என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • பல்வேறு பகுதிகளில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன.
    • 10 லாரிகள், 15 லாரிகள் என சாலையில் வரும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி அருகே காற்றாலை அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை ஏற்றிக்கொண்டு 26 சக்கரங்கள் கொண்ட 13 கனரக லாரிகள் வந்தன. இந்த லாரிகளால் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் திடீரென லாரிகளை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில்,

    தாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மூலனூர், கன்னி வாடி மற்றும் குடிமங்கலம் ,கோவிந்தாபுரம், சத்திரம், குண்டடம், மடத்துக்குளம் என திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சிறிய அளவிலான காற்றாடிகள் அமைக்கப்பட்டு வந்தது.

    இப்பொழுது ஒரு காற்றாடி ரூ.8 கோடி முதல் 12 கோடி வரை பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது . ஆலைகளில் அமைக்கப்படும் காற்றாடி இறக்கைகள் மற்றும் உபகரணங்கள் 200 அடி நீளமுள்ள லாரிகளில் ஏற்றி வருகின்றனர்.

    தாராபுரத்தில் இருந்து பகவான் கோவில் , பொன்னிவாடி செல்லும் சாலையானது 7 மீட்டர் கொண்ட சாலை ஆகும் .இதில் 6 மீட்டர் அகலமுள்ள லாரிகள் வருகின்றன. அதுவும் இந்த லாரிகளானது ஒவ்வொரு லாரியாக வராமல் தொடர்ச்சியாக 10 லாரிகள், 15 லாரிகள் என சாலையில் வரும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவில் மட்டும் லாரிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் மூலனூர் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந்தேதி தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது.
    • ஆர்டர் கொடுத்ததுமே 4 நிறுவனங்களிலும் பனியன் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் பனியன் உள்ளிட்ட ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் விளையாட்டு போட்டிகள், கோவில் திருவிழாக்கள், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அணியும் வகையில் ஆர்டரின் பேரில் டீ-சர்ட் பனியன்கள் தயாரித்து கொடுக்கப்படுகிறது.

    இந்தநிலையில் சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாட்டிற்காக திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 4 லட்சம் டீ-சர்ட் பனியன்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பனியன் உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-

    சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந்தேதி தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கும் இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவதற்காக தி.மு.க., சார்பில் 4 லட்சம் பனியன்கள் தயாரிக்க திருப்பூரில் உள்ள 4 பனியன் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டது. முதலில் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெற இருந்த நிலையில், சென்னை மிச்சாங் மழை வெள்ள பாதிப்பு காரணமாக 24-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் ஆர்டர் கொடுத்ததுமே 4 நிறுவனங்களிலும் பனியன் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

    முதலில் மாநாடு 17-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் அதற்கு 2 நாள் முன்னதாகவே பனியன்கள் தயாரித்து கொடுத்து விட வேண்டும் என்று தயாரிப்பு பணியில் ஈடுபட்டோம். தற்போது 4 லட்சம் பனியன்களும் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ள டீ-சர்ட் பனியனில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது. பனியனின் இடது, வலதுபுற கைகளில் கலைஞர் நூற்றாண்டு விழா லோகோ அச்சிடப்பட்டுள்ளது. மேலும் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு-2023, மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. மிகவும் தரமாகவும், தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்களை கவரும் வகையில் பனியன்களை தயாரித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது தயாரிக்கப்பட்டுள்ள டீ-சர்ட் பனியன்கள் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் 24-ந்தேதி அன்று அந்தந்த மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் டீ-சர்ட் அணிந்து கலந்து கொள்ள உள்ளனர்.

