என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • காந்தி ராஜனின் கார் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியது.
    • சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்து சென்றுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்தவர் காந்தி ராஜன் (வயது 59). இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.

    நேற்று இரவு அவர் பணி முடிந்து நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே முன்னால் சென்ற பஸ் ஒன்று திடீர் என நிறுத்தப்பட்டது.

    இதனால் அந்த பஸ்ஸின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு காரில் இருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    தொடர்ந்து சாலையில் கிடந்த தனது மோட்டார் சைக்கிளை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி விட்டு காரை வழிமறித்து நின்று வாக்குவாதம் செய்துள்ளார். உடனே காரில் இருந்து இறங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காந்திராஜன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது அவர் காரின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபர் மீது காரை ஏற்றியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கத்தி கூச்சலிட்டுள்ளார்.

    சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்து சென்றுள்ளது. இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வைரலாக பரவிய அந்த வீடியோ பொதுமக்களிடையே பேசுபொருளாக மாறியது.

    இதனிடையே அந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடந்தபோது அந்த வாலிபரும், சப்-இன்ஸ்பெக்டரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து துணை கமிஷனர் பிரசன்ன குமார் கூறுகையில், பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது உரிய விசாரணைக்கு பின்னர் குற்ற நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    புகாருக்கு உள்ளான காந்திராஜன் காவல் நிலைய பணியில் இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவருக்கு போக்குவரத்து பிரிவில் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் காரில் பணிக்கு சென்று வந்த நிலையில் தற்போது மதுபோதையில் வந்து ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் புகாருக்குள்ளான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது.

    • 15 பேரையும் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.
    • நீதி குழும நடுவர்கள் விசாரணை நடத்தி 15 சிறார்களுக்கும் அறிவுரை வழங்கியதோடு சில நிபந்தனையும் விதித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வன்னிகோனேந்தலில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மிட்டாய் வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளான்.

    அப்போது அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் சேர்ந்து 9-ம் வகுப்பு மாணவனிடம் மிட்டாயை பிடுங்கிக் கொண்டதோடு, அவனை அவதூறாக பேசியுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை அழைத்துக் கொண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இரு தரப்பினராக மாணவர்கள் பிரிந்து சண்டையிட்டு கொண்டனர்.

    அங்கிருந்த ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தும் மாணவர்கள் சமாதானமாகவில்லை. உடனடியாக தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து சுமார் 15 மாணவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் 15 பேரையும் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.

    நீதி குழும நடுவர்கள் விசாரணை நடத்தி 15 சிறார்களுக்கும் அறிவுரை வழங்கியதோடு சில நிபந்தனையும் விதித்தனர். அந்த வகையில் காலாண்டு தேர்வு முடிந்தவுடன் அந்த வினாத்தாளில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்வி பதில்களை எழுதிக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்றும், ஒழுக்கமான முறையில் தலைமுடியை வெட்டி விட்டு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டு அவர்களை விடுவித்தனர்.

    • சுமார் 3 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • லலிதா மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சிறைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, அம்பாசமுத்திரம் தாலுகாவை சேர்ந்த லலிதா என்பவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவல் கைதியாக இருக்கும் தனது மகன் வினோத்தை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

    சிறை விதிமுறைகளின்படி, கைதிக்கு கொடுப்பதற்காக அவர் கொண்டு வந்திருந்த பிஸ்கட், கடலைமிட்டாய், ஊறுகாய் மற்றும் பேரீச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை சிறைக் காவலர்கள் சோதனை செய்தனர்.

    ஏட்டு கண்ணன் தலைமையிலான சிறைக்காவலர்கள் நடத்திய சோதனையின்போது, பேரீச்சம்பழங்களில் சிலவற்றின் கொட்டைகள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சுமார் 3 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து சிறை அலுவலர் முனியாண்டி, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கஞ்சாவை மறைத்து கொண்டு வந்து சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருளை கடத்த முயன்ற குற்றத்திற்காக லலிதா மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சிறைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கைது செய்யப்பட்ட லலிதாவின் மகன் வினோத், ஏற்கனவே கடையம் போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் முதல் சிறையில் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்தலில் ஜெயிக்க போவது தேசிய ஜனநாயக கூட்டணி தான்.
    • தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடக்கிறது.

