என் மலர்tooltip icon

    திருப்பூர்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி வருகிற 19-ந்தேதி சென்னை வருகிறார்.
    • திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள தினத்தன்று பொதுக்கூட்டம் நடக்க உள்ளதாக மாவட்ட பாரதிய ஜனதா தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

    திருப்பூர்:

    சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகிற 19-ந்தேதி சென்னை வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திருப்பூர் செல்லும் அவர் பா.ஜ.க., சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ., மருத்துவமனையை திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்த பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள தினத்தன்று பொதுக்கூட்டம் நடக்க உள்ளதாக மாவட்ட பாரதிய ஜனதா தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

    • பிரதமர் மோடியை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழை வழங்கினார்.
    • பொதுக்கூட்டம் வருகிற 19-ந்தேதி திருப்பூரில் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ந்தேதி திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் , பிறகு திருச்சி புதிய விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்ததுடன், பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

    இந்தநிலையில், தமிழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க நேரில் வருமாறு பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் மோடியை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழை வழங்கினார். பிரதமர் மோடி வருகை தருவதாக உறுதியளித்ததாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறியிருந்தார்.

    இந்தநிலையில், சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகிற 19-ந்தேதி சென்னை வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திருப்பூர் செல்கிறார்.

    திருப்பூரில் பா.ஜ.க., சார்பில் நடத்தும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த மருத்துவ மனையை திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


    பிரதமர் மோடி திருப்பூர் வருகை தர உள்ளதையடுத்து ஏற்பாடுகள் குறித்த அவசர ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாயிண்ட் மணி, மாநில செயலாளர் மலர்கொடி, செயற்குழு உறுப்பினர் நாச்சிமுத்து மற்றும் மண்டல தலைவர்கள், மாநில, மாவட்ட, அணி பிரிவு தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி கொங்கு மண்டலத்தில் பா.ஜனதாவின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, அந்தியூர், பவானி, கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதிகளில் இருந்து கட்சியினர் வந்து செல்லும் வகையில் பொதுக்கூட்ட இடம் தேர்வு பணிகளில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து மாவட்ட தலைவர் செந்தில்வேல் கூறும்போது, பொதுக்கூட்டம் வருகிற 19-ந்தேதி திருப்பூரில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். பொதுக்கூட்டம் நடத்த திருப்பூர் பி.என்.சாலை, ஆண்டிபாளையம், மாதப்பூர், பல்லடம் ஆகிய 4 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, ஒரு இடம் இறுதி செய்யப்படும். அதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ளோம். பிரதமர் வருகை தரும் நேரம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில், நாளை 7-ந்தேதி சிறுபூலுவபட்டி அம்மன் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடம் முடிவு செய்யப்பட்டு அதற்கேற்ப நிகழ்ச்சிகள் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படவுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி ஒரே மாதத்தில் 2-வது முறையாக தமிழகம் வருகை தர உள்ளதும், திருப்பூரில் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதும், பா.ஜ.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • போலி இன்ஸ்டாகிராம் முகவரியில் பெண் போல பேசி துன்புறுத்தினால் அப்படித்தான் அடிப்போம் என கோபி மற்றும் நண்பர்கள் கூறியுள்ளனர்.
    • அவிநாசி போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து, ஜெயராம், பாஸ்கர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அவிநாசி:

    திருப்பூர் வாஷிங்டன் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் கோபி (வயது 24). இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவா (24) மற்றும் நான்கு நண்பர்களுடன் அவிநாசியை அடுத்து பழங்கரை அருகே உள்ள கள்ளுமடை குட்டை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று மது அருந்தி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, இவர்களின் நண்பர்களான திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்துள்ள ஈட்டிவீரம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராம் (22), பாஸ்கரன் (22) மற்றும் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகிய மூவரும் அங்கு வந்து மது அருந்தியுள்ளனர்.

