என் மலர்
திருப்பூர்
- நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.
- பல்லாங்குழி, தாயம், பரமபதம் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வளர்மதி பாலம் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது. 3 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் 2 நாட்கள் மாலை நேரத்தில் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .
அதனை தொடர்ந்து 3-வது நாளான இன்று திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளை சேர்ந்த 1000 பெண்கள் கலந்து கொண்டு வைக்கக்கூடிய சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். நொய்யல் நதிக்கரை யோரம் அடுப்புகளை பற்ற வைத்து பொங்கலிட்டனர். பால் பொங்கும் போது குலவையிட்டனர்.

இதைத்தொடர்ந்து மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பரதநாட்டியம், சிலம்பம், பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிகளும், குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களான நொண்டி, பல்லாங்குழி, தாயம், பரமபதம் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றது.
மேலும் கேரம், செஸ், கைகளில் மெகந்தி வரைதல் , சலங்கையாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகரை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் என பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் நொய்யல் பகுதியானது பொதுமக்களின் ஆட்டம் பாட்டத்தால் களை கட்டியது. சமத்துவ பொங்கல் தொடக்க விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார், மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உள்ளிட்டோர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டு பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தனர்.
- வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
- காதர்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு உள்ளது.
திருப்பூர்:
பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் மதுரை. தேனி, கிருஷ்ணகிரி, திருச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சகணக்கான மக்கள் திருப்பூரிலேயே தங்கி இருந்து பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.
இதுதவிர திருப்பூரில் உள்ள உணவகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளை பெரும்பாலும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களே நடத்தி வருகிறார்கள். இவ்வாறு திருப்பூரில் தங்கி பணியாற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பின்னலாடை நிறுவனங்களுக்கு கடந்த 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். இதனால் திருப்பூர் பிரதான சாலைகளான திருப்பூர் குமரன் சாலை, காதர் பேட்டை, அரிசி கடை வீதி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் இன்று குறைந்து காணப்பட்டது.
அதே போல் பின்னலாடை நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள கொங்கு மெயின் ரோடு, சிட்கோ உள்ளிட்ட பகுதிகளிலும், சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனைக்கு பெயர்போன காதர்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியானது வெறிச்சோடி காணப்படுகிறது. விடுமுறை முடிந்து பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த வார இறுதிநாளான 21ந்தேதிக்கு பின்னரே திருப்பூர் திரும்புவார்கள். அதன்பிறகே திருப்பூரின் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபாடு நடத்துவதற்கு ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.
- டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் பொங்குபாளையம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபாடு நடத்துவதற்கு ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து கந்தசாமி அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதையடுத்து அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து இன்று கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மாரியம்மன் கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
இதையொட்டி அங்கு டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் விசாலாட்சி தலைமையில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
- பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர்:
சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 92-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பூர் ரெயில் நிலையம் அருகே நினைவு மண்டபத்தில் உள்ள குமரன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் விசாலாட்சி தலைமையில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவருமான பாரி கணபதி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா, மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன், மாவட்ட மாணவரணி செயலாளர் விஜய், திருப்பூர் குமரன் அறக்கட்டளை நிர்வாகி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேப்போல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
- ரஜினிகாந்த் வரலாற்றை பேசி இருக்கிறார்.
- விஜயகாந்த்திற்கு மணி மண்டபம் அமைக்க அவரது குடும்பத்தினர் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
திருப்பூர்:
சென்னையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கருணாநிதியால் உயர்ந்தவர்தான் எம்.ஜி.ஆர். என்று நடிகர் ரஜினிகாந்த பேசியது வருத்தம் அளிப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று இது தொடர்பாக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறும் போது,

திரை உலகினர் நடத்திய கலைஞருக்கான பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதில் தவறு இல்லை. வரலாற்றை பேசி இருக்கிறார். அது தவறாக தெரியும் என்றால் அவர்களுடைய மனசாட்சியை பொருத்தது. மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்திற்கு மணி மண்டபம் அமைக்க அவரது குடும்பத்தினர் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த கோரிக்கை முதலமைச்சரின் கவனத்தில் உள்ளது என்றார்.
