என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி கடந்த 4 மாதங்களாக பழுதடைந்து பயன்படாமல் இருந்து வருகின்றது.
பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகாலை முதல் இரவு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயனித்து வருகின்றன.இதனையடுத்து பொன்ன மராவதியை சுற்றியுள்ள கிராம பகுதிகளிருந்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஆண், பெண் உள்ளிட்டோர் மற்றும் கிராம பகுதிகளில் உற்பத்தி செய்யும் காய்கனிகளை விற்பனைகாக கொண்டு வரும் விவசாயிகளின் பிரதான சந்திப்பு இடமாகவும் இருந்து வருகிறது.
அக்கினி நட்சத்திரம் தொடங்கும் முன்பே நாளுக்கு நாள் அதிரிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கதை தனிக்க பெரிதும் உதவியாக இருந்து வந்த குடிநீர் தொட்டி கடந்த நான்கு மாதங்களாக செயல்படாமல் காணப்படுகிறது.
இதனால் அனைத்து தரப்பினரும் பெரிதும் சிரம்பட்டு வருகின்றனர்.இதனை பேரூராட்சி அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையாக விடுத்துள்ளனர். #tamilnews
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக புதிய தமிழகம் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து இன்று காலை ரெயில் நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர், கட்சி கொடிகளை ஏந்தியபடியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் கோஷமிட்டப்படி புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். ரெயில் நிலையம் அருகே வந்ததும் அவர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும் புதிய தமிழகம் கட்சியினர், மாற்று வழியாக ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். பின்னர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதன் காரணமாக போலீசாருக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை லேசாக தாக்கியதோடு, அலாக்காக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 50பேரையும் கைது செய்தனர். #Tamilnews
புதுக்கோட்டை:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மரபணு மாற்று விவசாயத்தை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அதன் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விழிப்புணர்வு நடைபயணம் நடந்து வருகிறது.
கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் இன்று 32-வது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று புதுக்கோட்டை வருகை தந்த விவசாயிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அப்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
மரபணு விவசாயத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே அதை தடை செய்ய வேண்டும் என்று கன்னியாக்குமரி முதல் சென்னை வரை விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வருகிறோம்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மேலும் மத்திய அரசை கண்டித்து வரும் 3-ந்தேதி திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டமும் விமானத்தை மறிக்கும் போராட்டமும் நடைபெறும்.

காவிரி பிரச்சினைக்காக அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது வரவேற்கதக்கதாக இருந்தாலும் போராட்டத்தில் முதல்- அமைச்சர், துணை முதல்வர் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #ayyakannu #edappadipalanisamy #cauveryissue
புதுக்கோட்டை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் புதுக்கோட்டையில் இன்று தமிழ் தேசிய கட்சியை சேர்ந்த மாநில அமைப்பு செயலாளர் ரகுபதி தலைமையில் நகர செயலாளர் ஆறுமுகம் மற்றும் பிரபாகரன், விக்னேஷ், அண்ணா, கணேஷ், மூர்த்தி, அய்யா, செல்வம் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கட்சி கொடியை கையில் ஏந்தியபடி புதுக்கோட்டை நிஜாம் காலனிக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி திடீரென அங்குள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழ் தேசிய கட்சியினர், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், இல்லையென்றால் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். #tamilnews
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் குளத்தில் உள்ள ஸ்ரீபட்டமரத்தான் கருப்பசாமி கோவில் விழாவையொட்டி இன்று (29-ந்தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் தலைமை தாங்கி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதற்காக 2 ஆயிரம் காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
முதலில் வாடிவாசலில் இருந்து பட்டமரத்து கருப்பசாமி கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளில் சில ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து வெளியே வந்தது. தொடர்ந்து அந்த காளைகள் களத்தில் நின்று விளையாடி தன்னை அடக்க வந்த வீரர்களை விரட்டியடித்தது.
இருப்பினும் களத்தில் வீரத்துடன் நின்றிருந்த மாடு பிடிவீரர்கள் தன்னை விரட்டிய காளையை விடாப்பிடியாக நின்று அடக்கி அசத்தினர். இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கி வெற்றிக்கொடி நாட்டிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக கார், மோட்டார் சைக்கிள்கள், பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்சி, கட்டில், சில்வர் பாத்திரங்கள், பீரோ, சேர், தங்கம் மற்றும் வெள்ளி நாணயம், ரொக்கப் பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதே போல் ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடியாக தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதற்காக தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் 108 ஆம்புலன்சு வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.
ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், சரோஜா, சேவூர் ராமச்சந்திரன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, கோகுல இந்திரா, சின்னையா, பால கங்கா எம்.பி., பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் திரளானோர் பார்த்து ரசித்தனர். #Jallikattu #Tamilnews
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி கிராமத்தில் டாக்டர் முத்து என்பவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது.
