search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிண்டி ஆட்டோ டிரைவர் கொலை: சிறையில் இருந்து சதி திட்டம் தீட்டிய ரவுடி கூட்டாளிகளை அனுப்பி தீர்த்துக்கட்டியதாக தகவல்
    X

    கிண்டி ஆட்டோ டிரைவர் கொலை: சிறையில் இருந்து சதி திட்டம் தீட்டிய ரவுடி கூட்டாளிகளை அனுப்பி தீர்த்துக்கட்டியதாக தகவல்

    • கடைக்குள் பதுங்கி இருந்த 2 கொலையாளிகளையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • கொலை சம்பவத்தின் பின்னணி பற்றி முழுமையாக விசாரணை நடத்தி கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    சென்னை:

    சென்னை வேளச்சேரி நேரு நகரை சேர்ந்தவர் தினேஷ். ஆட்டோ டிரைவரான இவர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    கிண்டி மடுவங்கரை வண்டிக்காரன் தெருவில் நேற்று இரவு 9 மணி அளவில் இவர் சென்று கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சுற்றி வளைத்தது. அவர்களது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதை பார்த்ததும் தினேஷ் உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்து ஓடினார்.

    அப்போது 6 பேரும் விடாமல் தினேசை விரட்டிச்சென்றனர். இதையடுத்து கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க அருகில் இருந்த மளிகை கடையில் தினேஷ் புகுந்தார். இருப்பினும் 6 பேரில் 2 பேர் கடைக்குள் புகுந்து தினேசை சரமாரியாக வெட்டினர். இதில் கடைக்குள்ளேயே தினேஷ் துடி துடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    ஆள்நடமாட்டம் அதிகம் இருந்த நேரத்தில் மிகவும் துணிச்சலாக அரங்கேறிய இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கொலையாளிகள் கடைக்குள் புகுந்து வெட்டிய போது வெளிப்புறமாக கடையின் ஷட்டர் பூட்டப்பட்டதால் கொலையாளிகள் இருவரும் கடைக்குள்ளேயே மாட்டிக்கொண்டனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தினேசின் உடலை மளிகை கடையில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடைக்குள் பதுங்கி இருந்த 2 கொலையாளிகளையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களது பெயர் மணி கண்டன், உதய் என்பது தெரிய வந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கொலை சம்பவத்தின் பின்னணி பற்றி முழுமையாக விசாரணை நடத்தி கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    இதன்படி கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, மேற்பார்வையில் துணை கமிஷனர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

    உதவி கமிஷனர்கள் ரூபன், சிவா ஆகியோரும் களமிறக்கப்பட்டனர். இதில் புழல் சிறையில் இருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவனின் தூண்டுதலின் பேரிலேயே ஆட்டோ டிரைவர் தினேஷ் கொலை செய்யப்பட்டிருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கும் இருவரையும் அந்த ரவுடியே அனுப்பி வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை தொடர்ந்து இதன் பின்னணி தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கொலையுண்ட ஆட்டோ டிரைவர் தினேசிடம் ரவுடியும் அவனது கூட்டாளிகளும் பணம் கேட்டு மிரட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலே கொலையில் முடிந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து போலீசார் ரவுடிகளை ஒடுக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான பணிகளை தொடங்கியுள்ளனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனரான சந்தீப்ராய் ரத்தோர் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×