என் மலர்
திருவாரூர்
- திருவாரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
- பல்வேறு இடங்களில் 65 லிருந்து 70 நாட்களான பருத்தி பயிர்களில் தொடர் மழையால் பஞ்சு நிறம் மாறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக நன்னிலம், வலங்கைமான், குடவாசல், கூத்தாநல்லூர், நீடாமங்கலம், கோட்டூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் 75 லிருந்து 85 நாட்கள் ஆன பருத்தி பயிர் வயல்களில் மழைநீர் தேங்கி பருத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பருத்தி பயிரில் பூக்கள் வைத்து வந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பூக்கள் அனைத்தும் உதிர்ந்து விழுந்து மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.மேலும் விவசாயிகள் பருத்தி வயல்களில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைத்து பருத்தி பயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த தொடர் மழையின் காரணமாக பஞ்சு நிறம் மாறி வருவதாகவும் இதனால் பருத்தியின் தரம் குறைந்து குறைந்த விலைக்கு விற்பனையாகும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக கமலாபுரம், ஓகை ,பேரையூர், புனவாசல்,,பூந்தாழங்குடி, கீழ மணலி, மேல மணலி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான், கோட்டூர், விக்கிரபாண்டியம், புழுதிக்குடி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 65 லிருந்து 70 நாட்களான பருத்தி பயிர்களில் தொடர் மழையால் பஞ்சு நிறம் மாறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பருத்தி பயிரிட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக வயல்களில் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட நிலையில் மழை நீரை வடிய வைத்து மீதமுள்ள பருத்திச் செடிகளையாவது காப்பாற்றி விடலாம் என்கிற முனைப்பில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது பஞ்சு நிறம் மாறுவதால் மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் பருத்தியின் தரம் குறைந்து விட்டதாக கூறி வியாபாரிகள் குறைந்த விலைக்கு பருத்தியை வாங்கும் நிலை ஏற்படும் எனவும் இதனால் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத சூழல் ஏற்படும் எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இது தொடர்பாக வேளாண் அதிகாரிகள் பருத்தி பயிரை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தனது குடிசை வீட்டில் இதுவரை மின்சார வசதி இல்லாததால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் படித்தேன்.
- மின்வசதி இல்லாத போது படித்ததை விட மேலும் சிறப்பாக இனிமேல் படிப்பேன் என்று மாணவி தெரிவித்தார்.
மின் வசதி இன்றி குடிசை வீட்டில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் படித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் 2ம் பிடித்த அரசுப்பள்ளி மாணவி துர்காதேவியின் வீட்டிற்கு இலவச மின்சார இணைப்பு வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வு எழுதிய பாலா மற்றும் சுதா தம்பதியின் மகளான துர்காதேவி 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தையும் மாவட்ட அளவில் 2ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை பாலா மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
மாணவி துர்கா தேவி கூறுகையில், "தனது குடிசை வீட்டில் இதுவரை மின்சார வசதி இல்லாததால் தொடர்ந்து சார்ஜர் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் படித்தேன். எனவே என்னுடைய வீட்டிற்கு மின்சார வசதி கொடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த தகவல் அறிந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று மாணவியின் வீட்டை ஆய்வு செய்தனர். பின்னர் மாணவியின் வீட்டின் முன் 3 மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு தந்துள்ளனர்.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாணவி, என்னுடைய நோக்கம் மருத்துவராக வேண்டும் என்பதுதான், மின்வசதி இல்லாத போது படித்ததை விட மேலும் சிறப்பாக இனிமேல் படிப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
- பாராளுமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து போராடியவர்.
- குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (வயது 67). திருவாரூர் திரு.வி.க. அரசு கலை கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர். இவருக்கு கமலவதனம் என்பவருடன் திருமணம் முடிந்து செல்வப்பிரியா, தர்ஷினி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், இவர் தனது சிறுவயதில் இருந்தே கம்யூனிஸ்டு இயக்கத்தில் இணைந்து செயல்பட தொடங்கினார். மேலும், மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தார். மேலும், மாவட்ட, மாநில பொறுப்புகள், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், மாநிலக்குழு உறுப்பினர், தேசியக்குழு உறுப்பினர், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றி வந்தார். இவர் திருவாரூர் மாவட்ட துணை செயலாளர், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் நீண்ட காலம் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படி பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்ட இவர் கடந்த 1989-ம் ஆண்டு நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பேட்டியிட்டு வெற்றி பெற்று, முதல்முறையாக மக்களவைக்கு சென்றவர். அதனைத் தொடர்ந்து, 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பாராளுமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து போராடியவர்.
