என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • மாவட்ட நிர்வாகம் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதிமொழி அளித்தனர்.
    • தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா மைவாடி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தில் கடந்த 5-ந்தேதி பட்டியல் இன நபர் மீது வன்கொடுமை தாக்குதல் நடைபெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது.

    அப்போது ராஜாவூர் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பொது வீதிகளில் கால்களில் செருப்பு அணிந்து செல்ல முடியாது, அப்பகுதியில் உள்ள டீ கடையில் இரட்டை டம்ளர் முறை இருப்பதையும் மற்றும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ராஜகாளியம்மன் கோவிலில் பட்டியல் இன மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு உள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த மக்களின் உரிமைக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 -ந்தேதி உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம், வன்கொடுமை நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும், மேலும் பொது இடங்களில் பட்டியல் இன மக்களுக்கு சட்ட உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 18 -ந் தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.


    மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் 24-ந்தேதி உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

    இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதிமொழி அளித்தனர். இதையடுத்து ராஜாவூர் கிராமத்தில் உள்ள கோவிலில் வழிபடவும், பொது பாதையில் காலில் செருப்பு அணிந்து நடக்கவும் முடிவு செய்ததுடன், அதை உறுதி செய்யும் வகையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் மாநில தலைவர் செல்லக்கண்னு முன்னிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ராஜாவூர் கிராமத்தில் பேரணியாக பொது பாதையில் காலில் செருப்பு அணித்து சென்றனர். பின்னர் அங்குள்ள ராஜ காளியம்மன் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர்.

    முன்னதாக இந்த சமூக மாற்ற நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளர் பஞ்சலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் வடிவேல், சிஐடியு., நிர்வாகி பன்னீர்செல்வம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம், இந்திய தொழிற்சங்க மையம், ஆதிதமிழர் சன நாயக பேரவை, திராவிடர் தமிழர் கட்சி, ஆதிதமிழர் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், ஆதிதமிழர் முன்னோர் கழகம், ஆதி தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் சென்று வழிபட்டதன் மூலமாக பட்டியல் இன மக்களின் வழிபாட்டு உரிமை போராட்டம் வெற்றி பெற்று ள்ளது என்றனர். மேலும் கோவிலில் வழிபட தடை நீங்கியதால் ராஜாவூர் பகுதி பட்டியல் இன மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • கோவை, திருப்பூர் மாநிலங்களில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி.
    • பீகார், ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் பிரச்சினை எதிரொலிக்க, குழு அமைத்து விசாரணை

    கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகம் முழுவரும் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலைப் பார்த்து வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருமாநில தொழிலாளர்கள் மீது கடுமையாக தாக்கப்பட்டதாக வீடியோக்கள் மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவின.

    இதனால் பாதுகாப்பு அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலம் திரும்பினர். இது பாதுகாப்பு தொடர்பான பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் எதிரொலித்தது.

    இதனால் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பாதுகாப்பு குறித்து உறுதியளித்தார்.

    என்றபோதிலும் பீகார் அரசு இதுகுறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு தமிழகம் வந்து பீகார் மாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தியது. அப்போது அவர்கள் சந்தோசமாக இருக்கிறோம். எந்த அச்சுறுத்தலும் இல்லை எனத் தெரிவித்தனர். அதன்பின் இந்த விவாகரம் முடிவடைந்தது.

    கடந்த 2012-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் வடகிழக்கு மாநிலத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி கிளம்பியது. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் மைசூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறினர். அதன்பின் தென்மாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தினர் சென்றனர்.

    • பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    • ஹிஜாப் தடை உத்தரவு நீக்குவதில் பல சட்டசிக்கல்கள் உள்ளன.

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் உள்பட மத அடையாள ஆடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்குவோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் மைசூருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஹிஜாப் தடை உத்தரவை திரும்ப பெறுவது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. என்னிடம் ஹிஜாப் விவகாரம் குறித்து ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது நான், ஹிஜாப் தடையை நீக்குவோம் என்றேன். ஹிஜாப் தடை உத்தரவு நீக்குவதில் பல சட்டசிக்கல்கள் உள்ளன. உடனடியாக தடை உத்தரவை நீக்க முடியாது. அமைச்சரவையில் கலந்தாலோசிக்க வேண்டும். விரைவில் இதுபற்றி அரசு மட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனிமனித உடை, உணவு விஷயத்தில் கட்டுப்பாடு விதிக்க கூடாது என்றும், ஹிஜாப் தடையை நீக்குவோம் என்றும் நேற்று முன்தினம் சித்தராமையா பேசிய நிலையில் அரசு மட்டத்தில் ஆலோசித்தே முடிவு எடுக்கப்படும் என திடீர் பல்டி அடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆரம்ப காலங்களில் நாட்டு ரகங்களை சாகுபடி செய்து வந்த விவசாயிகள், தற்போது உயர்ரக சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள்.
    • கார்த்திகை, ஐப்பசி மாதங்களில் மழை அதிகமாக இருக்கும். இதனால் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அது மட்டுமன்றி நல்ல தரமான சின்ன வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயத்துக்கு ஏற்ற தட்பவெப்பநிலை சாதகமாக உள்ளதால், நல்ல விளைச்சலை கொடுத்து வருகிறது.

