search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு- விலை மேலும் ரூ.10 குறைந்தது
    X

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு- விலை மேலும் ரூ.10 குறைந்தது

    • கடந்த மாதத்தில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் தக்காளி வரத்து பாதிக்கு மேல் குறைந்தது.
    • தக்காளியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி இருக்கிறது.

    போரூர்:

    தமிழகத்தில் உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக சரிந்து வருகிறது. கிலோ ரூ.200-வரை விற்கப்பட்ட தக்காளியின் விலை ரூ.100-க்கு கீழ் இறங்கி வருவதால் இல்லத்தரசிகள் இப்போது நிம்மதி அடைந்து உள்ளனர்.

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வழக்கமாக 60 லாரிகளுக்கு மேல் தக்காளி வரும். கடந்த மாதத்தில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் தக்காளி வரத்து பாதிக்கு மேல் குறைந்தது. 25 லாரிகளே சராசரியாக வந்தன. இதனால் தக்காளியின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது.

    தற்போது வடமாநிலங்களில் பெரிய அளவில் மழை பாதிப்பு இல்லாததாலும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் வடமாநில வியாபாரிகளின் தக்காளி கொள்முதல் குறைந்ததாலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தக்காளியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி இருக்கிறது.

    இப்போது 30 லாரிகளுக்கு மேல் தக்காளி வரத்து நீடித்து வருகிறது. இன்று கோயம்பேடு சந்தைக்கு 34 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்திருந்தன.

    இதனால் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ முதல் ரக தக்காளி ரூ.10 குறைந்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சுமார் 40 நாட்களை கடந்து தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த தக்காளியின் விலை தற்போது குறைந்து அனைத்து இடங்களிலும் ரூ.100-க்கு கீழ் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    காய்கறிகளில் பீன்ஸ் கிலோ ரூ.70-க்கும், கேரட் ரூ.60க்கு விற்கப்படுகிறது. மற்ற காய்கறிகள் அனைத்தும் கிலோ ரூ.50-க்கும் கீழ் உள்ளது. அவரைக்காய் ரூ.40, வெண்டைக்காய்-ரூ.30, உஜாலா கத்தரிக்காய்- ரூ.50-க்கும் விற்பனை ஆகிறது.

    Next Story
    ×