search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமயம் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து: கண்டக்டர் உள்பட 2 பேர் நசுங்கி பலி
    X

    திருமயம் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து: கண்டக்டர் உள்பட 2 பேர் நசுங்கி பலி

    திருமயம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதி கவிழ்ந்த விபத்தில் கண்டக்டர் உள்பட 2 பேர் நசுங்கி பலியானார்கள்.
    புதுக்கோட்டை:

    மதுரையில் இருந்து தஞ்சாவூருக்கு இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் அதிகாலை 5.45 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த மலைக்குடிப்பட்டி அருகே சென்றது.

    அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயம் திருமயத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி ஒன்று மழை காரணமாக ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    வேகமாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது வேமாக மோதியது. இதில் நிலைகுலைந்த பஸ் தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இதில் பஸ்சில் இடதுபுற முள்ள இருக்கையில் அமர்ந்திருந்த கண்டக்டர் தஞ்சாவூரை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 45) மற்றும் திருமயம் அருகே உள்ள வெள்ளாள விடுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள்.

    மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்தவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் பஸ்சுக்குள் இடிபாடுகளுக்கிடையே பலத்த காயங்களுடன் இருந்தவர்களை மீட்டனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் அவர்கள் புதுக்கோட்டை, திருமயம், காரைக்குடி ஆகிய ஊர்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேலும் விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். திருமயம் தாசில்தார் கேபிரி யேல் சார்லஸ் சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, காயம் அடைந்தவர்களுக்கான உதவிகளை செய்தார்.

    இதற்கிடையே நேற்று இரவு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் சென்றது. திருமயத்தை அடுத்த பாம்பாற்று பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மீது பஸ் மோதியது. இதில் கார் பஸ்சின் முன்பகுதி யில் சொருகி சிக்கிக்கொண்டது.



    இந்த கோர விபத்தில் புதுக்கோட்டையில் இருந்து மதுரையில் நடைபெற உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த பாஸ்கர் (29), செந்தமிழ்செல்வன் (26), பாசந்தர் (26), சக்திவேல் (27), கும்பகோணத்தை சேர்ந்த கணேசன் (24) ஆகிய 5 பேரும் பலியானார்கள்.

    விபத்துக்கான காரணம் குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமயம் அருகே அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு கோர விபத்துக்களில் 7 பேர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×