இப்படி தனது தொகுதி மக்களுக்காக குறள் கொடுத்து போராடி வந்த இவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக்கொள்ளும் சிகிச்சையும் பெற்றுள்ளார். அந்த நிலையிலும் கட்சி பொறுப்புகளையும், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தொகுதி பிரச்சினைகளிலும் ஓய்ந்து விடாமல் முனைப்போடு செயல்பட்டு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.
இந்நிலையில் செல்வராசு எம்.பி.க்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக அவர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.40 மணி அளவில் திடீரென காலமானார். இந்த செய்தி அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
இவரது இறுதிச்சடங்கு திருவாரூர் மாவட்டம், சித்தமல்லி கிராமத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
- பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி.
- அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி வருகின்றனர்.
paபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் போன்றே 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று வழக்கம்போல் அசத்தியுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் பல்வேறு பாடங்களில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.
பொதுவாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை வாழ்த்தி கொண்டாடிவது வழக்கம்.
இந்நிலையில், மன்னார்குடியில் மாணவர் ஒருவர் தேர்ச்சி பெற்றதற்கு ஊர் மக்களே ஒன்றுக்கூடி கொண்டாடி வருகின்றனர்.
மன்னார்குடியில் உள்ள வடுவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மணிகண்டன் என்ற மாணவன் தனது 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்ச பாஸ் மார்க் எடுத்து 10ம் வகுப்பை தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்று 500க்கு 210 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதனால், மாணவர் மணிகண்டனுக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி ஊர் மக்கள் கொண்டாடியுள்ளனர்.
- டாஸ்மாக் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ருக்மணிபாளையத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக பால சுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல் இலவசமாக மதுபானம் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அந்த விற்பனையாளர் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து விற்பனையாளர் பாலசுப்ரமணியனின் தலையில் தாக்கியுள்ளனர்.
அதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் பீரிட்டு வெளி வந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் பாலசுப்ரமணியனை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்ம கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டதாக மன்னார்குடி அடுத்த சொக்கனானவூர் கிராமத்தை சேர்ந்த அருள்முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நெடுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த திவ்யராஜ், அதே பகுதியை சேர்ந்த அஜித் மற்றும் சொக்கனானவூர் கிராமத்தை சேர்ந்த சரத் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும்.
- மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் அமைந்துள்ளது. சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை கோவிலில் சிறப்பு குருபரிகார ஹோமமும், அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. குருபகவானுக்கு தங்ககவசத்துடன் சர்வ அலங்காரம் செய்யப்பட்டது.

மாலை 5.19 மணிக்கு குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அப்போது, குருபகவானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
குருப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்வதற்காக காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணமாக இருந்தனர். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
குருப்பெயர்ச்சியின் போது ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்களும் குருபகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டில் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
- ஐ.நா.விலும் தமிழில் பேசி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி.
திருவாரூர்:
நாகை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ரமேஷை ஆதரித்து திருவாரூரில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
* உலகின் பழமையான மற்றும் அழகான மொழிகளில் ஒன்று தமிழ்.
* ராஜ ராஜசோழன், ராஜேந்திர சோழனின் பூமியில் இருப்பதில் மகிழ்ச்சி.
* திருவள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டில் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
* தமிழ்நாட்டிற்கு வெளியே யாருக்கும் செங்கோல் என்ற வார்த்தை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
* செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்தவர் பிரதமர் மோடி.
* பிரதமர் மோடியால் உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
* ஐ.நா.விலும் தமிழில் பேசி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி.
* பனாரஸ் பல்கலையில் தமிழ் ஆய்வு மையம் நிறுவப்பட்டுள்ளது.
* 75 ஆண்டுகளில் இந்தியா அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது. அதில், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
* மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் இந்தியா மாறியுள்ளது.
இவ்வாறு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.
- பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.10 லட்சத்தை தாண்டி உள்ளதால் வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருவாரூர்:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வரும் 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதனை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், கீரனூர் சோதனை சாவடியில் தலைமை காவலர் கிறிஸ்துராஜ், புஷ்பா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் பஸ்சில் பயணம் செய்த ஒருவரின் பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அவரை விசாரித்த போது, மன்னார்குடியை சேர்ந்த தமிழ்வாணன் (வயது 40) என்பது தெரியவந்தது.
ஆனால் அவர் வைத்திருந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. இது தொடர்பாக சோதனை சாவடியில் இருந்த போலீசார் தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமரேசன் தலைமையில் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.12.85 லட்சம் ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.10 லட்சத்தை தாண்டி உள்ளதால் வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அரசு பஸ்சில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆங்கில தேர்வை எழில் வேந்தன் எழுத வந்தார்.