    ஆரம்ப காலங்களில் நாட்டு ரகங்களை சாகுபடி செய்து வந்த விவசாயிகள், தற்போது உயர்ரக சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். அனைத்து சமையலுக்கும் சின்ன வெங்காயம் பயன்படுத்தப்படுவதால் எப்போதும் அதற்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது. எனவே விவசாயிகள் ஆர்வமுடன் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். இதற்கிடையே புரட்டாசி பட்டத்தில் நடவு செய்த சின்ன வெங்காயம் தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உரிய விலை இல்லாததாலும், மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததாலும், சின்ன வெங்காயத்தின் விலை சரிந்துள்ளது. இது குறித்து சின்ன வெங்காய விவசாயி வேலுமணி கூறியதாவது:-

    ஒரு ஏக்கர் வெங்காயம் பயிரிட விதை வெங்காயம் ரூ.30 ஆயிரம், உரம் இடுவதற்கு ரூ.15 ஆயிரம், பூச்சி மருந்து அடிப்பதற்கு ரூ.15 ஆயிரம், களைகள் எடுக்க ரூ.20 ஆயிரம் என சுமார் ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது. இந்த பகுதிகளில் ஓரளவு தண்ணீர் வசதி இருந்தும் பருவ நிலை மாற்றத்தால் சின்ன வெங்காய விளைச்சல் குறைந்துள்ளது. நல்ல விளைச்சல் என்றால் ஒரு ஏக்கருக்கு சுமார் 7 டன் முதல் 8 டன் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றத்தால் விளைச்சல் குறைந்துள்ளது.

    இதனால் ஒரு ஏக்கருக்கு சுமார் 3 டன் முதல் 4 டன் வரை மகசூல் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெங்காயம் விலை குறைந்ததால் சென்ற வாரம் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் கொடுத்து எங்களிடம் கொள்முதல் செய்த வியாபாரிகள் தற்பொழுது கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை தருகிறார்கள். இதனால் வெங்காய விவசாயத்தில் போட்ட முதலீடு திரும்ப கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும் இதுகுறித்து விவசாயி தங்கவேல் கூறியதாவது:-

    சின்ன வெங்காயத்தை ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யலாம். இதனால் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சின்ன வெங்காயம் கிலோ ரூ.80க்கு விற்பனையானது. இதனால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது.

    இந்த நிலையில் கார்த்திகை, ஐப்பசி மாதங்களில் மழை அதிகமாக இருக்கும். இதனால் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும். இதனை எதிர்பார்த்து சின்ன வெங்காய விவசாயிகள் இருப்பு வைத்திருந்தோம். ஆனால் பருவ நிலை மாற்றத்தால் மழை காலம் மாறி பெய்கிறது. இதனால் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. தற்பொழுது புரட்டாசி மாதத்தில் நடவு செய்த வெங்காயமும் சந்தைக்கு வந்துள்ளது. இதனால் ஏற்கனவே ஆடிப்பட்டத்தில் பயிரிடப்பட்டு இருப்பு வைத்த வெங்காயத்திற்கு தற்பொழுது உரிய விலை கிடைக்கவில்லை. எனவே வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:-

    சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்க கூடியது. தமிழர்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து ஒவ்வொரு முறையும் தடைகளையும், வரிகளையும் விதித்து சின்ன வெங்காய விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