    பாஜக-வின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் எழுப்பிய கேள்விக்கு நயினார் நாகேந்திரன் அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி: ஓ. பன்னீர்செல்வத்திடம் நீங்கள் 2 நாட்களுக்கு முன்பாக பேசியதாக கூறியுள்ளார். அவரை கூட்டணியில் இணைக்க வாய்ப்புள்ளதா?

    பதில்: அதையெல்லாம் இப்போது கூற முடியாது.

    கேள்வி: டி.டி.வி. தினகரன், விஜய் தலைமையில் ஒரு கூட்டணி, சீமான் தலைமையில் ஒரு கூட்டணி என்று கூறி 4 முனை போட்டி என்று கூறுகிறாரே? நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: 4 முனை போட்டியும் நடக்கலாம். 5 முனை போட்டியும் நடக்கலாம். தேர்தலில் ஜெயிக்க போவது தேசிய ஜனநாயக கூட்டணி தான்.

    கேள்வி: மதுரையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்து எதுவும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருக்கிறதா?

    பதில்: கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி உடனும் நான் பேசி இருக்கிறேன். அவர் டெல்லிக்கு சென்று தலைவர்களை சந்திக்க இருக்கிறார். அதன் பிறகு நல்ல விஷயங்கள் நிறைய நடக்கும்.

    கேள்வி: செங்கோட்டையனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: அவர் கூட்டணி கட்சியில் இருக்கிறார். அதனால் சென்று பார்க்க இருக்கிறார்.

    கேள்வி: அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதை தீர்க்க வாய்ப்பு இருக்கிறதா?

    பதில்: அ.தி.மு.க.வில் குழப்பமே இல்லையே.

    கேள்வி: செங்கோட்டையன் திடீர் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார் அல்லவா?

    பதில்: அது குழப்பம் என்று சொல்ல முடியாது.

    கேள்வி: நடிகர் விஜய் பிரசார பயணத்தில் ஈடுபட்டுள்ளார். பெரம்பலூரில் மக்களை சந்திக்கவில்லை. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: அடுத்தவர்கள் கட்சி கூட்டத்தை பற்றி நான் பேச விரும்பவில்லை. அது அவர்களின் நிர்வாகத்தை பொருத்தது. கூட்டம் சேர்த்தால் ஜெயிக்க முடியுமா?

    ஓட்டு வாங்கினால் தான் ஜெயிக்க முடியும் என்றார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடக்கிறது. பாரதீய ஜனதா யாரையும் எதிரி கட்சியாக கருதாமல் எதிர்கட்சியாக தான் பா.ஜ.க. கருதுகிறது. தனிப்பட்ட விமர்சனங்களை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றார்.

    • டீக்கடைகள், ஓட்டல் என அனைத்து கடைகளும் இங்கு செயல்பட்டு வருகிறது.
    • பழக்கடை மற்றும் அதனை அடுத்துள்ள துணிக்கடை ஆகிய 2 கடைகளும் தீப்பிடித்து மளமளவென கொளுந்து விட்டு எரிந்துள்ளது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 150 கடைகள் கொண்ட மார்க்கெட் இயங்கி வருகிறது.

    திசையன்விளையின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த மார்க்கெட்டில் வாரச்சந்தையும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை செயல்பட்டு வருகிறது.

    இந்த சந்தையில் காய்கறிகள், மளிகை பொருட்கள், பழங்கள், கருவாடு, மீன், சிக்கன், மட்டன், தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதோடு குளிர்பான கடைகள், டீக்கடைகள், ஓட்டல் என அனைத்து கடைகளும் இங்கு செயல்பட்டு வருகிறது.

    இந்த கடைகள் வியாபாரிகளுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் தரை வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு கடைகள் வைத்திருப்போர் தற்காலிகமாக தென்னந்தட்டி மற்றும் தகர சீட்டு கொண்டு தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று வழக்கம்போல் வாரச்சந்தை நடைபெற இருந்த நிலையில் அதிகாலை பேரூராட்சி சந்தையின் வெளிப்புறம் அமைந்துள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள், திடீரென சந்தையின் உள்புறம் இருந்து புகை மண்டலமாக வருவதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது சந்தை வடக்கு வாசல் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள பழக்கடை மற்றும் அதனை அடுத்துள்ள துணிக்கடை ஆகிய 2 கடைகளும் தீப்பிடித்து மளமளவென கொளுந்து விட்டு எரிந்துள்ளது.

