search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை உரிமத்தை முன்கூட்டி வழங்க வேண்டும்- அரசுக்கு விக்கிரமராஜா  வலியுறுத்தல்
    X

    தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை உரிமத்தை முன்கூட்டி வழங்க வேண்டும்- அரசுக்கு விக்கிரமராஜா வலியுறுத்தல்

    • தமிழக அரசு பொது மக்களின் பாதுகாப்பையும், நலனையும் கருத்தில் கொண்டும், பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டும், முன்னேற்பாடுகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பட்டாசு விற்பனை உரிம அனுமதியை விரைவுப்படுத்தி மத்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு 5 ஆண்டுகளுக்கு உரிமம் என்பதை உறுதி செய்து முன்கூட்டி அனுமதி தந்து உதவ வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பட்டாசு உற்பத்தியிலும், பட்டாசு வணிகத்திலும் தமிழகத்தில் சிவகாசிக்கு தனி சிறப்பு உண்டு. கடந்த 5 ஆண்டுகளாகவே தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளால் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டு நடைபெற்று வரும் வழக்குகளாலும் பட்டாசு உற்பத்தியும், விற்பனையும் தமிழகத்தை பொறுத்தவரை 60 சதவீத வீழ்ச்சியை சந்தித்து இருக்கின்றது.

    உச்சநீதிமன்ற வழக்குகளும் விழாக்காலமான தீபாவளியை ஒட்டியே மீண்டும் விசாரணைக்கு கொண்டு வந்து, பட்டாசு வணிக விற்பனையை 70 சதவீதத்திற்கு மேல் சேதப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் தமிழகத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையை சார்ந்திருக்கும் வணிகர்கள் தான்.

    தமிழக அரசும் பட்டாசு விற்பனை அனுமதியை வெடி பொருட்கள் சட்டம் 2008-ன்படி 5 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கு சாத்தியம் இருந்தாலும், தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு 3 ஆண்டுகளுக்கான அனுமதியும், இதர மாவட்டங்களில் 1 ஆண்டிற்கான அனுமதி மட்டுமே வழங்கி இருக்கின்றது. உரிம அனுமதிக்கு மார்ச் மாதத்திலேயே விண்ணப்பம் செய்திருந்தாலும், விற்பனைக்கான உரிம அனுமதி தீபாவளி பண்டிகை நெருக்கத்தில் ஒரு சில தினங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டு வருகின்றது.

    இது பட்டாசு வணிகர்களை பெருமளவு பாதிப்பதோடு, விற்பனைக்கான முன்னேற்பாடுகளை செய்வதும், பொது மக்களுக்கு பாதுகாப்பாக விற்பனை செய்யப்படுவதும் மிகப்பெரிய கேள்விக்குறியாகவும், பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது.

    தமிழக அரசு பொது மக்களின் பாதுகாப்பையும், நலனையும் கருத்தில் கொண்டும், பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டும், முன்னேற்பாடுகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு விற்பனை உரிம அனுமதியை விரைவுப்படுத்தி மத்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு 5 ஆண்டுகளுக்கு உரிமம் என்பதை உறுதி செய்து முன்கூட்டி அனுமதி தந்து உதவ வேண்டும். இதை வலியுறுத்தி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரனுக்கு கோரிக்கை சமர்ப்பித்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×