search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுகவினர் சாலை மறியல்"

    சம்பக்குளம்-அத்திகடை சானலில் தண்ணீர் விட கோரி ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் திமுகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். #austinmla
    ராஜாக்கமங்கலம்:

    சம்பக்குளம்- அத்திகடை சானலில் தண்ணீர் விட வேண்டும் என கன்னியாகுமரி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஈத்தாமொழி சந்திப்பில் இன்று காலை ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன், ரத்தினசாமி, பகர்தீன், காங்கிரஸ் வட்டார தலைவர் அசோக்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் வக்கீல் சரவணன், ராஜேந்திரன், குமார் சேரலாதன், கண்ணன், பாலகிருஷ்ணன், சிவகுருலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஆஸ்டின் எம்.எல்.ஏ.வுடன் சமரச பேச்சு நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இப்போராட்டம் பற்றி ஆஸ்டின் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    சம்பக்குளம்- அத்திகடை சானலில் தண்ணீர் திறந்து விடப்படாததால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இங்கு உப்பு நீர் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கால்வாய் சரியாக தூர்வாரப்படவில்லை. தற்போது குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இங்கு எந்த பணிகளும் முறையாக நடைபெறவில்லை. இதனால் வாழை, தென்னை மரங்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனை தடுக்க இக்கால்வாயை முறையாக தூர்வாரி தண்ணீர் திறந்து விடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #austinmla
    மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து ஈரோட்டில் தி.மு.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்பு கொடி காட்டிய நாமக்கல் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

    மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு பெரியார் நகரில் காந்திஜி ரோட்டில் தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமை தாங்கினார்.

    சாலை மறியலில் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப. சச்சிதானந்தம், மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், தலைமை செயற் குழு உறுப்பினர்கள் குமார சாமி, மணிராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ.பிரகாஷ், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் குண சேகரன், கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சாலை மறியல் காரணமாக அங்கு பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ராஜ்குமார், முருகையன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆய்வு நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினர் 192 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 4 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல தி.மு.க.வினர் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே போராட்டம் நடைபெற்றது.

    மாநகர் மாவட்டச் செயலாளர்கள் தளபதி, வேலுச்சாமி தலைமையில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கவர்னருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 70 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    சென்னையில் போராட்டம் நடத்திய முகஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூரில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    சென்னையில் தலைமை செயலகம் முன்பு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து கடலூரில் நகர தி.மு.க. அலுவலகம் முன்பு நகர செயலாளர் ராஜா தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், தொ.மு.ச. தலைவர் பழனிவேல், மாணவரணி அகஸ்டின் உள்பட பலர் திரண்டனர். அவர்கள் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் புதுநகர் போலீசார் அங்கு வந்தனர்.

    மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    ×