    • மோதலில் காயமடைந்த தாஸ் மற்றும் பாபு ஆகிய 2 பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • தாராபுரம் பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 8.30 மணி அளவில் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்தநிலையில் அங்குள்ள டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வரும் தாராபுரம் தெற்கு தெருவை சேர்ந்த தாஸ் (வயது 35) என்பவர் கடைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது டீக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சின் டிரைவர் பாபு சாப்பிட்டு விட்டு பஸ்சின் ஜன்னல் வழியாக கை கழுவிய தண்ணீரை ஊற்றியுள்ளார். அந்த தண்ணீர் தாஸ் மீது பட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தாஸ், தண்ணீரை பார்த்து ஊற்ற முடியாதா? என்று டிரைவர் பாபுவிடம் கேட்டுள்ளார். மேலும் டீ கடையில் உள்ள ஜக்கில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து பாபு மீது ஊற்றியுள்ளார். இதனால் 2 பேருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி அடிக்க தொடங்கினர்.

    இதையறிந்து அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மோதலில் காயமடைந்த தாஸ் மற்றும் பாபு ஆகிய 2 பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பஸ்சை எடுக்காமல் அப்படியே நிறுத்தினர். சுமார் அரை மணி நேரம் பஸ்சை எடுக்காமல் போராட்டம் நடத்தியதால் பயணிகள் கடும் சிரமப்பட்டனர். வெளியூர் மற்றும் வேலைக்கு செல்லக்கூடிய பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு டிரைவர்கள் பஸ்சை இயக்கினர். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாராபுரம் பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    • பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • பெண்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்துள்ள பூமலூர் கோகுல் கார்டன் பகுதியை சேர்ந்த பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது திடீரென தங்கள் பகுதிக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர கோரி தாங்கள் கொண்டு வந்த விளக்குகளை ஏற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இதில் பெண்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பூமலூர் ஊரட்சிக்கு உட்பட்ட பூமலூர் கிராமம் கோகுல் கார்டன் பகுதியில் 250 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத்தலைவரிடம் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு மின்விளக்கு, சாக்கடை வசதி செய்து தரக்கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொது மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

    • அதிக அளவு நீர் பாலத்தின் மேலே சென்றதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
    • வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் நல்லம்மன் தடுப்பணை நிரம்பியும், தடுப்பணையின் நடுவே நல்லம்மன்கோவிலை வெள்ளம் சூழ்ந்து தீவு போல காணப்படுகிறது.

    திருப்பூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்ட அணைகள் நிரம்பி தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் இருந்து பாய்ந்து வரும் நொய்யல் ஆறு திருப்பூர் மாநகரின் மையப்பகுதி வழியாக கடந்து செல்கிறது. இன்று காலை முதல் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நேரம் செல்ல செல்ல வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. இதனால் காலேஜ் ரோட்டையும், மங்கலம் ரோட்டையும் இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது.

    அதிக அளவு நீர் பாலத்தின் மேலே சென்றதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் வந்து பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். இரும்பு தடுப்புகள் அமைத்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தரைப்பாலத்தில் வெள்ளத்தை கடக்காத வகையில் எச்சரிக்கை விடுத்தனர்.

    திருப்பூர் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே நல்லம்மன் தடுப்பணை உள்ளது. நல்லம்மன் தடுப்பணையில் நொய்யல் வெள்ளம் அருவிபோல கொட்டிவருகிறது. வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் நல்லம்மன் தடுப்பணை நிரம்பியும், தடுப்பணையின் நடுவே நல்லம்மன்கோவிலை வெள்ளம் சூழ்ந்து தீவு போல காணப்படுகிறது. நல்லம்மன் கோவிலுக்கு செல்லும் சிறுபாலம் வெள்ளத்தால் மூழ்கி காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நொய்யல் வெள்ளம் நுரையுடன் செல்கிறது. 

    • தனிப்படை போலீசார் சரவண வேலனை கடத்தி சென்ற மர்மநபர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் என்று விசாரணை நடத்தினர்.
    • கைதான சரவணபாண்டியனின் சொந்த ஊர் மதுரை திருப்பரங்குன்றம். கோவை தெலுங்குபாளையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மெட்டராத்தி பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 44). திருமணமாகாத இவருக்கு அவரது உறவினர்கள் பெண் பார்த்து வந்தனர். இந்தநிலையில் சின்னச்சாமிக்கும், பல்லடத்தை சேர்ந்த சரவண வேலன்(37) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது சரவண வேலன், நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறேன். எனக்கு சொந்தக்கார பெண்கள் நிறைய பேர் உள்ளனர்.

