என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • எனது வாழ்க்கை முடிந்தது, என்னை வெட்டுகிறார்கள் சார் என்று காவல்துறை அதிகாரியிடம் நேசபிரபு தெரிவித்துள்ளார்.
    • சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசபிரபு. இவர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்றிரவு நேசபிரபு மர்மநபர்கள் சிலர் தன்னை பின் தொடர்வதாக காவல்துறையின் அவசர எண்ணை (100) தொடர்பு கொண்டு காவல்துறை அதிகாரியிடம் பாதுகாப்பு கேட்டுக்கொண்டு இருந்த போதே நேசபிரபுவை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது எனது வாழ்க்கை முடிந்தது, என்னை வெட்டுகிறார்கள் சார் என்று காவல்துறை அதிகாரியிடம் நேசபிரபு தெரிவித்துள்ளார். இதற்கு அந்த காவல்துறை அதிகாரி அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து பலத்த காயம் அடைந்த நேசபிரபு ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் மீதும், அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர் நலச்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. மேலும் இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    நேசபிரபு மர்மநபர்களால் தாக்கப்படும் போது காவல்துறை அதிகாரியிடம் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதனிடையே, செய்தியாளர் நேசபிரபு தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • 2,500 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் சிறப்போடு திகழ்ந்த நாடு காங்கயம் நாடு.
    • தமிழா்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சடங்குகளிலும் மண் பானைகள் முக்கிய இடம் பெறுகின்றன.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டத்துக்குட்பட்ட பரஞ்சோ்வழியில் உள்ள மகாதேவா் நட்டுராமந்தா் என்னும் மத்தியபுரீஸ்வரா், வீரநாராயண பெருமாள் கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 2 கோவில்களிலும் திருப்பூா் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநா் ரவிகுமாா், பொறியாளா் பொன்னுசாமி ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டு பழமையான இரு கல்வெட்டுகளை கண்டறிந்தனா்.

    இது தொடா்பாக ஆய்வு மையத்தின் இயக்குநா் ரவிகுமாா் கூறியதாவது:-

    பண்டைய கொங்கு மண்டலத்துக்குட்பட்ட 24 நாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தால் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் சிறப்போடு திகழ்ந்த நாடு காங்கயம் நாடு.

    இந்த நாட்டில் உள்ள பண்டைய 12 கிராமங்களில் பழஞ்சேபளி என்றும், பரஞ்சோ்பள்ளி என்றும் அழைக்கப்பட்ட இன்றைய பரஞ்சோ்வழியும் ஒன்றாகும். இங்குள்ள மத்தியபுரீஸ்வரா் கோவிலின் அம்மன் சன்னதி முன் மண்ணில் புதைந்திருந்த பெரிய தூண் கல்லை எடுத்து ஆய்வு செய்தபோது கி.பி.11-ம் நூற்றாண்டை சோ்ந்த கிரந்த எழுத்துகளுடன் கூடிய மந்திர குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.

    220 செ.மீ., உயரம், 50 செ.மீ., அகலம், 20 செ.மீ., கனம் கொண்ட பெரிய கல்லில் நான்கு பக்கங்களிலும் குறியீடுகளும், கிரந்த எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் இரண்டு குத்துவிளக்குகள், சூலம், சங்கு மற்றும் சந்திரன் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துகளின் உயரம் 60 செ.மீ., ஆகும்.

    இந்த கிரந்த எழுத்துகளை வாசித்த இந்திய வரலாற்று பேராசிரியா் சுப்பராயலு, கல்வெட்டின் 4 பக்கங்களிலும் ஹ்ர்ரிம், ஹஸ்த்தா, ஹஸ்ரா, ஷாம், லம் போன்ற சொற்களே திரும்ப திரும்ப வருகின்றன என்றாா்.

    பொதுவாக இவ்வகை மந்திரக் கல்லை வழிபடுவதால் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும் நோய் குணமாகும் என்பது நம்பிக்கையாகும். எழுத்து அமைப்பை வைத்து பாா்க்கும்போது இது கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகும்.