- தேர்வு முடிந்ததும் அவரது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
மன்னார்குடி:
திருமக்கோட்டை அருகே தந்தை இறந்த துக்கத்திலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர் எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). விவசாயி. இவரது மகன் எழில்வேந்தன். இவர் திருமக்கோட்டை உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் ஆறுமுகம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார்.
அவரது இறுதிச்சடங்கு நடைபெறாத நிலையில் நேற்று 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடந்தது. தந்தை இறந்த துக்கத்தையும் பொருட்படுத்தாமல், சோகத்தையும் வெளிகாட்ட முடியாமல் தனது படிப்புக்காக தேர்வை எழுத வேண்டும் என்ற நிலையில் திருமக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆங்கில தேர்வை எழில் வேந்தன் எழுத வந்தார்.
அப்போது கோட்டூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பள்ளியின் தன்னார்வ உடற்கல்வி ஆசிரியர் பூபேஷ் ஆகியோர் மாணவருக்கு ஆறுதல் கூறி தகுந்த ஆலோசனை வழங்கி தேர்வு அறைக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாணவர் தேர்வு எழுதினார்.
தனது தந்தை உயிரிழந்து, அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது விருப்பபடி தனது கல்விக்கு எந்த தடையும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் நேற்றைய தேர்வில் எழில்வேந்தன் பங்கேற்றது அனைவர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு முடிந்ததும் அவரது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் எழில்வேந்தனின் பள்ளி நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
- தமிழ்நாட்டுக்கான சிறப்புத்திட்டங்கள் எதையும் வழங்காத மோடிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
- தூக்கத்தில் இருந்து எழுந்து தி.மு.க.வை தரக்குறைவாக பேசுகிறார்.
திருவாரூரில் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, பிரதமர் மோடி, தி.மு.க.வை விமர்சிப்பது ஏன்? தி.மு.க. மேல் அவர் ஆத்திரம் கொள்வது ஏன்? என்பது குறித்து பேசினார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டுக்கான சிறப்புத்திட்டங்கள் எதையும் வழங்காத மோடிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. இது மோடிக்கும் தெரியும். அதனால்தான், தி.மு.க. மேல் அளவுக்கு அதிகமான ஆத்திரத்தை கொட்டுகிறார். மாநிலம் மாநிலமாக சென்று தி.மு.க.வை விமர்சித்தார். இப்போது தமிழ்நாட்டுக்கு வந்தும் அதே பல்லவியைப் பாடுகிறார். தி.மு.க. மேல் ஏன் அவருக்கு இவ்வளவு கோபம்?. இந்தியா முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிராக தனித்தனியாக இயங்கி வந்த கட்சிகளை ஒன்றிணைக்க நான் காரணமாக இருந்தேன் என்ற ஆத்திரத்தில் தி.மு.க.வை விமர்சித்துக்கொண்டிருக்கிறார். தன்னை எதிர்க்க யாருமில்லை என்று இருந்தவரின் பிழைப்பை 'இந்தியா' கூட்டணி கெடுத்துவிட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேராது என்று கனவுலகத்தில் இருந்த மோடியின் தூக்கத்தை 'இந்தியா' கூட்டணி கலைத்துவிட்டது.
தூக்கத்தில் இருந்து எழுந்து தி.மு.க.வை தரக்குறைவாக பேசுகிறார். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இதுபோல் எத்தனையோ ஏச்சுகள், ஏளனங்கள், அரட்டல்கள், மிரட்டல்களை பார்த்துப் பழக்கப்பட்டவர்கள்தான் நாங்கள். வசவுகளை வாங்கி வாங்கி உரம் பெற்றவர்கள் நாங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பாஜகவிற்கு மாறுபவர்கள் மீது சட்டம் தனது கடமையை செய்யாதது ஏன் ?
- திமுக அறிக்கையை காப்பி அடித்து தேர்தல் அறிக்கையை ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நாகை, தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண் வருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கருணாநிதி பிறந்த, வளர்ந்த, வென்ற பகுதிகளை உள்ளடக்கிய தொகுதிக்கு வந்துள்ளேன். இந்தியாவின் புதிய அத்தியாயத்தை எழுதக்கூடிய தேர்தல் பிரசாரத்திற்காக வந்துள்ளேன்.
பிரசார கூட்டத்தை மாநாடு போல் ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாராட்டுகள்.