    எனவே அவர்களில் யாரையாவது பார்த்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய சின்னச்சாமி, சரவண வேலனுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

    நேற்று முன்தினம் சின்னச்சாமியை தொடர்பு கொண்ட சரவணவேலன் என்னிடம் திருமணத்திற்கான பெண்களின் புகைப்படங்கள் உள்ளது. அதனை நீங்கள் பார்த்து தேர்வு செய்து கொள்ளுங்கள். பிடித்தால் உடனே திருமணத்தை நடத்தி விடலாம் என தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து சின்னச்சாமி அவரது சொந்த ஊரான குடிமங்கலத்திற்கு வருமாறு சரவண வேலனை அழைக்கவே, அவர் அங்கு சென்றுள்ளார். அவருக்காக சின்னச்சாமி குடிமங்கலத்தில் உள்ள விடுதியில் அறையும் எடுத்து கொடுத்தார்.

    அங்கு வைத்து இருவரும் பெண்ணின் புகைப்படங்களை பார்த்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடுதி அறையில் தங்கியுள்ளனர்.

    பின்னர் நேற்று காலை சின்னச்சாமி பணத்தம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்திற்கு சரவண வேலனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.

    சிறிது தூரம் செல்லும் போது திடீரென அங்கு காரில் வந்த 3பேர் கும்பல், மோட்டார் சைக்கிளை மறித்ததுடன் சரவண வேலனை அலாக்காக தூக்கி காரில் போட்டு கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சின்னச்சாமி, காரை பின்தொடர்ந்து துரத்தியுள்ளார். அப்போது 3பேரும் மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளி விட்டு காரில் தப்பிச்சென்றனர்.

    உடனே இது குறித்து சின்னச்சாமி குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா (பொறுப்பு) உத்தரவின் பேரில் உடுமலை டி.எஸ்.பி., சுகுமாறன் மேற்பார்வையில், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின், சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சலிங்கம் மற்றும் போலீஸ்காரர்கள் முத்துமாணிக்கம், லிங்கேஸ்வரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சரவண வேலனை கடத்தி சென்ற மர்மநபர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் என்று விசாரணை நடத்தினர்.

    காரின் நம்பரை வைத்து விசாரணை நடத்தும் போது 3பேரும் கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்த சரவண பாண்டியன் (வயது 28), முத்துசெல்வம் (27), ரித்திக் (20) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சரவண வேலனை கடத்தி சென்று கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது சரவண வேலன் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது.

    கைதான சரவணபாண்டியனின் சொந்த ஊர் மதுரை திருப்பரங்குன்றம். கோவை தெலுங்குபாளையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் சரவணபாண்டியனுக்கும், சரவண வேலனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சரவணவேலன் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்றும், எனக்கு கேரளா செல்ல வாடகைக்கு கார் வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே சரவண பாண்டியன் கார் ஒன்றை வாடகைக்கு கொடுத்துள்ளார். அதனை வாங்கி சென்ற சரவண வேலன், செல்லாத ரூ.2ஆயிரம் நோட்டுக்களை மாற்றுவதற்காக கேரளா சென்றுள்ளார். அப்போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக கேரள போலீசார் சரவண வேலனை கைது செய்ததுடன், காரையும் பறிமுதல் செய்தனர். அதன்பிறகே சரவண வேலன் போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி காரை வாடகைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து சரவண பாண்டியன் ரூ.3 லட்சம் வரை பணம் செலுத்தி கேரளாவில் இருந்து காரை மீட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த சரவண வேலனிடம் பணத்தை திருப்பி தருமாறு சரவண பாண்டியன் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். நேற்று குடிமங்கலத்தில் இருப்பதை அறிந்த சரவண பாண்டியன் தன்னிடம் டிரைவர்களாக பணியாற்றும் முத்து செல்வம் , ரித்திக் ஆகியோரை அழைத்து கொண்டு குடிமங்கலம் சென்றதுடன் அங்கு வைத்து சரவணவேலனை காரில் கடத்தி கோவைக்கு சென்றுள்ளார். அப்போது சரவணவேலன் சத்தம் போடவே அவரது வாயை பொத்தியுள்ளனர். இதில் அவர் மூச்சுதிணறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த 3பேரும், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். அங்கு சரவண வேலன் மூச்சுத்திணறி இறந்துள்ளதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் விசாரணையில் 3பேரும் சிக்கிக்கொண்டனர்.