    அதேபோல, வீரநாராயண பெருமாள் கோவிலில் புதைந்திருந்த ஒரு கல்லை வெளியே எடுத்து ஆய்வு செய்தபோது அதில் 3 பக்கங்களிலும் தமிழ் எழுத்துகள் இருப்பதை காண முடிந்தது. 80 செ.மீ., உயரம், 50 செ.மீ., அகலம், 20 செ.மீ., கனம் கொண்ட இந்த கல்லில் 3 பக்கங்களில் வரலாற்று சிறப்புமிக்க செய்திகள் உள்ளன.

    தமிழா்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சடங்குகளிலும் மண் பானைகள் முக்கிய இடம் பெறுகின்றன. கோவில்களிலும் இறைவனுக்கு மண்பானையிலேயே அமுது செய்து படைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மண் பானைகளை உருவாக்கும் குயவா்களை, வேட்கோவா், வேள்கோ என்றெல்லாம் நமது இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

    இந்த கல்வெட்டில் முதல் பக்கத்தில் 12 வரிகளும், இரண்டாம் பக்கத்தில் 9 வரிகளும், மூன்றாம் பக்கத்தில் 4 வரிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் வேட்கோவா்களுக்கு வரி விதித்தது பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது.

    அதாவது விளம்பி வருஷம் மாசி மாதம் 18-ம் நாள் ஸ்ரீ மன் கும்பள அண்ணாா்கள் இப்பகுதியை திம்மராசன் ஆட்சியின் கீழ் அதிகாரம் செய்தபோது, பரஞ்சோ்பள்ளி வீர நாராயண பெருமாளுக்கு திருநந்தா தீபம் எரிப்பதற்காக கூத்தாா் சுங்கம் என்னும் வேட்கோவா் மண்பானை செய்ய பயன்படும் ஒரு சக்கரத்துக்கு அன்று விதிக்கப்பட்ட வரிப்பணம் நான்கை சந்திரன் உள்ளவரை கொடுத்துள்ள செய்தியை அறிய முடிகிறது.

    இதன் மூலம் அன்று மண்பானை தொழில் சிறப்புற்று இருந்ததும், அதற்கு வரி விதிக்கப்பட்டு இருந்ததையும் நாம் அறிய முடிகிறது. எழுத்து அமைப்பை வைத்து பாா்க்கும் போது இது கி.பி.16-ம் நூற்றாண்டை சோ்ந்ததாகும் என்றாா்.

    • அவினாசியில் லிங்கேசுவரர் கோவில் உள்ளது.
    • வருகிற 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்காக கடந்த 6 மாதங்களாக கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது.

    பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற 2-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி கும்பாபிஷேக விழா இன்று காலை மூத்தபிள்ளையார் வழிபாடு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மாலை 6 மணிக்கு நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது.

    29-ந் தேதி காலை 9 மணிக்கு வேள்விச்சாலை அழகு பெறச்செய்தல், மாலை 6 மணிக்கு திருக்குடங்களில் திருவருள் சக்திகளை ஏற்றி வைத்தல், 7 மணிக்கு திருக்குடங்கள் வேள்விச்சாலை எழுந்தருளல் மற்றும் முதல் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது.

    இரவு 9 மணிக்கு பேரொளி வழிபாடு மலர் போற்றுதல் ஆகியவையும் 30-ந் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், 10 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜை மற்றும் அருட் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    31-ந் தேதி காலை 6 மணிக்கு 4-ம்கால பூஜையும், 10 மணிக்கு சாமிக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வி பூஜையும், பிப்ரவரி மாதம் 1-ந் தேதி காலை 6 மணிக்கு 6-ம்கால வேள்வி பூஜையும், காலை 9 மணி முதல் 10.15 மணிக்கு அவினாசி அப்பர் துணை நிற்கும் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணி முதல் 9 மணிக்குள் 7-ம் கால பூஜையும் நடக்கிறது.

    2-ந்தேதி காலை 6 மணிக்கு 8-ம் கால பூஜையும், 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு அவினாசியப்பருக்கும் ஐம்பெரும் தெய்வங்களுக்கும் திருவீதி உலா நடக்கிறது.

