search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் பறிக்கும் முயற்சியில் தொழிலாளியை அடித்து கொன்று உடலை கடலில் வீசிய கொடூரம்
    X

    செல்போன் பறிக்கும் முயற்சியில் தொழிலாளியை அடித்து கொன்று உடலை கடலில் வீசிய கொடூரம்

    • செல்போன் பறிக்கும் முயற்சியில் தொழிலாளியை கொன்று உடலை கடலில் வீசிய சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • காசிமேடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    ராயபுரம்:

    ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 45). இவர் சென்னை காசிமேடு பகுதியில் தங்கி மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் காசிமேடு பழைய மீன்வார்ப்பு பகுதியில் உள்ள கடலில் லோகேஸ்வரன் பிணமாக கிடந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் காணப்பட்டன. மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து விட்டு உடலை கடலில் வீசி இருப்பது தெரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து லோகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக காசிமேடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து காசிமேடு அண்ணாநகர் குடிசை பகுதியை சேர்ந்த சாமுவேல் (வயது 21), சஞ்சய் (21) ஆகியோர் தப்பி செல்வது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் சேர்ந்து செல்போன், பணம் பறிக்கும் முயற்சியில் லோகேஸ்வரனை அடித்து கொன்று விட்டு உடலை காசிமேடு கடலில் வீசி விட்டதாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சாமுவேல், சஞ்சய் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    காசிமேடு கடற்கரையில் மது குடித்துக் கொண்டிருந்த லோகேஸ்வரனை மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றோம். ஆனால் அவர் பணம்-செல்போனை கொடுக்க மறுத்து தப்பி ஓட முயன்றார். கடற்கரையில் ஓடியபோது லோகேஸ்வரன் தவறி கீழே விழுந்தார்.

    ஆத்திரத்தில் இருந்த நாங்கள் அருகில் கிடந்த உடைந்த ஓடு மற்றும் கல்லால் லோகேஸ்வரனின் தலை, முகத்தில் தாக்கினோம். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்தில் இறந்து போனார். உடனே அவரிடம் இருந்த செல்போன், பணத்தை எடுத்துக்கொண்டோம். பின்னர் லோகேஸ்வரனின் உடலை கடல் தண்ணீரில் வீசிவிட்டு தப்பி சென்றோம். உடல் வேறு இடத்தில் கரை ஓதுங்கிவிடும் என்பதால் போலீசாரிடம் இருந்து தப்பி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் அதே பகுதியில் உடல் கரை ஒதுங்கியதால் போலீசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கைதானவர்களிடம் இருந்து லோகேஸ்வரனின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கொலையுண்ட லோகேஸ்வரன் அப்பகுதிக்கு எதற்காக வந்தார் என்று தெரியவில்லை. மேலும் அவரை பற்றிய வேறு எந்த விபரமும் இல்லை. இதைத்தொடர்ந்து ஆந்திரா போலீசாருக்கு லோகேஸ்வரன் பற்றி தகவல் தெரிவித்து உள்ளனர். அவரது செல்போனில் கடைசியாக பேசிய நபர்கள் குறித்த விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள்.

    செல்போன் பறிக்கும் முயற்சியில் தொழிலாளியை கொன்று உடலை கடலில் வீசிய சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×