    கொலை செய்யப்பட்ட சரவண வேலன் இது போல் பலரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக சரவணவேலனை அவரது மனைவி பிரிந்து சென்றதுடன் வேறு திருமணம் செய்துள்ளார். சின்னச்சாமியிடம் திருமணத்திற்கு பெண் பார்த்து தருவதாக கூறி ரூ.1.50 வரை பணம் பறித்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி பணம் பறித்த நபர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தாசில்தார் மற்றும் போலீசார், பொதுமக்கள் முன்னிலையில் அந்த மதுபான கூடம் திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர்.
    • தற்போது அந்த மதுபான கூட நிர்வாகிகள் மீண்டும் மதுபான கூடத்தை திறந்து செயல்படுத்துவோம் என்று கூறி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் பகுதியை சேர்ந்த சுற்றுவட்டார பொதுமக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு மனு கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் கிராமத்திற்கு உட்பட்ட பந்தம்பாளையத்தில் ஒரு தனியார் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கூடம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவருக்கும் இடையூறாக உள்ளது. ஏற்கனவே இந்த மதுபான கூடம் அமைவதற்கு முன்பு வேட்டுவபாளையம், முறியாண்டம்பாளையம், சேவூர் ஆகிய 3 ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டத்தில் இந்த மதுபான கூடம் அமைய கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.

    இதையடுத்து மதுபான கூடத்தை எதிர்த்து பொதுமக்கள் சார்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு குறைதீர்க்கும் கூட்டத்தில் 3 முறை மனு அளித்துள்ளோம். அதிகாரிகளிடமும் மனு அளித்து உள்ளோம். இதையும் மீறி அந்த மதுபான கூட நிர்வாகத்தினர், வேறொரு மாவட்டத்தில் அனுமதி உரிமம் பெற்று இங்கு மதுபான கூடத்தை அமைத்தனர். இதனால் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு முதல் முறையாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தாசில்தார் மற்றும் போலீசார், பொதுமக்கள் முன்னிலையில் அந்த மதுபான கூடம் திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கலைந்து சென்றோம்.

    பின்னர் சுமார் ஒரு வாரம் பூட்டி இருந்த அந்த மதுபான கூடம் மீண்டும் திறக்கப்பட்டது. இதையறிந்து மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்போதும் பொதுமக்கள் முன்னிலையில் அரசு அதிகாரிகள் இந்த கடை இனி இங்கே திறக்கப்படாது என்று மீண்டும் உறுதி அளித்தனர். இதனால் கலைந்து சென்றோம்.

    இந்நிலையில் தற்போது அந்த மதுபான கூட நிர்வாகிகள் மீண்டும் மதுபான கூடத்தை திறந்து செயல்படுத்துவோம் என்று கூறி வருகிறார்கள். அப்படி மீண்டும் திறக்கப்பட்டால் அது பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே விவசாயிகளின் நலன் மற்றும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் நலன் கருதி இந்த மதுபான கூடத்தை இங்கிருந்து முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    • மக்களுடைய அங்கீகாரத்தால் உழைத்து முதல்வரானார் மு.க.ஸ்டாலின்.
    • மோடியால் வாழ்ந்தது அதானி குடும்பம் மட்டுமே.

