search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொலிவுபடுத்தப்பட்ட திருப்பூர் புதிய பஸ் நிலையம் திறப்பு: முதலமைச்சர் திறந்து வைத்தார்
    X

    பொலிவுபடுத்தப்பட்ட திருப்பூர் புதிய பஸ் நிலையம் திறப்பு: முதலமைச்சர் திறந்து வைத்தார்

    • புதிய பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 53 பஸ்கள் நிறுத்துவதற்கு வசதிகள் உள்ளது.
    • 22 கடைகள், 2 உணவகங்கள், ஒரு தாய்மார்கள் பாலூட்டும் அறை, 2 பராமரிப்பு அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் முடிவு பெற்ற பல்வேறு திட்டப்பணிகளின் திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    அதன்படி ரூ.2½ கோடியில் புதிதாக கட்டப்பட்ட திருப்பூர் மாநகராட்சியின் 4-வது மண்டல அலுவலகம், ரூ.2 கோடியே 61 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி வளாகத்தில் உள்ள நூலகம், ரூ.30 கோடியே 6 லட்சம் மதிப்பில் பொலிவுபடுத்தப்பட்ட புதிய பஸ் நிலையம், 8 நகர்நல மையங்கள், ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பில் இடுவாய் சின்னக்காளிபாளையத்தில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் பூங்கா ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    திருப்பூரில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, கலெக்டர் கிறிஸ்துராஜ், செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்தநிலையில் பொலிவுபடுத்தப்பட்ட திருப்பூர் புதிய பஸ் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பெயர் வைக்க திருப்பூர் மாநகராட்சி சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 53 பஸ்கள் நிறுத்துவதற்கு வசதிகள் உள்ளது. மேலும் 782 இரு சக்கர வாகனங்கள், 23 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 22 கடைகள், 2 உணவகங்கள், ஒரு தாய்மார்கள் பாலூட்டும் அறை, 2 பராமரிப்பு அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளது.

    ஆர்.ஓ. பிளான்ட் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் கண்காணிப்பு கேமரா வசதி, ரூப் டாப் சோலார்-30 கிலோ வாட்ஸ், லிப்ட் வசதி 3, எஸ்கலேட்டர் 3, ஸ்கை வால்க் (என்ட்ரி-எக்சிட்)1 ஆகிய நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆண்கள் கழிப்பிடம், 4 பெண்கள் கழிப்பிடம், மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம் 1 ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×