    இதனை கண்ட அந்த பகுதியில் நின்றவர்கள் உடனடியாக அங்கு இருந்த தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சி செய்துள்ளனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் உடனடியாக திசையன்விளை தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும் சந்தை முழுவதும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தீ விபத்தில் திசையன்விளையை சேர்ந்த ராபர்ட் பாக்கியசீலன்(வயது 30) என்பவரின் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பழக்கடை, வாகனேரியை சேர்ந்த அன்னக்கிளி(48) என்பவரின் ரூ.5 லட்சம் மதிப்புள்ள துணிக்கடை மற்றும் தராசு, மர அலமாரி, தளவாடப் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.

    தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பேரூராட்சிக்கு சொந்தமான திசையன்விளை தினசரி மற்றும் வாரச்சந்தையில் இது போன்று தீ விபத்து அடிக்கடி நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. பேரூராட்சி சந்தையினை நவீனப்படுத்திட ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. எனவே ஸ்மார்ட் மார்க்கெட்டாக மாற்றினால் மட்டுமே இதுபோன்ற தீ விபத்தை தடுக்க முடியும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உவரி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
    • கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி அன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார்.

    தொடர்ந்து அவர் அதே மாதத்தில் 4-ந்தேதி அவரது பண்ணை வீட்டில் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமாரின் உடல் இரும்பு கம்பி மூலம் கட்டப்பட்டிருந்ததாகவும், உடலில் சிமெண்ட் கல் கட்டப்பட்டிருந்ததாகவும், வாயில் ஸ்டீல் ஸ்க்ரப்பர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உவரி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.

    ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தனக்கு பணம் தர வேண்டிய நபர்களால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி ஒரு 'மரண வாக்குமூலம்' மற்றும் கடிதம் ஒன்றை எழுதியிருந்ததார்.

    அந்த கடிதத்தில் பல அரசியல்வாதிகள் மற்றும் நண்பர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஆனால் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி அன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. கூடுதல் சூப்பிரண்டு சங்கர் மற்றும் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழு இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    ஆனால் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பலமுறை சம்பவ இடங்களை ஆய்வு செய்தும், பல்வேறு கோணங்களில் விசாரித்தும் எவ்வித முடிவுக்கும் இதுவரை போலீசாரால் வர முடியவில்லை. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் எவ்வித பயனுள்ள தடயங்களையும் அளிக்கவில்லை. இதனால், விசாரணை அதிகாரிகள் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் பிற மறைமுக ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    விசாரணை நீடித்து வரும் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் ஜெயக்குமார் மரணத்தை சுற்றியுள்ள மர்மம் நீடிக்கிறது. அவரது குடும்பத்தினரும், கட்சித் தொண்டர்களும் இந்த சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த தெளிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இதுகுறித்து காங்கிரசார் கூறுகையில், ஜெயக்குமாரின் கொலை வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. மீது எங்கள் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம் என்று தெரிவித்தனர்.

    சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கூறுகையில், ஜெயக்குமார் கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று சுருக்கமாக தெரிவித்து முடித்து விடுகின்றனர்.

    காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்தின் மர்மம் சுமார் 500 நாட்களாகியும் இதுவரை விலகாமல் உள்ளது.

    • நெல்லை மாநகர பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று மாலையிலும் பரவலாக மழை பெய்தது.
    • தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பரவலாக நேற்று மாலையில் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலை மிஞ்சும் வகையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் திடீர் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை மாநகர பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று மாலையிலும் பரவலாக மழை பெய்தது. டவுன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் தெருக்களில் மழைநீர் ஓடியது.

    மாநகரை பொறுத்தவரை அதிகபட்சமாக நெல்லையில் 13 மில்லிமீட்டரும், பாளையில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மூலைக்கரைப்பட்டி சுற்று வட்டாரத்தில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் வானில் கருமேகம் திரண்டு காணப்பட்டது. குளிர்ச்சியான காற்று வீசியதோடு, பலத்த இடி-மின்னலும் ஏற்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கார் சாகுபடியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் சுற்றுவட்டாரங்களில் நெற்கதிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் நேற்று பெய்த மழையால் பல இடங்களில் நெற்கதிர்கள் வயலில் சாய்ந்தன.

    மேலும் மழை காரணமாக கார் சாகுபடிக்கான அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அறுவடை செய்து மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும் மழையில் நனைந்து சேதமாகியுள்ளது.

    குறிப்பாக மணிமுத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கார் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை பணிகள் சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென பெய்த மழை காரணமாக நெல் அறுவடை பணிகள் அங்கு முழுமையாக பாதிக்கப்பட்டது.

    ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டு மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும், கொள்முதல் செய்வதற்காக குவியல் குவியலாக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகளும் மழையில் நனைந்து நாசமாகியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    அணைகளை பொறுத்தவரை மணிமுத்தாறு அணையில் 17 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை வனப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசியதோடு, விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பரவலாக நேற்று மாலையில் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிவகிரி சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்துள்ளது. அங்கு 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை, சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்துமலை அருகே பலபத்திரராம புரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருவேங்கடத்தில் 6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் நடுவக்குறிச்சி, பழங்கோட்டை பகுதியிலும் பலத்த மழை பெய்துள்ளது.

    • பெண் சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த நரசிங்க நல்லூர் பொன்விழா நகரை சேர்ந்தவர் அப்துல் வகாப் (வயது 37).

    இவர் கராத்தேவில் டிப்ளமோ முடித்துள்ள நிலையில் டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் கராத்தே வகுப்பு நடத்தி வருகிறார். இதேபோல் பாளை கே.டி.சி. நகர் பகுதியிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.

    இந்த 2 பயிற்சி வகுப்புகளிலும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்துல் வகாப்பின் மையத்திற்கு சுத்தமல்லி பகுதியை சேர்ந்த ஒருவரின் 13 வயது மகள் சென்று கராத்தே படித்து வருகிறார்.

    இவரது தாய் தினமும் காலையில் அந்த சிறுமியை பயிற்சி மையத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளார். அப்போது அப்துல் வகாப் அந்த பெண்ணிடம் தவறான நோக்கத்தில் பழகிட, செல்போன் எண்ணை அவரிடம் இருந்து பெற்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் நைசாக பேசி ஆசை வார்த்தை கூறி தனிமையில் பழகி உள்ளார்.

    தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவரவே, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் சமீப காலமாக அந்த பெண் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற அப்துல் வகாப், போன் செய்தபோது எதற்காக எடுக்கவில்லை என்று கூறி அவரை தாக்கியதோடு, தான் அழைக்கும்போது தன்னுடன் வந்து தனிமையில் இருக்க வேண்டும் என்றும் மிரட்டி உள்ளார். இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

    இதனால் அப்துல் வகாப் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். உடனடியாக அந்த பெண் சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    அப்துல் வகாப் தினமும் தனது பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களின் தாயாரை நோட்டமிட்டு அதில் சில பெண்களிடம் நைசாக பேசி அவர்களது செல்போன் எண்களை வாங்கி பேச்சு கொடுத்துள்ளார்.

    தொடர்ந்து அவர்களை ஆசை வார்த்தை கூறி மயக்கி தனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அவரது மன்மத லீலையின் வலையில் சுமார் 8 பெண்கள் வரை ஏமாந்து இருப்பதும், சில பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கையை இழந்திருப்பதும் தெரிய வந்தது.

    மேலும் இதனை வெளியே தெரிவித்தால் தங்களுக்கு அவமானம், வெளியில் நடமாட முடியாது என்று கருதி அந்த பெண்கள் எதையும் வெளியே சொல்லாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

    தற்போது பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கராத்தே மாஸ்டரின் இந்த மோசமான நடவடிக்கைகளை அறிந்தே அவரிடம் இருந்து விலகியதாகவும், அதனால் தான் அப்துல் வகாப் வீட்டிற்கு சென்று பிரச்சினை செய்ததாகவும் தகவல் தெரியவந்தது.

    இதையடுத்து சுத்தமல்லி போலீசார் நேற்று இரவு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அப்துல் வகாபை கைது செய்தனர். அவரால் பாதிக்கப்பட்ட மேலும் சில பெண்கள் தைரியமாக புகார் அளித்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.

    • பலமுறை டி.டி.வி. தினகரனோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.
    • தி.மு.க.வுக்கு மாற்றான அரசு அமைய வேண்டும்.

    நெல்லை:

    நெல்லையில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களை தனது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நிறைய கிரகணங்கள் நடைபெற்று வருகிறது. ஆட்சி மாற்றம் வேண்டும், கிரகணம் விரைவில் நடைபெறும். அகில இந்திய தலைமை என்ன கூறுகிறதோ, அதைத்தான் நான் கேட்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

    அ.தி.மு.க. கட்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இது தொடர்பாக பல தலைவர்களிடம் நான் பேசியுள்ளேன். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது. தி.மு.க.வுக்கு மாற்றான அரசு அமைய வேண்டும். இதற்காக அ.தி.மு.க. கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

    டெல்லி தலைமையோடு பேசி அனைவரையும் ஒன்றிணைக்க ஒரு முடிவு எடுக்கப்படும். தோல்வியையே பிறருக்கு கொடுத்து வளர்ந்தவர்கள் நாங்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். போல. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தோல்வியைத் வழங்குவோம்.

