search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டில் மனு நிராகரிப்பு: சட்ட நிபுணர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை
    X

    சுப்ரீம் கோர்ட்டில் மனு நிராகரிப்பு: சட்ட நிபுணர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை

    • சுப்ரீம் கோர்ட்டு நேற்று அளித்த தீர்ப்பு முழு விவரமும் இன்று இரு தரப்பினருக்கும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
    • நீதிபதிகள் தீர்ப்பில் என்னென்ன கூறியுள்ளார்கள் என்ற துல்லியமான தகவல்கள் இன்று பிற்பகல் 3 மணிக்குத்தான் கிடைக்க உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது.

    அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்த தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதால் அவருக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்காததை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    அவரது மனுவை நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்களும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்களும் வாதிட்டனர்.

    இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் உடனடியாக உத்தரவு பிறப்பித்தனர். ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை மீண்டும் தொடக்கத்தில் இருந்து விசாரிப்பதற்கு பதில் சென்னை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றோம். எனவே இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிக்க உத்தரவிடுகிறோம்.

    இந்த வழக்கை 3 வாரங்களுக்குள் சென்னை ஐகோர்ட்டு விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே தொடரவேண்டும். இந்த மேல்முறையீடு வழக்குகள் தொடர்பான தகுதிப்பாடு குறித்து எந்தவித கருத்தையும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவிக்கவில்லை என்பதை பதிவு செய்கிறோம்.

    இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறினார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள உத்தரவு தங்களுக்கு சாதகமாக இருப்பதாக நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தலைவர்களும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தலைவர்களும் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டனர். என்றாலும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஆதரவான நிலைப்பாடு கிடைக்காததால் அவருக்கு இது பின்னடைவாகவே கருதப்படுகிறது.

    இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மீண்டும் சென்னை ஐகோர்ட்டை நாட வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு தலைவர்களும் மீண்டும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இன்று காலை முதல் டெல்லி மற்றும் சென்னையில் உள்ள சட்ட நிபுணர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கருத்துக்களை கேட்டனர். சட்ட நிபுணர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் புதிய ஆதாரங்களும், கருத்துக்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன.

    சுப்ரீம் கோர்ட்டு நேற்று அளித்த தீர்ப்பு முழு விவரமும் இன்று இரு தரப்பினருக்கும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. நீதிபதிகள் தீர்ப்பில் என்னென்ன கூறியுள்ளார்கள் என்ற துல்லியமான தகவல்கள் இன்று பிற்பகல் 3 மணிக்குத்தான் கிடைக்க உள்ளது. அதன்பிறகு இரு தரப்பினரும் எத்தகைய நடவடிக்கையை கடைபிடிப்பது என்ற முடிவுக்கு வருவார்கள்.

    இன்று மாலை ஓ.பன்னீர் செல்வம் அணியினரும், எடப்பாடி பழனிசாமி அணியினரும் தீர்ப்பு விவரங்களுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சூட்டோடு சூடாக அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கவேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

    இன்று இரவு ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மீண்டும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். பல்வேறு தரப்பு சட்ட நிபுணர்களிடமும் அவர்கள் கலந்து பேசி வருகிறார்கள். சட்ட நிபுணர்கள் கொடுக்கும் தகவல்களும், கட்சி விதிகளுக்குரிய குறிப்புகளும் ஒருமித்த நிலையில் இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்ய உள்ளனர்.

    அதன் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு தொடர ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அந்த புதிய வழக்குக்கான மனுக்கள் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த மனுக்கள் நன்றாக ஆய்வு செய்யப்படும்.

    திங்கட்கிழமை சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் புதிய வழக்குக்கான மனுவை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியினரும் தயாராகி வருகிறார்கள்.

    ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு தரப்பு அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளனர். இரு தரப்பினரையும் தேர்தல் ஆணையம் விரைவில் விசாரணைக்கு அழைக்கும் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் இரு தரப்பினரும் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இதில் வெற்றி பெறுபவருக்கு அ.தி.மு.க.வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிகாரத்துக்கான ஆற்றல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    எனவே ஓ.பன்னீர்செல்வத்தின் சென்னை ஐகோர்ட்டு வழக்கு தீர்ப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

    சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு மீண்டும் நடைபெற உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வக்கீலான திருமாறன் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை 3 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகலுடன் சில திருத்தங்கள் மேற்கொண்டு புதிதாக மனுதாக்கல் செய்யப்படும்.

    சுப்ரீம் கோர்ட்டில் இருந்து உத்தரவு நகல் ஐகோர்ட்டுக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த நடைமுறைகள் முடிவடைந்து, புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    அடுத்த வாரம் புதிய மனுதாக்கல் செய்யப்படும். பொதுக்குழு விவகாரத்தில் ஏற்கனவே விசாரித்து உத்தரவு பிறப்பித்த பிறகும் அதனை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு கூறி இருப்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த மேல்முறையீட்டில் நிச்சயம் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×