    திருப்பூர்:

    திருப்பூர் கொடுவாயில் தி.மு.க., இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இளைஞரணி மாநாட்டு நிதியாக திருப்பூர் வடக்கு மாவட்டம் ரூ.1 கோடி, தெற்கு மாவட்டம் ரூ.1 கோடி, வடக்கு மாவட்ட இளைஞரணி ரூ. 14 லட்சம், தெற்கு மாவட்ட இளைஞரணி ரூ.12 லட்சம், முன்னாள் மாவட்ட செயலாளர் சார்பாக 2 லட்சம் என ரூ. 2 கோடியே 28 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    சேலம் மாநாட்டிற்காக 4 லட்சம் டீ- சர்ட்டுகள் திருப்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மற்ற ஊர்களுக்கெல்லாம் சட்டையில் செல்லும் நான் இங்கு மட்டும்தான் டீ-சர்ட்டில் வந்திருக்கிறேன். மக்களுடைய அங்கீகாரத்தால் உழைத்து முதல்வரானார் மு.க.ஸ்டாலின்.

    காலில் விழுந்து முதல்வரானவர் அல்ல. மு.பெ.சாமிநாதன் வகித்த பொறுப்பை நான் வகிப்பது தான் எனக்கு பெருமை. இளைஞரணியில் கிளை அமைப்பாளராக பணியை தொடங்கியவர் மு.பெ. சாமிநாதன். சேலம் மாநாட்டை எழுச்சி மாநாடாக கொள்கை மாநாடாக நடத்தி காட்ட வேண்டும். இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவே சேலம் மாநாடு நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று முதல் தமிழக அரசால் அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. பா.ஜ.க., 9 ஆண்டுகளில் என்ன செய்தது. மோடியால் வாழ்ந்தது அதானி குடும்பம் மட்டுமே.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பேருந்து நிலையத்தில் வெளிப்படையாக முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக காதல் செய்து வருகின்றனர்.
    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தங்களது ஊர்களுக்கு செல்ல பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் தினமும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களில் சில காதல் ஜோடிகள் பேருந்து நிலையத்தில் வெளிப்படையாக முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக காதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் காதல் ஜோடிகள் அத்துமீறியதை கண்ட பொதுமக்கள் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நேரடியாக சென்று பார்த்த போதும் போலீசார் வருவது கூட தெரியாமல் கல்லூரி காதல் ஜோடி முத்தமழை பொழிந்து கொண்டிருந்தனர். இருவரையும் பிடித்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • 2 சிறுத்தைகளும் சோளக்காட்டிற்குள் புகுந்து ஓடிவிட்டதாகவும் திருப்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.
    • சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதா? என்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி. இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள சென்னியப்பன் காட்டு பாறை என்ற பகுதியில் 2 சிறுத்தைகள் நாயை துரத்தி கொண்டு வந்ததாகவும், பின்னர் மோட்டார் சைக்கிள் சத்தத்தை கேட்டதும் 2 சிறுத்தைகளும் சோளக்காட்டிற்குள் புகுந்து ஓடிவிட்டதாகவும் திருப்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் வனச்சரக அலுவலர், வருவாய்த்துறையினர் மற்றும் சேவூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதா? என்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர்ந்து சோளக்காட்டில் சில காலடித்தடங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் காட்டுத்தீ போல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் திரளாக கூடியதால் பரபரப்பு நிலவி வருகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு இதே பகுதியின் அருகில் உள்ள பாப்பாங்குளத்தில் ஒரு சிறுத்தை இருவரை தாக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பெண் கூறிய தகவலால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை தீவிரமாக கண்காணித்து அப்பகுதியில் உள்ள கிராம மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.
    • தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.

    இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. இதற்கிடையே தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    அதன்படி டிசம்பர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தனர். இதில் நூல் விலை கிலோ ரூ.10 குறைந்தது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர் ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம்பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க்கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று மாலை ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார்.
    • கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பாலசமுத்திரம்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கத்தாங்கன்னி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). விவசாயியான இவர் தோட்டத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து சுமார் 50 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    நேற்று மாலை ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை சென்று பார்த்தபோது பட்டிக்குள் 35 ஆடுகள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இறந்து கிடந்தது. மேலும் சில ஆடுகள் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

    இரவு நேரத்தில் வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை குழுவினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இறந்து போன ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ. 2.50 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. காங்கயம் பகுதிகளில் கால்நடைகளை தாக்கி வரும் வெறிநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×