என் மலர்
நீங்கள் தேடியது "குருப்பெயர்ச்சி 2024"
- ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும்.
- மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் அமைந்துள்ளது. சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை கோவிலில் சிறப்பு குருபரிகார ஹோமமும், அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. குருபகவானுக்கு தங்ககவசத்துடன் சர்வ அலங்காரம் செய்யப்பட்டது.

மாலை 5.19 மணிக்கு குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அப்போது, குருபகவானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
குருப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்வதற்காக காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணமாக இருந்தனர். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
குருப்பெயர்ச்சியின் போது ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்களும் குருபகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