    சின்ன வெங்காயத்திற்கு உற்பத்தி செலவு குறைந்தபட்சம் 30 ரூபாயாக இருந்து வருகிறது. குறைந்தபட்ச லாபத்தோடு 45 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே கட்டுப்படியாக கூடிய சூழ்நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட 40 சதவீத வரியும் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடையும் சின்ன வெங்காய விவசாயிகளை பெரும் நஷ்டத்தில் தள்ளிவிடும். மத்திய அரசு சின்ன வெங்காய உற்பத்திக்கு எவ்வித மானியமும் அளிப்பதில்லை. விலை நிர்ணயமும் கிடையாது. சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்திற்கு தனித்தனி ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்க வேண்டும். சின்ன வெங்காயம் பயிரிட்டு உரிய விலை கிடைக்காமல், நஷ்டம் ஏற்பட்டு உள்ள விவசாயிகளிடமிருந்து மத்திய, மாநில அரசுகள் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
    • 19-ந்தேதி லண்டன் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. இரு அணிகள் மோதும் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்கிடையே இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் வீராட்கோலி, தனிப்பட்ட குடும்ப விஷயம் காரணமாக தாயகம் திரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வீராட்கோலி, தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய அணியுடன் மீண்டும் இணைந்தார். அவர் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த 15-ந்தேதி இந்தியாவில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு சென்ற கோலி, பயிற்சிகளை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து 19-ந்தேதி லண்டன் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை லோன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தர வேண்டும் என கூறியுள்ளார்.
    • மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் சின்னையா (வயது 46). இவர் திருப்பூர் பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் கிரேஸ் ஹெல்ப் சென்டர் என்ற நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மூலம் வங்கி லோன் மற்றும் கறவை மாடுகள் வாங்க கடன் பெற்று தருவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இதையடுத்து பெருமாநல்லூர், அவிநாசி, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்,பொது மக்கள் கடன் பெற்று தரும்படி சின்னையாவிடம் கேட்டுக்கொண்டனர். அப்போது அவர் ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை லோன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தர வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி பொதுமக்கள் சிலர் பணம் கொடுத்துள்ளனர்.

    இதேபோல் வங்கியில் வேலை , மத்திய மாநில அரசு அலுவலக வேலை , ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறியும் ஏராளமானோரிடம் பணம் பெற்று ள்ளார்.ஆனால் பணத்தை பெற்று கொண்ட சின்னையா யாருக்கும் லோன் மற்றும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணம் கொடுத்தவர்கள் சென்று கேட்டபோது அவர் முறையான பதில் கூறாமல் திடீரென தலை மறைவாகி விட்டார்.

    இந்நிலையில் லோன் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்து 50ஆயிரத்தை வாங்கி கொண்டு மோசடி செய்த சின்னையா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட 6 பேர் திருப்பூர் பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த சின்னையாவை கைது செய்தனர்.

    விசாரணையில் இவர் இதேபோல் ஏராளமானவரிடம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • கலைஞரின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பது பெருமைக்குரியது.
    • தமிழக மக்களே தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பார்க் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளான இன்று கலைஞரின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பது பெருமைக்குரியது. பேராசிரியர் அன்பழகன் மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு செய்த சாதனைகளை தி.மு.க.வினர் மட்டுமல்லாது தமிழக மக்களே தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.


    கலைஞரின் ஆட்சியில் கட்டப்பட்ட ஓமந்தூரார் சட்டமன்றம் அ.தி.மு.க.வின் குறுகிய மனப்பான்மையினாலும் , பொறாமை எண்ணத்தாலும் மருத்துவ மனையாக மாற்றப்பட்டதை மக்கள் உணர்வார்கள். டெல்லியில் இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

    இதில் மிச்சாங் புயல் - தென் மாவட்ட மழை பாதிப்புகள் குறித்து முக்கிய கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் முன்வைப்பார். அவர்களும் நல்ல எண்ணத்துடன் நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

    பேரிடர் தொடர்பாக கவர்னர் ஆய்வுக்கூட்டம் குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. பேரிடர் காலம் என்பதால் நல்லதை யார் செய்தாலும் அதனை தி.மு.க., வரவேற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக அணையின் பிரதான நீர்வரத்தான பாம்பாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
    • அணையின் முழு கொள்ளளவான 90 அடியை நெருங்கியுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாக கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. இதனை ஆதாரமாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக அணையின் பிரதான நீர்வரத்தான பாம்பாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதையடுத்து அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்து 10 ஆயிரம் கன அடியை கடந்தது. இதனால் அணையின் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்து தற்போது 86 அடியை எட்டியுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 90 அடியை நெருங்கியுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

    கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவியதால் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முதல் மலைப்பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.

    இருப்பினும் அணை அதன் முழுகொள்ளளவை நெருங்கும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. அதேபோல் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. தற்போது பெய்த மழையில் அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளதால் உடுமலை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • தொடர் மழையால் திருப்பூர் மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
    • அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    உடுமலை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலையும் தொடர்ந்து சாரல் மழை நீடிக்கிறது.

    இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர் மழையால் திருப்பூர் மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

    மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அணையில் இன்று காலை நிலவரப்படி 83.25 அடி தண்ணீர் நிறைந்துள்ளது. அணைக்கு 10194 கன அடி நீர்வரத்து உள்ளது. முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அமராவதி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தண்ணீர் திறக்கப்படும்பட்சத்தில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் விவரம் வருமாறு:-

    மடத்துக்குளம்-45, தாராபுரம்-17, மூலனூர்-5, குண்டடம்-10, உப்பாறு அணை-16, நல்லதங்காள் ஓடை அணை-8, உடுமலை-35, அமராவதி அணை-75, திருமூர்த்தி அணை-56, திருமூர்த்தி அணை ஐ.பி.,-55. மாவட்டம் முழுவதும் மொத்தம் 338.30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    • ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த அணையை நம்பி உள்ளனர்.
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ருத்ராவதி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உப்பாறு அணை உள்ளது. இந்த அணை மூலம் நேரடியாக 6500 ஏக்கரும், மறைமுகமாக 15000 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த அணையை நம்பி உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

    இந்த அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் திறக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள், விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

    இதனை கண்டித்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் நேற்றிரவு உப்பாறு அணையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனே சம்பவ இடத்திற்கு தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 22-ந்தேதி கலெக்டரிடம் பேசி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவி ட்டனர்.