    இந்நிலையில், கோபியின் வேறொரு நண்பரான வசந்தகுமார் என்பவருக்கு, அவர்களோடு மது அருந்திக் கொண்டிருந்த 18 வயது சிறுவன் கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் போலியாக பெண் போன்ற முகவரியில் இருந்து பேசி துன்புறுத்தி வந்தது குறித்து தெரியவந்தது. முன்னதாக வசந்த குமாரும் அவரது மற்றொரு நண்பரான ஜெகதீஸ் என்பவரும் சேர்ந்து புத்தாண்டிற்கு முந்தைய நாள் லட்சுமி கார்டன் பகுதியில் உள்ள 18 வயது சிறுவன் வீட்டிற்கு சென்று சிறுவனின் கன்னத்தில் அறைந்துள்ளனர். இது குறித்து 18 வயது சிறுவனும் அவருடன் வந்த ஜெயராம் மற்றும் பாஸ்கரும், கோபி மற்றும் நண்பர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு போலி இன்ஸ்டாகிராம் முகவரியில் பெண் போல பேசி துன்புறுத்தினால் அப்படித்தான் அடிப்போம் என கோபி மற்றும் நண்பர்கள் கூறியுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த ஜெயராம், அதற்கு தான் கொல்ல வந்துள்ளோம் என சொல்லிக்கொண்டே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபியின் இடது மார்புக்கு மேல் குத்தியுள்ளார். அதே சமயத்தில், பாஸ்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவாவின் முதுகில் வலது பக்கமும், 18 வயது சிறுவன் சிவாவின் வலது பின் தோள்பட்டையிலும் குத்தியுள்ளனர். இதனால், வலி தாங்க முடியாமல் அவர்கள் கூச்சலிட்டதை அடுத்து 18 வயது சிறுவன் உட்பட மூவரும் தப்பியோடியுள்ளனர்.

    காயம்பட்ட கோபி மற்றும் சிவாவை அவர்களது நண்பர்கள் உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து, ஜெயராம், பாஸ்கர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 18 வயது சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறுவர் சீர்திருத்த ப்பள்ளியில் சேர்த்தனர். அவர்களிடமிருந்து கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

    • புதிய பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 53 பஸ்கள் நிறுத்துவதற்கு வசதிகள் உள்ளது.
    • 22 கடைகள், 2 உணவகங்கள், ஒரு தாய்மார்கள் பாலூட்டும் அறை, 2 பராமரிப்பு அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் முடிவு பெற்ற பல்வேறு திட்டப்பணிகளின் திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    அதன்படி ரூ.2½ கோடியில் புதிதாக கட்டப்பட்ட திருப்பூர் மாநகராட்சியின் 4-வது மண்டல அலுவலகம், ரூ.2 கோடியே 61 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி வளாகத்தில் உள்ள நூலகம், ரூ.30 கோடியே 6 லட்சம் மதிப்பில் பொலிவுபடுத்தப்பட்ட புதிய பஸ் நிலையம், 8 நகர்நல மையங்கள், ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பில் இடுவாய் சின்னக்காளிபாளையத்தில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் பூங்கா ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    திருப்பூரில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, கலெக்டர் கிறிஸ்துராஜ், செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்தநிலையில் பொலிவுபடுத்தப்பட்ட திருப்பூர் புதிய பஸ் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பெயர் வைக்க திருப்பூர் மாநகராட்சி சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 53 பஸ்கள் நிறுத்துவதற்கு வசதிகள் உள்ளது. மேலும் 782 இரு சக்கர வாகனங்கள், 23 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 22 கடைகள், 2 உணவகங்கள், ஒரு தாய்மார்கள் பாலூட்டும் அறை, 2 பராமரிப்பு அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளது.

