என் மலர்
திருவாரூர்
- மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை வருகை தந்தார்.
- தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
திருவாரூர்:
திருவாரூரில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை வருகை தந்தார்.
முன்னதாக அவர் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோவிலில் உள்ள மூலவர் தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பித்தனர். பின்னர், அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அவர் கோவிலை பிரதட்சனம் செய்து அங்குள்ள பிற சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். அப்போது பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- காலநிலை மாற்றத்தால் பெரும் அழிவை சந்திப்பது விவசாயமாகும்.
- காப்பீட்டு நிறுவனங்கள் வணிக நோக்கோடு செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மன்னார்குடி:
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் இன்று மன்னார்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் பெரும் அழிவை சந்திப்பது விவசாயமாகும். இந்தியாவிலேயே தமிழ்நாடு மாநிலம் மட்டுமே தென்மேற்கு மற்றும் வடகிழக்கு இருபருவ மழைகள் பருவம் மாறி பெய்வதால் விவசாயம் பேரழிவை சந்திக்கிறது.
எனவே பேரிடர் பாதிப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கோடும், மத்திய அரசு உற்பத்தியிலும் இழப்பிலும் பங்கேற்கும் அடிப்படைக் கொள்கையோடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2018 -ம் ஆண்டு முதல் மேம்படுத்தப்பட்ட பிரதமர் காப்பீடு திட்டம் என்கிற பெயரில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களின் அடிப்படையில் 20 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு வணிக நோக்கோடு செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வணிக நோக்கோடு மத்திய மாநில அரசுகளின் பிரிமிய தொகை பங்கிட்டுக் கொள்ளும் நிலை உள்ளது.
இதிலிருந்து பாதுகாப்பதற்கு மத்திய அரசு விரைந்து வழிகாட்டு முறைகளில் மாற்றம் கொண்டு வந்து பேரிடரால் பாதிக்கப்படும் விவசாயிகள் நலனை முன்னிறுத்தி காப்பீட்டு திட்டம் செயல்படுத்துவதை உறுதிப்படுத்திட வலியுறுத்தி மத்திய அரசின் காப்பீட்டு நிறுவன தலைவர் ரித்திஷ் சவுகானுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான உண்மைக்கு புறம்பான வகையில் காப்பீடு இழப்பீடு நிர்ணயம் செய்துள்ள மத்திய அரசின் அரசாணையை ரத்து செய்திட வேண்டும்.
மாவட்ட கலெக்டர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழு மூலம் மழை அளவை கணக்கில் கொண்டும், மேட்டூர் அணையின் நீர்ப்பாசன அளவை கவனத்தில் கொண்டும் இழப்பை மறு ஆய்வு செய்து உண்மையான மகசூல் இழப்பிற்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும்.
காவிரி டெல்டாவில் மேட்டூர் அணை வறண்டதால் 2023 ஆகஸ்ட் 7-ந் தேதியே அணை மூடப்பட்டதாலும், வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகப் பெய்ததால் சம்பா சாகுபடி முற்றிலும் அழிந்த நிலையில் காப்பீட்டிற்கான இழப்பீட்டை நிபந்தனையின்றி 100 சதவீதமும் உடன் வழங்கிட வேண்டும்.
அறுவடை ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் ஆண்டுதோறும் மகசூல் இழப்பிற்கு ஏற்ப காப்பீட்டுக்கான இழப்பீடு வழங்கும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளுக்கான தற்போதைய உத்தேச மகசூல் அளவை கணக்கில் கொள்வதை கைவிட வேண்டும்.
தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மட்டுமே காப்பீடு செய்வதை கட்டாயமாக்கிட வேண்டும். தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதை கொள்கை ரீதியாக கைவிட முன்வர வேண்டும்.
அரசு நிரந்தர வேளாண் பணியாளர்களை நியமனம் செய்து வெளிப்படை தன்மையுடன் அறுவடை ஆய்வு அறிக்கை செய்திட வேண்டும்.
அவ்வாறு மேற்கொள்ளும் ஆய்வு அறிக்கையின் இறுதி பட்டியலை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழுவிற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெற்று இறுதி படுத்திடும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
இந்நிலையில் பிரதமரை நாளை (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் சந்திக்க உள்ள நிலையில் காப்பீட்டுக்கான இழப்பீடு முழுமையாக வழங்குவதற்கும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு குறித்தான அரசாணையை ரத்து செய்திடவும் வலியுறுத்த வேண்டும்.
மேலும் காவிரியின் குறுக்கே தமிழ்நாடு ராசிமணலில் அணை கட்டி கடலில் உபரிநீர் தடுப்பதை தடுத்து நிறுத்துவதற்கு பிரதமரிடம் அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன.
- மதுவை உற்பத்தி செய்கின்ற முதலாளிகளை எதிர்க்கின்ற செயலாகும்.
