search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புட்டுவிக்கி சாலைக்கு திரும்பும் இடத்தில் சிக்னல் அமைக்கப்படுமா?
    X

    புட்டுவிக்கி சாலைக்கு திரும்பும் இடத்தில் சிக்னல் அமைக்கப்படுமா?

    • சிறுசிறு விபத்துகளும் ஏற்படுகிறது.
    • சிக்னல் உருவாக்கினால் போக்குவரத்து மிகவும் சீராகும்.

    குனியமுத்தூர்:

    கோவையின் பிரதான சாலைகளில் சிக்னல் மிகவும் இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து செல்லும் சூழலில், சிக்னல் ஒவ்வொரு வாகனத்தையும் கட்டுப்படுத்தி வரிசை ப்படுத்தி அனுப்பும்முக்கிய காரணியாக அமைகிறது.

    கோவை பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் பகுதிக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் குனியமுத்தூர் அடுத்த புட்டுவிக்கி சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அதேபோன்று பொள்ளாச்சி ரோட்டில் இருந்து உக்கடம் மற்றும் டவுன் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் கரும்புக்கடை வழியாக செல்லாமல் புட்டுவிக்கி சாலை வழியாக உக்கடம் சென்றடையும் வண்ணம் திருப்பி விடப்பட்டுள்ளது.

    உக்கடம் மேம்பாலம் பணிகள் நடைபெறுவதால் கடந்த பல ஆண்டுகளாக இத்தகைய புட்டுவிக்கி சாலை மிகவும் ஒரு பிரதான சாலையாக உருவாகியுள்ளது.

    ஏராளமான நான்கு சக்கர வாகனங்களும், பஸ்களும், கனரக வாகனங்களும் எந்த நேரமும் சாலையில் பயணிக்கும் வண்ணம் உள்ளது. இருசக்கர வாகனத்தில் டவுன் பகுதிக்கு செல்பவர்கள் கூட ஆத்துப்பாலம் கரும்புக்கடை வழியாகச் சென்று நெரிசலில் சிக்க வேண்டாம் என்று பெரும்பாலும் இச்சாலை வழியாக தான் பயணிக்கின்றனர்.

    இந்தநிலையில் குனியமுத்தூரில் இருந்து புட்டுவிக்கி சாலை திரும்பும் இடத்தில் சிக்னல் இல்லாத காரணத்தால் அவ்வப்போது வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் போக்குவரத்து தடை ஏற்படும் நிலை உள்ளது. பெரிய கனரக வாகனங்கள் இந்த இடத்தில் திரும்பும்போது எதிரே வரும் வாகனம் காரணமாக திரும்ப முடியாமல் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டு நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது.

    ஒரு சில நேரங்களில் இருசக்கர வாகனங்கள் முந்தி க்கொண்டு பாய்வ தால் சிறுசிறு விபத்து களும் ஏற்படுகிறது. என்ன தான் போக்குவரத்து காவலர்கள் நின்றாலும் சிக்னல் இல்லாத காரணத்தால் வாகனங்களுக்கு போக்குவரத்து தடை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. சில சமயங்களில் புட்டுவிக்கி சாலைக்கு திரும்ப முடியாமல் நீண்ட வரிசையில் நான்கு சக்கர வாகனங்களும், லாரிகளும், பஸ்களும் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

    எனவே இந்த இடத்தில் சிக்னல் உருவாக்கினால் போக்குவரத்து மிகவும் சீராகும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    Next Story
    ×