    • உணவு வழங்கிய பின்பு அதற்குரிய இடத்தி்ல் தானாக வந்து நின்றுவிடும்.
    • கேமரா மற்றும் சென்சார் மூலம் குறிப்பிட்ட டேபிளுக்கு சென்று ரோபோ உணவு வழங்கும்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி - திருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சொகுசு உணவகத்தில் உணவு விநியோகிக்கும் பணியில் முதன்முறையாக ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகள், பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சப்ளையர்கள் ஆர்டர் எடுத்து சமையல்காரர்களிடம் வழங்கி விடுகின்றனர்.

    உணவு தயாரானதும் ரோபோவில் உணவு வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அலமாரியில் அந்த உணவு வைக்கப்படுகிறது. பின்னர் உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் டேபிளுக்கு செல்லும் வகையில் ஒவ்வொரு டேபிளுக்கான எண் ரோபோவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள் அமர்ந்திருக்கும் டேபிள் எண்ணை அழுத்தியதும் அங்கு ரோபோ உணவுகளை எடுத்து செல்கிறது.

    பின்னர் ஆர்டர் செய்த உணவை ரோபோவின் அலமாரியில் இருந்து அங்கு இருக்கும் சப்ளையர் அல்லது வாடிக்கையாளர்களே உணவுகளை எடுத்து கொள்ளலாம். உணவு வழங்கிய பின்பு அதற்குரிய இடத்தி்ல் தானாக வந்து நின்றுவிடும்.

    ரோபோ சப்ளை குறித்து உணவகத்தின் மேற்பார்வையாளர் ஒருவர் கூறுகையில்,

    சமையலறையில் இருந்து வாடிக்கையாளர்கள் இருக்கும் இடம் வரை உணவு எடுத்து செல்ல ரோபோ பயன்படுத்த படுகிறது. இதற்காக ரோபோவில் அதற்கு உண்டான ப்ரோக்ராம் சார்ட் மற்றும் எண்கள் கண்டறியும் சேவை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் சென்சார் மூலம் குறிப்பிட்ட டேபிளுக்கு சென்று ரோபோ உணவு வழங்கும். தொடர்ந்து அடுத்த டேபிளுக்கு சென்று விடும். மேலும் பிறந்தநாள், திருமணநாள் போன்ற விசேஷங்கள் சமயத்தில், சம்பந்தப்பட்டவர்கள் எதிர்பாராத வகையில் ரோபோ வாயிலாக கேக்கை அனுப்பி வைத்து அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் ஹேப்பி பர்த்டே என்று பாடும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் குறைந்த நேரத்தில் அதிகளவில் உணவு சப்ளை செய்யப்படுகிறது. இந்த ரோபோவை காண்பதற்காகவே உணவகத்தை தேடி வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக அளவில் வருவதாகவும், குழந்தைகள் இந்த ரோபோவை கண்டு அதிக அளவில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

    • 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • சங்கர், முரளி ஆகிய 2 பேரும் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள பொங்குபாளையம் கிராமம் அய்யம்பாளையம் கோல்டன் அவென்யூ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சுரேஷ் ( வயது 52). சம்பவத்தன்று இவர் காலையில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த சுரேஷ், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.

    உடனே இதுகுறித்து சுரேஷ், பெருமாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கேமராவில் 3 பேரின் உருவம் பதிவாகி இருந்தது.

    அவர்கள் யாரென்று விசாரணை நடத்திய போது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த சங்கர் (42), மற்றும் திருப்பூர் பெரிய கடைவீதி பகுதியை சேர்ந்த முரளி (வயது 27) , நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த மணிமாறன் (35) என்பது தெரியவந்தது. 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கைதான மணிமாறன் பொங்குபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வீடு வீடாக சென்று கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது இவர் அப்பகுதிகளில் உள்ள வீடுகளை கண்காணித்துள்ளார். திருடுவதற்கு ஏற்றவாறு எந்த வீடுகள் பூட்டப்பட்டு இருக்கிறது. அதன் அருகில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா? என நோட்டமிட்டு தனது கூட்டாளிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி சங்கர், முரளி ஆகிய 2 பேரும் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனால் இந்த குற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்த மணிமாறனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×