    ஆர்.ஓ. பிளான்ட் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் கண்காணிப்பு கேமரா வசதி, ரூப் டாப் சோலார்-30 கிலோ வாட்ஸ், லிப்ட் வசதி 3, எஸ்கலேட்டர் 3, ஸ்கை வால்க் (என்ட்ரி-எக்சிட்)1 ஆகிய நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆண்கள் கழிப்பிடம், 4 பெண்கள் கழிப்பிடம், மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம் 1 ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

    • கைதான 4 பேரும் எவ்வளவு நகை, பணம் மோசடி செய்துள்ளனர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • ரிசார்ட் வாடகையாக ஒரு நாளைக்கு ரூ.40ஆயிரம் செலுத்தியுள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சுரேஷ்பாண்டியன் (வயது 32). இவர் திருப்பூர் கரட்டாங்காடு, ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது அடகு கடையில் பொள்ளாச்சியை சேர்ந்த அருண்குமார் (25), திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (26) ஆகியோர் ஊழியராக வேலை செய்து வந்தனர். அருண்குமாரின் நண்பர் பொள்ளாச்சியை சேர்ந்த பிரதீப் (27).

    சுரேஷ்பாண்டியன் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அடகு கடையில் உள்ள இருப்பு நகைகள், அடகு விவரங்களை சரிபார்ப்பது வழக்கம். அதன்படி கரட்டாங்காடு நகை அடகு கடையில் நகை இருப்பு விவரங்களை சுரேஷ்பாண்டியன் சரிபார்த்தார். இதில் அடகு வைத்த ரசீதில் குறிப்பிட்ட பணத்தை விட நகை இருப்பு குறைவாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கடை ஊழியர்களிடம் விசாரித்துள்ளார். இதில் அவர்கள் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டது. இவ்வாறு கடந்த 2020-ம் ஆண்டு முதல் ரூ.80 லட்சத்தை முறைகேடு செய்தது தெரியவந்தது.

    இது குறித்து சுரேஷ் பாண்டியன் திருப்பூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். துணை போலீஸ் கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பத்ரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், காளிமுத்து மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் அருண்குமார், சக்திவேல், பிரதீப் ஆகிய 3 பேரை தெற்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நகை அடகு கடையில் வாடிக்கையாளர்கள் நகையை அடகு வைத்தது போல் போலியான ரசீது தயாரித்து நகையை வைக்காமலேயே பணத்தை மட்டும் எடுத்து செலவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் சுரேஷ் பாண்டியன் கணக்கு பார்க்கும்போது மட்டும், ரசீதுக்கு ஏற்ப நகைகளை, மற்றொரு கிளையான ராக்கியாபாளையம் நகை அடகு கடையில் இருந்து கொண்டு வந்து சரிகட்டியுள்ளனர். மேலும் பிரதீப்பும் கொஞ்சம் நகையை கொடுத்து மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார். இவ்வாறு 2020-ம் ஆண்டு முதல் மொத்தம் ரூ.80 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோபிநாத் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர் சுரேஷ்பாண்டியனுக்கு சொந்தமான நல்லூர் கிளை நகை அடகுக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். அவர் 2.50 கிலோ எடையுள்ள 304 பவுன் நகைகளை இங்கிருந்து வேறு ஒரு நகைக்கடையில் அடகு வைத்து ரூ.1.20 கோடி வரை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. கைதான 4 பேரும் நகை மோசடி பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். கடந்த தீபாவளி அன்று 4 பேரும் கேரளாவுக்கு சென்றதுடன் அங்குள்ள ரிசார்ட்டில் அழகிகளுடன் தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இதற்காக ஒவ்வொரு அழகிகளுக்கும் தினசரி ரூ.20ஆயிரம் கொடுத்துள்ளனர். ரிசார்ட் வாடகையாக ஒரு நாளைக்கு ரூ.40ஆயிரம் செலுத்தியுள்ளனர். மேலும் சொகுசு காரில் உல்லாசமாக வலம் வந்துள்ளனர். கேரளாவில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் அழகிகளுடன் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். கைதான ஒருவர் தனது கள்ளக்காதலிக்கு சொந்த செலவில் மருந்து கடை ஒன்றை வைத்து கொடுத்துள்ளார்.

