என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த 12ம் தேதி துவக்கினர்.
36வது நாளாக நடந்த போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர். அப்போது ஆண்கள் இத்திட்டத்திற்கு எதிராக இலை, தழைகளை மாலையாக கழுத்தில் மாட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்:-
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நாங்கள் கடந்த 36 நாட்களாக 2ம் கட்டமாக போராடி வருகிறோம். எங்கள் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இப்பகுதி பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் நிலத்தடி நீர் பாழாவதுடன், காற்று மாசு பட்டு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. அதனால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நாங்கள் இலை தழைகளை உடுத்திக் கொண்டு செல்ல வேண்டியது தான் என்பதை அரசுக்கு உணர்த்தவே இது போன்ற நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும். இல்லையேல் இத்திட்டத்திற்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தொடர்ந்து போராட்டங்களை நடத்த தயாராக உள்ளோம் என்று கூறினார்கள்.
திருவரங்குளம்:
ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சான் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக் கண்ணு (வயது90). சமையல் மாஸ்டர். இவர் தனது குடும்பத்துடன் ஆலங்குடி அண்ணா நகரில் வசித்து வருகிறார்.
இவர் தனது சொந்த வேலை காரணமாக கல்லாங்குடி சென்று திரும்பிய போது சாலையின் ஓரத்தில் உள்ள கருவேல மரக்காட்டில் மயங்கி விழுந்து இறந்து கிடந்தார்.
இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.
அதிகாரிகளின் கண்ணை மறைத்து முதல் கட்டமாக ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டது. இது தவிர பரிசு பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாவது கட்ட பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். ஆனாலும் வாக்காளர்களுக்கு எந்தவித தடையும் இன்றி பணம் விநியோகிக்கப்பட்டது.
இதுகுறித்து அரசியல் கட்சிகளின் அடுக்கடுக்கான புகார்கள், ஆதாரங்களுடன் கூடிய வீடியோ பதிவுகள் ஆகியவற்றால் அதிர்ச்சி அடைந்த தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.
முன்னதாக பணப்பட்டு வாடாவை தடுக்கவும், இது வரை பணப்பட்டுவாடா எப்படி நடந்தது என்பதை அறியவும் கடந்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.
இதில் தமிழக சுகாதார துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள அவருக்கு சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள், குவாரிகள், நண்பர்கள், உறவினர்களின் வீடுகள், சகோதரர் கல்லூரி உள்பட 35 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச் சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ரூ.89 கோடி அளவில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான முக்கிய ஆவணங்களை வருமான வரித் துறையினர் கைப்பற்றினர்.
இவை தவிர சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறையிலும் நடத்திய சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது.
இதன் தொடர்ச்சியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அதேபோல் கடந்த 8-ந்தேதி திருச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி, சகோதரர் உதயகுமார் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரியில் அதிகாரிகள் கடந்த 11-ந்தேதி மீண்டும் சோதனை நடத்தினர்.
இந்த குவாரியில் அரசு அனுமதியை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா? கனிமவளத்துறையின் விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு கற்கள் வெட்டப்படுகிறதா? முறைப்படி குவாரி இயங்குகிறதா? என சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு புதுக்கோட்டை வந்து தங்கினர். இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை நடத்தப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்கு சென்றனர். கடந்த மாதம் 7-ந்தேதி நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட நகைகள், ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் பூட்டி சீல் வைத்தனர். அதனை அகற்றுவதற்காக இன்று வருகை தந்ததாக கூறப்பட்டது.
அதன்படி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அறையை திறந்து நகை மற்றும் ஆவணங்களை சரிபார்த்தனர். பின்னர் கணக்கில் வந்த நகை, ஆவணங்களை வீட்டில் இருந்தவர்களிடம் கொடுத்தனர். மற்ற ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர். சுமார் அரைமணி நேரத்தில் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறு கையில், கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில் நகை மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்திருந்தனர். அதனை அகற்றுவதற்காகவே அதிகாரிகள் சென்றுள்ளனர், இது சோதனை அல்ல என்று தெரிவித்தார்.
திருவரங்குளம் அருகே வேப்பங்குடி ஊராட்சியில் உள்ள வேப்பங்குடி கிராமத்தில் திருவரங்குளத்தில் இயங்கி வந்த மதுபானக்கடையை அங்கே வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்ற வருகின்றது.
