என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • வாடகை கார், ஆட்டோக்களும் ஓடவில்லை.
    • 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    மத்திய அரசு வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி சட்டமாக இயற்றி உள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த நிலையில் புதிய வக்பு திருத்த சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாக கூறி வக்பு திருத்த சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இன்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.

    இதனிடையே நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஜமாத் தலைவர்கள், தி.மு.க., ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.மு.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், வியாபாரிகள் இணைந்து கடை யடைப்பு போராட்டத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தனர்.

    அதன்படி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நெல்லை மேலப்பாளையத்தில் இன்று சுமார் 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டி ருந்தது.

    இதன் காரணமாக சந்தை ரவுண்டானா முக்கு பகுதிகள், பஜார் வீதிகள், அண்ணா வீதி, நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடைகள் அடைப்பால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மெடிக்கல், பால் கடைகள் உள்ளிட்டவை தவிர சுமார் 95 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    அவர்களுக்கு ஆதரவாக வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் இயங்கவில்லை. சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடாததால் பள்ளி-கல்லூரி, ஆஸ்பத்திரி, அரசு அலுவலகங்கள் செல்லும் மக்கள் பெரிதும் பாதிப் படைந்தனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக மேலப்பாளையம் நகரின் முக்கிய வீதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
    • நெல்லை பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இதனை கடந்த வாரம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

    இதையடுத்து கூட்டணி ஆட்சி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தி.மு.க.வை வீழ்த்தவே பா.ஜ.க.வுடன் கைகோர்த்தோம் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். இதுதற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே, நெல்லையில் 'வருங்கால முதல்வரே' என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா S. செல்வகுமார் பெயரில் நெல்லையில் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் நெல்லை பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • சிகிச்சை முடிந்து நேற்று இரவு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
    • 2 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (வயது18) என்ற மகனும், 1 மகளும் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாதி ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கல்வியை தொடர்ந்தார். தற்போது சின்னத்துரை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு அவர் படித்து வருகிறார்.

    அவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் பெருமாள்புரம் திருமால் நகரில் உள்ள குடிசை மாற்று வாரியம் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    நேற்று மாலை தனது நண்பன் அழைப்பதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற அவரை கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே உள்ள வசந்த் நகரில் வைத்து சிலர் தாக்கியதாகவும், தன்னிடம் இருந்த பணம் மற்றும் செல்போனையும் பறித்துச் சென்று விட்டதாகவும் அவர் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். லேசான காயங்களுடன் இருந்த அவருக்கு சிகிச்சை முடிந்து நேற்று இரவு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

    இதனிடையே அவரை தாக்கிய கும்பல் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    முன்னதாக மாணவன் சின்னதுரையிடம் விசாரித்த போது, இணையதள செயலி மூலமாக நண்பர் ஒருவர் அறிமுகமாகி இருந்தார். அவர் திருமண பத்திரிகை கொடுக்க வேண்டும் என்று தன்னை அழைத்ததாகவும், அதன்படி அப்பகுதிக்கு சென்றதாகவும் அங்கு திடீரென வந்த கும்பல் தன்னை தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் பி.என்.எஸ். 309(பி) காயத்தை ஏற்படுத்தி சொத்துக்களை வழிப்பறி செய்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த சம்பவ தொடர்பாக 4 பேர் கொண்ட மர்ம கும்பலை பிடிப்பதற்கு 2 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • மாப்பிள்ளை வீட்டார் டார்ச்சர் செய்வதாக நெல்லை இருட்டுக் கடை ஓனர் கவிதா கூறியுள்ளார்.
    • இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் ஒன்றை அளித்தார்.

    நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக இருட்டுக்கடை அல்வா விளங்கி வருகிறது. இந்த இருட்டுக்கடையின் உரிமையாளர் கவிதா சிங். இவரது மகள் ஸ்ரீ கனிஷ்கா. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் நெல்லையில் வைத்து பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.

    இந்நிலையில் தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்து வருவதாகவும், பல்ராம் சிங்கும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாகவும் இன்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கனிஷ்கா தனது தாயுடன் வந்து புகார் மனு அளித்துள்ளார்.

    இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து கனிஷ்கா கூறியதாவது;-

    எனக்கும் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி அன்று தாழையூத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நான் எனது கணவருடன் கோவையில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்தேன். எனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வருவதுமாக இருந்து வந்தார்.

    இது சம்பந்தமாக நான் எனது பெற்றோரிடம் கூறினால் என்னை கொன்று விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால் நான் கடும் மனவேதனை அடைந்து கடந்த மாதம் 15-ந்தேதி எனது பெற்றோர் வீட்டிற்கு வந்தடைந்தேன். பின்னர் மறுநாள் இரவு எனது கணவரும், அவரது குடும்பத்தார்களும் நெல்லை வீட்டிற்கு வந்து எனது தாயிடம், உன் மகளுடன் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால் கூடுதலாக வரதட்சணை வேண்டும் , நெல்லையில் இயங்கிக் கொண்டிருக்கும் இருட்டுக்கடை உரிமையை எனது பெயருக்கு எழுதி தர வேண்டும். இல்லை என்றால் நான் உன் மகளுடன் வாழ மாட்டேன் என்று மிரட்டி சென்றார்கள்.

