என் மலர்
திருப்பூர்
- நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன்.
- எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நீதியின் பக்கம் என் காதலின் பக்கம் என்னால் உறுதி குலையாது வாழ முடிகிறது !
பாளையங்கோட்டையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவ கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கவினின் காதலியின் சகோதரனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கைதான சுர்ஜித்தின் பெற்றோரும், சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி கவினின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கவினும், அந்த பெண்ணும் இருக்கும் புகைப்படத்தை அவரது உறவினர்கள் வெளியிட்டு, இதை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கௌசல்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவினின் காதலிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தோழி சுபாஷிணிக்கு,
வணக்கம். நான் கெளசல்யா எழுதுகிறேன். முதலில் எனது வேண்டுகோள்: என்ன ஆனாலும் நீங்கள் கவின் பக்கம்தான் நிற்க வேண்டும்!
இங்கு கொலையுண்டு கிடப்பது நீங்கள் நேசித்த, கரம் பிடித்த, கை கோர்த்து நடந்த காதலன்! நீங்கள் அழைத்ததற்காகத்தான் கவின் உங்கள் தம்பியிடம் பேச சென்றிருப்பான்! கவினுக்கான நீதியின் பக்கம் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும்! அப்படிச் செய்தால் என் வாழ்க்கை என்ன ஆகும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதை என்னால் புரிந்து கொள்ள இயலும்.
நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன். ஒவ்வொரு பெரியாரிய அம்பேத்கரியத், மார்க்சிய தோழர்களும் அவர்களின் பிள்ளையைப் போல் என்னை அரவணைத்துக் கொண்டனர். இன்று வரை (10ஆண்டு ஆகப் போகிறது) சாதியைத் தூக்கிப் பிடித்த குடும்பத்துடன் எந்த உறவும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறது. அதற்குத் தோழர்கள் என்னை தங்கள் மகளாக பார்த்து கொண்டு என் சுயமரியாதையுடன் சொந்த காலில் நிற்க இன்று வரை உடன் இருக்கின்றனர்!
எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நீதியின் பக்கம் என் காதலின் பக்கம் என்னால் உறுதி குலையாது வாழ முடிகிறது ! காரணம் சங்கரின் வழக்கில் எந்த இடத்திலும் நான் பொய் சொல்லவில்லை! சமரசம் இப்போது வரை செய்து கொள்ளவில்லை ! இனியும் செய்து கொள்ள மாட்டேன். நான் தொடக்கத்தில் சந்தித்த நெருக்கடிகள் பெரிது. என்னைப் போல் உன்னையும் சாதி வெறியர்கள் பற்றிக் கொள்வார்கள்! எவராக இருந்தாலும் என்ன அழுத்தம் தரப்பட்டாலும் உன் கவினுக்காகத் துணிவோடு நில்! உன் பக்கம் நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்! நடந்ததை அப்படியே சட்டத்தின் முன் சொல்ல வேண்டும்! நீ கவினின் காதலுக்கு நேர்மையாக இருப்பாய் என்பதை உணர்வேன். கவினின் உயிருக்கு விடை எடுத்தாக வேண்டும். கவினுக்காக மட்டுமல்ல கவின்களுக்காகவும் உன்னிடம் இறைஞ்சுகிறேன். தோழி! எல்லாவற்றையும் தாண்டி நான் இருக்கிறேன். கவினின் நீதிக்கு நானும் உன்னோடு இணைந்து கொள்கிறேன். வா ! எதற்கும் அஞ்சாதே! உன்னைத் தாங்கிக் கொள்ள நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்!
அன்புடன்,
கெளசல்யா
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
- கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்கிருந்து சுமார் 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று அருவி பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அருவியை மூழ்கடித்தப்படி வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.
காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில், கன்னிமார் கோவில், மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது. கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிப்பதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. இன்றும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த 3 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து 12 ஆயிரம் கன அடி உபரிநீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்தால் கூடுதலாக உபரி நீர் திறப்பதற்கும் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
இதனால் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளான உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், அரவக்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் உடுமலையின் சுற்றுப்புற பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் முற்றிலுமாக குறைந்து குளுகுளு காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- முனியன் என்பவரது மனைவி பானுமதி 5 மாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- இன்று காலை நகர்நல அலுவலர் முருகன், டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் டி.எஸ்.கே. மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூர் வடக்கு பகுதியை சேர்ந்த ஏராளமான கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த முனியன் என்பவரது மனைவி பானுமதி 5 மாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று வழக்கமான பரிசோதனைக்கு சென்று இருந்த பானுமதிக்கு குளுக்கோஸ் பாக்கெட்கள் வழங்கி உள்ளனர். அதில் காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பானுமதி கேட்டபோது, ஆஸ்பத்திரி ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பானுமதி தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி உதவி நல அலுவலர் கலைச்செல்வன், ஆஸ்பத்திரிக்கு வந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் ஆஸ்பத்திரியில் இருந்த குளுக்கோஸ் பாக்கெட்டுகளையும் ஆய்வு செய்தார்.