திருவாரூர்:
மது போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்த விளக்க மண்டல செயற்குழு கூட்டம் திருவாரூரில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசியதாவது:-
மது ஒழிப்பு என்கிற உணர்வு பூர்வமான பிரச்சனையை கையில் எடுத்துள்ளேன். அனைத்து கட்சிகளும் மதுவேண்டாம், மதுவிலக்கு வேண்டும் என்பார்கள், ஆனால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மாட்டார்கள். இதனால் தான் இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன. இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து மதுவிலக்கு என்ற முடிவு எடுத்தால் நிச்சயம் மதுவை ஒழிக்க முடியும் மது என்பது மிகப்பெரிய லாபம் தரும் தொழில், மிகப்பெரிய கட்டமைப்பினை கொண்டது. மதுக்கடைகளை மூடுவது என்பதை விட மது ஆலைகளை மூட வேண்டும்.
டாஸ்மாக் கடையை மூடுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. டாஸ்மாக் என்பது கார்பரேசன் தமிழ்நாடு அரசே உருவாக்கி உள்ளது. இதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பெரிய தொழில் அதிபர்களுடன் முரண்படுகின்ற விசயம். மதுவை உற்பத்தி செய்கின்ற முதலாளிகளை எதிர்க்கின்ற செயலாகும். இது குறித்து தொடக்கத்தில் இருந்து பேசி வருகிறேன்.
நாங்கள் மது ஒழிப்பு குறித்து பேசுவதால் தற்போது தி.மு.க. கூட்டணியை சிலர் உடைக்க நினைத்து பேசி வருகின்றனர். தேர்தலில் அரசியல் வேறு, மதுவிலக்கு கொள்கை வேறு என்று கூறுகிறோம். மதுவிலக்கு குறித்து தி.மு.க., அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் என அனைவரும் கூறுகிறோம். தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு என்பது மட்டுமல்ல, தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வந்தால் பயன் அளிக்கும்.
தூய்மையான நோக்கத்துக்கு தேர்தல் அரசியல் முடிச்சு போட வேண்டாம். மது ஒழிப்பு கொள்கையால் அரசியலில் எந்த பாதிப்பு வந்தாலும் சந்திக்க தயார். கூட்டணி உறவில் பாதிப்பு வந்தாலும் வரலாம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். இப்போது நாங்கள் தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியில் தொடர்கிறோம், தொடரும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது.
- சென்னை மாநகராட்சியை கண்டித்து வருகிற 28-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம்.
திருவாரூர்:
திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சுதந்திர தினத்தன்று கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்தில் தி.மு.க. பங்கேற்றது குறித்து அரசு தான் பதில் சொல்ல வேண்டும். எங்களை பொறுத்த அளவு தி.மு.க. தேனீர் விருந்தில் பங்கேற்காது என்று தான் கூறினார்கள். தி.மு.க. அரசும், கவர்னரும் தொடர்ந்து முரண்பாட்டுடன் இருக்க வேண்டாம் என்பதற்காக தேனீர் விருந்தில் கலந்து கொண்டதாக கூறுகிறார்கள்.
கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசிடம் கேட்டதற்கு உடனடியாக ஒத்துக் கொண்டார்கள். அதே வேளையில், தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது.
சொத்து வரி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியை கண்டித்து வருகிற 28-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம்.
பாஜக.வுடன் யார் கூட்டணியில் சென்றாலும் அவர்களை எதிர்க்கிற கூட்டணியில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவாரூர் நீடாமங்கலம் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி பிடிபட்டான்.
- ரவுடி நிர்மல்ராஜை உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் சுட்டுப்பிடித்துள்ளார்.
திருவாரூர் நீடாமங்கலம் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்றபோது ரவுடி நிர்மல்ராஜை உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் சுட்டுப்பிடித்துள்ளார்.
போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காலில் காயமடைந்த ரவுடி மனோ நிர்மல்ராஜ்க்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சக்தி என்கிற மாணவர் படுத்த படுக்கையிலேயே உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
- திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்த மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 4ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார்.
இந்நிலையில், கல்லூரி விடுதியின் உள்ளே அறையில் நள்ளிரவு படித்துவிட்டு உறங்கிய மாணவர் காலையில் அறையை திறக்காததால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பிறகு, சக மாணவர்கள் அறையை திறந்து பார்த்தபோது, சக்தி என்கிற மாணவர் படுத்த படுக்கையிலேயே உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மாணவர் சக்தியின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தாரா ? அல்லது இது தற்கொலையா என்பது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
- கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் போட்டியிடுவதாக அறிவித்தனர். அதன்படி இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் ஜனாதிபதி ஜோ பைடனின் நடவடிக்கைகள் சமீப காலமாக விமர்சனத்துக்குள்ளாகின. குறிப்பாக நேரடி விவாதத்தின்போது டிரம்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியது, உக்ரைன் அதிபரை புதின் என குறிப்பிட்டது மற்றும் மனைவி என்று நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்றது போன்றவை பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதனையடுத்து ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து அவர் விலக வேண்டும் என சொந்த கட்சியினரே கூறி வந்தனர். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடுவேன் என பிடிவாதமாக இருந்து வந்தார். இதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் டெலாவரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து தான் விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவளியும், துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிசின் பெயரை அவர் முன்மொழிந்தார்.