    கைதான கோபிநாத் ஆடிட்டர்கள் நகைகடைக்கு ஆய்வு செய்ய வருவதை அறிந்ததும் மோசடி செய்த நகைகளுக்கு பதில் சேலத்தில் உள்ள தனது நண்பரின் கடையில் இருந்து நகைகளை வாங்கி கொண்டு வந்து வைத்து கணக்கு காட்டியுள்ளார். இப்படியாக தொடர்ந்து கோபிநாத் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்தநிலையில் நகைகளை அடகு வைத்த வாடி க்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்களது நகைகளை மீட்டு கொடுக்குமாறு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். எனவே கைதான 4 பேரும் எவ்வளவு நகை, பணம் மோசடி செய்துள்ளனர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் தனியார் நூல் மில் உள்ளது. இன்று காலை 10 மணியளவில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

    தீ மளமளவென பற்றி எரியவே, தொழிலாளர்கள் ஆலையில் இருந்து உடனே வெளியேறினர். மேலும் இது குறித்து உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து 15 தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.


    தீ விபத்தில் ஆலையில் இருந்த எந்திரங்கள், குடோனில் வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள் என ரூ.4 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நூற்பாலையில் தீ பற்றி எரிவதையும், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைப்பதையும் படத்தில் காணலாம்.

    • தென்னை மரங்களை வெட்டுவதற்கு மனமில்லாத சண்முகசுந்தரம் தனக்கு சொந்தமான மற்றொரு தோட்டத்தில் நடுவதற்கு திட்டமிட்டார்.
    • 35 மரங்களில் கடந்த மாதம் 25 மரங்கள் கொண்டு வந்து இடம் மாற்றம் செய்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம் (வயது 54). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதியதாக வீடு கட்டும் பணியை தொடங்க நினைத்தார். அப்போது அந்த இடத்தில் சுமார் 50 தென்னை மரங்களில் காய்கள் காய்த்து இருந்தது.

    அதனை வெட்டுவதற்கு மனமில்லாத சண்முகசுந்தரம் தனக்கு சொந்தமான மற்றொரு தோட்டத்தில் அந்த தென்னை மரங்களை நடுவதற்கு திட்டமிட்டார். இதையடுத்து மரங்களில் காய்த்து இருந்த தேங்காய்களை பறித்து விற்பனை செய்தார். பின்னர் 50 தென்னை மரங்களில் 35 தென்னை மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து, கிரேன் மூலம் லாரியில் ஏற்றி சுமார் ஒரு கி.மீ. தூரம் உள்ள மற்றொரு தோட்டத்தில் நடவு செய்தார். 

    இதுகுறித்து விவசாயி சண்முகசுந்தரம் கூறுகையில், தனது தந்தை காலத்தில் வைக்கப்பட்ட இந்த தென்னை மரங்களில் இன்று வரை நல்ல முறையில் காய்கள் காய்த்து இளநீர், தேங்காய், கொப்பரை தேங்காய், மட்டை மற்றும் ஓலை என பல்வேறு வகைகளில் பயன்பட்டு வருகிறது. இந்த மரங்களை வெட்டி விற்பனை செய்தால் மீண்டும் இந்த மாதிரி மரம் வளர்க்க 20 வருடம் ஆகும். எனவே என் தந்தை கந்தசாமி நினைவாக இந்த மரங்களை இவ்வாறு இடம் மாற்றி மீண்டும் புத்துயிர் கொடுத்து வளர்த்து வருகிறேன்.

    இந்த 35 மரங்களில் கடந்த மாதம் 25 மரங்கள் கொண்டு வந்து இடம் மாற்றம் செய்தேன். அதில் 23 மரங்கள் தற்போது மீண்டும் காய்கள் காய்க்க ஆரம்பித்துள்ளது. இரண்டு மரங்கள் மட்டும் பட்டுப்போனது. இன்று 10 மரங்கள் கொண்டு வந்து மாற்றி உள்ளோம். இவை அனைத்தும் நல்ல முறையில் உள்ளது. குறிப்பாக இடமாற்றம் செய்யப்பட்ட 35 மரங்களில் 33 மரங்கள் நல்ல முறையில் வளர்ந்துள்ளது. காய்கள் காய்க்கவும் தொடங்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 25வது நாளை கொண்டாடும் வகையில் கேக் ஒன்றை ரசிகர்களுடன் சேர்ந்து வெட்டி அதனை குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.
    • தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடுகிறது என்றால் அது 100 நாட்களுக்கு சமம்.