இதனை அறிந்த பொதுமக்கள் கட்டிட உரிமையாளரிடம் மதுபானக்கடைக்கு கட்டிடம் கொடுக்கக்கூடாது என்று கூறியுள்ளனர். அதற்கு கட்டிட உரிமையாளர் இங்கு கடைக்காக கட்டிடம் கட்டப்படுகின்றது என்று கூறியுள்ளார். இருந்தாலும் பொதுமக்கள் இதனை நம்பாமல் மதுக்கடை வருவதற்காக அவசர வேலைகள் நடைபெறுவதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், ஆலங்குடி தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு சென்று மனுக்கொடுத்துள்ளனர்.
மீறி மதுக்கடையை இங்கு திறந்தால் பெண்கள் திரண்டு கடைமுன்பு சாகும் வரை போராட்டம் நடத்துவதாக கூறி சென்றனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பஸ்கள் இயக்கப்படாததால், தனியார் பஸ்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு தனியார் பஸ் சென்றது. புதுக்கோட்டை பஸ் நிலையம் வந்ததும் அதில் இருந்த பயணிகள், பஸ்சில் இருந்து இறங்கி அங்கிருந்த அதிகாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பஸ்சில் ஏறி பயணிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனியார் பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் டிரைவர்-கண்டக்டரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சித்துக்காடு பகுதியை சேர்ந்தவர் வேலு மகள் அருணா (வயது 26). பெற்றோர் இறந்து விட்டதால் அருணா புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கியில் உள்ள அவரது உறவினர் ஒருவரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்த அவர், வார விடுமுறையில் மட்டும் மறமடக்கியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து செல்வார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு வங்கியில் இருந்து விடுதிக்கு செல்வதாக சக ஊழியர்களிடம் கூறிவிட்டு சென்ற அவர் அதன் பிறகு மாயமாகி விட்டார். அவரை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அருணாவை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜின் அறையில் மின்விசிறியில் இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்குவதாக புதுக் கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது மாயமான அருணா என்பது தெரிய வந்தது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக் கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் எப்படி இறந்தார் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி பணியின் போது அருணா வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் ரூ.8 ஆயிரத்திற்கு பதில் ரூ.80 ஆயிரத்தை வரவு வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருணா , வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு மீதி பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த வாடிக்கையாளர் ரூ.60ஆயிரம் பணத்தை மட்டுமே செலுத்தினாராம். மீதி பணத்தை செலுத்தாததால் அந்த பணத்தை அருணாவின் சம்பள பணத்தில் இருந்து வங்கி நிர்வாகம் பிடித்துக் கொண்டது.
மேலும் கவனக்குறைவாக செயல்பட்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அருணா, 3 நாட்கள் விடுமுறை எடுத்து விட்டு சென்றுள்ளார்.
அப்போது உறவினர் வீட்டிற்கு செல்லாமல் நேராக லாட்ஜுக்கு சென்று தங்கியுள்ளார். அங்கு மன உளைச்சல் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெற்றோரை இழந்து தவித்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள கூத்தனிபட்டி கோவிலில் சித்ராபவுர்ணமி தினத்தன்று அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி செல்லத்துரை ,அவரது அண்ணன் முருகேசன் ஆகிய 2 பேரையும் அழைக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் மது போதையில் அப்பகுதியில் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரனிடம் புகார் செய்தனர். அவர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சதீஷ் உள்பட 5பேர் சேர்ந்து 2பேரையும் தட்டிக் கேட்டனர். இதில் வாக்குவாதம் முற்றவே செல்லத்துரை அரிவாளால் வெட்டப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் செல்லத்துரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் இருந்து தஞ்சாவூருக்கு இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் அதிகாலை 5.45 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த மலைக்குடிப்பட்டி அருகே சென்றது.
அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயம் திருமயத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி ஒன்று மழை காரணமாக ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
வேகமாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது வேமாக மோதியது. இதில் நிலைகுலைந்த பஸ் தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் இடதுபுற முள்ள இருக்கையில் அமர்ந்திருந்த கண்டக்டர் தஞ்சாவூரை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 45) மற்றும் திருமயம் அருகே உள்ள வெள்ளாள விடுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள்.
மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்தவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் பஸ்சுக்குள் இடிபாடுகளுக்கிடையே பலத்த காயங்களுடன் இருந்தவர்களை மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் அவர்கள் புதுக்கோட்டை, திருமயம், காரைக்குடி ஆகிய ஊர்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். திருமயம் தாசில்தார் கேபிரி யேல் சார்லஸ் சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, காயம் அடைந்தவர்களுக்கான உதவிகளை செய்தார்.