முரரொலியை படித்து வளர்ந்த நான், வேட்பாளர் முரசொலிக்காக வாக்கு கேட்கிறேன். இந்திய கம்யூ.வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் இருக்காது. மாநிலங்கள் இருக்காது.
கண்ணுக்கு எதிரிலேயே ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை பார்த்தோம். காஷ்மீரில் எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் வைத்துள்ளனர்.
இந்தியாவில் எல்லா கட்டமைப்புகளையும் பாஜக சிதைத்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் நிலைமை தமிழகத்திற்கு வரலாம்.
பாஜகவிற்கு மாறுபவர்கள் மீது சட்டம் தனது கடமையை செய்யாதது ஏன் ? பாஜக அழுகுனி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. மோடியின் ஆட்சி தொடர்வது தமிழகத்திற்கு அழிவு, இந்தியாவிற்கு நல்லது அல்ல.
தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்காத திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் வெளிச்சம் பாய்ச்சும் அளவிற்கு விடியலை திமுக அரசு வழங்கி வருகிறது.
திமுக ஆதரிக்கும் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். வங்கிகளில் குறைந்தபட்ச தொகை திட்டம் இருக்காது.
திமுக ஆதரிக்கும் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து செய்யப்படும். விற்பனை சந்தைகள் அமைக்கப்படும். திருவாரூரில் இருந்து புதிய ரெயில்கள்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை எடப்பாடி பழனிசாமியின் பம்மாத்து அறிக்கை. திமுக அறிக்கையை காப்பி அடித்து தேர்தல் அறிக்கையை ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் ஆளுநர் ஆய்வுக்கு புறப்பட்டபோது திமுக போராட்டம் நடத்தியது. இப்போது, ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தியுள்ளோம்.
ஆளுநர் விவகாரத்தில் இப்போது அதிமுக என்ன செய்கிறது? அதிமுக ஆதரித்ததால் தான் சிஏஏ சட்டம் அமலுக்கு வந்தது. மதுரை எய்ம்ஸ் விஷயத்தில் இழுத்தடிப்பது குறித்து மோடியிடம் அதிமுக கேள்வி கேட்டதா ?
கருப்புபணம் உள்ளிட்ட மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றினாரா ? 15 லட்சம் கூட வேண்டாம், 15 ரூபாயாவது மோடி கொடுத்தாரா ?
வேலை வாய்ப்பு அளிக்காமல் படித்த இளைஞர்கள் பக்கோடா விற்கலாம் என கூறினார்கள்.
விவசாயிகளை பாதிக்கும் 3 சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்தபோது அதிமுக என்ன செய்தது. பச்சை துண்டு போட்டபடி விவசாயிகளை ஈபிஎஸ் ஏமாற்றினார்.
விவசாயிகளுக்கு எதுவும் செய்யாததால் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடக்கிறது. அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை விட விவசாயிகள் தான் மோடிக்கு எதிரியாக தெரிகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.
- ஆழித்தேரோட்ட விழாவில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.
இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த பிப்ரவரி 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று 21-ந்தேதி நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய தேராகும். இந்த தேரின் நிலை பீடம் 30 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்டது. நான்கு ராட்சத இரும்பு சக்கரங்களுடன் இதன் எடை 220 டன்னாக இருக்கிறது. இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணியும் அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம் அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்பட்டு துணியால் அலங்கரிக்கப்பட்டு குதிரைகள் பூட்டப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை 300 டன் ஆகும். முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தேரோட்டத்தை முன்னிட்டு தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருளினார்.
இந்த ஆழித்தேரோட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் ஆரூரா! தியாகேசா!! என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தியாகராஜர் கோவிலின் கீழவீதியில் தொடங்கும் இந்த தேரோட்டம் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி என சுற்றி வந்து இன்று மாலை மீண்டும் நிலையடிக்கு தேர் வந்து சேரும். பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேரோட்டத்திற்கு முன்பு முருகர் தேர், விநாயகர் தேர் இழுத்து செல்லப்பட்டது.
ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய தேர்களும் இழுத்து செல்லப்பட்டன. மொத்தம் 5 தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக வீதியில் அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த தேரோட்டத்தின்போது தேரை நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் 500 முட்டுக்கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையில் செய்யப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற இந்த ஆழித்தேரோட்டத்தை பார்ப்பதற்காக லட்ச க்கணக்கான பொதுமக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்துள்ளனர். மக்கள் அதிகம் கூடுவதால் அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையின் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது. தேரோட்டத்தில் போக்குவரத்தை சீர் செய்தல், அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகள் நடைபெறாத வகையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