    எனது பெற்றோர்களும் எனது எதிர்காலத்தை கருதி விஷயத்தை யாரிடமும் கூறாமல் இருந்து வந்தனர். பின்னர் வாட்ஸ்-அப்பில் தேவையற்ற அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்புவதும், குறுஞ்செய்திகள் மூலம் என்னை மிரட்டுவது போன்ற செயல்களினால் எனது உயிருக்கும்,எனது பெற்றோர்களுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே கணவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளம்பெண் வந்த பஸ்சை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    நெல்லை:

    கோயம்புத்தூரில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பயணம் செய்தார்.

    அந்த இளம்பெண் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அந்த பஸ்சில் கண்டக்டராக கோவையை சேர்ந்த மகாலிங்கம் (வயது 43) என்பவர் பணியில் இருந்தார்.

    இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அந்த ஐ.டி. நிறுவன பெண்ணுக்கு பஸ் கண்டக்டர் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், செல்போனில் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் உறவினர்களுடன் புறப்பட்டு நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

    இந்நிலையில் பஸ் இன்று அதிகாலை 4 மணி அளவில் நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. உடனே இளம்பெண் வந்த பஸ்சை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு புறக்காவல் நிலைய பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்தனர். கண்டக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அதில் கண்டக்டர் மகாலிங்கம் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மகாலிங்கத்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு அரசு பஸ் கண்டக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரிவாளால் வெட்டிய மாணவன் பள்ளியில் இருந்து நடந்தே சென்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான்.
    • பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரிவாளால் வெட்டிய சக மாணவனை கைது செய்தனர்.

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் சரமாரியாக வெட்டினான். தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் வெட்டு விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட 2 மாணவர்களுக்கு இடையே பென்சில் யாருடையது? என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அரிவாளால் வெட்டிய மாணவன் பள்ளியில் இருந்து நடந்தே சென்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான்.

    இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரிவாளால் வெட்டிய சக மாணவனை கைது செய்தனர்.

    இந்த நிலையில், சக மாணவன், ஆசிரியரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் சீர்திருத்த குழுமத்தில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் தகுதியான நபர்களை கொண்டு மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவன் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.

    • மத்திய அரசின் சில பல்கலைக்கழகங்களில் நீட் விலக்கு உள்ளது.
    • தமிழக பா.ஜ.க. தலைவராக நெல்லை மண்ணைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வாகி உள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.

    நெல்லை:

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான மறைந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் நினைவஞ்சலி கூடுகை பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி எதிரே உள்ள ஒரு தனியார் மகாலில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ம.தி.தா. இந்து கல்லூரி முன்னாள் முதல்வர் பொன்னுராஜ் தலைமை தாங்கினார். முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் வண்ணமுத்து வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு எழுத்தாளர் நாறும்பூநாதன் படத்தை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னரால் நிறைவேற்றப்படாத மசோதாக்கள் சுப்ரீம் கோர்ட்டு அறிவுரைப்படி எப்படி நிறைவேற்றப்பட்டதோ-அதே போல நீட் தேர்வை ஒழிப்பது குறித்து மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டு கொண்டு செல்லப்பட்டு நீட்டை ஒழிக்க நல்ல முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுத் தருவார்.

    மத்திய அரசின் சில பல்கலைக்கழகங்களில் நீட் விலக்கு உள்ளது. அதுபோல் தமிழகத்திலும் நீட் விலக்கை முதலமைச்சர் போராடிக் கொண்டு வருவார். தமிழக பா.ஜ.க. தலைவராக நெல்லை மண்ணைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வாகி உள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.
    • கோவிலுக்கு தாமதமாக வந்த பக்தர் ஒருவர் சாமி கும்பிடுவதற்காக கோவில் கதவின் துவாரம் வழியாக அம்மனை பார்த்து வழிபட்டார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள தெற்கு தெரு மாரியம்மன் கோவிலில் நேற்று இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.

    பின்னர் கோவிலுக்கு தாமதமாக வந்த பக்தர் ஒருவர் சாமி கும்பிடுவதற்காக கோவில் கதவின் துவாரம் வழியாக அம்மனை பார்த்து வழிபட்டார்.

    அப்போது அம்மன் சிலையில் கண் திறந்து இருப்பதாக பக்தி பரவசத்துடன் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அம்மன் சிலையை செல்போனிலும் புகைப்படம் எடுத்தார்.

    இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் கோவில் நடை அடைக்கப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.

