search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூர் மாவட்டத்தில் 90 சதவீத பஸ்கள் இயக்கம்
    X

    திருப்பூர் மாவட்டத்தில் 90 சதவீத பஸ்கள் இயக்கம்

    • காங்கயத்தில் 80 பஸ்களில் 62 பஸ்களும், தாராபுரத்தல் 76 பஸ்களில் 61 பஸ்களும், உடுமலையில் 94 பஸ்களில் 92 பஸ்களும் இயக்கப்பட்டன.
    • திருப்பூர் மண்டலத்திற்குட்பட்ட பழனி-1 பணிமனையில் 47 பஸ்களில் 43 பஸ்களும், பழனி 2ல் 37 பஸ்களில் 26 பஸ்களும் இயக்கப்பட்டன.

    திருப்பூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத்தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தன. அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    அதன்படி சி.ஐ.டி.யு. தலைமையிலான கூட்டமைப்பு, அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையிலான கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    திருப்பூர் மாநகரில் இன்று அரசு பஸ்கள் ஓடாது என்று பல இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டன. தொ.மு.ச. தொழிற்சங்க ஓட்டுனர்கள், நடத்துனர்கள் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும் என்று பஸ்களில் நோட்டீஸ் ஒட்டினர். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று பஸ்கள் இயக்கப்படுமா, இயக்கப்படாதா? என்பது தெரியாததால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளானார்கள்.

    இதனால் வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் நேற்றிரவு தாங்கள் செல்லக்கூடிய இடங்களுக்கு பயணித்தனர். இதனால் நேற்று இரவு திருப்பூர் மத்திய பஸ் நிலையம், கோவில்வழி பஸ் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல வேண்டியவர்கள் முன்கூட்டியே நேற்று ஊருக்கு புறப்பட்டு சென்றதை காண முடிந்தது.

    இந்தநிலையில் பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

    அதன்படி இன்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் 90 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. திருப்பூர் பணிமனை 1-ல் மொத்தமுள்ள 88 பஸ்களில் 54 பஸ்கள் இயக்கப்பட்டன. பணிமனை 2-ல் 57 பஸ்களில் 41 பஸ்கள் இயக்கப்பட்டன. பல்லடம் பணிமனையில் இருந்து 70 பஸ்களில் 67 பஸ்களும், காங்கயத்தில் 80 பஸ்களில் 62 பஸ்களும், தாராபுரத்தல் 76 பஸ்களில் 61 பஸ்களும், உடுமலையில் 94 பஸ்களில் 92 பஸ்களும் இயக்கப்பட்டன.

    திருப்பூர் மண்டலத்திற்குட்பட்ட பழனி-1 பணிமனையில் 47 பஸ்களில் 43 பஸ்களும், பழனி 2ல் 37 பஸ்களில் 26 பஸ்களும் இயக்கப்பட்டன. திருப்பூர் மண்டலம் முழுவதும் மொத்தம் 549 பஸ்களில் 446 பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 90.36 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×