என் மலர்
செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி செல்போன் டவரில் ஏறி தமிழ் தேசிய கட்சியினர் போராட்டம்
புதுக்கோட்டை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் புதுக்கோட்டையில் இன்று தமிழ் தேசிய கட்சியை சேர்ந்த மாநில அமைப்பு செயலாளர் ரகுபதி தலைமையில் நகர செயலாளர் ஆறுமுகம் மற்றும் பிரபாகரன், விக்னேஷ், அண்ணா, கணேஷ், மூர்த்தி, அய்யா, செல்வம் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கட்சி கொடியை கையில் ஏந்தியபடி புதுக்கோட்டை நிஜாம் காலனிக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி திடீரென அங்குள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழ் தேசிய கட்சியினர், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், இல்லையென்றால் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். #tamilnews






