search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர் மூலம் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்த கும்பல்
    X

    கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர் மூலம் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்த கும்பல்

    • 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • சங்கர், முரளி ஆகிய 2 பேரும் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள பொங்குபாளையம் கிராமம் அய்யம்பாளையம் கோல்டன் அவென்யூ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சுரேஷ் ( வயது 52). சம்பவத்தன்று இவர் காலையில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த சுரேஷ், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.

    உடனே இதுகுறித்து சுரேஷ், பெருமாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கேமராவில் 3 பேரின் உருவம் பதிவாகி இருந்தது.

    அவர்கள் யாரென்று விசாரணை நடத்திய போது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த சங்கர் (42), மற்றும் திருப்பூர் பெரிய கடைவீதி பகுதியை சேர்ந்த முரளி (வயது 27) , நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த மணிமாறன் (35) என்பது தெரியவந்தது. 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கைதான மணிமாறன் பொங்குபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வீடு வீடாக சென்று கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது இவர் அப்பகுதிகளில் உள்ள வீடுகளை கண்காணித்துள்ளார். திருடுவதற்கு ஏற்றவாறு எந்த வீடுகள் பூட்டப்பட்டு இருக்கிறது. அதன் அருகில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா? என நோட்டமிட்டு தனது கூட்டாளிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி சங்கர், முரளி ஆகிய 2 பேரும் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனால் இந்த குற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்த மணிமாறனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×