அப்போது அதில் ஒரு சில காலாவதியான பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கவனக்குறைவாக நடந்து கொண்ட ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை நகர்நல அலுவலர் முருகன், டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் மருத்துவமனையின் மருந்தாளுனர் வீர பராசக்தி, ஆய்வக நுட்பனர் நாகஜோதி, செவிலியர் கோமதி உள்ளிட்டோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டது. அஜாக்கிரதையாக செயல்படாமல் கவனமாக செயல்பட மருத்துவர்கள் முன்னிலையில் மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- அருவியின் நீர் வரத்தை கோவில் நிர்வாகிகள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்யவும், மலை மீதுள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால் இன்று காலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு சென்றனர். அருவியின் நீர் வரத்தை கோவில் நிர்வாகிகள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- இன்று அதிகாலை கடையில் இருந்து கரும்புகை வெளியே வர தொடங்கியது.
- தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக அக்கம்பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
திருப்பூர்:
தூத்துக்குடியை சேர்ந்தவர் முருகேசன். இவர் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையிலேயே படுத்து தூங்கினார்.
இன்று அதிகாலை கடையில் இருந்து கரும்புகை வெளியே வர தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேசன் கடையில் இருந்து வெளியே வந்தார். தொடர்ந்து வேகமாக பரவிய தீ காரணமாக பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் எரிய தொடங்கியது. மேலும் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக அக்கம்பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் முருகேசன் பல லட்சம் மதிப்பிலான பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக வாங்கி வைத்துள்ளார். அவை அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தீயில் எரிந்து சேதமான பட்டாசுகள் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தினமும் இங்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
- கோவில் ஊழியர்கள்-வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அடிவாரத்தில் அமண லிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், மலை மீது பஞ்சலிங்க அருவி உள்ளது. தினமும் இங்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் மழை பொழிவு குறைந்ததால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் வழக்கத்தை விட அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். அங்கு கோவில் ஊழியர்கள்-வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உலக ஆடை வர்த்தக சந்தையில் இந்தியாவின் தொடர்ச்சியான போட்டித்தன்மை மேலும் வலுவடைந்து வருவதை காட்டுகிறது.
- முந்தைய முதல் காலாண்டை விட தற்போதைய முதல் காலாண்டில் 11.7 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.
திருப்பூர்:
இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பாக ஒவ்வொரு மாதமும் முடிவுகள் வெளியிடப்படுகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதத்துக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.11 ஆயிரத்து 251 கோடியே 30 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.10 ஆயிரத்து 800 கோடியே 20 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளது.
கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய முதல் காலாண்டில் ரூ.35 ஆயிரத்து 861 கோடியே 10 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் காலாண்டில் ரூ.32 ஆயிரத்து 115 கோடியே 50 லட்சத்துக்கு நடந்துள்ளது. இது 11.7 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது.
இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 69 சதவீதமாக உள்ளது. இதனால் திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் முன்னேற்றப்பாதையில் பயணிப்பது ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் கூறும்போது, '2025-26-ம் முதல் காலாண்டில் திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.12 ஆயிரத்து 193 கோடியை எட்டியுள்ளது. இது 2024-25-ம் நிதியாண்டில் முதல் காலாண்டில் ரூ.10 ஆயிரத்து 919 கோடிக்கு நடந்துள்ளது. இதை ஒப்பிடுகையில் முந்தைய முதல் காலாண்டை விட தற்போதைய முதல் காலாண்டில் 11.7 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.
உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் ஏற்ற, இறக்கமான தேவைகளுக்கு மத்தியில் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நிலையான செயல்பாட்டின் நேர்மறையான வளர்ச்சியின் அறிகுறியாகும். உலக ஆடை வர்த்தக சந்தையில் இந்தியாவின் தொடர்ச்சியான போட்டித்தன்மை மேலும் வலுவடைந்து வருவதை காட்டுகிறது.
இந்தியாவின் ஆடை ஏற்றுமதியின் இலக்கை நோக்கி தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்யும் விதமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கொள்கை பரிந்துரை, சந்தை நுண்ணறிவு மற்றும் திறன் மேம்பாடு போன்ற முயற்சிகள் மூலம் வரும் காலங்களில் திருப்பூரின் ஆடை ஏற்றுமதி வளர்ச்சி தொடரும்' என்றார்.
- நமக்கு அச்சம் இருக்க வேண்டும். அச்சமே வாழ்க்கையாக இருக்கக்கூடாது.
- குழந்தைகளுக்கு 3, 4 மொழிகளாவது கற்றுக்கொடுக்க வேண்டும்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் நடைபெற்ற புத்தக திருவிழா தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு 'அச்சம் தவிர்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
குழந்தைகளுக்கு பொன் பொருளை கொடுப்பதை விட புத்தகங்களை பரிசாக கொடுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு தெளிவு கிடைக்கும். பள்ளி குழந்தைகள் பாட புத்தகங்களை திரும்பத்திரும்ப படிக்கின்றனர். நான் இப்பகுதியில் 2 ஆண்டுகள் ஆரம்ப கல்வி படித்துள்ளேன்.
