search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் சிக்கிய விவகாரத்தில் எங்கள் மீது வீண் பழி சுமத்த முயற்சி: துரைமுருகன்
    X

    பணம் சிக்கிய விவகாரத்தில் எங்கள் மீது வீண் பழி சுமத்த முயற்சி: துரைமுருகன்

    வேலூரில் பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக, தங்கள் மீது வீண்பழி சுமத்த முயற்சி நடப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். #Duraimurugan #DMK #ITRaid
    சென்னை :

    திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்தநிலையில், துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோரின் வீடுகளில் கடந்த மாதம் (மார்ச்) 30-ந் தேதி வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

    மேலும், திமுக பிரமுகரான சீனிவாசன் வீடு உள்பட 6 இடங்களில் நடைபெற்ற சோதனையில், சிமெண்ட் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கப் பணம் மூட்டை மூட்டையாக சிக்கியது.

    இதனால், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அ.திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அ.திமுக சார்பில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. அந்தப் புகார் மனுவில், வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இதுகுறித்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இதனால், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-



    தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். எதிரும் புதிருமாக நிற்பவர்கள் கருத்துபோர் புரிவதும் உண்டு. அது தான் அரசியல். எதிர்த்து நிற்பவரை தனிப்பட்ட முறையில் பழிவாங்க நினைப்பதும், வீண்பழி சுமத்தி அவமானத்துக்கு உள்ளாக்க முயற்சிப்பதும் இன்றைய அரசியலில் ஆளுங்கட்சி தரப்பில் மேலோங்கி நிற்பது.

    இதற்கோர் எடுத்துக்காட்டு தான் வேட்பாளர் கதிர் ஆனந்தின் வீடு - கல்லூரியை வருமான வரித்துறையின் சோதனை நடத்திய செயல். இத்தோடு நிற்கவில்லை மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகள். எங்களைச் சுற்றி ஒரு கண்காணிப்பு வளையத்தையே உருவாக்கி எங்களை கண்காணித்து வருகிறார்கள்.

    இதுவும் போதாது என்று மேலும் சில செயல்களில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபடப்போவதாக எங்களுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. எங்கள் வீடு - கல்லூரி சோதனைகளில் சட்டத்துக்கு புறம்பான பொருள்கள் எதுவும் கைப்பற்ற முடியவில்லை என்பதால், எங்களை எப்படியும் பழிவாங்கி தீர்வதே என்ற முடிவோடு தேர்தல் நெருக்கத்தில் எங்களுக்கு சொந்தமான இடங்களில், அவர்களாகவே ஏதாவது பொருட்களை வைத்துவிட்டு, இவர்கள் புதியதாக கண்டுபிடித்து விட்டதாக, அவைகளைக் காட்டி, எங்கள் மீது வீண்பழி சுமத்த ஒரு முயற்சி நடப்பதாக அறிகிறோம்.

    இதன் மூலம் கதிர் ஆனந்தின் வெற்றியை சீர்குலைத்து விடலாம் என்று இந்த அரசுகள் பெருமுயற்சி எடுப்பதாக தகவல். இத்தகைய போக்கு ஜனநாயகத்துக்கு புறம்பானது மட்டுமல்ல, கடைந்து எடுத்த பாசிச முறையாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Duraimurugan #DMK #ITRaid
    Next Story
    ×