    • பிரம்மாண்ட பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
    • 2 முறை திருப்பூரில் நடைபெற இருந்த அண்ணாமலை நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர்:

    பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கி தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    திருப்பூரில் வருகிற 28-ந்தேதி நடைபயணம் மேற்கொள்ள இருந்தார். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாநகர பா.ஜ.க. வினர் செய்து வந்தனர்.

    இந்தநிலையில் அண்ணாமலையின் நடைபயணம் தேதி திடீரென மாற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை இறுதிக்கட்ட நடை பயணத்தை சென்னையில் நிறைவு செய்து, அங்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.


    இந்தநிலையில் இறுதிக்கட்ட நடைபயணம் மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை திருப்பூரில் நடத்தவும், அதில் 10 லட்சம் பேரை பங்கேற்க செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக வருகிற 28-ந்தேதி திருப்பூரில் நடைபெற இருந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாநகர பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திருப்பூரில் நடைபெற இருந்த நடைபயணம் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு 2 முறை திருப்பூரில் நடைபெற இருந்த அண்ணாமலை நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர்:

    பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பியதால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    இதன் பின்னர் குறைந்தது 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை எடுத்து விட்டு திருப்பூருக்கு திரும்புவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை கொண்டாட தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

    இதனால் திருப்பூரில் உள்ள பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டன. இந்நிலையில் ஒரு வார விடுமுறைக்கு பின்னர் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் திறந்து செயல்பட தொடங்கின. இதனால் பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். இதன் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அரசு பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டது.
    • பெண்கள் கும்மியடித்து கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் காமராஜ் நகர், சந்தையபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு 9 நாட்கள் நிலாவுக்கு சோறு படைத்து சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்கள் கும்மியடித்து கொண்டாடும் நிகழ்ச்சி கொடியேற்ற நாளில் (கடந்த 19-ந்தேதி) இருந்து நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்றிரவு அவரவர் வீடுகளில் இருந்து பழம் மற்றும் சர்க்கரை கொண்டு வந்து ஊரின் நடுவே உள்ள பொது இடத்தில் வண்ண வண்ண கலர்களில் கோலமிட்டு கோலத்தின் நடுவே சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்ததுடன், பிள்ளையாரின் தலையில் அருகம்புல், வெள்ளை எருக்கலம் பூ வைத்து, அலங்கரித்து நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டது.

    பின்னர் தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை படைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பிள்ளையாரை பாவித்து, நிலாவை பூமிக்கு அழைக்கும் விதமாக பெண்கள் வட்டமாக நின்று தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஆடி, பாடி கும்மியடித்தனர்.

    • திருப்பூர் மாநகரில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மத்திய போலீஸ் படையின் ஒரு பிரிவான விரைவு அதிரடிப்படை போலீசார் திருப்பூரில் முகாமிட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். திருப்பூர் மாநகரில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.

    இந்நிலையில் மத்திய போலீஸ் படையின் ஒரு பிரிவான விரைவு அதிரடிப்படை போலீசார் திருப்பூரில் முகாமிட்டுள்ளனர். இந்த படைக்கு 1 துணை கமிஷனர், 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 33 பேர் வருகை தந்துள்ளனர்.

    இந்த விரைவு அதிரடி படையினர் திருப்பூரில் பதட்டமான பகுதிகளான காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோடு மற்றும் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், குமரன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கிகளுடன் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது.
    • செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்பில் திருப்பூர் மாநகருக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்திய அளவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில் விளங்கி வருகிறது. ஆயத்த ஆடை தயாரிப்பில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்டுதோறும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது.

    அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.10 ஆயிரத்து 787 கோடியே 3 லட்சத்துக்கு நடந்துள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.12 ஆயிரத்து 216 கோடியே 35 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.70 சதவீதம் வர்த்தகம் குறைவாகும்.

