search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் தாக்கல்- சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது
    X

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் தாக்கல்- சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது

    • தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
    • ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கருத்துக்களை முன் வைத்து பேசினார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி ஒப்புதல் அளித்தது. அக்டோபர் 1-ந்தேதி அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து தமிழக சட்டசபையில் அக்டோபர் 19-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட் டது. பின்னர் கவர்னர் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ந்தேதி அனுப்பப்பட்டது. அதற்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை.

    சட்ட மசோதாவில் சில விளக்கங்கள் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி நவம்பர் 24-ந்தேதி அரசுக்கு கடிதம் எழுதினார். அதற்கு சட்டத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி அமைச்சர் ரகுபதி மற்றும் அதிகாரிகள் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினார்கள். அப்போது சட்ட மசோதா சம்பந்தமாக கவர்னர் ரவி சில சந்தேகங்களை எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ந்தேதி சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார்.

    அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

    அதன்படி தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டசபையில் கவர்னர் கடந்த 6-ந்தேதி திருப்பி அனுப்பிய தமிழ்நாடு இணைய வழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுக்களை ஒழுங்கு முறைப்படுத்துதல் சட்ட மசோதாவை மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அனுமதி கோரினார்.

    இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி தரவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படியான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து, இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்ட துயரமான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையோடுதான் எனது உரையை நான் தொடங்குகிறேன்.

    பள்ளி செல்லும் மாணவர்களுக்கிடையே, இணைய வழி விளையாட்டு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, பள்ளிக்கல்வித்துறை ஜூலை 2022-ல் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இந்தக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டிலுள்ள 2,04,114 அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கருத்து கோரப்பட்டது. மாணவர்களின் ஒரு முகப்படுத்தும் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 74 சதவீதம் ஆசிரியர்கள் சொன்னார்கள். மாணவர்களின் நுண்ணறிவு ஈவு, எழுதும் திறன் மற்றும் படைப்பாற்றலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக 64 சதவீதம் ஆசிரியர்கள் சொன்னார்கள்.

    இணையதள விளையாட்டு உரிமையாளர்கள் மற்றும் இதர தரப்பினரிடையே நடத்தப்பட்ட ஆலோசனையின்படியும், பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு 26-9-2022 அன்று அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.

    ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை 131 நாட்கள் கழித்து, சில குறிப்புகளுடன் 6-3-2023 அன்று சட்டப்பேரவைத் தலைவருக்கு கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார். கவர்னர் எழுப்பியுள்ள கேள்விகளும், அதற்கான பதில்களும் அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு, சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் பரிசீலனைக்கு வைக்கும் கருத்துருவானது அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்ட முன்வடிவானது உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இதனை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த சட்டம் அறிவால் மட்டுமல்ல, இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

    இனியொரு உயிர் பறிக்கப்படாமல்; இனியொரு குடும்பம் நடுத்தெருவில் நிற்காமல்; இனியொரு நாள்கூட இந்த ஆன்லைன் அநியாயம் தொடராமல் இருக்க அனைத்து உறுப்பினர்களும் இந்தச் சட்ட முன்வடிவை ஆதரிக்க வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதன் மீது ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கருத்துக்களை முன் வைத்து பேசினார்கள். இதைத் தொடர்ந்து சட்ட மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேறியது.

    Next Story
    ×