இங்கு முத்துக்குடா கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் மகள் தாயம்மாள் (வயது 24) என்பவர் நர்சாக இருந்தார். டிப்ளமோ நர்சிங் படித்துள்ள இவர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே அதே மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்சு வேன் டிரைவருடன் தாயம்மாளுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. மிகவும் நெருங்கி பழகி வந்த தாயம்மாளை மருத்துவமனை நிர்வாகமும், டாக்டரும் கண்டித்துள்ளனர்.
ஆனாலும் அவர்கள் தங்கள் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. இன்று அதிகாலை பணியின் போது தாயம்மாளும், ஆம்புலன்சு வேன் டிரைவரும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது நோயாளிகளை பார்ப்பதற்காக வந்த டாக்டர் இதனை கண்டித்துள்ளார்.
நோயாளிகள் முன்பு அவமானம் அடைந்த தாயம்மாள் நர்சுகளுக்கான ஓய்வறைக்கு சென்று கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டார். பின்னர் தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் தாயம்மாளின் உடலை மணல்மேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்தநிலையில் தகவல் அறிந்து சம்பவம் தொடர்பாக கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், மணல்மேல்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதன்பின்னரே தாயம்மாளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாயம்மாளின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன்பு திரண்டனர். தாயம்மாள் இறந்ததும் முதலில் தங்களுக்கோ, போலீசுக்கோ தகவல் தெரிவிக்காமல் உடலை அப்புறப்படுத்தும் முயற்சியாக தாங்களாகவே மணல் மேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனவே தாயம்மாள் சாவில் மர்மம் உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும் அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சிவ.மெய்யநாதன். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற தி.மு.க. மாநாடு மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, காரில் ஆலங்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை வெள்ளனூர் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளும், எம்.எல்.ஏ. சென்ற காரும் நேருக்கு நேர் மோதின. இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.
விபத்தில் எம்.எல்.ஏ. மெய்யநாதன் மற்றும் கார் டிரைவர் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மோட்டார் சைக்கிளில் வந்த புதுக்கோட்டை அடப்பன்வயலை சேர்ந்த சக்தி, மோகன் ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளனூர் போலீசார் படுகாயமடைந்த சக்தி, மோகன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் இன்று பங்கேற்க வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதா வது:-
தி.மு.க.வின் ஈரோடு மாநாடு மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைத்துள்ளது. தமிழகத்தை பாலைவனமாக ஆக்க வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. கண்டிப்பாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது.

காவிரி பிரச்சினை அரசியல் சாசன அமர்விற்கு சென்றால் தான் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். தமிழக அரசு மக்களை ஏமாற்றக்கூடாது.
ஆதிதிராவிடர்களின் நலனுக்காக போராடும் ஒரே தலைவர் வைகோ தான். ஒரு அமைச்சர் ஒரு சில பேரை தூண்டிவிட்டு எனக்கு எதிராக பிரச்சினை செய்ய கூறியுள்ளார். எதிர்ப்பு இருந்தால் தான் நான் வளர முடியும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதன் முதலாக குரல் கொடுத்தவன் நான் தான். இதற்கான நீதிமன்றமும் சென்றேன். தற்போது மக்கள் தன் எழுச்சியாக போராடி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை நான் மூடாமல் விட மாட்டேன். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் பலர் இன்று காணாமல் போய்விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள சீனிவயல் சூப்பர் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 54). இவர் மோசகுடி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எஸ்தர் லில்லி (48). இவர் விசலூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக உள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல வீட்டை பூட்டி விட்டு கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் நேற்று மதியம் பள்ளியில் இருந்து சாப்பிடுவதற்காக பாலகிருஷ்ணன் மட்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த 2 பீரோக்களையும் மர்மநபர்கள் உடைத்து, அவற்றில் இருந்த 40 பவுன் தங்கநகைகள், ரூ.30 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து பாலகிருஷ்ணன் கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் தலைமையில் போலீஸ் சப்-இன்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இந்த திருட்டு சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தலைமையாசியர் வீட்டில் நகை- பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதையொட்டி அவரை வரவேற்று புதுக்கோட்டை நகரின் பல்வேறு இடங்களில் நிர்வாகிகள், டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே 10-க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை பார்த்த போது அந்த பேனர்கள் கிழிக்கப்பட்டிருந்தது. இதையறிந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அப்பகுதியில் திரண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை டவுன் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது பா.ஜ.க.வினர், பேனர்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி, போலீசாரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பா.ஜ.க.வினரின் டிஜிட்டல் பேனர்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யாரென்று தெரியவில்லை. நள்ளிரவில் மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பெரியார் குறித்து பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சை கருத்துகளை வெளியிட்டார். இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. வேலூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனை காரணமாக சில இடங்களில் பா.ஜ.க.வினர் தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்றது. இந்தநிலையில் இன்று புதுக்கோட்டையில் பா.ஜ.க.வின் டிஜிட்டல் பேனர்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Tamilnews






