search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறக்கும் தேதி மாற்றப்பட்டதால் பிரதமர் மோடியின் திருப்பூர் பயணம் ஒத்திவைப்பு
    X

    இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறக்கும் தேதி மாற்றப்பட்டதால் பிரதமர் மோடியின் திருப்பூர் பயணம் ஒத்திவைப்பு

    • மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அங்கு பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
    • மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் தெரிவித்தார்.

    திருப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ந்தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். மேலும் திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். 2024ம் ஆண்டு பிறந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகை தந்த முதல் நிகழ்ச்சியாக அவரது திருச்சி சுற்றுப்பயணம் அமைந்தது.

    இதையடுத்து மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதமே தமிழகத்துக்கு 2-வது முறையாக வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து கேலோ இந்தியா போட்டியை சென்னையில் தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடி அன்றைய தினம் திருப்பூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    திருப்பூரில் புதிதாக இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அங்கு பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர் அறிவித்துள்ளனர்.

    திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ., மருத்துவ மனையை திறந்து வைக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளதால், பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதியில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் தெரிவித்தார்.

    Next Story
    ×