search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்ஸ்டாகிராம் மூலம் தொல்லை செய்ததால் மோதல்:  திருப்பூரில் நண்பர்களை கத்தியால் குத்திய 2பேர் கைது
    X

    இன்ஸ்டாகிராம் மூலம் தொல்லை செய்ததால் மோதல்: திருப்பூரில் நண்பர்களை கத்தியால் குத்திய 2பேர் கைது

    • போலி இன்ஸ்டாகிராம் முகவரியில் பெண் போல பேசி துன்புறுத்தினால் அப்படித்தான் அடிப்போம் என கோபி மற்றும் நண்பர்கள் கூறியுள்ளனர்.
    • அவிநாசி போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து, ஜெயராம், பாஸ்கர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அவிநாசி:

    திருப்பூர் வாஷிங்டன் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் கோபி (வயது 24). இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவா (24) மற்றும் நான்கு நண்பர்களுடன் அவிநாசியை அடுத்து பழங்கரை அருகே உள்ள கள்ளுமடை குட்டை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று மது அருந்தி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, இவர்களின் நண்பர்களான திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்துள்ள ஈட்டிவீரம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராம் (22), பாஸ்கரன் (22) மற்றும் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகிய மூவரும் அங்கு வந்து மது அருந்தியுள்ளனர்.

    இந்நிலையில், கோபியின் வேறொரு நண்பரான வசந்தகுமார் என்பவருக்கு, அவர்களோடு மது அருந்திக் கொண்டிருந்த 18 வயது சிறுவன் கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் போலியாக பெண் போன்ற முகவரியில் இருந்து பேசி துன்புறுத்தி வந்தது குறித்து தெரியவந்தது. முன்னதாக வசந்த குமாரும் அவரது மற்றொரு நண்பரான ஜெகதீஸ் என்பவரும் சேர்ந்து புத்தாண்டிற்கு முந்தைய நாள் லட்சுமி கார்டன் பகுதியில் உள்ள 18 வயது சிறுவன் வீட்டிற்கு சென்று சிறுவனின் கன்னத்தில் அறைந்துள்ளனர். இது குறித்து 18 வயது சிறுவனும் அவருடன் வந்த ஜெயராம் மற்றும் பாஸ்கரும், கோபி மற்றும் நண்பர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு போலி இன்ஸ்டாகிராம் முகவரியில் பெண் போல பேசி துன்புறுத்தினால் அப்படித்தான் அடிப்போம் என கோபி மற்றும் நண்பர்கள் கூறியுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த ஜெயராம், அதற்கு தான் கொல்ல வந்துள்ளோம் என சொல்லிக்கொண்டே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபியின் இடது மார்புக்கு மேல் குத்தியுள்ளார். அதே சமயத்தில், பாஸ்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவாவின் முதுகில் வலது பக்கமும், 18 வயது சிறுவன் சிவாவின் வலது பின் தோள்பட்டையிலும் குத்தியுள்ளனர். இதனால், வலி தாங்க முடியாமல் அவர்கள் கூச்சலிட்டதை அடுத்து 18 வயது சிறுவன் உட்பட மூவரும் தப்பியோடியுள்ளனர்.

    காயம்பட்ட கோபி மற்றும் சிவாவை அவர்களது நண்பர்கள் உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து, ஜெயராம், பாஸ்கர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 18 வயது சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறுவர் சீர்திருத்த ப்பள்ளியில் சேர்த்தனர். அவர்களிடமிருந்து கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×