search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏற்றுமதி தடை- விலை சரிவால் நஷ்டத்தில் தவிக்கும் திருப்பூர் சின்ன வெங்காயம் சாகுபடி விவசாயிகள்
    X

    ஏற்றுமதி தடை- விலை சரிவால் நஷ்டத்தில் தவிக்கும் திருப்பூர் சின்ன வெங்காயம் சாகுபடி விவசாயிகள்

    • ஆரம்ப காலங்களில் நாட்டு ரகங்களை சாகுபடி செய்து வந்த விவசாயிகள், தற்போது உயர்ரக சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள்.
    • கார்த்திகை, ஐப்பசி மாதங்களில் மழை அதிகமாக இருக்கும். இதனால் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அது மட்டுமன்றி நல்ல தரமான சின்ன வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயத்துக்கு ஏற்ற தட்பவெப்பநிலை சாதகமாக உள்ளதால், நல்ல விளைச்சலை கொடுத்து வருகிறது.

    ஆரம்ப காலங்களில் நாட்டு ரகங்களை சாகுபடி செய்து வந்த விவசாயிகள், தற்போது உயர்ரக சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். அனைத்து சமையலுக்கும் சின்ன வெங்காயம் பயன்படுத்தப்படுவதால் எப்போதும் அதற்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது. எனவே விவசாயிகள் ஆர்வமுடன் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். இதற்கிடையே புரட்டாசி பட்டத்தில் நடவு செய்த சின்ன வெங்காயம் தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உரிய விலை இல்லாததாலும், மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததாலும், சின்ன வெங்காயத்தின் விலை சரிந்துள்ளது. இது குறித்து சின்ன வெங்காய விவசாயி வேலுமணி கூறியதாவது:-

    ஒரு ஏக்கர் வெங்காயம் பயிரிட விதை வெங்காயம் ரூ.30 ஆயிரம், உரம் இடுவதற்கு ரூ.15 ஆயிரம், பூச்சி மருந்து அடிப்பதற்கு ரூ.15 ஆயிரம், களைகள் எடுக்க ரூ.20 ஆயிரம் என சுமார் ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது. இந்த பகுதிகளில் ஓரளவு தண்ணீர் வசதி இருந்தும் பருவ நிலை மாற்றத்தால் சின்ன வெங்காய விளைச்சல் குறைந்துள்ளது. நல்ல விளைச்சல் என்றால் ஒரு ஏக்கருக்கு சுமார் 7 டன் முதல் 8 டன் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றத்தால் விளைச்சல் குறைந்துள்ளது.

    இதனால் ஒரு ஏக்கருக்கு சுமார் 3 டன் முதல் 4 டன் வரை மகசூல் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெங்காயம் விலை குறைந்ததால் சென்ற வாரம் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் கொடுத்து எங்களிடம் கொள்முதல் செய்த வியாபாரிகள் தற்பொழுது கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை தருகிறார்கள். இதனால் வெங்காய விவசாயத்தில் போட்ட முதலீடு திரும்ப கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும் இதுகுறித்து விவசாயி தங்கவேல் கூறியதாவது:-

    சின்ன வெங்காயத்தை ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யலாம். இதனால் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சின்ன வெங்காயம் கிலோ ரூ.80க்கு விற்பனையானது. இதனால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது.

    இந்த நிலையில் கார்த்திகை, ஐப்பசி மாதங்களில் மழை அதிகமாக இருக்கும். இதனால் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும். இதனை எதிர்பார்த்து சின்ன வெங்காய விவசாயிகள் இருப்பு வைத்திருந்தோம். ஆனால் பருவ நிலை மாற்றத்தால் மழை காலம் மாறி பெய்கிறது. இதனால் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. தற்பொழுது புரட்டாசி மாதத்தில் நடவு செய்த வெங்காயமும் சந்தைக்கு வந்துள்ளது. இதனால் ஏற்கனவே ஆடிப்பட்டத்தில் பயிரிடப்பட்டு இருப்பு வைத்த வெங்காயத்திற்கு தற்பொழுது உரிய விலை கிடைக்கவில்லை. எனவே வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:-

    சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்க கூடியது. தமிழர்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து ஒவ்வொரு முறையும் தடைகளையும், வரிகளையும் விதித்து சின்ன வெங்காய விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

    சின்ன வெங்காயத்திற்கு உற்பத்தி செலவு குறைந்தபட்சம் 30 ரூபாயாக இருந்து வருகிறது. குறைந்தபட்ச லாபத்தோடு 45 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே கட்டுப்படியாக கூடிய சூழ்நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட 40 சதவீத வரியும் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடையும் சின்ன வெங்காய விவசாயிகளை பெரும் நஷ்டத்தில் தள்ளிவிடும். மத்திய அரசு சின்ன வெங்காய உற்பத்திக்கு எவ்வித மானியமும் அளிப்பதில்லை. விலை நிர்ணயமும் கிடையாது. சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்திற்கு தனித்தனி ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்க வேண்டும். சின்ன வெங்காயம் பயிரிட்டு உரிய விலை கிடைக்காமல், நஷ்டம் ஏற்பட்டு உள்ள விவசாயிகளிடமிருந்து மத்திய, மாநில அரசுகள் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×