    திருப்பூர்:

    நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்து வெளியான கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் 25 நாட்களாக திரையரங்கில் ஓடி வருகிறது.

    இதனை கொண்டாடும் வகையில் திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் 25-வது நாள் வெற்றி விழாவில் நடிகர் சதீஷ் கலந்துகொண்டு திரையரங்கில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

    இதனைத்தொடர்ந்து 25வது நாளை கொண்டாடும் வகையில் கேக் ஒன்றை ரசிகர்களுடன் சேர்ந்து வெட்டி அதனை குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.

    தொடர்ந்து மறைந்த நடிகரும் தே.மு.தி.க., நிறுவனத்தலைவருமான விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குறும்படம் ஒன்று திரையிடப்பட்டு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதையடுத்து நடிகர் சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடுகிறது என்றால் அது 100 நாட்களுக்கு சமம் . அந்த வகையில் கான்ஜுரிங் கண்ணப்பன் வெற்றிகரமாக ஓடி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன். மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் மரியாதை செய்வது என்பது அது நடிகர் சங்கத்திற்கு பெருமை. நடிகர் சங்கத்தின் ஒரு அடையாளமே விஜயகாந்து தான். இவ்வாறு அவர் கூறினார்.

    • நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
    • கடந்த மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.

    இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    அதன்படி நடப்பு மாதத்திற்கான (ஜனவரி) நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தனர். இதில் நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளனர். இதனால் திருப்பூர் ஜவுளி தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர் ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம்பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க்கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு விதமான பொங்கல் பானைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
    • பொங்கல் தொகுப்புடன் சேர்த்து மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண்பானை வழங்க முன்வர வேண்டும்.

    உடுமலை:

    தமிழா்களின் பாரம்பரியம்,பண்பாட்டை வெளிப்படுத்தும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது அரிசி, வெல்லம், நெய் சேர்த்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் படைத்து கொண்டாடுவது தமிழா்களின் மரபாகும்.

    முன்னோர்கள் காலத்தில் இருந்தே புதிய பானையில் பொங்கலிடுவது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் மண்பானைகள் தயாரிக்கும் பணி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு விதமான பொங்கல் பானைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

    மண் பானையில் செய்யப்படும் பொங்கல் சத்தானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்பதால் மண்பானைகளும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதனால் வியாபாரம் அதிகரிக்கும் என்பதால் மண்பானை உற்பத்தி செய்வதில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான கரும்பு, பச்சரிசி, சக்கரை உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கி வருகின்றது. இந்நிலையில் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண்பானை வழங்க முன்வர வேண்டும். இதனால் மண்பானை தொழில் மேம்படும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • என்னோடு பயணிப்பவர்களுக்கு காலமெல்லாம் நன்றிக்கடனுடன் இருப்பேன்.
    • பொதுவாழ்வில் இருக்கும் அமைச்சர் உதயநிதி பொறுப்பாக பேச வேண்டும்.

    ல்லடம்:

    பல்லடம் அருகே திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்கட்சித்துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கொங்கு மண்டல அதிமுக கோட்டையை மீட்கவே இந்த கூட்டம். அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்காக உருவாக்கினார். தொண்டர்களின் உரிமையை காக்கும் இயக்குமாக இருக்க வேண்டும் என்று, பல்வேறு சட்ட விதிகளை அவருடைய காலத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தினார். மிட்டா, மிராசுதாரர்கள் தான் பதவிக்கு வர முடியும். இனி தங்கமணி, வேலுமணி போன்றவர்கள் தான் அந்த பதவிக்கு வரமுடியும். ஜெயலலிதா 2 முறையும், சசிகலா 1 முறையும் என்னை முதலமைச்சர் ஆக்கினார்கள். சசிகலா பாவம். இன்றைக்கு சின்ன குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்துகொண்டிருக்கிறார். ராஜமாதாவாக இருக்க வேண்டிய சசிகலா, இந்த நிலைமைக்கு ஆளாக்கிய நம்பிக்கை துரோகி யார்? என்னோடு பயணிப்பவர்களுக்கு காலமெல்லாம் நன்றிக்கடனுடன் இருப்பேன். ஒன்றரை கோடி தொண்டர்களை, இரண்டரை கோடி தொண்டர்களாக மாற்றுவோம்.