    இதுபோல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 9 மாதங்களில் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.83 ஆயிரத்து 852 கோடியே 3 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இதே கால கட்டத்தில் ரூ.94 ஆயிரத்து 193 கோடியே 13 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 10.98 சதவீதம் குறைவாக வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

    இதுபோல் செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.29 ஆயிரத்து 267 கோடியே 10 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட 3.13 சதவீதம் குறைவாகும். இந்திய அளவில் கடந்த ஆண்டு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்துள்ளது. வரும் நாட்களில் ஆர்டர் வருகை அதிகரித்து ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும் வாய்ப்புள்ளதாக ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் மணி என்பவரை கைது செய்தனர்.
    • பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள்- உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பாச்சங்காட்டுபாளையத்தை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன் சாய் சரண் (வயது 6). இவன் பல்லடம் அருகே பெத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான். தினமும் பள்ளிக்கு சொந்தமான வேனில் மாணவன் பள்ளிக்கு சென்று வந்தான்.

    வழக்கம் போல் நேற்று காலை பள்ளி வேனில் மாணவன் சாய் சரண் பள்ளிக்கு சென்றான். பின்னர் மாலையில் வகுப்புகள் முடிந்ததும் பள்ளி வேனில் வீட்டிற்கு சென்றான். வேன் மாணவன் வீட்டிற்கு அருகே வந்ததும் நிறுத்தப்பட்டது. அப்போது வேனில் இருந்து சாய் சரண் இறக்கிவிடப்பட்டான். மற்ற குழந்தைகளும் அங்கு இறக்கி விடப்பட்டனர்.

    பின்னர் பள்ளி வேன் திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது வேனின் பின் சக்கரத்தில் சாய்சரண் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் மாணவன் சாய் சரண் படுகாயம் அடைந்தான். உடனே சாய்சரணின் பெற்றோர் மற்றும் அருகில் உள்ளவர்கள் மாணவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாய் சரணை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டபனர். பள்ளிக்கு சென்ற மாணவன் பள்ளி வேனிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் மணி என்பவரை கைது செய்தனர். இதனிடையே இந்த விபத்து சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம் அருகே உள்ள கள்ளிமேடு பகுதியில் திருப்பூர் -பொங்கலூர் ரோட்டில் இன்று காலை பொதுமக்கள்- உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் சென்ற போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • விபத்தில் வேன் டிரைவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
    • வேனில் இருந்த பெண்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம், தொட்டி அப்புச்சி கோவில் அருகே இன்று காலை தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்குள்ள வீட்டிற்குள் புகுந்தது. வீட்டிற்குள் இருந்தவர்கள் வெளியே இருந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த விபத்தில் வேன் டிரைவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் பல்லடம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேனில் இருந்த பெண்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    இந்தநிலையில் விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார், பொது மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகு அனுப்புகின்றனர்.
    • பல இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    திருப்பூர்:

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழகம் வருகை, சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு என தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் பஸ், ரெயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகு அனுப்புகின்றனர். வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.

    மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    • சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவிலில் குவிந்தனர்.
    • கால்நடைகளின் உருவார பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தியும், கன்றுகளை தானமாக அளித்தும், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் மால கோவில் என அழைக்கப்படும் ஆல் கொண்டமால் (கிருஷ்ணன்) கோவில் உள்ளது. பொங்கல் திருநாளை ஒட்டி இந்த கோவிலில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 3 நாள் தமிழர் திருவிழா கொண்டாடப்படும்.

    கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும் செல்வம் பெருகவும் கால்நடைகளின் உருவார பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தியும், கன்றுகளை தானமாக அளித்தும், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

    நேற்று முன்தினம் கோவிலில் பொங்கல் திருவிழா துவங்கியது. இதில் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவிலில் குவிந்தனர். நேற்று காலை கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம், பாலாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். நேர்த்திக்கடனாக கால்நடைகளின் உருவார பொம்மைகளை காணிக்கையாக செலுத்தினர். இதனால் கோவிலில் உள்ள நந்தி சிலை முன்பு உருவார பொம்மைகள் மலை போல் குவிந்தன. மேலும் சில விவசாயிகள் ஆடு, மாடுகளை கோவிலுக்கு தானமாக வழங்கினர். சலகருது ஆட்டம், தேவராட்டம் நடந்தது.

    விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அமரநாதன், செயல் அலுவலர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×