- கடந்த 2 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
- வனப்பகுதியில் பெய்த மழையால் மத்தள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் மழைக்காலங்களில் நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியும் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த மாதம் 20-ந்தேதி அணை அதன் முழு கொள்ளளவை நெருங்கியது. 90 அடி உயரம் கொண்ட அணையின் மொத்த நீர் தேக்க பரப்பளவில் நீர் இருப்பு கடந்த 20 நாட்களாக 89 அடிக்கும் மேலாக நீடித்து வந்ததால் அணைக்கு வருகின்ற நீர்வரத்து ஷட்டர்கள் வழியாக தொடர்ந்து உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரவு பகலாக அணையில் முகாமிட்டு நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த சூழலில் கடந்த 2 நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதைத்தொடர்ந்து அணையில் உள்ள ஷட்டர்கள், பிரதான கால்வாய் மற்றும் 9 கண் மதகுகளில் 6 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்தால் கூடுதலாக தண்ணீர் திறப்பதற்கும் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
இதனால் திருப்பூர், கரூர் மாவட்ட அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.92 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 711 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 963 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அமராவதி அணைப்பகுதியில் இன்று காலை 6 மணி நிலவரப்படி 11.8 செ.மீ., மழையும், திருமூர்த்தி அணைப்பகுதியில் 10.3 செ.மீ., மழையும் பெய்துள்ளது.
உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குலிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்டவை நீர் ஆதாரமாக உள்ளது.
கடந்த 2 நாட்களாக பஞ்சலிங்க அருவியின் நீர் ஆதாரங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி கொட்டி வருகிறது. அந்த தண்ணீர் அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை சென்றடைகிறது.
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் மத்தள ஆறு உற்பத்தி ஆகிறது. இந்த ஆறானது நல்லாறு, பாலாறு உள்ளிட்ட துணை ஆறுகள், ஓடைகளுடன் இணைந்து இறுதியில் கேரள மாநிலத்தை சென்று அடைகிறது. இந்த நெடுந்தூர பயணத்தில் ஏராளமான கிராமங்களின் குடிநீர் தேவை மற்றும் நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தும் பணியை செய்து வருகிறது.
இந்தநிலையில் வனப்பகுதியில் பெய்த மழையால் மத்தள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அடிவாரத்தை அடைந்த காட்டாற்று வெள்ளமானது ஆற்றின் 2 கரைகளையும் தழுவியவாறு சென்றது. அப்போது ரெட்டிபாளையம்-பொன்னாலம்மன் சோலை சாலையை அடித்து சென்றது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும் அமராவதி அணையின் பிரதான நீராதாரத்தில் ஒன்றான சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளமானது கட்டளை மாரியம்மன் கோவில் அருகே மலைவாழ் மக்கள் அமைத்திருந்த கடைகளை சூழ்ந்தவாறு செல்கிறது. இதனால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையும், வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
- காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
- ஊத்துக்குளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் சாரல் மழை பெய்தது. இன்று காலை மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சற்று சிரமம் அடைந்தனர். அவர்கள் குடைபிடித்தபடி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மேலும் சிதலமடைந்த சாலைகள் சகதிக்காடாக மாறின. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சற்று சிரமம் அடைந்தனர்.
காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் 800-க்கும் மேற்பட்ட அளவில் உள்ளன. இப்பகுதியில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிகளவில் களங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்தவெளியிலேயே நடைபெற்று வருகிறது. தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்படும்.
