search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை -   விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    மழையில் குடைபிடித்தபடி செல்லும் பெண்களை படத்தில் காணலாம்.

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

    • அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பகல்வேளையில் கடுமையான வெப்பம் காணப்பட்டது.
    • ரோட்டின் பள்ளமான இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது.

    திருப்பூர்:

    திருப்பூர், அவினாசி, காங்கயம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் 4 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்தது. இந்த மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்த ஓடியது. அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பகல்வேளையில் கடுமையான வெப்பம் காணப்பட்டது. மாலை 4 மணி முதல் 5 மணிவரை அவினாசி, வேலாயுத ம்பாளையம், பழங்கரை, தெக்கலூர், கருவலூர், ஆட்டையாம்பாளையம், உள்வட்ட பல கிராமங்களில் கனமழையும், சிறிது நேரம் சாரல் மழையும் பெய்தது. விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் ரோட்டின் பள்ளமான இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. காங்கயம் காங்கயத்தில் மாலை 3.30 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து காங்கயம் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளான நெய்க்காரன்பாளையம், ஆலம்பாடி, நால்ரோடு, கீரனூர், பரஞ்சேர்வழி உட்பட பல்வேறு கிராமப் பகுதிகளில் 4 மணியளவில் தூறலாக தொடங்கிய மழை படிப்படியாக வேகமெடுத்து கனமழை பெய்தது. மழையானது 1½ மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள முக்கிய சாலைகள், கால்வாய்கள் ஆகிய இடங்களில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காங்கயம் நகர பகுதிகளில் லேசான தூறல் மழையே பெய்தது. தூறல் மழையானது இரவு முழுவதும் தூறிக்கொண்டே இருந்தது. இதனால் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காங்கயம் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×