    2001-ல் நடந்த தேர்தலில் என் போன்றவர்கள் மேலே வந்ததில் டி.டி.வி. தினகரனுக்கு முக்கிய பங்கு உண்டு. 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. ஒரு கூட்டணியாக இருந்தது. அப்பொழுது டி.டி.வி. தினகரன் கூட்டணியில் இல்லை. பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார்.

    2021 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வோடு பா.ஜ.க. கூட்டணியோடு இருந்து போட்டியிட்டு 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றோம்.

    பாட்டாளி மக்கள் கட்சியும் சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தது. தொடர்ந்து எங்களோடு இருப்பார்கள் என்று பலமுறை கூறியிருக்கிறேன்.

    பலமுறை டி.டி.வி. தினகரனோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அப்பொழுது எல்லாம் கூட்டணி தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் திடீரென்று நயினார் தான் காரணம் என்று கூறுகிறார். நயினார் நாகேந்திரன் செயல்பாடுகளால் தான் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம். நயினார் நாகேந்திரன் அகங்காரத்தில் செயல்படுகிறார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கு விளங்கவில்லை.

    கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் ஓட்டுகள் திருட்டு நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளோம். விரைவில் அதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அவர் சுதந்திர போராட்டத்திற்காக போராடிய நபர். சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவரும் தற்போது ஜாதி தலைவராக மாற்றப்பட்டு விட்டார்கள். இப்போது அந்த சர்ச்சை வேண்டாம். ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் போது செங்கோட்டையனை பா.ஜ.க.வுக்கு அழைப்பது நாகரீகமாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நான் அறிவிக்கவில்லை.
    • அ.தி.மு.க. இணைய வேண்டும் என ஆரம்ப காலத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன்.

    நெல்லை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * நெல்லை பூத் கமிட்டி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என அண்ணாமலைதான் கூறினார்.

    * தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நான் அறிவிக்கவில்லை.

    * கூட்டணியில் இருந்து அ.ம.மு.க. விலக நான்தான் காரணம் என்று எந்த அடிப்படையில் டிடிவி தினகரன் கூறுகிறார் என தெரியவில்லை.

    * டி.டி.வி. தினகரனுக்கும் எனக்கும் இதுவரை எந்த கருத்து வேறுபாடும் இருந்ததில்லை.

    * அ.தி.மு.க. இணைய வேண்டும் என ஆரம்ப காலத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன்.

    * செங்கோட்டையனை எங்கள் கட்சிக்கு அழைப்பது நாகரிகமாக இருக்காது என்றார்.

    • காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுக்காக செயல்படுவதாக ஒரு கட்டமைப்பை பா.ஜ.க. திட்டமிட்டு உருவாக்குகிறது.
    • பாஜக எங்கு இருக்கிறதோ, அங்கு சர்வ நாசம் தான் உருவெடுக்கும்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நெல்லையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்குரிமை விளக்க விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டுக்காக பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

    பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாக்கு என்பது ஒவ்வொரு தனிமனிதனின் உரிமை. அந்த வாக்கு அதிகாரத்தை தேர்தல் ஆணையமும், பா.ஜ.க.வும் சேர்ந்து பறித்து வருவதை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும்தான் இந்த மாநில மாநாடு நடத்தப்படுகிறது.

    இதே கருத்தை வலியுறுத்தித்தான் ராகுல் காந்தி பீகாரில் பயணம் மேற்கொண்டார். இப்போது வாக்குகளை பறிப்பதற்கும், அடுத்ததாக குடியுரிமையைப் பறிப்பதற்கும் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திட்டமிடுகின்றன.

    இதனை தடுக்கக் கோரி நாங்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்லாவிட்டாலும், நாங்கள் கேட்ட பல தரவுகளை அவர்கள் அழித்துவிட்டனர். இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கரேஜ், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

    நான் எப்போதும் காங்கிரசின் குரலாகவே பேசுகிறேன். ஆனால், காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுக்காக செயல்படுவதாக ஒரு கட்டமைப்பை பா.ஜ.க. திட்டமிட்டு உருவாக்குகிறது.

    மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், தூய்மைப் பணியாளர் பிரச்சினைக்காகவும் தி.மு.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவரக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்திலும் நாங்கள் பங்கேற்றோம். இப்படி மக்கள் நலனுக்காகப் பல போராட்டங்களை நடத்தியுள்ள நிலையில், தி.மு.க.வுக்கு குரலாக காங்கிரஸ் இருப்பதாக அண்ணாமலை எதன் அடிப்படையில் சொல்கிறார் எனத் தெரியவில்லை.

    பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். 4 தேர்தல்களில் தோல்வியை கண்ட கூட்டணி. அது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு கூட்டணி. மக்கள் எதிர்ப்பை பார்த்துவிட்டுத்தான் டி.டி.வி. தினகரன் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்.

    பாஜக எங்கு இருக்கிறதோ, அங்கு சர்வ நாசம் தான் உருவெடுக்கும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. 4 அணிகளாக உடைந்ததற்கும், பா.ம.க.வில் தற்போது நிலவும் பிரச்சினைக்கும் பாரதீய ஜனதா தான் காரணம். அவர்கள் இந்தியா கூட்டணியை உடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    யார் ஒன்றாகச் சேர்ந்தாலும் இந்தியா கூட்டணிக்கு எந்த பாதகமும் கிடையாது. எங்கள் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளும் ஒன்றாக இணைந்தால்கூட, வேறு ஒருவர் தான் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார். அவரது வீட்டு வாசலில் எடப்பாடி பழனிசாமி சென்று நிற்கும் நிலைதான் உருவாகும். தற்போதைய சூழலில் தமிழகத்தில் 3-வது அணி உருவாவதற்கு வாய்ப்பே கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கைதான சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு டவுன் பகுதியில் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் வெங்கடேஷ் என்ற ஆனந்த் (வயது 19). தாய்-தந்தை இறந்துவிட்ட நிலையில், வெங்கடேஷ் சென்னையில் கூலி வேலை செய்து வந்தார்.

    சமீப காலமாக டவுனில் தனது பெரியப்பா வீட்டில் தங்கியுள்ள வெங்கடேஷ், கூலி வேலை செய்து வந்தார். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வெங்கடேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த 3 பேர் கும்பல், வெங்கடேசை நோக்கி அரிவாளுடன் ஓடிவரவே, அதனை பார்த்த வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொண்டு த.மு. சாலையில் தப்பிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அவர்களை சுற்றி வளைக்கவே, மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தவறி விழுந்தனர்.

    உடனே அந்த கும்பல் வெங்கடேசை குறிவைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பிச்சென்றது.

    இதனை பார்த்து அந்த பகுதி கடைக்காரர்களும், வெங்கடேசின் நண்பர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துணை போலீஸ் கமிஷனர் பிரசன்னகுமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

    இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 2023-ம் ஆண்டு, டவுன் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சக்தி என்பவரை 2 கைகளையும் வெட்டிக்கொலை செய்யும் முயற்சியில், தற்போது கொலை செய்யப்பட்ட வெங்கடேசுக்கு தொடர்பு இருந்துள்ளது.

    அந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாமா என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதனால் அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசன்னகுமார் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார், சந்திப்பு த.மு. சாலையில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் கும்பல் வெங்கடேசை வெட்டிக்கொலை செய்தது உறுதியானது.

    அதனை அடிப்படையாக கொண்டு விசாரித்ததில், நெல்லை டவுன் வயல் தெருவை சேர்ந்த இசக்கிராஜா(19) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை நடத்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 2 சிறார்களை இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான இசக்கிராஜாவை தேடி வருகின்றனர்.

    கைதான சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில நாட்களுக்கு முன்பு டவுன் பகுதியில் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கொலையாளிகள் தரப்பினரும் மோட்டார் சைக்கிளில் வரவே, 2 தரப்பினரின் மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்படவே கைகலப்பு வரை சென்றதாகவும், அந்த பகுதி மக்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இசக்கிராஜா தரப்பினர் சமாதானம் அடையாமல், திட்டமிட்டு வெங்கடேசை கொலை செய்தது தெரியவந்தது.

    கைதான 2 சிறுவர்களும் டவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். தலைமறைவான இசக்கிராஜா பள்ளி படிப்பை முடித்துவிட்டு அரசு போட்டித்தேர்வுக்காக தனியார் அகாடமியில் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×