என் மலர்
நீங்கள் தேடியது "mkstalin arrested"
தஞ்சாவூர்:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று கலந்து கொண்டார். தி.மு.க.வினர் எதிர்ப்பு- தெரிவித்து நாமக்கலில் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட தி.மு.க எம்.எல்.ஏ உள்பட 192 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை சைதாப் பேட்டையில் தி.மு.க சார்பில் இன்று கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதைதொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு பேரணியாக செல்லும் போராட்டத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு தி.மு.க சார்பில் சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர் துரை.சந்திர சேகரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், ஒன்றிய செயலாளர்கள் அருளாணந்தசாமி, முரளிதரன், இளைஞர் அணி அமைப்பாளர் சண்.ராமநாதன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் குறித்து துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயக முறையில் நாமக்கல்லில் கருப்பு கொடி போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து போராட்டம் நடத்தி கவர்னரிடம் மனு கொடுக்க சென்ற மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து போராட்டம் நடத்தினோம். எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் டி.எஸ்.பி ஜெயசீலன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர்.
நாமக்கல்லில் கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதால் கைது செய்யப்பட்ட தி.மு.க. வினரை விடுதலை செய்யக்கோரி தி.முக.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராவூரணியில் ஒன்றிய பொருப்பாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நகர செயலாளர் நீலகண்டன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம், நகர செயலாளர் நீலகண்டன் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்பு கொடி காட்டிய நாமக்கல் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு பெரியார் நகரில் காந்திஜி ரோட்டில் தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமை தாங்கினார்.
சாலை மறியலில் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப. சச்சிதானந்தம், மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், தலைமை செயற் குழு உறுப்பினர்கள் குமார சாமி, மணிராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ.பிரகாஷ், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் குண சேகரன், கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியல் காரணமாக அங்கு பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ராஜ்குமார், முருகையன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
மதுரை:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆய்வு நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினர் 192 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 4 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல தி.மு.க.வினர் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே போராட்டம் நடைபெற்றது.
மாநகர் மாவட்டச் செயலாளர்கள் தளபதி, வேலுச்சாமி தலைமையில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 70 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
சென்னையில் இன்று கவர்னர் மாளிகை நோக்கி பேரணி சென்று போராட்டம் நடத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து வேலூர் அண்ணாசாலையில் உள்ள கட்சி அலுவலகம் அருகில் இருந்து தி.மு.க.வினர் பேரணியாக சென்றனர்.
எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார் மற்றும் கார்த்திகேயன், அவைத் தலைவர் முகம்மது சகி உள்பட தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், நாகராஜன் தலைமையிலான போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, தி.மு.க.வினர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் ராணிப்பேட்டை, ஆற்காடு, கலவை, அணைக்கட்டு ஆகிய பகுதிகளிலும் தி.மு.க.வினர் மறியல் செய்தனர். வேலூர் உள்பட மாவட்டத்தில் 5 இடங்களில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆர்.காந்தி, நந்தக்குமார், கார்த்திகேயன் ஈஸ்வரப்பன் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மொத்தம் 199 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்:
சென்னையில் தலைமை செயலகம் முன்பு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து கடலூரில் நகர தி.மு.க. அலுவலகம் முன்பு நகர செயலாளர் ராஜா தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், தொ.மு.ச. தலைவர் பழனிவேல், மாணவரணி அகஸ்டின் உள்பட பலர் திரண்டனர். அவர்கள் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் புதுநகர் போலீசார் அங்கு வந்தனர்.
மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