நமக்கு அச்சம் இருக்க வேண்டும். அச்சமே வாழ்க்கையாக இருக்கக்கூடாது. குழந்தைகளுக்கு அச்சத்தை போக்கும் வகையில் நாம் எடுத்துக்கூற வேண்டும்.
கிராம பகுதியில் உள்ள குழந்தைகள் சூழ்நிலை காரணமாக அச்சத்தை எதிர்கொள்கின்றனர். நகர் பகுதியில் இருக்கும் குழந்தைகள் அனைத்து வசதிகளும் கிடைப்பதால் அவர்களுக்கு அச்சத்தை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
தற்போது உழைக்கும் இளம் வயதினர் அதிகமாக உள்ளனர். இன்னும் 35 ஆண்டுகளுக்கு பிறகு நாடு வளர்ச்சி இருக்காது. ஏனென்றால் உழைக்கும் வயது குறைந்து முதியவர்கள் தான் இருப்பார்கள். ஆகையால் தற்போது நம் நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல உழைக்கும் இளைஞர்கள், நல்ல அதிகாரிகள் தேவை.
குழந்தைகளுக்கு 3, 4 மொழிகளாவது கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் பிற மாநிலங்களில் இருந்து வருவோரிடம் பேச முடியும். மகாகவி பாரதிக்கு 8 மொழிகள் தெரியும். ஆனால் சிறந்த மொழி தமிழ் தான் என்று கூறியுள்ளார். பிற மொழி கற்பதால் நம் அடையாளம் மாறப்போவதில்லை. நாம் புத்தகங்களை படித்த பிறகு மற்றவர்களுக்கு பரிசாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை.
- நீர்வளத்துறை அதிகாரிகள் உடனே தண்ணீரை நிறுத்த வேண்டும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை மூலம் புதிய ஆயக்கட்டு பாசன பகுதியில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து செய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 23 நாட்களுக்கு மேல் அணை நிரம்பியுள்ளது.
இந்தநிலையில் பிரதான ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பிரதான கால்வாய் மூலமாக 450 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் ஆயக்கட்டு சம்மதம் இல்லாத பகுதிகளுக்கு யாரோ ஒருவர் உத்தரவுக்கு இணங்க தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
மடத்துக்குளம் பகுதியில் உள்ள தென்னை மரங்கள் காய்ந்து வரும் நிலையில் அப்பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்காமல் நீர்வளத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு உள்ளூர் பகுதி விவசாயிகளின் மடைகளை அடைத்து உபரி நீரை பிரதான கால்வாய் வழியாக கடந்த 7 நாட்களாக திறந்து விட்டுள்ளனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை.
எனவே நீர்வளத்துறை அதிகாரிகளின் அத்துமீறலை கண்டித்து செங்கண்டிபுதூர் பகுதியில் பிரதான கால்வாயில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் கூறுகையில், தற்பொழுது முறைகேடாக விவசாயிகளின் மடைகளை அடைத்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் உடனே தண்ணீரை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் மடைகளை உடைத்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
- கடந்த ஜூன் 16-ந்தேதி அணை நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த ஜூன் 16-ந்தேதி அணை நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து காணப்படுவதால் அணையில் இருந்து கடந்த 25 நாட்களாக ஆற்று மதகு மற்றும் பிரதான கால்வாயில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ள கேரள மாநிலம், மூணாறு, தலையாறு, மறையூர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணை நீர்வரத்துக்கு முக்கிய ஆறாக உள்ள பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மறையூர் அருகே அமைந்துள்ள தூவானம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவியை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
- கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 135 கஞ்சா வழக்குகளில் 337 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- 337 கிலோ கஞ்சாவை கோவை மதுக்கரை செட்டிப்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் எந்திரத்தில் தீயிட்டு அழித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 135 கஞ்சா வழக்குகளில் 337 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1கோடியாகும்.
சென்னை ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி, கோவை இன்றியமையா பண்டக விதிக்கு உட்பட்ட தனிச்சிறப்பு கோர்ட்டு நீதிபதி உத்தரவுப்படி திருப்பூர் மாநகர கஞ்சா அழிப்பு குழுவினர் நேற்று 337 கிலோ கஞ்சாவை கோவை மதுக்கரை செட்டிப்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் எந்திரத்தில் தீயிட்டு அழித்தனர்.
திருப்பூர் கஞ்சா அழிப்பு குழுவின் தலைவரும், மாநகரபோலீஸ் கமிஷனருமான ராஜேந்திரன் மேற்பார்வையில் மாஜிஸ்திரேட்டுகள் செந்தில்ராஜா, லோகநாதன், கோவை தடயவியல் அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் கஞ்சா அழிக்கப்பட்டது.
- சித்ராதேவியின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
- சித்ரா தேவிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யா பெற்றோர் இடையீட்டு மனுதாக்கல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கணவர், மாமனாரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 9-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் மனு மீதான விசாரணையை 11-ந்தேதிக்கு (இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.
இதனை தொடர்ந்து, சித்ராதேவியின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்ரா தேவிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யா பெற்றோர் இடையீட்டு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவும் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அந்த மனுவில் சித்ராதேவிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பும் விசாரணை நடந்தது. இதனை தொடர்ந்து, சித்ரா தேவியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.