    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    பழனிசாமி நடத்திய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால், அவர்களுக்கும் எந்த பயனும் கிடையாது. மக்களுக்கும் பயன் கிடையாது. 10 ஆண்டு காலம் இந்தியாவை வலிமையாக மாற்றியுள்ள பிரதமர் மோடிக்கு ஆதரவு தருவது தான் எங்கள் நிலைப்பாடு. கழகத்தின் சட்ட விதிகள் காற்றில் பறந்துள்ளன. ஜன.19-ம் தேதி வரும் நீதிமன்றத்தீர்ப்பு, முக்கியமானதாக இருக்கும். அதன் மூலம் பழனிசாமிக்கு ஒரு முடிவு வரும். மக்கள் அளிக்கும் தீர்ப்பு தான் முக்கியமானதாக கருதுகிறோம். நானும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். பொதுவாழ்வில் இருக்கும் அமைச்சர் உதயநிதி பொறுப்பாக பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யானை அங்கிருந்தவர்களுக்கு எந்த தொந்தரவும் அளிக்காமல் வனப்பகுதியில் சென்று மறைந்தது.
    • யானைகள் அருகில் சென்று புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்வதற்கு 9 /6 செக்போஸ்ட் வழியாக மலைப்பாதை செல்கிறது. கேரள மாநில எல்லையில் உள்ள மறையூர், காந்தளூர் மற்றும் மலையடிவார கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக காய்கறி, பால், முட்டை, மற்றும் கட்டுமான பொருட்கள், கறிக்கோழி, உள்ளிட்டவற்றை வாங்க இந்த வழியாக உடுமலை நகரத்திற்கு வந்து செல்கின்றனர்.

    உடுமலை- மூணாறு வழித்தடத்தில் ஏழுமலையான் கோவில், காமனூத்து பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. சமீப காலமாக வனப்பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்திருப்பதால் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணையை நோக்கி படையெடுத்து வருகின்றன.

    கடந்த ஒரு வாரமாக ஐந்துக்கும் மேற்பட்ட குட்டிகளுடன் 15 காட்டு யானைகள் மலைவழிப் பாதையில் சாலையோரம் முகாமிட்டுள்ளன. கூட்டமாக இருக்கும் காட்டு யானைகள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்யாமல் பாதையை விட்டு ஓரமாக இறங்கி வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன.

    இந்நிலையில் ஒற்றை ஆண் யானை ஒன்று சாலை ஓரமாக உலா வருகிறது. மேலும் உடுமலை தமிழக கேரள எல்லையில் உள்ள சின்னாறு சோதனை சாவடி அருகே வந்து நின்றது. அந்த நேரத்தில் கேரளாவில் இருந்து தமிழக நோக்கி கனரக வாகனம் வந்து கொண்டிருந்தது. பனி மூட்டம் காரணமாக சோதனை சாவடி அருகே காட்டு யானை நிற்பது தெரியாமல் வாகன ஓட்டி முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வந்தார்.

    சரக்கு வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்டவுடன் காட்டு யானை மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. சோதனை சாவடியை முற்றுகை இட்ட காட்டு யானையை கண்டு வனத்துறை ஊழியர்களும் வாகன ஓட்டிகளும் பீதி அடைந்தனர். இருப்பினும் நல்வாய்ப்பாக யானை அங்கிருந்தவர்களுக்கு எந்த தொந்தரவும் அளிக்காமல் வனப்பகுதியில் சென்று மறைந்தது.

    காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் வாகன ஓட்டிகள் உடுமலையிலிருந்து மூணார் செல்லும் போதும் மூணாறில் இருந்து உடுமலை செல்லும் போதும் யானையை படம் பிடிப்பதற்காக நடுவழியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது, "செல்பி" என்ற பெயரில் யானைகள் அருகில் சென்று புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    ×