இந்தநிலையில் காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. மேலும் நேற்று காலை முதல் தொடர்ந்து அவ்வப்போது விட்டு விட்டு பெய்த லேசான சாரல் மழையால் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே உடைக்கப்பட்டு களங்களில் உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்பாய் மூலம் மூடி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஊத்துக்குளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் இல்லை. இந்நிலையில் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்தது. இந்த சாரல் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. பின்னர் காலை 7 மணி முதல் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் சாலையில் கும்மிருட்டு நிலவியதால் 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க கடும் சிரமப்பட்டனர். மேலும் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். இதனால் காலை நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த வண்ணம் காணப்பட்டது.
- காங்கயத்தில் 80 பஸ்களில் 62 பஸ்களும், தாராபுரத்தல் 76 பஸ்களில் 61 பஸ்களும், உடுமலையில் 94 பஸ்களில் 92 பஸ்களும் இயக்கப்பட்டன.
- திருப்பூர் மண்டலத்திற்குட்பட்ட பழனி-1 பணிமனையில் 47 பஸ்களில் 43 பஸ்களும், பழனி 2ல் 37 பஸ்களில் 26 பஸ்களும் இயக்கப்பட்டன.
திருப்பூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத்தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தன. அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
அதன்படி சி.ஐ.டி.யு. தலைமையிலான கூட்டமைப்பு, அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையிலான கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
திருப்பூர் மாநகரில் இன்று அரசு பஸ்கள் ஓடாது என்று பல இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டன. தொ.மு.ச. தொழிற்சங்க ஓட்டுனர்கள், நடத்துனர்கள் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும் என்று பஸ்களில் நோட்டீஸ் ஒட்டினர். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று பஸ்கள் இயக்கப்படுமா, இயக்கப்படாதா? என்பது தெரியாததால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளானார்கள்.
இதனால் வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் நேற்றிரவு தாங்கள் செல்லக்கூடிய இடங்களுக்கு பயணித்தனர். இதனால் நேற்று இரவு திருப்பூர் மத்திய பஸ் நிலையம், கோவில்வழி பஸ் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல வேண்டியவர்கள் முன்கூட்டியே நேற்று ஊருக்கு புறப்பட்டு சென்றதை காண முடிந்தது.
இந்தநிலையில் பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
அதன்படி இன்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் 90 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. திருப்பூர் பணிமனை 1-ல் மொத்தமுள்ள 88 பஸ்களில் 54 பஸ்கள் இயக்கப்பட்டன. பணிமனை 2-ல் 57 பஸ்களில் 41 பஸ்கள் இயக்கப்பட்டன. பல்லடம் பணிமனையில் இருந்து 70 பஸ்களில் 67 பஸ்களும், காங்கயத்தில் 80 பஸ்களில் 62 பஸ்களும், தாராபுரத்தல் 76 பஸ்களில் 61 பஸ்களும், உடுமலையில் 94 பஸ்களில் 92 பஸ்களும் இயக்கப்பட்டன.
திருப்பூர் மண்டலத்திற்குட்பட்ட பழனி-1 பணிமனையில் 47 பஸ்களில் 43 பஸ்களும், பழனி 2ல் 37 பஸ்களில் 26 பஸ்களும் இயக்கப்பட்டன. திருப்பூர் மண்டலம் முழுவதும் மொத்தம் 549 பஸ்களில் 446 பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 90.36 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது.
- ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதும் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவதுமாக உள்ளது. கடந்த 2 நாட்களாக வனப்பகுதியில் திடீரென சாரல் மழை பெய்தது. இதனால் அருவிக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தண்ணீரின் சீற்றம் அதிகமாக உள்ளதால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்றனர்.
- தேர்தல் வரும் போது தி.மு.க.வின் சாயம் வெளுத்து விடும்.
திருப்பூர்:
மதுரையில் இன்று மாலை நடைபெற உள்ள எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க திருப்பூரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டு சென்றனர் . அவர்களை பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வழியனுப்பி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்றனர். அமலாக்கத்துறை மீதான பயத்தால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு நேரில் சென்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது சந்தர்ப்பவாத அரசியல்.
