search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் உலா வரும் ஒற்றை யானை- வாகன ஓட்டிகள் பீதி
    X

    சாலையில் உலா வரும் ஒற்றை யானை- வாகன ஓட்டிகள் பீதி

    • யானை அங்கிருந்தவர்களுக்கு எந்த தொந்தரவும் அளிக்காமல் வனப்பகுதியில் சென்று மறைந்தது.
    • யானைகள் அருகில் சென்று புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்வதற்கு 9 /6 செக்போஸ்ட் வழியாக மலைப்பாதை செல்கிறது. கேரள மாநில எல்லையில் உள்ள மறையூர், காந்தளூர் மற்றும் மலையடிவார கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக காய்கறி, பால், முட்டை, மற்றும் கட்டுமான பொருட்கள், கறிக்கோழி, உள்ளிட்டவற்றை வாங்க இந்த வழியாக உடுமலை நகரத்திற்கு வந்து செல்கின்றனர்.

    உடுமலை- மூணாறு வழித்தடத்தில் ஏழுமலையான் கோவில், காமனூத்து பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. சமீப காலமாக வனப்பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்திருப்பதால் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணையை நோக்கி படையெடுத்து வருகின்றன.

    கடந்த ஒரு வாரமாக ஐந்துக்கும் மேற்பட்ட குட்டிகளுடன் 15 காட்டு யானைகள் மலைவழிப் பாதையில் சாலையோரம் முகாமிட்டுள்ளன. கூட்டமாக இருக்கும் காட்டு யானைகள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்யாமல் பாதையை விட்டு ஓரமாக இறங்கி வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன.

    இந்நிலையில் ஒற்றை ஆண் யானை ஒன்று சாலை ஓரமாக உலா வருகிறது. மேலும் உடுமலை தமிழக கேரள எல்லையில் உள்ள சின்னாறு சோதனை சாவடி அருகே வந்து நின்றது. அந்த நேரத்தில் கேரளாவில் இருந்து தமிழக நோக்கி கனரக வாகனம் வந்து கொண்டிருந்தது. பனி மூட்டம் காரணமாக சோதனை சாவடி அருகே காட்டு யானை நிற்பது தெரியாமல் வாகன ஓட்டி முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வந்தார்.

    சரக்கு வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்டவுடன் காட்டு யானை மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. சோதனை சாவடியை முற்றுகை இட்ட காட்டு யானையை கண்டு வனத்துறை ஊழியர்களும் வாகன ஓட்டிகளும் பீதி அடைந்தனர். இருப்பினும் நல்வாய்ப்பாக யானை அங்கிருந்தவர்களுக்கு எந்த தொந்தரவும் அளிக்காமல் வனப்பகுதியில் சென்று மறைந்தது.

    காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் வாகன ஓட்டிகள் உடுமலையிலிருந்து மூணார் செல்லும் போதும் மூணாறில் இருந்து உடுமலை செல்லும் போதும் யானையை படம் பிடிப்பதற்காக நடுவழியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது, "செல்பி" என்ற பெயரில் யானைகள் அருகில் சென்று புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    Next Story
    ×