இவரது இந்த அறிவிப்புக்கு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பூர்வீகம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி.கோபாலன் ஸ்டெனோகிராபராக பதவி வகித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் பணியாற்றி இருக்கிறார்.
ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி.கோபாலனை அனுப்பி வைத்திருந்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று பின்னர் அமெரிக்காவில் பி.வி கோபாலன் குடியேறி உள்ளார். இவரது இரண்டாவது மகளான சியாமளாவுக்கும் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் இந்த கமலா ஹாரிஸ்.
இவர் முன்பு வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராகவும் அவர் பதவி வகித்து வந்துள்ளார். நீண்ட நாட்களாக அரசியலில் இருந்து வளர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று துளசேந்திரபுரம் கிராமத்திற்கு வருகை தந்து மக்களை சந்திக்க வேண்டும் எனவும் இந்தியாவிற்கு உறுதுணையாக அவர் பணியாற்ற வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற கிராம மக்கள் ஒன்றிணைந்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
"அவங்க ஜெயிக்கணும்..ஜெயிச்சு நல்லது பண்ணனும்"..அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்..#thanthitv #kamalaharris #thiruvarur pic.twitter.com/5PfA6nVE46
— Thanthi TV (@ThanthiTV) July 22, 2024
- ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சுமார் ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.
மன்னார்குடி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இளஞ்சேரன் தலைமையில் வழக்கறிஞர்கள் மன்னார்குடி- மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
தகவல்அறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதன் பின்னர், சுமார் ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கோவில் குளத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகளும் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகே பழையவலம் கிராமத்தில் சிவன்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமாக பெரியகுளம் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்தக்குளத்திற்கு பொதுமக்கள் சென்றனர்.
அப்போது அங்கு மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர் இது குறித்து வைப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் போலீசார் சிவன் கோவில் பெரிய குளத்திற்கு வந்து பார்வையிட்டனர். அங்கு கிடந்த அடையாளம் தெரியாத மனித மண்டை ஓடு மட்டும் எலும்பு துண்டுகளை சேகரித்து பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக பழையவலம் கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் குளத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகளும் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கருணாவூர் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவனும், அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (வயது 18) என்பவரும் உறவினர்கள்.
இந்நிலையில் பச்சகுளம் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவை காண்பதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளானது பச்சகுளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரசாந்த் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி மாணவன் காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தேவங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவில் திருவிழாவை காண்பதற்கு சென்றவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மின்சாரம் தாக்கியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கோட்டகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். கூலித் தொழிலாளி. இவரது மகன் மதன்ராஜ் (வயது 15). இவர் மன்னார்குடியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் அப்பகுதியில் மாரியம்மன் கோவிலில் ஆனி மாத திருவிழா நடைபெற உள்ளது. திருவிழா நடைபெறுவதை ஒட்டி கோவில் திருவிழாவிற்காக மதன்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் ரூபன் (21) சஞ்சய் ( 19), சித்தார்த்தன் (22) ஆகியோர் கோவிலின் அருகே பேனர் வைத்தனர்.
அப்போது அந்த பேனர் மேலே சென்ற மின் கம்பி உரசியதில் 4 பேர் மீதும் மின்சாரம் தாக்கியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
உடன் அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மதன்ராஜ் ஏற்கனவே இறந்துள்ளதாக தெரிவித்தனர். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இறந்த மதன்ராஜ் உடலை உடற்கு ஆய்வுக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது கோவில் திருவிழாவில் பேனர் வைக்கும் பொழுது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கோவிலின் தல வரலாறு அடங்கிய பதாகையினை கூர்ந்து படித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
- கோவிலின் வாசலில் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள திருச்சிறுகுடி கிராமத்தில் மங்களாம்பிகை சமேத சூட்சுமபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் செவ்வாய்க்கென்று தனி சன்னதி உள்ளது. திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது.
இத்தலத்தில் வழிபட்டால் வேண்டுவோருக்கு வேண்டிய பதவிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த கோவிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் சிறப்பு வழிபாடு நடத்தினர். திருச்சிறுக்குடியில் சாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம் திருச்சிறுக்குடி சூட்சுமபுரீஸ்வரர் கோவிலின் தல வரலாறு அடங்கிய பதாகையினை கூர்ந்து படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் என்னும் ஊரில் உள்ள சேஷபுரீஸ்வரர் எனப்படும் பாம்புரநாதர் கோவிலும் அவர் தனது மகனுடன் சாமி தரிசனம் செய்தார். இந்த கோவிலில் ராகு-கேது ஒரே உடலில் அமைந்து இருப்பதால் இந்த கோவிலில் ராகு-கேது பரிகாரத்திற்கான பிரசித்தி பெற்றதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கோவிலின் வாசலில் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் உடன் பதவி வரம் அருளும் திருச்சிறுக்குடி சூட்சமபுரீஸ்வரர் கோவில் மற்றும் ராகு-கேது பரிகாரத்தலமான திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோவில் ஆகியவற்றில் தரிசனம் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