    அப்போதும் அம்மனின் கண் திறந்து இருந்ததாகவும், கோவில் பூசாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ததும் கண் மூடியதாகவும் கோவிலின் அருகே வசித்து வரும் பக்தர் குட்டி என்பவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    • மூதாட்டி உயிரிழந்து 2 நாட்கள் ஆகிய நிலையில் அவரது இறுதிசடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்ட செல்ல முடியவில்லை.
    • கிராமமக்கள் களக்காடு அம்பேத்கர் சிலை அருகே உயிரிழந்த மூதாட்டி உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கல்லடி சிதம்பராபுரம் வேதநாயகபுரம் கிராமம் உள்ளது. இங்குள்ளவர் இறந்தால் பெருமாள்குளத்தில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் அந்த சுடுகாடு இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என தனியார் ஒருவர் கூறியதுடன் சுடுகாட்டை சுற்றி வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தாங்கள் நீண்டகாலமாக சுடுகாடாக பயன்படுத்தி வரும் இடத்தை தங்களுக்கு மீட்டு தர வேண்டும் என கூறி அந்த கிராமமக்கள் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் வேதநாயகபுரத்தை சேர்ந்த சங்கரன் என்பவரது மனைவி இளங்காமணி (வயது70) என்ற மூதாட்டி உடல் நலக்குறைவால் இறந்தார்.

    இதையடுத்து அவரது உடலை பெருமாள்குளம் சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த இடத்தை சொந்தம் என கூறி வரும் நபர்கள் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர். எனவே மூதாட்டி உயிரிழந்து 2 நாட்கள் ஆகிய நிலையில் அவரது இறுதிசடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்ட செல்ல முடியவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் களக்காடு அம்பேத்கர் சிலை அருகே உயிரிழந்த மூதாட்டி உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு நாங்குநேரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயி. இவர் மீது தென்காசி மாவட்டம் கடையம் போலீஸ் நிலையத்தில் ஆட்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக செல்வகுமார் கடையம் போலீஸ் நிலையத்தில் தினமும் நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா போலீஸ்நிலையத்தில் வைத்து செல்வகுமாரிடம் வழக்கு தொடர்பாக பேசியுள்ளார். அப்போது வழக்கை சீக்கிரம் முடித்து கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை வெளியே எடுப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறிய அவர் அதற்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி ரசாயனம் தடவப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகளை செல்வகுமாரிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த நோட்டுகளை இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கச்சத்தீவை மீட்பது தொடர்பான எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எந்த அரசியல் கட்சியும், அரசும் எடுக்கவில்லை.
    • தமிழகத்திற்கு தரவேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    நெல்லை:

    தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து நெல்லை வண்ணார்பேட்டையில் தமிழ் மக்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

    இதில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய, தமிழர் சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கச்சத்தீவை மீட்பது தொடர்பான எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எந்த அரசியல் கட்சியும், அரசும் எடுக்கவில்லை. தேர்தல் நேர வியூகமாகவே கச்சத்தீவு பயன்படுத்தப்படுகிறது. கச்சத்தீவு விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர இந்திய-இலங்கை அரசுகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தனி சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

    அரசியல் பாகுபாடு இன்றி அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழகத்திற்கு தரவேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழகத்தின் அரசியல் கணிக்க முடியாத ஒன்று. எப்போது யாருடன் கூட்டணியில் இருக்கிறார்கள். எப்போது யாரிடமிருந்து வெளியே வருவார்கள் என்பதை அறிய தேர்தல் வரை காத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். இப்போது கூட்டணி என சொல்லலாம். பிறகு மறுக்கலாம். எனது அடுத்த கட்ட முடிவை விரைவில் அறிவிக்கப்படும். மக்களுக்காக மக்கள் நலன் சார்ந்து எனது முடிவு இருக்கும்.

    அமைச்சர் பொன்முடியின் பேச்சு தெரியாமல் நடந்த சம்பவம் போன்று இல்லை. அமைச்சரின் பேச்சு அருவருக்கத்தக்கதாக உள்ளது. பெண்கள் மீது அருவருக்கத்தக்க சிந்தனை கொண்ட அமைச்சரை போன்ற ஆட்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் இருந்து அவ்வப்போது சாரல்மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
    • குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    அரபிக்கடலில் இருந்து ஈரப்பதம் மிக்க காற்றானது தமிழக மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஊடாக இழுக்கப்படுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள நெல்லை, தென்காசி மலைகிராமங்களில் தற்காலிகமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்தார்.

    நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. மாநகரில் டவுன், பேட்டை பகுதிகளில் காலையில் 1/2 மணி நேரம் சாரல் மழை பெய்தது. மாநகர் மற்றும் புறநகரின் அனைத்து இடங்களிலும் வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் இருந்து அவ்வப்போது சாரல்மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அந்த வகையில் மேல் பாபநாசம் பகுதியில் காலையில் பலத்த மழை பெய்தது. பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதியில் பரவலாக பெய்யும் மழையால் அங்கு சாஸ்தா கோவிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.

    மலையடிவார பகுதியான அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரத்திலும் சாரல் மழை நீடித்தது. மாஞ்சோலை மலைப்பகுதியில் சாரல் மழை பெய்துள்ளது. இன்றும் காலை முதலே நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 18 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 14 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    கடந்த 2 நாட்களாக அந்த பகுதிகளில் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. அணைகளை பொறுத்தவரை 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 85.42 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 62 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 88 அடியாகவும், சேர்வலாறில் 102.62 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகாலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து காலையில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் இன்று காலை லேசான சாரல் அடித்தது. கருப்பாநதி அணை பகுதியில் மட்டும் சற்று அதிகமாக மழை பெய்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.

    ×