளது.

    அதுபோல தமிழ்நாட்டில் ரூ.220 கோடி அளவுக்கு தங்க நகைகள் பிடிபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கூடுதல் அதிகாரிகளை அனுப்ப தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

    பணப்பட்டுவாடா விவகாரத்தில் டெல்லி, சிக்கிம், காஷ்மீர் ஆகிய 3 மாநிலங்களில் மிக, மிக குறைவான பணப்பட்டு வாடா நடப்பது தெரிய வந்துள்ளது. டெல்லியில் ரூ.3 கோடி, சிக்கிமில் ரூ.36 லட்சம் பிடிபட்டுள்ளது. காஷ்மீரில் ரூ.16 லட்சம் மட்டுமே சிக்கியுள்ளது.

    நாடு முழுவதும் பறக்கும் படையிடம் ரூ.175 கோடி மதிப்புள்ள மது வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019

    ×