என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் விஜய் ஒன்றுபட்டுள்ளார்- சபாநாயகர் அப்பாவு
- எஸ்.ஐ.ஆரை பார்த்து முதலமைச்சருக்கு எந்த பயமும் இல்லை.
- எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய் துறை அலுவலர்களை தி.மு.க தூண்டி விடுவதாக கூறுகின்றனர்.
நெல்லை:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு இன்று நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக விஜய் போராட வேண்டுமானால் டெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் மாநில அரசுக்கு எதிராக போராடுவது வெறும் கண்துடைப்பே.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு அவர் போராடுகிறார். இப்படி போராடுபவர்களை மக்கள் நம்பவில்லை.
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக போராட்டம் என்று கூறிவிட்டு எஸ்.ஐ.ஆருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தமிழக அரசுக்கு எதிராகவே பேசி இருக்கிறார் விஜய்.
எஸ்.ஐ.ஆரை பார்த்து முதலமைச்சருக்கு எந்த பயமும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினந்தோறும் 50 வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுக்கலாம் என தேர்தல் ஆணையமே கூறி இருக்கிறது. இது தமிழக வெற்றிக் கழகத்திற்கு தெரியாது.
எஸ்.ஐ.ஆரை எதிர்த்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்தால் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் விஜய் ஒன்றுபட்டுள்ளார். எனவே அவர்கள் இருவரும் ஒன்றாக இணைவார்கள்.
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய் துறை அலுவலர்களை தி.மு.க தூண்டி விடுவதாக கூறுகின்றனர். அதுபோன்று தூண்டிவிடும் பழக்கம் தி.மு.க.வுக்கு கிடையாது.
பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துகிறார்கள். அது அவர்களுடைய உரிமை. மத்திய அரசு உயர்த்திய உடனே மாநில அரசும் அகவிலைப்படி உயர்த்தி இருக்கிறது.
மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காததாலேயே ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடியை கொடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






