search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school headmaster"

    • பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.
    • மாவட்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் சீனிவாஸ் உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா எலவள்ளி கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அங்கு பாரதம்மா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். வார்டனாக மஞ்சுநாத் என்பவர் உள்ளார்.

    இந்த நிலையில் தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா மற்றும் வார்டன் மஞ்சுநாத் ஆகியோர் மாணவ-மாணவிகளை அடித்து துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தலைமை ஆசிரியை பாரதம்மா அந்த பள்ளியில் உள்ள கழிவறை தொட்டியை (செப்டிக் டேங்க்) சில மாணவர்களை கட்டாயப்படுத்தி வைத்து சுத்தம் செய்ய வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், மாவட்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் சீனிவாஸ் உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த நிலையில், மாணவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும், மாணவர்களை வைத்து கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய வைத்ததாகவும் மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளியின் தலைமை ஆசிரியை பாரதம்மா, வார்டன் மஞ்சுநாத், சமூக அறிவியல் ஆசிரியர் அபிஷேக், ஓவிய ஆசிரியர் முனியப்பா ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அக்ரம் பாஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்காலிக ஆசிரியர் மரேஷ், ஒப்பந்த பணியாளர் கலாவதி ஆகிய இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

    சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் பற்றி தாலுகா சமூக நல அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், மஸ்தி போலீசார் கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தியதற்காக சஸ்பெண்டு செய்யப்பட்ட தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர்கள் முனியப்பா, அபிஷேக் ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதில் தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனியார் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் வீட்டிலேயே தனிமை படுத்திக் கொண்டுள்ளார்.
    • இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கொரோனா தொற்று இல்லாத நிலை இருந்து வந்தது. அதன் பிறகு தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் போடியில் உள்ள தனியார் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் வீட்டிலேயே தனிமை படுத்திக் கொண்டுள்ளார்.

    இதனால் அவருடன் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். அந்த பள்ளியில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வேறு யாருக்காவது தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டு 100 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    மேலும் கடந்த கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி விடுபட்டு இருப்பதால் அந்த மாணவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    கொரோனா தொற்றால் மாவட்டத்தில் உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதலான விஷயமாக உள்ளது.

    • பள்ளி தலைமையாசிரியர் காலை 8:30 மணிக்கே ஆஜராகி விட வேண்டும்.
    • கூட்ட பொருள் சார்ந்த புத்தகம் இல்லையெனில் தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாதாந்திர கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி பேசியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க செய்ய வேண்டும்.அதற்கேற்ப பள்ளி தரத்தை மேம்படுத்துவதில் தலைமையாசிரியர்கள் கவனம் செலுத்துவது அவசியம். 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சனிக்கிழமைதோறும் ஆசிரியர்களை சுழற்சி முறையில் பாட வாரியாக வரவழைத்து, சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். இதுதவிர தினமும் காலை, 8:30 மணிக்கும், மாலை 4:15 முதல், 5:30 மணிக்குள் சிறப்பு வகுப்புகள் நடத்தி கொள்ளலாம்.

    பள்ளி தலைமையாசிரியர் காலை 8:30 மணிக்கே ஆஜராகி விட வேண்டும். வகுப்பாசிரியர்கள் 'வாட்ஸ்அப்பில்' மட்டுமே தகவல்களை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு தகவல்கள், செய்திகள் அனுப்பப்படுவது தவிர்க்க வேண்டும். மாணவர்கள் தரப்பில் ஆசிரியர்கள் மீதான புகார்கள் பெறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவர்களின் புகார் பெட்டி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டு பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து தொடக்க, மேல்நிலைப்பள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் வருகை சார்ந்த விவரம் ஒவ்வொரு மாதமும் 3-ந் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட வேண்டும்.ஆசிரியர் மானியம், பிற பணப்பயன்கள் உடனுக்குடன் பெற்று வழங்கப்பட வேண்டும். நிரந்தர அங்கீகாரம் பெற்ற உதவிபெறும் பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டட உறுதி சான்று, கட்டட உரிமை சான்று, தீயணைப்பு, சுகாதார சான்று ஆகியவை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    மிதிவண்டி, லேப்டாப் சார்ந்த இருப்பு பதிவேடுகள், சிறப்பு நிலை, தேர்வுநிலை, தகுதிகாண் பருவம், பணிவரன்முறை சார்ந்த ஆசிரியர்களின் கருத்துருக்கள் முறையாக பராமரிக்க வேண்டும். சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் பிற அமைப்புகள், மதம் சார்ந்த அமைப்புகளில் பொறுப்புகளில் இருப்பதாக பல புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, நிரந்தர சிகிச்சை பெறுவோருக்கு விபத்து காப்பீடு, உதவித்தொகை பெற ஆவண செய்தல் வேண்டும் என்றார்.

    மேலும் அவர் பேசுகையில், ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை, சிறப்பு ஊக்கத்தொகை திட்டம், கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவர்கள் பட்டியலை தயார்நிலையில் இருப்பது அவசியம். அடுத்த மாதாந்திர கூட்டத்தில் இதுசார்ந்த விவரங்கள் கேட்கப்படும். எனவே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இவற்றை நகல் எடுத்து தயாராக வைத்திருக்க வேண்டும். கலெக்டர், மற்றும் உயர்கல்வி அதிகாரிகள் பார்வையிட வரும்போது கூட்ட பொருள் சார்ந்த புத்தகம் இல்லையெனில் தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

    மாணவர்களிடம் சாதி பாகுபாடு பார்த்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் எழுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக அனுசுயா பணியாற்றினார். அவர் சாதி பாகுபாடு பார்த்து ஒரு பிரிவு மாணவ-மாணவிகளை தனியாக அமர வைத்ததாக புகார் எழுந்தது.

    இது பற்றி அறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒரு பெண் அனுசுயாவை செருப்பால் தாக்கினார். பதிலுக்கு அவரும் தன்னுடைய செருப்பால் அவர்களை தாக்கினார். இவை அனைத்தும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி அனுசுயாவை பணி இடைநீக்கம் செய்தனர். மேலும் மாநில மனித உரிமை ஆணையம் சார்பில் அனுசுயா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனுசுயா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    ×