search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமராவதி அணை நிரம்பியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    அமராவதி அணை மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதை காணலாம்.

    அமராவதி அணை நிரம்பியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    • கடந்த 2 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • வனப்பகுதியில் பெய்த மழையால் மத்தள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் மழைக்காலங்களில் நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியும் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த மாதம் 20-ந்தேதி அணை அதன் முழு கொள்ளளவை நெருங்கியது. 90 அடி உயரம் கொண்ட அணையின் மொத்த நீர் தேக்க பரப்பளவில் நீர் இருப்பு கடந்த 20 நாட்களாக 89 அடிக்கும் மேலாக நீடித்து வந்ததால் அணைக்கு வருகின்ற நீர்வரத்து ஷட்டர்கள் வழியாக தொடர்ந்து உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரவு பகலாக அணையில் முகாமிட்டு நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த சூழலில் கடந்த 2 நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதைத்தொடர்ந்து அணையில் உள்ள ஷட்டர்கள், பிரதான கால்வாய் மற்றும் 9 கண் மதகுகளில் 6 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்தால் கூடுதலாக தண்ணீர் திறப்பதற்கும் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

    இதனால் திருப்பூர், கரூர் மாவட்ட அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.92 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 711 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 963 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அமராவதி அணைப்பகுதியில் இன்று காலை 6 மணி நிலவரப்படி 11.8 செ.மீ., மழையும், திருமூர்த்தி அணைப்பகுதியில் 10.3 செ.மீ., மழையும் பெய்துள்ளது.

    உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குலிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்டவை நீர் ஆதாரமாக உள்ளது.

    கடந்த 2 நாட்களாக பஞ்சலிங்க அருவியின் நீர் ஆதாரங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி கொட்டி வருகிறது. அந்த தண்ணீர் அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை சென்றடைகிறது.

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் மத்தள ஆறு உற்பத்தி ஆகிறது. இந்த ஆறானது நல்லாறு, பாலாறு உள்ளிட்ட துணை ஆறுகள், ஓடைகளுடன் இணைந்து இறுதியில் கேரள மாநிலத்தை சென்று அடைகிறது. இந்த நெடுந்தூர பயணத்தில் ஏராளமான கிராமங்களின் குடிநீர் தேவை மற்றும் நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தும் பணியை செய்து வருகிறது.

    இந்தநிலையில் வனப்பகுதியில் பெய்த மழையால் மத்தள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அடிவாரத்தை அடைந்த காட்டாற்று வெள்ளமானது ஆற்றின் 2 கரைகளையும் தழுவியவாறு சென்றது. அப்போது ரெட்டிபாளையம்-பொன்னாலம்மன் சோலை சாலையை அடித்து சென்றது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    மேலும் அமராவதி அணையின் பிரதான நீராதாரத்தில் ஒன்றான சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளமானது கட்டளை மாரியம்மன் கோவில் அருகே மலைவாழ் மக்கள் அமைத்திருந்த கடைகளை சூழ்ந்தவாறு செல்கிறது. இதனால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையும், வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×