இதற்கிடையே நேற்று இரவு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் சென்றது. திருமயத்தை அடுத்த பாம்பாற்று பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மீது பஸ் மோதியது. இதில் கார் பஸ்சின் முன்பகுதி யில் சொருகி சிக்கிக்கொண்டது.

இந்த கோர விபத்தில் புதுக்கோட்டையில் இருந்து மதுரையில் நடைபெற உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த பாஸ்கர் (29), செந்தமிழ்செல்வன் (26), பாசந்தர் (26), சக்திவேல் (27), கும்பகோணத்தை சேர்ந்த கணேசன் (24) ஆகிய 5 பேரும் பலியானார்கள்.
விபத்துக்கான காரணம் குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமயம் அருகே அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு கோர விபத்துக்களில் 7 பேர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் விக்கி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் துணைத் தலைவர் சின்னத்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கவிவர்மன், நகரச் செயலாளர் அன்பு மணவாளன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சலோமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் நாராயணன், உணவக உரிமையாளர் சங்க மாவட்டத் தலைவர் சண்முக பழனியப்பன், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் முகமதலிஜின்னா உள்ளிட்டோர் பேசினர்.
மாணவிகளின் உள்ளாடைகளைக் கலைந்து, கூந்தலைக் அவிழ்த்து, நகைகளைக் கழட்டி, மாணவர்களின் சட்டையைக் கிழித்து உளவியல் ரீதியி லான துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய நீட் தேர் வுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வு முறையையே ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பொன்னமராவதி வலம்புரி டாக்கீஸ் சாலையில், மின்வாரிய அலுவலகம், பால்பண்ணை அருகே அரசு மதுபானக்கடை உள்ளது. இக்கடையை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. இதனால் பெண்கள் அச்சத்துடன் செல்லவேண்டியுள்ளது.
இக்கடையின் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேரூராட்சியின் சார்பில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியின் அருகே குடிமகன்கள் அமர்ந்து மது அருந்துவதால் பெண்கள் குடிதண்ணீர் தொட்டியை பயன்படுத்த முடியவில்லை எனக்கூறப்படுகிறது. இக்கடையை அகற்றக்கோரி குடியிருப்புவாசிகளின் சார்பில் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே நேற்று பெண்கள், இளைஞர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் அரசு மதுபானக்கடையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் கோபாலசந்திரன், காவல் ஆய்வாளர் கார்த்திகைசாமி, உதவி ஆய்வாளர் குணசேகரன், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயபாரதி ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் காவல்துணை கண்காணிப்பாளர் கோபாலசந்திரன் டாஸ்மார்க் மேலாளருடன் தொடர்பு கொண்டு பேசியதில் விரைவில் இக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் 2-வது கட்ட போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். அதன்படி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களில் நெடுவாசல் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 27-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளாகி குடிநீருக்கு கையேந்தும் நிலை ஏற்படும் என்பதை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக, காலி மண்பானைகளை பொதுமக்கள் சுமந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது:- ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் எங்கள் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து விவசாயம் அழிந்துவிடும். இதனால், இந்த திட்டம் வேண்டாம் என்று திட்டம் அறவிக்கப்பட்ட நாளில் இருந்து போராடி வருகிறோம். ஆனால் எங்கள் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. மேலும், தமிழக அரசும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பது எங்களுக்கு வேதனையாக உள்ளது. எங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை காக்க நாங்கள் போராடி மடியவும் தயாராக உள்ளோம். ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட்டால் குடிநீருக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை அரசுக்கு தெரியப்படுத்தவே மண் பானைகளை சுமந்து போராட்டம் நடத்துகிறோம் என்று தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் 2-வது கட்ட போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 26-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள நெடுவாசல் பொதுமக்கள் மாட்டுவண்டியில் வந்தனர். பின்னர் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கூறுகையில், திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மீத்தேன் திட்டம் வேண்டாம் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது மக்கள் எதிர்ப்பு இல்லை என்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டங்களில் எண்ணெய் கிணறு அமைக்க 21 இடங்களில் சோதனை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசும் எதிர்ப்பு காட்டவில்லை. இதே போன்று நெடுவாசலிலும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லை என்று சொல்லி தனியார் நிறுவனத்தை அனுப்பினாலும் அனுப்பலாம். அதனால் தான் திட்டம் ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடருகிறோம் என்றனர்.






