search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்து அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்- கண்டக்டர்கள் போராட்டம்
    X

    டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்து அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்- கண்டக்டர்கள் போராட்டம்

    • மோதலில் காயமடைந்த தாஸ் மற்றும் பாபு ஆகிய 2 பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • தாராபுரம் பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 8.30 மணி அளவில் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்தநிலையில் அங்குள்ள டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வரும் தாராபுரம் தெற்கு தெருவை சேர்ந்த தாஸ் (வயது 35) என்பவர் கடைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது டீக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சின் டிரைவர் பாபு சாப்பிட்டு விட்டு பஸ்சின் ஜன்னல் வழியாக கை கழுவிய தண்ணீரை ஊற்றியுள்ளார். அந்த தண்ணீர் தாஸ் மீது பட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தாஸ், தண்ணீரை பார்த்து ஊற்ற முடியாதா? என்று டிரைவர் பாபுவிடம் கேட்டுள்ளார். மேலும் டீ கடையில் உள்ள ஜக்கில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து பாபு மீது ஊற்றியுள்ளார். இதனால் 2 பேருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி அடிக்க தொடங்கினர்.

    இதையறிந்து அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மோதலில் காயமடைந்த தாஸ் மற்றும் பாபு ஆகிய 2 பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பஸ்சை எடுக்காமல் அப்படியே நிறுத்தினர். சுமார் அரை மணி நேரம் பஸ்சை எடுக்காமல் போராட்டம் நடத்தியதால் பயணிகள் கடும் சிரமப்பட்டனர். வெளியூர் மற்றும் வேலைக்கு செல்லக்கூடிய பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு டிரைவர்கள் பஸ்சை இயக்கினர். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாராபுரம் பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×