அ.தி.மு.க., தொடங்கியது முதல் தற்போது வரை இஸ்லாமியர்களுடன் நல்ல உறவு உள்ளது. பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தவுடன் சிறுபான்மை இன மக்களை ஒரு சிலர் ஏமாற்றி விடுகிறார்கள். தேர்தல் வரும் போது தி.மு.க.வின் சாயம் வெளுத்து விடும். எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் சிறப்பான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு- பணம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவில் வளாகத்தில் திருமாளிகை பத்தி அமைப்பது உள்ளிட்ட திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
- திருப்பணி நிறைவு பெற்ற நிலையில் வருகிற பிப்ரவரி 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அவிநாசி:
கொங்கு மண்டலத்தில் தேவார பாடல் பெற்ற ஏழு சிவாலயங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள ஸ்ரீஅவிநாசி லிங்கேஸ்வரர் கோவில். கொங்கு சோழர்கள் கட்டிய இக்கோவிலில் பாண்டியர், ஹொய்சாளர், விஜயநகரம் மற்றும் மைசூர் மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஜூலை 14-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தற்போதைய அறங்காவலர் குழு பொறுப்பேற்றதும் திருப்பணி செய்து கும்பாபிஷேக விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் திருமாளிகை பத்தி அமைப்பது உள்ளிட்ட திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
கும்பாபிஷேக விழா பிப்ரவரி 2-ந்தேதி நடக்க உள்ள நிலையில், மயிலாடு துறையை சேர்ந்த குழுவினர், யாகசாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர். கோவில் அன்னதான மண்டபம் அருகே 3 பகுதிகளாக 80 குண்டங்களுடன் யாகசாலைகள் அமைக்கப்படுகின்றன.
அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகை அம்மன் மற்றும் சுப்பிரமணியருக்கு நவாக்னி வேள்விசாலை அமைக்கப்படுகின்றன. விநாயகர், பாதிரியம்மன், கால பைரவருக்கு பஞ்சாக்னி யாகசாலையும் அமைக்கப்படுகிறது.
விநாயகருக்கு பத்மவேதிகை, சிவபெருமானுக்கு, பஞ்சாசன வேதிகை, அம்மனுக்கு ஸ்ரீசக்ர வேதிகை, முருகப்பெருமானுக்கு சற்கோண வேதி கைகள் அமைக்கப்படுகின்றன. 150க்கும் அதிகமான சிவாச்சாரியார்கள், யாகசாலை பூஜைகளை நிகழ்த்த உள்ளதாக சிவாச்சாரியர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் கூறியதாவது:-
கோவில் 2ம் பிரகாரத்தில் திருமாளிகை பத்தி மண்டபம், கருங்கல்தளம் அமைப்பது, கதவுகள் புதுப்பிப்பு பணி, கோபுரம் மற்றும் விமானம் பெயின்டிங் பணி முடிந்துள்ளது. தெப்பக்குளம், படிக்கட்டு களும் சீரமைக்கப்பட்டுள்ளது.
திருப்பணி நிறைவு பெற்ற நிலையில் வருகிற பிப்ரவரி 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்காக, மயிலாடுதுறையை சேர்ந்த குழுவினர் 80 குண்டங்களுடன் கூடிய யாகசாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர். விரைவில் யாகசாலையை சுற்றிலும் முளைப்பாலிகை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அங்கு பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
- மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் தெரிவித்தார்.
திருப்பூர்:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ந்தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். மேலும் திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். 2024ம் ஆண்டு பிறந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகை தந்த முதல் நிகழ்ச்சியாக அவரது திருச்சி சுற்றுப்பயணம் அமைந்தது.
இதையடுத்து மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதமே தமிழகத்துக்கு 2-வது முறையாக வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து கேலோ இந்தியா போட்டியை சென்னையில் தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடி அன்றைய தினம் திருப்பூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
திருப்பூரில் புதிதாக இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அங்கு பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர் அறிவித்துள்ளனர்.
திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ., மருத்துவ மனையை திறந்து வைக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளதால், பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதியில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் தெரிவித்தார்.






